காளாத்தீஸ்வரர் கோவில், உத்தமபாளையம்
தென் காளகஸ்தி என்று அழைக்கப்படும் உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோவில் தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் அமையப்பெற்றுள்ளது . இங்குள்ள சிவனை வழிபட்டால் காளகஸ்தி சிவனை வணங்கும் பலன் கிடைக்கும் என்று சைவ மக்கள் நம்புகின்றனர்.
வரலாறு
[தொகு]நாயக்கர்கள் ஆட்சிக் காலகட்டத்தில் புகழ் பெற்ற ராணிமங்கமாளின் படைப் பொறுப்பை ஏற்று வந்தவர் கொண்டம நாயக்கர். இவர் காளகஸ்தியில் அருளும் காளாத்தீஸ்வரர் மீது மிகுத்த பக்தி கொண்டவர். அவர் வயதான காரணத்தால் காளகஸ்தி செல்ல முடியாமல் அவதிப்பட்டார் . இவரின் நிலையை அறிந்த காளாத்தீஸ்வரர், அவர் இருக்குமிடத்திலேயே கோவில் அமைத்து வழிபடலாம் என்றும், இங்கு வழிபட்டால், காளகஸ்திக்கு சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்றும் அருளினார் என்பது ஐதீகம். உடனே அவர் இப்பகுதியை ஆட்சி செய்த பாளையக்காரர் பூஜையா நாயக்கரிடம் தெரிவித்தார். பாளையக்காரர் அங்கே ஒரு கோவில் அமைத்துக் கொடுத்தார். இதுவே தென் காளகஸ்தி என்று அழைக்கப்படும் இக்கோயில் ஆகும்.
ஞானாம்பிகை
[தொகு]சிவனுக்குச் சிலை செய்த மன்னர் அம்மனுக்குச் சிலை அமைக்கப் பல முறை முயன்று தோல்வியுற்றார். இதனால் அம்பிகை இல்லாத கோவிலாகச் சில காலம் இருந்தது. பிறகு கொண்டம நாயக்கரின் கனவில் தோன்றிய சிவன் முல்லை ஆற்றில் அம்பிகை வருவாள் என்றாராம், அதன்படி ஆற்றில் ஒரு கூடை மிதந்தது வந்தது அதனுள் அம்மனின் சிலையைக் கண்ட ஊர் மக்கள் மகிழ்ந்து அம்மனுக்கு ஞானாம்பிகை என்று பெயர் சூட்டினர். இவ்வம்மன் இங்கு புகழ் பெற்றவர். பலருக்கு ஞானாம்பிகை கோவில் என்றால் தான் தெரியும் என்ற அளவுக்கு புகழ் பெற்றவர் . அம்மனுக்குப் பக்கத்தில் முருகன் காட்சி அளிப்பது இங்கு சிறப்பாகச் சொல்லப்படுகிறது. தாய், சேய் நலன் விரும்புவோர் இங்கு வந்து வழிபட்டால் உறவுப்பாலம் நன்கு அமையும் என்ற நம்பிக்கை சைவ மக்களிடையே நிலவுகின்றது.
அஷ்ட அம்பிகையர்
[தொகு]இங்குள்ள கோவிலில் பிராமினி, மகேஸ்வரி, கவ்மாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்ட தேவி, ஞானாம்பிகை என்று எட்டு அம்பிகைகளும் ஒரே கோவிலில் காட்சி அளிப்பது தனிச்சிறப்பாகச் சொல்லப்படுகிறது.
திருவிழா
[தொகு]- சித்திரை திருக்கல்யாணம்
- ஐப்பசி அன்ன அபிசேகம்
- சிவராத்திரி
- திருகார்த்திகை தீபம்
போன்ற நாட்களில் திரளான மக்கள் இங்கு கூடுகின்றனர் .