கால்லியாஸ் அமைதி உடன்பாடு
கால்லியாஸ் அமைதி உடன்பாடு (Peace of Callias) என்பது கிமு 449 இல் டெலியன் கூட்டணி ( ஏதென்ஸ் தலைமையிலானது) மற்றும் பாரசீகம் ஆகியவற்றுக்கு இடையேயான கிரேக்க பாரசீகப் போர்களை முடிவுக்குக் கொண்டுவந்த அமைதி ஒப்பந்தமாகும் . அகாமனசியப் பாரசீகத்துக்கும் கிரேக்க நகர அரசுகளுக்கும் இடையிலான முதல் சமரச உடன்படிக்கையாகயாக இது உருவானது.
ஏதெனிய அரசியல்வாதியான கால்லியாசால் இந்த அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கிமு 479 இல் செர்கசின் படையெடுப்பின் முடிவிற்குப் பிறகு பாரசீகம் தொடர்ந்து கிரேக்கர்களிடம் தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளை இழந்தது. ஒப்பந்தத்தின் சரியான காலம் விவாதத்துக்கு உரியது. இருப்பினும் இது பொதுவாக கிமு 469 அல்லது 466 இல் யூரிமெடோன் போர் அல்லது 450 இல் சைப்ரஸ் சலாமிஸ் போருக்குப் பிறகு இருக்கலாம் எனப்படுகிறது. கால்லியாஸ் அமைதி உடன்பாடானது சின்ன ஆசியாவில் உள்ள ஐயோனியா நகர அரசுகளுக்கு சுயாட்சியை வழங்கியது, ஏஜியன் கடற்கரையின் மூன்று நாட்களுக்குள் பாரசீக ஆளுநர்கள் அத்துமீறி நுழைவதைத் தடைசெய்தது மற்றும் ஏஜியனில் இருந்து பாரசீகக் கப்பல்களை தடை செய்தது. ஏதென்சானது சின்ன ஆசியா, சைப்பிரசு, லிபியா அல்லது எகிப்தில் பாரசீக [1] உடமைகளில் தலையிடுவதில்லை என்று ஒப்புக்கொண்டது [2] (அந்த நேரத்தில் ஏதென்ஸ் பாரசீகத்திற்கு எதிரான எகிப்திய கிளர்ச்சிக்கு உதவிய கடற்படையை இழந்தது).