உள்ளடக்கத்துக்குச் செல்

காலம் (இலக்கணம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காலம் என்பது இறந்த-காலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று வகைப்படும். இந்த முக்காலப் பாகுபாடு எல்லா மொழிகளிலும் உண்டு. எல்லா மொழிகளிலும் வினைச்சொற்கள் காலம் காட்டுவனவாக அமைந்துள்ளன.[1]

கால விளக்கம்

[தொகு]

இலக்கணத்தில் காலம் என்பது, ஒரு செயல் எப்பொழுது நடைபெறுகிறது என்பதைக் காட்டும் இலக்கணக் கூறு ஆகும். ஒரு செயல் பேசப்படும் நேரத்துக்கு முன்னரா, அதே நேரத்திலா அல்லது பின்னரா என்பதைக் குறித்துக் காட்டுவதே காலம். தமிழ் இலக்கணத்தில் காலம், இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று வகைப்படும். பேசும் நேரத்துக்கு முன்னர் நிகழ்ந்தவற்றைக் குறிப்பது இறந்தகாலம், அந்நேரத்தில் நடந்துகொண்டு இருப்பவற்றைக் குறிப்பது நிகழ்காலம், பின்னர் நிகழ இருப்பவற்றைக் குறிப்பது எதிர்காலம். தமிழில் வினை சார்ந்த சொற்கள் காலங்காட்டும் இடைநிலைகளை ஏற்றுக் காலத்தைக் காட்டுகின்றன. காலத்தைக் காட்டும் இடைச்சொற்களைத் தொல்காப்பியர் காலக்கிளவி எனக் குறிப்பிடுகிறார்.[2] [3] [4] காலத்தைக் காட்டும் சொற்களாகிய காலை, இரண்டு-மணி, நேற்று போன்ற சொற்களைக் காலப்பெயர் என்பர்.

தமிழ் இலக்கண நூல்கள் தரும் விளக்கம்

[தொகு]

தமிழ்மொழியில் காலம் காட்டும் பாங்கு இரு வகையில் அமையும். வெளிப்படையாகக் காலம் காட்டுதல் ஒருவகை. குறிப்பால் காலம் காட்டுதல் மற்றொரு வகை.[5]

காலங்காட்டும் இடைநிலைகள்

[தொகு]

தமிழில் காலம் காட்டுவதற்காகச் சொற்களில் பல்வேறு இடைநிலைகள் பயன்படுகின்றன. எடுத்துக்காட்டாக, செய்தான், செய்கின்றான், செய்வான் ஆகிய சொற்களில், செய் என்னும் வினையடியுடன் "த்", "கின்று", "வ்" ஆகிய இடைநிலைகள் சேர்ந்து முறையே இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்பவற்றைக் காட்டுகின்றன.

  • செய் + த் + ஆன் ----> செய்தான்
  • செய் + கின்று + ஆன் ----> செய்கின்றான்
  • செய் + வ் + ஆன் ----> செய்வான்

மேற்காட்டிய இடைநிலைகள் மட்டுமன்றி மேலும் பல இடைநிலைகளும் தமிழில் காணப்படுகின்றன.

  • இறந்தகாலம் - "த்" (த், ட், ற், த்த்), "ந்த்" (ந்த், ன்ற், ண்ட்), "இன்" (ய், ன்)
  • நிகழ்காலம் - "கின்று", "கிறு"
  • எதிர்காலம் - "வ்", "ப்ப்", "ப்"

வினைத்தொகை

[தொகு]

மூன்று காலத்தையும் காட்டும் தொகைச்சொல்லை தமிழில் வினைத்தொகை என்பர். இதனைத் தொல்காப்பியம் காலம் கரந்த பெயரெச்சம் எனக் குறிப்பிடுகிறது.

வினைமுற்றுக்களில் மட்டுமன்றி வினையாலணையும் பெயர், பெயரெச்சம், தொழிற்பெயர்கள், நிபந்தனை எச்சம், பெயரடை போன்றவற்றிலும் காலங்காட்டும் இடைநிலைகள் வருகின்றன.

அடிக்குறிப்பு

[தொகு]
  1. ஆங்கிலத்தில் காலம் காட்டும் முறையை எண்ணுவோம் tense
  2. மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை;
    காலக் கிளவியொடு முடியும் என்ப. (தொல்காப்பியம் 2-207)
  3. காலக் கிளவி உயர்திணை மருங்கின்
    மேலைக் கிளவியொடு வேறுபாடு இலவே. (தொல்காப்பியம் 2-215)
  4. காலக் கிளவி அஃறிணை மருங்கின் மேலைக் கிளவியொடு வேறுபாடு இலவே (தொல்காப்பியம் 2-221)

  5. இறப்பின், நிகழ்வின், எதிர்வின், என்றா
    அம் முக் காலமும் குறிப்பொடும் கொள்ளும்
    மெய்ந் நிலை உடைய, தோன்றலாறே . (தொல்காப்பியம் 2-200)
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலம்_(இலக்கணம்)&oldid=2182751" இலிருந்து மீள்விக்கப்பட்டது