உள்ளடக்கத்துக்குச் செல்

காற்றுக்காப்பு கழுவும் திரவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காற்றுக்காப்பு துடைப்பான் திரவம்

காற்றுக்காப்பு கழுவும் திரவம் ( Windshield Washer fluid ) என்பது வாகனத்தின் முன் கண்ணாடியில் தேங்கும் தூசி, கறை மற்றும் பூச்சி தடயங்களை நீக்க பயன்படும் ஒரு சிறப்பு திரவமாகும்[1]. இது பொதுவாக நீர், சுத்திகரிப்பு பொருள் மற்றும் சில நேரங்களில் உறைதல் தடுக்கும் இரசாயனங்கள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இந்த திரவம் வாகனத்தின் முன் கண்ணாடி துடைப்பி அமைப்பில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு தொட்டியில் சேமிக்கப்படுகிறது. ஓட்டுநர் துடைப்பியை இயக்கும் போது, திரவம் சிறிய குழாய்கள் வழியாக முன் கண்ணாடியில் பீச்சப்படுகிறது. பின்னர் துடைப்பிகள் அதைத் துடைத்து கண்ணாடியை தெளிவாக வைத்திருக்க உதவுகின்றன.

மிகவும் குளிர்ந்த நாடுகள்

[தொகு]
மைனஸ் 49 டிகிரி வெப்பநிலையிலும் உறையாத காற்றுக்காப்பு கழுவும் திரவம்

சில நாடுகளில் வானிலை மிகவும் குளிராக இருப்பதால், உறைதல் எதிர்ப்பு பொருட்கள் சேர்க்கப்பட்ட திரவம் பயன்படுத்தப்படுகிறது[2]. இது குறைந்த வெப்பநிலையில் திரவம் உறையாமல் பாதுகாக்கிறது. சில திரவங்களில் வாசனை அல்லது சிறிய நிறப்பொருள்கள் சேர்க்கப்பட்டிருக்கும், இதனால் அவை அடையாளம் காண எளிதாக இருக்கும். மேலும், சில வகை திரவங்கள் பூச்சி மற்றும் எண்ணெய் கறைகளை நீக்க சிறப்பாக வடிவமைக்கப்படுகின்றன. முன் கண்ணாடி கழுவும் திரவம் வாகனத்தின் பாதுகாப்பிற்கும் ஓட்டுநர் பார்வை தெளிவாக இருக்கவும் முக்கிய பங்கை வகிக்கிறது.

இந்தத் திரவம் பல வடிவங்களில் விற்கப்படுகிறது. சில நேரடியாகப் பயன்படுத்தத் தயாரானவை, மற்றவை நீருடன் கலந்து பயன்படுத்தப்பட வேண்டும். சாதாரணமான திரவங்களில் மேற்பரப்பைச் சுத்தம் செய்யும் வேதிப்பொருள் (surfactant), நீரை மென்மையாக்கும் பொருள், மற்றும் உறையாத தடுப்பான் (antifreeze) போன்றவை கலந்திருக்கும். உறையாத தடுப்பான் பொதுவாக மதுசாரம் (ஆல்கஹால்) அடிப்படையிலானதாக இருக்கும். இதனால் குளிர் காலங்களில் திரவம் உறைந்து போவதைத் தவிர்க்கலாம். சாதாரணமாக கண்ணாடியை சுத்தம் செய்ய கோடைகாலத்தில் ஒரு குறிப்பிட்ட விகிதத்திலும், குளிர்காலத்தில் உறைவதைத் தடுக்க அதிக விகிதத்திலும் இந்தத் திரவம் நீருடன் கலக்கப்படுகிறது.

சில வாகனங்களில் திரவம் குறைவாக இருக்கும் போது எச்சரிக்கை விளக்குகள் காட்டப்படும். சில வாகனங்களில் திரவம் மிதமாக மின்சாரத்தை கடத்தும் தன்மை கொண்டிருப்பதால், இரண்டு பின் கொண்ட சென்சார் மூலம் திரவ அளவு கணிக்கப்படுகிறது. முதன்முதலில் 1936ஆம் ஆண்டு வாகனங்களுக்கு தனிப்பட்ட வசதியாக இந்த அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 1946ஆம் ஆண்டு பொதுவாக வாகனங்களில் நிறுவப்பட்டது. சில வாகனங்களில் குளிர்காலங்களில் பனியை உருக்க மின்சாரத்தால் சூடாக்கப்படும் நுண்துளைக் குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காற்றுக்காப்பு கழுவும் திரவம் ( Windshield Washer fluid )". Retrieved 2021-11-01.
  2. "காற்றுக்காப்பு கழுவும் திரவம் ( www.homedepot.ca )". Retrieved 2021-11-01.