காற்றில்லா சுவாச உயிரினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காற்றில்லாசுவாச உயிரினம் (Anaerobic organism) என்பவை உயிர் வாழ்வதற்கு ஆக்சிசன் தேவைப்படாத உயிரினங்களைக் குறிக்கும். இவ்வகை உயிரினங்களின் வளர்ச்சி காற்றை சார்ந்திருப்பதில்லை. ஒருவேளை ஆக்சிசன் கிடைக்கும் பட்சத்தில் இவ்வகை உயினங்கள் எதிர்மறையாக செயல்படலாம் அல்லது இறந்தும் போகலாம். மாறாக காற்றுச்சுவாச உயிரினங்கள் உயிர் வாழவும் வளர்ச்சியடையவும் ஆக்சிசன் அவசியமாகும்.

காற்றில்லாசுவாச உயிரினம் ஒற்றைச் செல்லுடைய உயிரினமாகவும் இருக்கலாம். உதாரணம்: புரோட்டோசோவாக்கள் [1], பாக்டீரியாக்கள் [2]). அவை பலசெல் உயிரினமாகவும் இருக்கலாம் [3].

பாகுபாடு[தொகு]

நடைமுறைச் செயல்பாடுகள் கருதி இவற்றை மூன்று வகையாகப் பிரிக்கலாம். காற்றில்லாசுவாச உயிரினம், சகிப்புக் காற்றில்லாசுவாச உயிரினம், இணக்கக் காற்றில்லாசுவாச உயிரினம் என்பன அம்மூன்று வகைபாடுகளாகும். முதல்வகையான காற்றில்லாசுவாச உயிரினங்கள் ஆக்சிசன் கிடைக்கும் பட்சத்தில் இடர்பாடுகளைச் சந்திக்கின்றன [4][5]. உதாரணம்: Clostridium bottulinum, ஆழ்கடலின் அடியில் எரிமலைகுழம்பு கொண்ட குழிகளில் வாழும் அங்கிகள்.

இரண்டாம் வகை சகிப்புக் காற்றில்லாசுவாச உயிரினங்கள் ஆக்சிசன் இருப்பதைச் சகித்துக் கொள்கின்றன. ஆனால் ஆக்சிசனைப் பயன்படுத்திக் கொள்வதில்லை [6].

மூன்றாம் வகையான இணக்க்க் காற்றிலாசுவாச உயிரினங்கள் ஆக்சிசன் இல்லாமலும் வாழ்கின்றன. ஆக்சிசன் கிடைக்கும் பட்சத்தில் அதைப் பயன்படுத்தியும் வளர்கின்றன [6].

முதல் கண்டுபிடிப்பு[தொகு]

அன்டோனி வான் லீயுவென்கோக் தான் மேற்கொண்ட ஒரு சோதனையைப் பற்றி விவரித்து 1680 ஆம் ஆண்டு சூன் 16 அன்று இராயல் கழகத்திற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். ஒத்த இரண்டு கண்ணாடிக் குழாய்களில் பாதிக்கு மேல் தூய்மையான மழை நீரை நிரப்பி நன்கு தூளாக்கப்பட்ட மிளகு தூளை அதிலிட்டதாக அக்கடித்த்தில் தெரிவித்திருந்தார். மேலும் ஒரு கண்ணாடிக் குழாயை தீச்சுடராலும் மற்றொன்றை மூடாமலும் விட்டுவைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். பலநாட்களுக்குப் பின்னர் மூடாமல் விட்டிருந்த கண்ணாடிக் குழாயில் பல நுண்ணுயிர் விலங்குகள் இயங்கிக் கொண்டிருப்பதை அவர் கண்டுபிடித்ததாகக் கூறியிருந்தார். மூடப்பட்ட குழாயில் இதுபோன்ற புதுமை உயிரினங்கள் எதையும் அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் திறந்திருந்த கண்ணாடிக் குழாயில் இருந்த உயிரினங்களைக்காட்டிலும் பெரிய உயிரினத்தை வான் லீயுவென்கோக் ஆச்சரியத்துடன் கண்டதாக கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மூடப்பட்ட குழாயில் முற்றிலும் காற்று இல்லாத சூழல் உருவாக்கப்பட்டிருந்தது.

1913 ஆம் ஆண்டு வான் லீயுவென்கோக்கின் சோதனையை மார்ட்டினசு பெய்யெரிங்கு மீண்டும் நிகழ்த்தி சோதித்தார். குளோசுட்ரிடியம் பியூட்டைரிகம் என்ற பாக்டீரியா மூடப்பட்ட குழாய்க்குள் வளர்ந்த காற்றில்லாசுவாச உயிரினம் என்று அடையாளம் காட்டினார்.

வளர்சிதைமாற்றம்[தொகு]

சில காற்றில்லாசுவாச வகை உயிரினங்கள் வளர்சிதை மாற்றத்திற்கு நொதித்தல் முறையைப் பயன்படுத்துகின்றன. மற்றவை முழுக்க முழுக்க காற்றற்ற சுவாசத்தைப் பயன்படுத்துகின்றன[7]. சகிப்புக்காற்றில்லாசுவாச வகை உயிரினங்கள் நொதித்தலை மட்டுமே நம்பியிருக்கின்றன[8]. இணக்கவகை இனங்கள் காற்று இருந்தால் காற்றையும் காற்று கிடைக்காவிட்டால் நொதித்தலையும் சில காற்றற்ற சுவாசத்தையும் பயன்படுத்துகின்றன[6].

நொதித்தல்[தொகு]

பலவகையான காற்றில்லா நொதித்தல் வினைகள் நிகழ்கின்றன.

நொதித்தல் முறையைப் பயன்படுத்தும் காற்றில்லாசுவாச உயிரினங்கள் பெரும்பாலும் லாக்டிக் அமில நொதித்தல் வழியைப் பின்பற்றுகின்றன.

C6H12O6 + 2 ADP + 2 பாசுபேட்டு → 2 லாக்டிக் அமிலம் + 2 ATP

இவ்வினையில் வெளிப்படும் ஆற்றல் தோராயமாக 150 கியூ/மோல் ஆகும். அடினோசின் டைபாசுபேட்டை அடினோசின் டிரை பாசுபேட்டாக மீளுருவாக்கம் செய்ய இந்த ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. காற்றுச்சுவாச உயிரினங்களின் ஆற்றலுடன் ஒப்பிடுகையில் இது வெறும் 5% மட்டுமேயாகும்.

தாவரங்களும் ஈசுட்டு போன்ற பூஞ்சைகளும் காற்றுக் குறைவு ஏற்படும்போது எத்தனால் நொதித்தல் வழியைப் பின்பற்றுகின்றன.

C6H12O6 (குளுக்கோசு) + 2 ADP + 2 பாசுபேட்டு → 2 C2H5OH + 2 CO2↑ + 2 ATP

இவ்வினையில் வெளிப்படும் ஆற்றல் கிட்டத்தட்ட 180 கியூ/மோல் ஆகும். காற்றில்லாசுவாச பாக்டீரியா மற்றும் அராக்கியா போன்ற உயிரினங்கள் பல்வேறு வகையான நொதித்தல் பாதைகளை பின்பற்றுகின்றன. புரோப்பியானிக அமில நொதித்தல், பியூட்டைரிக் அமில நொதித்தல், கலப்பு அமில நொதித்தல், பியூட்டேன்டையால் நொதித்தல் போன்றவை சில பாதைகளாகும்..

மேற்கோள்கள்[தொகு]

  1. "Drug Targets and Mechanisms of Resistance in". Clin. Microbiol. Rev. 14: 150–164. January 2001. doi:10.1128/CMR.14.1.150-164.2001. பப்மெட்:11148007. 
  2. Levinson, W. (2010). Review of Medical Microbiology and Immunology (11th ). McGraw-Hill. பக். 91–93. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-07-174268-9. https://archive.org/details/reviewofmedicalm0000levi_k6v8. 
  3. Danovaro R; Dell'anno A; Pusceddu A; Gambi C et al. (April 2010). "The first metazoa living in permanently anoxic conditions". BMC Biology 8 (1): 30. doi:10.1186/1741-7007-8-30. பப்மெட்:20370908. பப்மெட் சென்ட்ரல்:2907586. http://www.biomedcentral.com/1741-7007/8/30. 
  4. Microbiology (3rd ). Wm. C. Brown Publishers. 1996. பக். 130–131. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-697-29390-4. 
  5. Jawetz, Melnick & Adelberg's Medical Microbiology (24th ). McGraw Hill. 2007. பக். 307–312. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-07-128735-3. https://archive.org/details/jawetzmelnickade0000broo_a4y7. 
  6. 6.0 6.1 6.2 Hogg, S. (2005). Essential Microbiology (1st ). Wiley. பக். 99–100. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-471-49754-1. https://archive.org/details/essentialmicrobi0000hogg. 
  7. Pommerville, Jeffrey (2010). Alcamo's Fundamentals of Microbiology. Jones and Bartlett Publishers. பக். 177. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781449655822. 
  8. Slonim, Anthony; Pollack, Murray (2006). Pediatric Critical Care Medicine. Lippincott Williams & Wilkins. பக். 130. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780781794695. https://archive.org/details/pediatriccritica0000unse_q8p4.