காற்றில்லா சக்கரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Tweel
LRI AB Scarab Tweel

வட்டகை, சக்கரம் இரண்டையும் இணைத்து ஒரே பகுதியாக ட்வீல் (tire+wheel= Tweel) எனப்படும் காற்றில்லா சக்கரங்களை (Airless tires) உருவாக்கும் முயற்சிகள் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகின்றன. வழக்கமான சக்கரங்கள் சக்கரம்+வட்டகையென அமைந்திருக்கும். இதில் வட்டகைகள் காற்று நிரப்பப்பட்டு அதன் அழுத்தத்தில் இயங்கும். இதனால் பஞ்சர், வட்டகை விரைவில் வழுக்கையாதல் எனப் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

வடிவமைப்பு[தொகு]

பிரான்ஸ் நாட்டின் மிச்செல்லின் நிறுவனம் இந்த ட்வீலை வடிவமைத்து இறுதி வடிவம் அளித்துள்ளதாகத் தெரிகிறது. இதில் காற்று நிரப்பப்பட்ட டியூபுக்கு பதில் வளையும் தன்மைகொண்ட பாலியூரித்தின் ஆரக்கால்கள் உள்ளன. வட அமெரிக்காவில் உள்ள தனது ஆலையைக் காற்றில்லா சக்கரங்களை உருவாக்கவே அர்ப்பணிக்கப்போவதாக மிச்செலின் தெரிவித்துள்ளது. ஜான் டீர் நிறுவனத்துடன் கைகோத்துள்ள மிச்செலின், ஜான் டீரின் புல் அறுக்கும் இயந்திரங்களில் இச்சக்கரங்களைப் பொருத்தியுள்ளது. கார் போன்ற சாலை வாகனங்களுக்கான காற்றில்லா சக்கரங்களை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுவருகிறது.

வரலாறு[தொகு]

காற்றில்லா சக்கரங்கள் புதிய முயற்சி அல்ல. ஏற்கனவே ராணுவ பயன்பாட்டு வாகனங்களில் இவை இடம்பெற்றுள்ளன. தேனடை தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நான் நியுமிடிக் (non-pneumatic) வகை சக்கரங்களை விஸ்கான்சின் மாடிசன் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் கடந்த 2008ஆம் ஆண்டு கண்டறிந்தனர். இவ்வகை சக்கரங்களைப் பொதுச்சந்தைக்குக் கொண்டுவருவதில், தென்கொரியாவின் ஹான்கூக், சப்பானின் பிரிட்ஜ்ஸ்டோன், பிரான்சின் மிச்செலின் உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டியிட்டன. பிரிட்ஜ்ஸ்டோன் நிறுவனம் 9 இன்ச் அளவுள்ள, மின்னனு நகர்வு நாற்காலிகளில் பயன்படுத்தத் தக்க காற்றில்லா சக்கரங்களை வடிவமைத்தது.2011 ஆம் ஆண்டு டோக்கியோ தானுந்து சந்தையில் இவற்றை அறிமுகப்படுத்தியது. இருப்பினும் பொதுப் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஹான்கூக் நிறுவனம் 2013 செப்டம்பரில் பிராங்பர்ட் தானுந்து கண்காட்சியில் ஐ-பிளெக்ஸ் என்ற பெயரில் காற்றில்லா சக்கரங்களை அறிமுகப் படுத்தியது. பாலியூரித்தின் கூட்டுப்பொருள்களால் உருவாக்கப்பட்ட இச்சக்கரங்கள் 95 விழுக்காடு மறுசுழற்சி செய்ய உகந்தவை. [1],

குறிப்புகள்[தொகு]

  1. தி இந்து தமிழ்-சந்தைக்கு வரும் மிச்செலின் காற்றில்ல சக்கரங்கள்28.11.2014