கார்வர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்

1906ஆம் ஆண்டு பிரான்சிசு பெஞ்சமின் ஜான்ஸ்டனால் எடுக்கப்பட்ட ஜார்ஜ் வாசிங்டன் கார்வரின் நிழற்படம்.
பிறப்பு ஜனவரி 1864 (1864-01)[1]
டயமண்ட், மிசௌரி, அமெரிக்க ஐக்கிய நாடு
இறப்பு ஜனவரி 5, 1943 (79)
டஸ்கிஜி, அலபாமா, அமெரிக்க ஐக்கிய நாடு

ஜார்ஜ் வாசிங்டன் கார்வர் (சனவரி 1864[1][2] – சனவரி 5, 1943), ஓர் அமெரிக்க தாவரவியல் அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கல்வியாளர். அவரது பிறப்புக் குறித்து சரியாக அறியப்படாவிடினும் மிசௌரி மாநிலத்தில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதிற்கு முன்பாகவே சனவரி 1864 இல் அவர் பிறந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.[1]

ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்[தொகு]

பாசி படிந்த சுவர்களில்
பாளம் பாளமான வெடிப்புகள்;
வெடிப்புகளில் பூக்கும் தாவரங்கள்;
பூக்களைப் பற்றி இழுத்தேன்,
வேரோடு வெளிவந்தன பூக்கள்.
பூக்கள் எல்லாம் என்கரங்களில்,
வேர், மண், இலை செடி எல்லாம் எல்லாம்,
பூவே நீ யார்? பூக்கும் செடிகளே நீங்கள் யார்?
வேரே நீ யார்? வேருடன் ஒட்டிய மண்ணே நீ யார்?
தெய்வம் யார்? மனிதன் யார்?
மனிதன் - தெய்வ உறவு புரிந்துவிட்டால்,
பூவே, உன்னையும் என்னால் புரிந்துகொள்ள முடியும்.

-டென்னிசன்.

டென்னிசனின் ஒரு கவிதையை நினைவுபடுத்தும் ஒரு மகான் இறந்தபோது, அவர் கையில் பூ இருந்தது. அவர் இறப்பதற்கு முதல் நாள் அவரைப் பார்க்க வந்த ஒருவரிடம், ‘தெய்வத்தைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் உள்ளவனிடம் தாவரங்கள் பேசும்’ என்று கூறியவர் , ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் (George Washington Carver) ஆவார். இந்தியாவில் ஏறத்தாழ மகாத்மா காந்தி வாழ்ந்து வீழ்ந்த அதே காலகட்டத்தில்தான் இவரும் அமெரிக்காவில் வாழ்ந்து வீழ்ந்தார். இவர் ஒரு கருப்பர். அன்று கருப்பர்களுடைய பிறந்த தேதி பதிவு செய்வதில்லையாமே! வயதை ஏறத்தாழத்தான் மதிக்க வேண்டும். இவர் பரம ஏழையாகப் பிறந்து மாபெரும் விவசாயி விஞ்ஞானியாகப் புகழ்பெற்றவர். ஒரு பேராசிரியரும்கூட. ஒரு மாயாவியைப் போல் வாழ்ந்த இந்த விந்தை மனிதர், நாடுகாக்கும் நல்ல நடைமுறைத் திட்டங்களையும் வழங்கியவர். உலகில் வேர்க்கடலை சாகுபடிக்கு வித்திட்டவர். 1930களில் ஏற்பட்ட மாபெரும் வீழ்ச்சியை (The Great Depression) நிமிர்த்த இவர் வழங்கிய ஆலோசனைகள், போர்க்காலப் பொருளாதார நெருக்கடிக்கு இவர் வழங்கிய தீர்வுகள் எல்லாம் காலத்தால் அழியாதவை.

இளமை[தொகு]

அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நிலவிய காலகட்டத்திற்குச் சற்றுமுன் பிறந்த ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் ‘நாம் சற்று பக்தியுடன் வேண்டிக் கேட்டுக் கொண்டால் தாவரங்கள் மனிதர்களுடன் பேசும்’ என்று கூறிய இவரைப் பலரும் பைத்தியமாகத்தான் எண்ணினார்கள். டைமன்ட்குரோவ் என்று ஒரு கிராமத்தில் பிறந்தவர். மிசெளரி மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் ஓசார்க்ஸ் மலையடிவாரத்தில் இக்கிராமம் உள்ளது. இந்த அமெரிக்க வேளாண்மை வேதியியல் விஞ்ஞானி சிறுவனாயிருந்த காலத்திலேயே விருட்சாயுர் வேதத்தில் கவனம் செலுத்திவந்தார். தாவரங்களின் கேட்கும் ஆற்றலைப் பற்றி விருட்சாயுர்வேதம் பாடிய சுரபாலர் குறிப்பிட்டுள்ளனர். இவரோ தாவரங்கள் பேசும் என்கிறார்.

சிறுவனாயிருந்த கார்வர் ஊரின் ஒதுக்குப்புற வனத்திற்குள் சென்று விதம் விதமான மூலிகைகளைப் பறித்து வந்து நோயுற்ற பூனை, நாய், பசு போன்ற பிராணிகளை குணப்படுத்துவார். உடைத்து வீணாகக்கிடக்கும் மரங்களை வைத்துப் பசுமையகத்தோட்டம் அமைத்து, அதில் நோயுற்ற செடிகளுக்கு வைத்தியம் செய்வார். டைமண்ட் குரோவ் மக்கள் சிறுவன் கார்வர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு பூக்காத செடிகளைப் பூக்க வைக்கக் கோருவர். வாடியதை வளர வைப்பர். பூக்காததைப் பூக்க வைப்பர். காய்க்காததைக் காய்க்க வைப்பார். இப்படிப் பிரச்சினைகள் உள்ள செடிகளை - பெரும்பாலும் வீட்டுத்தோட்டங்களில் உள்ளவை - எடுத்து மெதுவாகத் தட்டுவார். கீச்சுக்குரலில் பாட்டுப்பாடுவார். காட்டுக்குச் சென்று பல மண் கலவைகளைக் கொண்டு இடுவார். இரவில் மென்பொருள் கொண்டு முடிவைத்துப் பகலில் நல்ல சூரிய வெளிச்சம் படுமாறு வழி செய்வார். பிரச்சினைகள் விலகிப் பூக்காதவை பூ எடுப்பதைக் கண்டு அதிசயித்த பெண்கள் ‘இதெல்லாம் எப்படி கார்வர்?’ என்று கேட்டால், தாவரங்கள் என்னிடம் பேசும். காட்டில் உள்ள தாவரங்களும் பேசும். அவற்றின் மீது அன்பு செலுத்துவேன்” என்று கூறுவார்.

இவர் தினமும் பின்னிரவில் காட்டில் உள்ள தனது சோதனைக்கூடச் செடிகளுடன் ஏதேதோ பேசுவதுண்டு. இரவில் தன்னந்தனியாகக் காட்டில் என்ன செய்வாய்? என்று கேட்டால், நூற்றுக்கணக்கான நோய்த் தாவரங்கள் எனது மருத்துவமனையில் உள்ளன. அவற்றை சிகிச்சை செய்து காப்பாற்றுவதாகக் கூறுவார்.

கல்வ மற்றும் கல்லூரி வாழ்க்கை[தொகு]

அயோவா மாநிலத்தில் இந்தியனோலாவில் உள்ள சிம்சன் கல்லூரியில் ஓவியமும், பியானோ இசையும் படிக்கவெனச் சேர்ந்தார். படிப்புச் செலவுக்கும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் மாணவர்களுக்கு சட்டை தைத்துக் கொடுப்பார். நேர்த்தியாகத் துணி தோய்த்துச் சலவை செய்து கொடுப்பார். தாவரங்களை வரைவதில் இவருக்கிருந்த திறமையால் பேராசிரியர் ஒருவர் ஊக்கத்தால், சிம்சன் கல்லூரியிலிருந்து அயோவா வேளாண்மைக் கல்லூரிக்கு மாறினார். முறைப்படி விவசாயப் பட்டமும் பெற்றார். பணத்திற்கும் செலவுக்கும் அவர் கடுமையாக உழைத்ததுடன் தேவாலயங்களில் ஆர்கன் வாசித்தார். இதற்குமேல் காடுகளில் பாடம் பயிலவும் நேரம் இருந்தது. இவருக்கு மிகவும் பிடித்தமான ஆசிரியர் ஹென்றி கேண்ட்வெல் வாலஸ், ”வாலஸ் ஃபார்மா” என்ற பிரபலமான விவசாயப் பத்திரிக்கை ஆசிரியரும்கூட. அப்பத்திரிகையில் வெளிவந்த ஒரு செய்தி, ”மேல் மண் உள்ள வரை உலகம் உய்யும்.” இதைப் பொன்னெழுத்தாகப் போற்றிய கார்வர், வாலசைக் கொண்டாடியவர். வாலஸுடைய ஆறுவயதுப் பேரனுடன் நட்பை வளர்த்துக் கொண்ட கார்வர், அச்சிறுவனைக் கைப்பிடித்துக் காட்டுக்குள் சென்று தாவரங்களின் அதிசய சக்திகளையும், வனதேவதைக் கதைகளையும் கூறுவார். அந்தப் பேரன் பிற்காலத்தில் வேளாண்மைச் செயலாளராகப் பணியாற்றி, பிற்காலத்தில் அமெரிக்காவின் உதவி ஜனாதிபதியாவார் என்றெல்லாம் கார்வர் எதிர்பார்த்திருக்க முடியாது.

1896-இல் கார்வா வேளாண்மையில் முதுகலைப்பட்டம் பெற்றதும் பல்கலைக்கழக வேலை வந்தது. அந்த வேலையை வேண்டாமென்று ஒதுக்கிவிட்டார். அடுத்து வந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார். புக்கர் டி.வாஷிங்கடன் கார்வரின் அபார அறிவாற்றலை வியந்து போற்றி தான் உருவாக்கிய நார்மல் அன்ட் இன்டஸ்ட்ரியல் யூனிட் நிறுவனத்தின் விவசாயத் துறையை ஏற்று நடத்தும்படி கூறினார். அது அலபாமா மாநிலத்தில் டஸ்கெகீ (Tuskegee)யில் உள்ளது. இப்பகுதி அவர் பிறந்த இடத்திற்கு அருகில் உள்ளதாலும் அப்பகுதி விவசாயிகளுக்கு உழைப்பதில் அவர் தன் ஆர்வம் கொண்டிருந்ததாலும் மிகவும் வசதியான நல்ல சம்பளம் உள்ள பல்கலைக்கழக நிபுணர் வேலையை ஏற்காமல் மிகவும் சாதாரண வேலையைக் குறைந்த சம்பளத்திற்கு ஒப்புக்கொண்டார். இது அமெரிக்காவின் தென்பகுதி. தொடர்ந்து பருத்தி சாகுபடி மட்டுமே செய்து மண் விஷமாக்கப்பட்டிருந்ததைக் கண்டு மனம் வெந்து இதற்கு சரியான மாற்று சாகுபடித்திட்டத்தை வரைய எண்ணினார். 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20-ம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும் இன்றைய இந்தியாவில் விதர்பா பருத்தி விவசாயிகளுக்கு நிகழ்ந்த கதை அன்று அலபாமா மாநிலத்தில் நிகழ்ந்தது. பருத்தி சாகுபடியில் ஏற்பட்ட நஷ்டத்தால் குத்தகை விவசாயிகள் அழிந்த வண்ணம் இருந்தனர். பருத்தி சாகுபடிக்கு முற்றுப்புள்ளியை வைத்துவிட்டு மாற்றுப் பயிர்களாக வேர்க்கடலை, சர்க்கரை வள்ளி, சாகுபடி செய்யுமாறு விண்ணப்பித்தார். வேர்க்கடலை, சர்க்கரை வள்ளி ஆகியவை அன்று மனித உணவாகக் கருதப்படவில்லை. பன்றிகளுக்குரிய உணவாக மட்டுமே எண்ணப்பட்டது. பருத்தி சாகுபடியில் மண்ணில் உள்ள அனைத்து வளரும் வேகமாக வெளியேறும் என்றும் காற்றில் உள்ள நைட்ரஜனை மண்ணில் சேர்க்கும் ஆற்றல் பருத்திக்கு இல்லை என்றும் கூறினார். தான் கூறுவதை மக்கள் ஏற்கவேண்டுமென்று தவம் செய்தார். ”GOD’S LITTLE WORKSHOP” என்ற ஆய்வுக்கூடத்தை நிறுவினார். இந்திய மொழியில் சொல்வதானால் ”அகத்தியரின் ஆஸ்ரமம்” என்று கூறத்தக்க விதத்தில் ஒன்றை நிறுவி மணிக்கணக்கில் சில செடிகளுடன் வாழ்ந்தார். அந்த ஆய்வுக்கூடத்திற்குள் பைபிளைத் தவிர வேறு எந்தப் புத்தகமும் கொண்டு வரவோ, படிக்கவோ அனுமதி இல்லை. தாவரங்களோடு மட்டும் உரையாடுவார். இதைத் ‘தவம்’ என்றுதான் கூறவேண்டும்.

கல்விப்பணி மற்றும் ஆய்வு[தொகு]

டஸ்கெகீயில் இவரிடம் பயிலும் மாணவர்களுக்கு மிகவும் எளிமையாகப் பாடம் நடத்துவாராம். காட்டுக்குச் சென்று தினம் ஒரு மூலிகையைக் கொண்டு வந்து அதன் குணாதிசயங்களை எடுத்துச் சொல்வாராம். இவர் மாணவர்களுக்குப் பயில்விக்கும் முறையால் கவர்ச்சியுற்ற ஜார்ஜியா பல்கலைக்கழகத் துணைவேந்தர் W.B. ஹில்ஸ் இவரின் அபார அறிவுத்திறனைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை என்று கூறினார். நேரில் வந்து அவரைப் பாராட்டிய ஹில்ஸ், ”கார்வரின் அற்புதமான நடைமுறைகளைப் பற்றி வந்த வதந்திகளை நான் முதலில் நம்பவில்லை. எல்லாம் உண்மைதான் என்று புரிவதுடன் அமெரிக்க மாநிலங்களின் தென்பகுதி விவசாயப் பிரச்சினைகளுக்குரிய நல்ல தீர்வாக இதுவரை யாருமே கார்வரைப் போல் ஒரு உருப்படியான செயல்திட்டம் வழங்கவில்லை. அப்படி இவர் வழங்கிய திட்ட உரையில் நான் கலந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” எனக் கூறியுள்ளார். மீண்டும் மீண்டும் இரவு நேரத்தில் இவர் செய்வது என்ன என்ற கேள்விகளை கார்வரின் நெருங்கிய நண்பர்கள் கேட்டபோது, ”எனக்கு இயற்கையே ஆசான். இரவு நேரம் எல்லோரும் தூங்கும்போதுதான் இயற்கையிடமிருந்து அதிகம் கற்றுக் கொள்கிறேன். பொழுது விடியும் தருணத்தில் உள்ள இரவில்தான் கடவுள், எனக்கு என்ன செய்யவேண்டுமென்று திட்டம் போட்டுத் தருகிறார். கடவுளின் ஆணையை நான் நிறைவேற்றுகிறேன்” என்று பதில் கூறவார். 19 ஏக்கர் நிலத்தில் ஒரு மாதிரிப் பண்ணையை உருவாக்கினார். அந்தப் பண்ணைக்குள் ரசாயன உரங்களையும் பூச்சி மருந்துகளையும் பயன்படுத்தாமல் தொழுஉரம், மூடாக்கு, ஏரிமண், சேற்றுமண் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்திப் பயிர்ச்சுழற்சி முறையில் புதிய புதிய பயிர்களுடன் வேர்க்கடலை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவற்றைப் பயன்படுத்தி ரசாயன உரம் போட்டு எடுக்கப்படும் மகசூலை விடவும் இவர் கூடவே விளைவித்தார். இந்த விஷயத்தில் தமிழ்நாட்டில் புளியங்குடி அந்தோணிசாமி வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு சவால் விட்டிருக்கிறார். ‘நான் இயற்கையில் செய்யும் உற்பத்திக்கு ஈடாக உங்களால் ரசாயனத்தால் சாதிக்க முடியாது’ என்று அந்தோணிசாமி கூறியுள்ளது நினைவுக்கு வருகிறது.

ஒரு தோட்டக்கலை நிபுணராக அமர்ந்து கார்வர் யோசித்தபோது மிகவும் வளம் இழந்த மண்ணுக்கு ஏற்ற பயிர் என்ற வகையில் வேர்க்கடலையே அவர் கண்முன் நின்றது. ‘என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் பிறநாட்டில்?’ என்று ‘விவசாயி’ என்ற சினிமாவில் எம்.ஜி.ஆர் பாடியது போல் இந்தக் கார்வரும் ‘என்ன வளம் இல்லை இந்த வேர்க்கடலையில், ஏன் செய்ய வேண்டும் பருத்தியை சாகுபடி?’ பாட்டுப்படித்தார். ஷூட்டிங் முடிந்தவுடன் எம்.ஜி.ஆர். தூங்கியிருப்பார். அதன்பின்னர் வளத்தைப் பற்றி எவ்வளவு எம்.ஜி.ஆர் கவலைப்பட்டார் என்பது முக்கியமில்லை. பாவம். இந்த மனிதர் கார்வர் கையில் கடலையை வைத்துக்கொண்டு ஏழு இரவுகள் ஏழு பகல்கள் தூங்காமல் ஆய்வு ,ஆய்வு , ஆய்வு என்று ஆராய்ந்தார். இறைவனின் உத்தரவுக்குக் காத்திருந்தார். கையிலிருந்த கடலைப் பயிரைப் பார்த்து, ’ஏ கடலையே இறைவன் உன்னைப் படைத்த பொருள் என்ன?’ என்று கேட்டார். அதற்கு கடலை இவ்வாறு பதில் கூறியதாம்… ”மண்ணுக்கு இறங்குவேன், காலநிலைக்கு அஞ்சேன் - காய்ந்தால் என்ன, குளிர்ந்தால் என்ன? நான் ஆற்றல் நிறைந்திருக்கிறேன்…” இது ஆண்டவன் வழங்கிய பதில். உடனே கார்வர் கையிலிருந்த கடலைப்பருப்பைக் கண்டபடி நொறுக்கினார். அவற்றைக் குளிருக்கு உட்படுத்தியும், வெப்பத்தைச் செலுத்தியும் சோதித்தார். கடலையில் 33 சதம் உள்ள எண்ணெய்யில் ஏழு வகையான வேதியியல் கூறுகளைக் கண்டறிந்து ஏழுவிதமான கடலை எண்ணெய்களைத் தயார் செய்தார். கடலையில் 24 விதமான பொருள்கள் உள்ளதை 24 புட்டிகளில் சேர்த்தார். மிகவும் ஆற்றல் நிறைந்த பயிரான வேர்க்கடலையே பருத்திக்கு மாற்றுப்பயிர் என்று விவசாயிகளிடம் எடுத்துரைத்தார்.

இதை மிகவும் எளிமையாக வேர்க்கடலையில் உள்ள பல்வேறு அமினோ அமிலங்கள் அடங்கிய புரதம் இறைச்சி உணவுக்கு இணையானது என்றும் வேர்க்கடலையில் உள்ள மாவுச்சத்து உருளைக்கிழங்குக்கு நிகரானது என்றும் ‘டூ இன் ஒன்’ என்பது போல் வேர்க்கடலையை உட்கொண்டால் இறைச்சியும் வேண்டாம், உருளைக்கிழங்கும் வேண்டாம்… என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார். கார்வர் வாழ்ந்த காலகட்டத்தில் நிலக்கடலைப் பயிரைப் பன்றிக்கு மட்டுமே வழங்கப்பட்டது. மனித உணவாகவே ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலையில் விவசாயிகள் பருத்தியைக் கைவிட்டு நிலக்கடலைக்கு மாற மறுத்தனர். மனம் தளராத கார்வர் அடுத்தகட்டமாக நிலக்கடலை வெண்ணெய் (Peanut Butter) பற்றிய செய்திமடல்களை வெளியிட்டார். அதில் அவர் 100 பவுண்டு எடையுள்ள பாலிலிருந்து 10 பவுண்டு வெண்ணைய்யைத்தான் எடுக்க முடியும். ஆனால் அதே அளவு வெண்ணெய்யை 30 பவுண்டு நிலக்கடலைப் பருப்பிலிருந்து எடுக்கலாமே என்றும் செலவு குறைந்த வேர்க்கடலை சாகுபடியிலிருந்து மதிப்பு மிக்க பொருள்களைத் தயாரித்து அதிக லாபம் பெறமுடியும் என்பதுடன் அதுபோலவே சர்க்கரைவள்ளிக்கிழங்கு பயிரிலிருந்து ஏராளமான விற்பனைப் பொருள்களைப் பெறலாம் என்பதற்குரிய உதாரணமாக சர்க்கரை வள்ளிப்பயிரை ஒரு CORNUCOPIA என்று வர்ணிக்கிறார். இதைச் சரியானபடி மொழிபெயர்த்தால் சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஒரு காமதேனு ஆகும்.

Cornucopia- என்பது கிரேக்க புராணத்தில் காணக் கிட்டும் ஒரு விஷயம். இந்தியாவின் மகாவிஷ்ணுவுக்கு நிகரான கிரேக்க நாகரிகத்துக் கடவுள் ஸீயஸ். அப்படிப்பட்ட தெய்வத்தின் மடியை ஒரு ஆடு சப்பியது. ஆனால் அந்த ஆட்டுக்கொம்பிலிருந்து யாருக்கு எது வேண்டினாலும் கிடைக்குமாம். நமது புராணத்தில் திருப்பாற்கடலைக் கடைந்த போது வந்த பொருள் காமதேனுப்பசு. கிரேக்கப் புராணத்தில் அது ஆட்டுக்கொம்பாகிவிட்டது போலும்! மக்காச்சோளமாவு, கோதுமைமாவு ஆகியவற்றிலிருந்து என்னென்ன உண்டிகள் செய்யலாமோ அதைப்பற்றி பட்டியலையும் கார்வர் செய்தி மடல் தெரிவித்தது. வேர்க்கடலை, சர்க்கரை வள்ளி சாகுபடிகள் மூலம் லாபம் பெறலாம் என்று விவசாயிகள் உணரத் தொடங்கினார்கள். கார்வர் கூறும் வரை சர்க்கரைவள்ளிக் கிழங்கு என்ற பயிரைப்பற்றி அப்பகுதி மக்கள் கேள்விப்பட்டதில்லை. பின்னர் தென்பகுதி அமெரிக்க மாநிலங்களில் பருத்தி சாகுபடியால் மண்வளம் இழந்த நிலங்களுக்கு கார்வர் வேர்க்கடலையாலும் சர்க்கரை வள்ளிக்கிழங்காலும் மருந்திட்டார். பருத்தி சாகுபடி செய்யும்போது வேகமாக மண் வளம் இழப்பதை எடுத்துக் கூறினார். மேலும் மேலும் அங்கு ரசாயன உரமிடுவதால் பருத்தி விளைநிலங்கள் எல்லாம் பாலை நிலங்களாகும் என்று எச்சரித்த அவர் எழுப்பிய குரலுக்குச் செவிமடுத்த விவசாயிகள் மாற்றுப் பயிர்களை ஏற்றுக்கொண்டனர். அதன்பின்னர் முதல் உலகப்போர் நிகழ்ந்த சமயம், சாயப்பொருள்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி அமெரிக்காவின் மிக முக்கியப் பொருளியல் பிரச்சினையானது. அப்போதுதான் இந்தியாவில் இண்டிகோ ஏற்றுமதிப் பொருளானது. தமிழில் நிலவாகை அல்லது நிலி என்று அழைக்கப்படும் ஒரு வகைக் களைச்செடி. இதுபோல் அமெரிக்காவின் தென்பகுதியில் கார்வர் காட்டுப்பகுதிகளில் ஏராளமான களைச் செடிகளைக் கண்டறிந்து சாயத்திற்குப் பயன்படுத்தினர். கார்வரும் அவரின் மாணவர்களும் நண்பர்களும் இணைந்து பலவகைத் தாவரங்களின் இலை, தண்டு, விதை, காய், பழம் ஆகியவற்றிலிருந்து 536 வகையான நிறங்களை உருவாக்கினார். முதல் உலகப்போர் சமயம் கோதுமை உற்பத்தியில் வீழச்சி ஏற்பட்டதால் நிகழ்ந்த உணவுப் பிரச்சினைக்குரிய தீர்வாக சர்க்கரை வள்ளிக்கிழங்கு மாவு செயல்பட்டது. டஸ்கெகீ நிறுவனம் தினம் 200 பவுண்டு கோதுமையை மிச்சப்படுத்தியது. கோதுமைமாவுடன் சமபங்கு சர்க்கரைவள்ளிக்கிழங்கு மாவைச் சேர்த்து சுவையான பிரட் தயாரித்து விற்பனையாயின. கார்வரின் இந்த முயற்சிக்கு நல்ல மரியாதை கிடைத்தது. ஊட்ட உணவு நிபுணர்களும், பத்திரிகை நிருபர்களும் கார்வரை மொய்த்துக் கொண்டனர். இதனால் அமெரிக்காவில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாகுபடி ஊக்கம் பெற்று போர்த்தேவையை அரசு சமாளித்தது. இறைச்சித் தேவைகூட வேர்க்கடலைப் பருப்பு உதவியால் கட்டுப்பட்டது.

கார்வர் வேர்க்கடலையைக் கொண்டும் சரக்கரை வள்ளிக்கிழங்கு கொண்டும் ஏராளமான சமையல் வகைகளையும் செய்தார். அதில் கார்வரின் மாக்சிக்கன்(Mock Chicken) பிரபலமானது. ஷீப் சோர்ரல், பெப்பர் கிராஸ், டேண்டலியன்ஸ், காட்டுச்சிக்காரிக்கிழங்கு போன்ற காய்கறி சாலட் வழங்கப்பட்டது. செடி கொடிகளோடு பேசும் இந்த அற்புத உணவு விவசாய விஞ்ஞானி, ஒரு பாடகர், ஆர்கன் வாசிப்பாளர், இவ்வளவுக்கும்மேல் கலியுக நளனாகவும் திகழ்ந்தார். லண்டன் வரை இவர் பெயர் சென்றது. அனைத்துலகப் பத்திரிகைகளில் போர்க்கால உணவு நெருக்கடிக்குத் தீர்வு வழங்கி மேதையாகச் சித்தரிக்கப்பட்டார். கிரேட் பிரிட்டனின் ராயல் சொசைட்டி ஃபெலோ (FELLOW) பட்டம் வந்ததில் வியப்பில்லை.

மகாத்மா காந்திக்குப் பிடித்தமான உணவு வேர்க்கடலை என்றால் கார்வருக்கும் அதுவே. ஒருகாலத்தில் பன்றி உணவாக இருந்ததை மிக மதிப்புள்ள உணவாக மாற்றிய இவரை வேர்க்கடலை வித்தகர் என்றால் தகும். 1930-இல் அமெரிக்காவின் தென் மாநிலங்களில் வேர்க்கடலை முக்கிய வணிகப்பயிரானது. வேர்க்கடலைப் பருப்பு வணிகத்தில் ஆண்டுக்கு 15 மில்லியன் டாலர், கடலை எண்ணெய் தொழிலில் 60 மில்லியன் டாலர் வருமானமும் வந்தது. நமக்கு பாதாம்பருப்பு அபூர்வம். அமெரிக்காவில் பாதாம் பருப்பு நம்ம ஊரில் வேர்க்கடலைபோல் மலிவாகவும், வேர்க்கடலைப் பருப்பு நம்ம ஊரில் பாதம்பருப்பு போல் மதிப்பு மிக்கதாக உள்ளது. அமெரிக்காவில் உள்ள இந்துக் கோவில்களில் பாதாம்பருப்பை அள்ளித்தருவார்கள். இந்த அளவுக்கு வேர்க்கடலையின் மதிப்பை உயர்த்திய பெருமை கார்வருக்குரியது.

தாவரங்களிலிருந்து ஸ்டார்ச்சு உற்பத்திக்கு வித்திட்டுள்ளார். பசைத் தொழிலை உருவாக்கியவர். அமெரிக்கத் தபால் துறைக்குரிய தபால் தலைப்பசை இவர் கண்டுபிடிப்பு. இதற்கெல்லாம் மேலாக போலீயோ போன்ற வாத நோய்க்குக் கடலை எண்ணெய் வைத்தியம் செய்தார். கடலையிலிருந்து வாதநோய் தீர்க்கும் மருத்துவப் பொருளை இவர் அடையாளம் செய்திருக்கலாம். ஒருவகையில் பார்த்தால் இந்தியாவில் காந்தியும் குமரப்பாவும் கூறியதை அமெரிக்காவில் செயல்படுத்தியுள்ளார். வேளாண்மை சார்ந்த உணவுத் தொழில்களை கிராமக் கைத் தொழிணல்களாகவும் சிறு தொழில்களாகவும் (Small Scale Industries) மாற்றிக்காட்டி, பொருளாதார வீழ்ச்சியிலிருந்து வளர்ச்சியை உருவாக்கினார்.

இவரை அமெரிக்க செனட்டின் Ways and Means Committee அன்று தத்தளித்துக் கொண்டிருந்த மந்தநிலை மாறி உற்பத்தி உயர Fordney-McCumber Tariff Bill தொடர்பான கருத்துக் கணிப்பிற்கு அமெரிக்க செனட் அழைத்தது. வாஷிங்டனில் அமெரிக்கன் செனட் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு முதல் உலகப் போருக்குப் பின்னர் நிகழ்ந்த மாபெரும் வீழ்ச்சிக்கு (The Great Depression) தீர்வு வழங்க 15 நிமிஷம் பேச அனுமதிக்கப்பட்டார். அந்த நிகழ்ச்சி சுவாரசியமானது. வாஷிங்டன் வந்த கார்வருக்குக் கிட்டிய வரவேற்பு உடையை வைத்து.

யூனியன் ஸ்டேஷனில் இவர் வந்து இறங்கிய போது இவரை எதிர்பார்த்துக் காத்திருந்த போர்ட்டரிடம் தான் கொண்டுவந்த பைகளைத் தூக்க உதவி கோரினார். அதற்கு அந்த நபர், மாபெரும் கரும்பு விஞ்ஞானி வரவுக்கு நான் காத்திருக்கிறேன். என் நேரத்தை வீணடிக்காதே’ என்று போர்ட்டர் கூறவே கார்வர் ஒரு டாக்சி பிடித்து வெள்ளைமாளிகை சென்றாராம். காரணம் அவர் அணிந்திருந்த மலிவான உடைகள். 2 டாலருக்கும் குறைவாக விற்கும் கருப்புக்கோட்டில், பித்தான் துறையில் ரோஜாப்பூ, தானே தயாரித்த டை கழுத்தில். செனட் கூட்டம் என்பதற்காக அவர் தனியாக சிறப்பு உடை அணியாததால் அவரை அழைத்துப் போக வந்த போட்டரால் அடையாளம் தெரியாமல் உதாசீனப்படுத்தப்பட்டார். போதாக் குறைக்கு இவர் ஒரு கருப்பர் என்பதைப் பல தெற்குப் பகுதி அமெரிக்க செனட்டர்களுக்குத் தெரிந்ததும் இவரை முதலில் உதாசீனப் படுத்த முயன்றன்ர். அவ்வளவு மோசமாக உடை அணிவதில் வல்லவரான கார்வருக்குத் தன் பேச்சால் மற்றவரை ஈர்க்கும் சக்தி அதிகம் இருந்தது. செனட் கமிட்டிக்குள் நுழைந்து அவர் தன் உரையைத் தொடங்கு முன் கார்வர் தனது தொழில் கூட்டத்தில் தயாரித்த முகம் பூசும் பவுடர், ஷாம்பு, பலவகையான தார் எண்ணெய்கள், வினிகர், மரகோந்து என்று ஏராளமான மாதிரிகளையெல்லாம் அவிழ்த்துக் காண்பித்தவண்ணம் பேசத் தொடங்கிய போது அவரை அடையாளம் புரிந்துகொண்ட உதவி ஜனாதிபதி வேறு யாருமல்ல, ஆறுவயதுச் சிறுவன் - கார்வரின் ஆசிரியர் வேலசின் பேரன்தான். அவனைக் கூட்டிக்கொண்டு காட்டில் திரிந்தபோது அவன் கார்ரை ”கோக்டஸ் ஜாக்” என்று அழைப்பான். கோக்டஸ் என்றால் ”காட்டில் உள்ள கள்ளிச்செடி” தமிழில் ”காட்டான்” என்று சிலரைக் கிண்டல் செய்கிறோமே. அப்படியும் பொருள் கொள்ளலாம். பிறகு அந்த செனட்டர்கள் இவரது பேச்சாற்றலையும் அவர் பேசிய பொருளின் அதிசய குணங்களையும் கருதி இவருக்குப் பேசக் கொடுத்த நேரத்தைப் பல முறை நீட்டியதோடு, உரை முடிந்ததும் எழுந்து ஆர்ப்பரித்துப் பாராட்டினராம்.

இவ்வாறு பல துறைகளில் கிராமத்து விவசாயிகளின் நலனை மனத்தில் கருதி வேளாண் விளைபொருள், வனங்களில் உள்ள அரிய தாவரங்கள் ஆகியவற்றிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள் உற்பத்தி செய்து குத்தகை விவசாயிகள் பயனுற வேண்டும் என்று அவர் உள்ளம் விரும்பியதால் தாமஸ் ஆல்வா எடிசன், ஹென்றிபோர்டு போன்றோர் அழைப்பு விடுத்தும், தன்னுடைய பல கண்டுபிடிப்புகளைக் காசாக்கும் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு உதவ முன்வரவில்லை. பணத்தைப் பெரிதென்று மதித்து யாருக்கும் விலை போகாத விஞ்ஞானியாக வாழ்ந்து மறைந்தார். தாவரங்களிடம் பேசும் சக்தியும், தாவரங்களின் தேவை என்ன என்று உணரும் அறிவாற்றலும் படைத்த இந்த மேதை வாழ்ந்து வளர்ந்து சாதனை புரிந்ததெல்லாம் சரித்திரங்கள்.

சரித்திரங்கள் எல்லாம் நினைவாலயங்களாகிவிட்டன. கார்வர் மறைந்தபின்னர் மண்வளம் நிலைநிறுத்தப்பட்டதா? பருத்தி சாகுபடியால் வளம் இழந்த மண்ணை மீட்ட கதை நிலைக்கவில்லை. பேராசையுள்ள விவசாயிகள் உரநிறுவனங்களின் பிடிப்பில் மீண்டும் சிக்கினார்கள். மண்ணை மென்மையாக நடத்தி இயற்கை வழியில் இனிமையுடன் வளர்க்க வேண்டிய பயிர்களைக் கொடுமைப்படுத்தியதால் அவை பேசும் சக்தியை இழந்துவிட்டன. இயற்கை வழியில் அன்புடன் காதல் செய்ய வேண்டிய விவசாயி ரசாயனத்தால் மண்ணைக் கற்பழித்து வருவதால், மீண்டும் மீண்டும் கார்வரைப் போல், ஷாட்சைப்போல், ஹோவார்டைப்போல், சுரபாலரைப்போல், புக்குவோக்காவைப் போல் ஆயிரம் காந்திகள் உருவாக வேண்டியுள்ளது. நினைவுகள் எல்லாம் நிஜங்களாக வேண்டும். தாவரங்களுக்கு உயிர் உண்டு என்ற ஜகதீஷ் சந்திரபோஸ், தாவரங்களுக்குக் கேள்வி ஞானம் உண்டு என்ற சுரபாலர், தாவரங்களுக்கும் பேசத் தெரியும் என்று கூறிய கார்வர் மீண்டும் மீண்டும் ஜன்மங்கள் எடுக்க வேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 "About GWC: A Tour of His Life". George Washington Carver National Monument. National Park Service. "George Washington Carver did not know the exact date of his birth, but he thought it was in January 1864 (some evidence indicates July 1861, but not conclusively). He knew it was sometime before slavery was abolished in Missouri, which occurred in January 1864."
 2. The Notable Names Database cites July 12, 1864, as Carver's birthday here.

உசாத்துணை[தொகு]

 • Carver, George Washington. "1897 or Thereabouts: George Washington Carver's Own Brief History of His Life." George Washington Carver National Monument.
 • Kremer, Gary R. (editor). 1987. George Washington Carver in His Own Words. Columbia, Missouri.: University of Missouri Press.
 • McMurry, L. O. Carver, George Washington. American National Biography Online Feb. 2000
 • George Washington Carver: Man's Slave, God's Scientist, Collins, David R., Mott Media, 1981)
 • George Washington Carver: His Life & Faith in His Own Words (Hardcover) by William J. Federer Publisher: AmeriSearch (January 2003) ISBN 0-9653557-6-4
 • George Washington Carver: In His Own Words (Paperback) by George W. Carver Publisher: University of Missouri Press; Reprint edition (January 1991) ISBN 0-8262-0785-5 ISBN 978-0-8262-0785-2
 • H.M. Morris, Men of Science, Men of God (1982)
 • E.C. Barnett and D. Fisher, Scientists Who Believe (1984)
 • G.R. Kremer, George Washington Carver in His Own Words (1987)

வெளியிணைப்புகள்[தொகு]

Print publications[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கார்வர்&oldid=1592709" இருந்து மீள்விக்கப்பட்டது