உள்ளடக்கத்துக்குச் செல்

கார்மென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கார்மென் (பிரெஞ்சு உச்சரிப்பு: ​[kaʁmɛn]; எசுப்பானியம்: [ˈkarmen]), என்பது பிரெஞ்சு இசை நாடகவியலாளர் ஜோர்ஜஸ் பிசெட் உருவாக்கிய ஓர் ஓபெரா இசை நாடகம் ஆகும். இது நான்கு பகுதிகளைக் கொண்டது. இதன் கதை வசனத்தை புரொஸ்பெர் மெரிமீ எழுதிய கார்மென் எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு ஹென்றி மீல்ஹக் மற்றும் லுடோவிக் ஹலேவி ஆகியோர் எழுதினர். இது பாரிசில் 1875 மார்ச் 3 இல் முதன்முதலாக மேடையேற்றப்பட்டது. இதன் பாரம்பரியங்களை முறியடித்த காட்சிகள் மக்களை அதிர்ச்சியடைய வைத்தன.

இதன் ஆசிரியரான பிசெட், 33ஆவது அளிக்கையின் பின்னர், இந்த ஒப்பெரா அடுத்த பத்தாண்டுகளுள் பெரும் புகழடையும் என்பது தெரியாமலேயே, திடீரென இறந்துவிட்டார். இது வசனங்களுக்கு இடையிடையே பாடல்களைக் கொண்டு அமைந்துள்ளது.

கதைச் சுருக்கம்

[தொகு]

தெற்கு ஸ்பெயினில் நிகழ்ந்த ஒரு கதையாக இது அமைக்கப்பட்டுள்ளது. ஒரு படைவீரனான டொன் ஜோசே, நாடோடியான கார்மெனால் ஈர்க்கப்பட்டுத் தனது சிறு வயதுக் காதலியையும் தனது வேலையையும் உதறித் தள்ளுகிறான். ஆனால் கார்மென் ஓர் எருதுச்சண்டை வீரனான எஸ்காமெல்லோ மீது காதல் கொள்கிறாள். இதனால் கோபமடைந்த ஜோசே கார்மெனைக் கொல்கிறான்.

பின்னணி

[தொகு]

கலை மாணவர்களுக்கு ரோம் நகரில் அரச செலவில் தங்கியிருந்து தமது கலைப்படைப்புகளை ஆக்க உதவும் 'பிரிக்ஸ் டி ரோம்' எனும் புலமைப்பரிசில் பெற்றவராக இருந்தபோதும், 1860களில் பிசெட் தனது நாடகங்களை மேடையேற்றுவதற்கு முடியாமலிருந்தார். பரிஸ் நகரின் அரச ஒபெரா அரங்குகள் இரண்டும் புதிய படைப்பாளர்களுக்கு அதிகம் வாய்ப்பளிக்கவில்லை.[1] சுயாதீனமான 'தியேட்டர் லிரிக்' நிறுவனத்தின் தலைவரான லியோன் கார்வல்கோவுடன் பிசெட்டுக்கு இருந்த தொழில்முறை உறவு காரணமாக 1863இலும் 1867இலும் இரு ஒபெராக்களை அவரால் மேடையேற்ற முடிந்தாலும் அவை பெரிதும் மக்களைக் கவரவில்லை.[2][3]

1870-71இல் பிரெஞ்சு-செருமன் போர் முடிவுக்கு வந்த பின்னர், பாரிசில் கலை வாழ்க்கை மீளுருப்பெற்ற போது பிசெட்டுக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தன. 1872இல் இவரது ஒபெராவான 'ஜாமிலே' ஒபெரா-கொமிக் அரங்கில் மேடையேற்றப்பட்டது. 11 அளிக்கைகளுக்குப் பின்னர் இது முடிவுற்றதெனினும், இந்த அரங்கு மேலும் ஒரு ஒபெராவை உருவாக்கும் பொறுப்பை பிசெட்டுக்கு வழங்கியது. இதற்கு ஹென்றி மீல்ஹக் மற்றும் லுடோவிக் ஹலேவி வசனமெழுதத் தீர்மானிக்கப்பட்டது.[4] இந்த ஒபெராவை உருவாக்கும் பொறுப்புக் கிடைத்தையிட்டு மிக்க மகிழ்ச்சியடைந்த பிசெட் தனது நண்பன் எட்மண்ட் காலாபேட்டுக்கு, 'இது என்க்கு சரியான பாதை கிடைத்துவிட்டதென்பதை உறுதி செய்கின்றது' என்று கூறினார்.[4] இந்த ஒபெராவின் கதை பிசெட், வசனகர்த்தாக்கள் மற்றும் ஒபெரா-கொமிக் அரங்க நிர்வாகிகளிடையே உரையாடப்பட்டுப் பல முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன. கார்மென் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒபெராவை அமைக்கலாம் என பிசெட் யோசனை தெரிவித்தார்.[5]

பாத்திரங்கள்

[தொகு]

கார்மென் - நாடோடிப் பெண்

டொன் ஜோசே - டிரகூன்ஸ் படைவீரர்

எஸ்காமிலோ - எருதுச் சண்டை வீரர்

மைக்கேலா - கிராமக் கன்னிப்பெண்

சுனிகா - டிரகூன்ஸ் தளபதி

மொராலேஸ் - டிரகூன்ஸ் படைவீரர்

பிரஸ்கிற்றா - கார்மெனின் தோழி

மெர்சிடஸ் - கார்மெனின் தோழி

லிலாஸ் பஸ்ற்றியா - விடுதிக் காப்பாளர்

லீ டன்கெய்ரி - கடத்தல்காரர்

லீ ரெமன்டாடோ - கடத்தல்காரர்

ஒரு வழிகாட்டி

மேடை அளிக்கைகள்

[தொகு]
மேடை அளிக்கைக்கான சுவரொட்டி, 1875

இந்த ஒபெரா 1875 மார்ச் 3இல் முதன்முதலாக மேடையேற்றப்பட்டது. பாரிசின் பிரபல கலைஞர்கள் பலர் இதனைப் பார்வையிட்டனர்.[6] ஆரம்ப மதிப்பாய்வுகள் இதற்கு சிறப்பான வரவேற்பைக் கொடுக்கவில்லை. 33 அளிக்கைகளின் பின்னர் ஜூன் 3ஆம் திகதி பிசெட் திடீரெனக் காலமானதன் பின்னர் இது நிறுத்தப்பட்டது. 1875 நவம்பர் முதல் 1876 பெப்ரவரி வரை மீண்டும் 12 முறை இது நடாத்தப்பட்டது. 1875 ஒக்டோபரில் இது வியன்னாவில் அரங்கேற்றப்பட்டு சிறந்த வரவேற்பைப் பெற்றது. அடுத்த 5 ஆண்டுகளில் இது அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பிரபலமடைந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Steen, p. 586
  2. Curtiss, pp. 131–42
  3. Dean 1965, pp. 69–73
  4. 4.0 4.1 Dean 1965, p. 100
  5. McClary, p. 15
  6. Dean 1965, pp. 114–15
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்மென்&oldid=2770104" இலிருந்து மீள்விக்கப்பட்டது