கார்த்திகை பூர்ணிமா
கார்த்திகை பூர்ணிமா | |
---|---|
கார்த்திகை பூர்ணிமா: 28 நவம்பர் 2012 | |
பிற பெயர்(கள்) | திரிபுரி பூர்ணிமா, திரிபுராரி பூர்ணிமா, தேவ தீபாவளி, தேவ் தீபாவளி |
கடைபிடிப்போர் | இந்துக்களும், சைனர்களும் |
வகை | இந்து |
அனுசரிப்புகள் | புஷ்கர் ஏரியில் பிரம்மாவை கௌரவிக்கும் பிரார்த்தனைகளும், மத சடங்குகளும், விஷ்ணு, அரிகரனுக்கு பூசை, புஷ்கர் ஏரியில் குளித்தல் ஆகியன |
நாள் | கார்த்திகையின் முழுநிலவு நாள் |
தொடர்புடையன | வைகுண்ட சதுர்த்தசி |
இந்து சமயம் தொடர்பான கட்டுரை |
இந்து சமயம் |
---|
இந்து சமயம் வலைவாசல் சைவம் வலைவாசல் வைணவம் வலைவாசல் |
கார்த்திகை பூர்ணிமா (Kartik Purnima) என்பது ஒரு இந்து, சீக்கிய, சைனக் கலாச்சார விழாவாகும். இது முழுநிலவு நாள் அல்லது கார்த்திகையின் பதினைந்தாவது சந்திர நாளில் (நவம்பர்-டிசம்பர்) கொண்டாடப்படுகிறது. இது திரிபுரி பூர்ணிமா என்றும் திரிபுராரி பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. இது சில சமயங்களில் தேவ-தீபாவளி எனவும் அழைக்கப்படுகிறது. இது தெய்வங்களின் விளக்குகளின் திருவிழாவாகும். கார்த்திகை தீபத் திருநாள் என்பது தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் வெவ்வேறு தேதியில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் கார்த்திகை வழிபாடு செய்வதால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று நம்பும் வங்காளிகளிடையே கார்த்திகை பூசை குழந்தை பிறப்புடன் (முக்கியமாக மகன்) தொடர்புடையது.
இந்து மதத்தில் முக்கியத்துவம்
[தொகு]திரிபுரா பூர்ணிமா அல்லது திரிபுராரி பூர்ணிமா என்பது திரிபுராசுரன் என்ற அரக்கனின் பெயரிலிருந்து அதன் பெயரைப் பெற்றது. கார்த்திகை பூர்ணிமாவின் சில புராணங்களில், தாரகாசுரனின் மூன்று மகன்களைக் குறிக்க இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. திரிபுராரி என்பது சிவபெருமானின் அடைமொழியாகும். சிவன் தனது வடிவில் திரிபுராந்தகராக ("திரிபுராசுரனைக் கொன்றவர்") இந்த நாளில் திரிபுராசுரனைக் கொன்றார். திரிபுராசுரன் உலகம் முழுவதையும் வென்று தேவர்களை தோற்கடித்து, விண்வெளியில் மூன்று நகரங்களை உருவாக்கினான். இது " திரிபுரம் " என்று அழைக்கப்பட்டது. பின்னர் சிவன் அசுரர்களைக் கொன்று, அவனது நகரங்களை ஒரே அம்பினால் அழித்தார். இதனால் மகிழ்ச்சியில் திளைத்த தேவர்கள், அந்த நாளை விளக்குகளின் திருவிழாவாக அறிவித்தனர். இந்த நாள் "தேவ-தீபாவளி" என்றும் அழைக்கப்படுகிறது. தெய்வங்களின் தீபாவளி என்பது இந்துக்களின் விளக்குகளின் பண்டிகையாகும்.
கார்த்திகை பூர்ணிமா என்பது விஷ்ணுவின் அவதாரமான மச்ச அவதாரம் தோன்றிய நாளாகும். இது துளசி செடியின் உருவமான விருந்தா மற்றும் போரின் கடவுளும் சிவனின் மகனுமான கார்த்திகேயனின் பிறந்த நாளும் ஆகும். கிருட்டிணனின் காதலியான ராதைக்கும் இந்த நாள் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கிருட்டிணனும் ராதையும் ராசலீலை நடனம் ஆடியதாகவும், கிருட்டிணர் ராதையை வழிபட்டதாகவும் நம்பப்படுகிறது. இந்த நாள் பித்துருக்களுக்கும், இறந்த முன்னோர்களுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது.[1]
இந்த திருவிழாவின் தோற்றம் பண்டைய காலங்களில் ஆரம்பித்திருக்கலாம்.[2]
நட்சத்திரத்தில் ( சந்திர மாளிகை ) கிருத்திகையில் வரும் நாள் மற்றும் பின்னர் மகா கார்த்திகை என்று அழைக்கப்படும் போது இந்த பண்டிகை இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தது. பரணி நட்சத்திரத்தின் பலன்கள் சிறப்பு என்று கூறப்படுகிறது. ரோகிணி நட்சத்திரமாக இருந்தால் பலன்கள் இன்னும் அதிகமாகும். இந்த நாளில் எந்த ஒரு பரோபகார செயலும் பத்து வேள்விகள் செய்ததற்கு சமமான பலன்களையும் ஆசீர்வாதங்களையும் தருவதாக கருதப்படுகிறது.[3]
இந்து சடங்குகள்
[தொகு]கார்த்திகை பூர்ணிமா என்பது பிரபோதினி ஏகாதசியுடன் நெருக்கமாக தொடர்புடையது. இது சாதுர்மாத விரதத்தின் முடிவைக் குறிக்கிறது. (விஷ்ணு உறங்குவதாக நம்பப்படும் நான்கு மாத காலம்) பிரபோதினி ஏகாதசி என்பது கடவுளின் விழிப்புணர்வைக் குறிக்கிறது. இந்த நாளில் சாதுர்மாத விரதம் முடிகிறது. பிரபோதினி ஏகாதசி அன்று தொடங்கும் பல திருவிழாக்கள் கார்த்திகை பூர்ணிமாவில் முடிவடையும். கார்த்திகை பூர்ணிமா பொதுவாக திருவிழாவின் மிக முக்கியமான நாளாகும். இந்த நாளில் முடிவடையும் திருவிழாக்களில் பண்டரிபுரத்தில் பிரபோதினி ஏகாதசி கொண்டாட்டங்களும், புஷ்கர் திருவிழாவும் அடங்கும். பிரபோதினி ஏகாதசியில் தொடங்கி துளசி விழாவைச் செய்வதற்கான கடைசி நாள் கார்த்திகை பூர்ணிமா ஆகும்.
மேலும், விஷ்ணு, இந்த நாளில், பலியில் தங்கியிருந்த பிறகு தனது இருப்பிடத்திற்குத் திரும்புவதாக நம்பப்படுகிறது. எனவே, இந்த நாள் தேவ-தீபாவளி என்று அழைக்கப்படுகிறது.[4]
ராஜஸ்தானின், புஷ்கரில், நடக்கும் புஷ்கர் திருவிழா அல்லது புஷ்கர் மேளாவானது பிரபோதினி ஏகாதசி அன்று தொடங்கி, கார்த்திகை பூர்ணிமா வரை தொடர்கிறது. பிந்தையது மிக முக்கியமானது. பிரம்மாவின் நினைவாக இவ்விழா கொண்டாடப்படுகிறது. புஷ்கர் ஏரியில் கார்த்திகை பூர்ணிமா அன்று நீராடும் ஒருவர் முக்திக்கு செல்வார் என்று கருதப்படுகிறது. கார்த்திகை பூர்ணிமா அன்று மூன்று புஷ்கரங்களைச் சுற்றி வருவது மிகவும் புண்ணியமானது என்றும் நம்பப்படுகிறது. சாதுக்கள் ஏகாதசி முதல் பௌர்ணமி வரை இங்குள்ள குகைகளில் தங்குவார்கள். புஷ்கரில் சுமார் 200,000 மக்களும் 25,000 ஒட்டகங்களும் இந்தத் திருவிழாவிற்காக கூடுகின்றன. புஷ்கர் மேளா ஆசியாவின் மிகப்பெரிய ஒட்டகத் திருவிழாவாகும்.[5][6][7][8]
எந்தவொரு புனித யாத்திரை மையத்தில் உள்ள தீர்த்தத்லும் (ஒரு ஏரி அல்லது ஆறு போன்ற புனித நீர்நிலை) ஒரு சடங்குக் குளியல் நிகழ்த்த கார்த்திகை பூர்ணிமா நாள் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த புனித நீராடலுக்கு "கார்த்திகை நீராட்டம்" என்று பெயர்.[9] புஷ்கரத்திலோ அல்லது கங்கை ஆற்றிலோ, குறிப்பாக வாரணாசியில் புனித நீராடுவது மிகவும் மங்கலகரமானதாகக் கருதப்படுகிறது. வாரணாசியில் கங்கையில் நீராடுவதற்கு மிகவும் பிரபலமான நாள் கார்த்திகை பூர்ணிமா ஆகும்.[1] பக்தர்கள் சந்திர உதயத்தின் போது மாலையில் நீராடி, சிவ சம்புதி, சடைத் போன்ற ஆறு பிரார்த்தனைகளை வழிபடுகின்றனர்.[3]
தெய்வங்களுக்கு அன்னதானம் கோவில்களில் நடைபெறும். ஐப்பசி பௌர்ணமி நாளில் விரதம் எடுத்தவர்கள், கார்த்திகை பூர்ணிமா அன்று விரதம் முடிக்கிறார்கள். இந்த நாளில் விஷ்ணு கடவுளும் வணங்கப்படுகிறார். இந்த நாளில் அனைத்து விதமான வன்முறையும் தடைசெய்யப்பட்டுள்ளது. இதில் முகம் மழித்தல், முடி வெட்டுதல், மரங்களை வெட்டுதல், பழங்களையும் பூக்களையும் பறித்தல், பயிர்களை வெட்டுதல், உட்பட இனச்சேர்க்கையும் கூட அடங்கும்.[9] தானங்கள், குறிப்பாக பசுக்களை தானம் செய்தல், பிராமணர்களுக்கு உணவளித்தல், உண்ணாவிரதம் ஆகியவை கார்த்திகை பூர்ணிமாவுக்கு பரிந்துரைக்கப்பட்ட மதச் செயல்பாடுகள் ஆகும்.[1] தங்கத்தை பரிசாக வழங்குவது மக்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவதாக கூறப்படுகிறது.
சிவ வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட பண்டிகைகளில் மகா சிவராத்திரிக்கு அடுத்ததாக திரிபுரி பூர்ணிமா உள்ளது.[2] திரிபுராசுரனை கொன்றதை நினைவு கூறும் வகையில், சிவன் உருவங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன. தென்னிந்தியாவில் உள்ள கோவில் வளாகங்களில் இரவு முழுவதும் தீபங்களால் ஒளிர்கின்றன. மரணத்திற்குப் பிறகான நரகத்தில் இருந்து தப்பிக்க மக்கள் 360 அல்லது 720 திரிகளை கோயில்களில் வைப்பார்கள். 720 திரிகள் இந்து நாட்காட்டியின் 360 நாட்களையும், இரவுகளையும் குறிக்கிறது.[1] வாரணாசியில், மலைத்தொடர்கள் ஆயிரக்கணக்கான பிரகாசமாக எரியும் மண் விளக்குகளால் உயிர்ப்பிக்கப்படுகின்றன.[1] மக்கள் பூசாரிகளுக்கு விளக்குகளை பரிசாக வழங்குகிறார்கள். வீடுகளிலும், சிவன் கோயில்களிலும் இரவு முழுவதும் தீபம் ஏற்றப்படுகிறது. இந்த நாள் "கார்த்திகை தீபாராதனை" என்றும் அழைக்கப்படுகிறது.[2] ஆறுகளில் சிறு படகுகளில் விளக்குகள் மிதக்கப்படுகின்றன. துளசி, அரச மரம், நெல்லி மரங்களில் விளக்குகள் வைக்கப்படுகின்றன. விளக்குகளின் ஒளியைக் காணும் நீரிலும் மரத்தடியிலும் உள்ள மீன்களும், பூச்சிகளும், பறவைகளும் முக்தி அடைய உதவும் என்று நம்பப்படுகிறது.[9]
ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானாவில் உள்ள வீடுகளில், 'கார்த்திகை மாசலு' (மாதம்) மிகவும் மங்கலகரமானதாகக் கருதப்படுகிறது. கார்த்திகை மாதம் தீபாவளி அன்று தொடங்குகிறது. அன்று முதல் மாத இறுதி வரை தினமும் எண்ணெய் தீபம் ஏற்றப்படுகிறது. கார்த்திகை பௌர்ணமி அன்று சிவன் கோயில்களில் 365 திரிகள் கொண்ட எண்ணெய் தீபம் ஏற்றப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், கார்த்திகை புராணம் படித்து, சூரியன் மறையும் வரை விரதம் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும். சுவாமிநாராயண சம்பிரதாயத்துடன் இந்த நாளை நம்பிக்கையுடனும் ஆர்வத்துடனும் கொண்டாடுகிறார்.[4]
போயித்தா பந்தனா
[தொகு]ஒடிசாவில், கார்த்திகை பூர்ணிமா அன்று, மக்கள் 'போய்த்தா பந்தனா' என்ற விழாவாகக் கொண்டாடி, அருகில் உள்ள நீர்நிலைகளுக்குச் சென்று, முதலில் வாழைத் தண்டினாலும், தேங்காய் நார், வெற்றிலையால் செய்யப்பட்ட சிறு படகுகளை அமைக்கிறார்கள். போய்த்தா என்பது படகு அல்லது கப்பலைக் குறிக்கிறது. இந்தோனேசியா, சாவகம், சுமாத்திரா , பாலி போன்ற வங்காள விரிகுடாவுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் தொலைதூர தீவு நாடுகளுடன் வர்த்தகம் செய்வதற்காக கலிங்கத்திலிருந்து வணிகர்களும், சதாபாக்கள் என்று அழைக்கப்படும் கடற்படையினரும் போய்த்தாக்களில் பயணம் செய்த, மாநிலத்தின் புகழ்பெற்ற கடல் வரலாற்றை நினைவுகூரும் திருவிழாவாகும் .
கார்த்திகை தீபம்
[தொகு]தமிழ்நாட்டில் கிருத்திகை நட்சத்திரத்திற்கு நிகராக கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் வீட்டின் முற்றத்தில் வரிசையாக விளக்குகளை ஏற்றி வைப்பார்கள். திருவண்ணாமலையில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, பத்து நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது.
சமணம்
[தொகு]கார்த்திகை பூர்ணிமா என்பது சைனர்களின் புனிதத் தலமான பாலிதானாவுக்குச் சென்று அதைக் கொண்டாடும் ஒரு முக்கியமான மத நாளாகும்.[10] கார்த்திகை பூர்ணிமா தினத்தன்று புனித யாத்திரை (பயணம்) மேற்கொள்வதற்காக ஆயிரக்கணக்கான சைன யாத்ரீகர்கள் பாலிதானா நகரத்தில் அமைந்துள்ள சத்ருஞ்ஜெய மலையின் அடிவாரத்தில் கூடுகின்றனர். சிறீ சத்ருஞ்ஜெய தீர்த்த யாத்திரை என்றும் அழைக்கப்படும் இந்த நடைபயணம் 216 கிமீ கரடுமுரடான மலைப்பாங்கான நிலப்பரப்பில் நடந்து மலையின் மேல் உள்ள ஆதிநாதர் கோயிலில் வழிபடும் ஒரு சமண பக்தரின் வாழ்க்கையில் இந்த நடைபயணம் ஒரு முக்கியமான சமய நிகழ்வாகும்.
சாதுர்மாத விரத நாட்களில் பொதுமக்களுக்கு மூடப்படும் மலைகள், கார்த்திகை பூர்ணிமா அன்று பக்தர்களுக்காகத் திறக்கப்படுவதால், இந்த நாள் நடைப்பயணத்திற்கு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. சைனர்களுக்கு இந்த நாள் மிகவும் மங்கலகரமான நாளாகக் கருதப்படுகிறது. மழைக்காலத்தின் நான்கு மாதங்களுக்கு பக்தர்கள் தங்கள் இறைவனை வழிபடாமல் ஒதுக்கி வைக்கப்படுவதால், முதல் நாளே அதிகபட்ச பக்தர்களை ஈர்க்கிறது. முதல் தீர்த்தங்கரரான ஆதிநாதர், தனது முதல் பிரசங்கத்தை வழங்குவதற்காக மலைகளை புனிதப்படுத்தினார் என்று சைனர்கள் நம்புகிறார்கள். சமண நூல்களின்படி, மில்லியன் கணக்கான சாதுக்ளும், சாத்விகளும் இந்த மலைகளில் முக்தி அடைந்துள்ளனர்.
சீக்கிய மதம்
[தொகு]சீக்கியர்களின் முதல் குருவான குரு நானக்கின் பிறந்த நாள் "குருபுரப்" அல்லது "பிரகாச பர்வா" என்று கார்த்திக் பூர்ணிமா அன்று கொண்டாடப்படுகிறது. பாய் குருதாஸ், அவரது கபிட்டில் சீக்கிய இறையியலாளர் குருநானக் இந்த நாளில் பிறந்தார் என்று சாட்சியமளித்துள்ளார். இது, உலகளவில் குருநானக் ஜெயந்தி என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது இந்தியாவில் ஒரு பொது விடுமுறை நாளாகும்.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 [Guests at God's wedding: celebrating Kartik among the women of BenaresBy Tracy Pintchman pp. 83-7]
- ↑ 2.0 2.1 2.2 The Hindu religious year By M.M. Underhill pp.95-96
- ↑ 3.0 3.1 Dwivedi, Dr. Bhojraj (2006). Religious Basis Of Hindu Beliefs. Diamond Pocket Books (P) Ltd. p. 171. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788128812392. பார்க்கப்பட்ட நாள் 7 November 2012.
- ↑ 4.0 4.1 Swaminarayan Smapradaya - Dev Diwali Significance
- ↑ Fairs and Festivals of India By S.P. Sharma, Seema Gupta p 133-34
- ↑ Nag Hill at Pushkar brims with sadhus, 27 October 2009, Times of India
- ↑ Viewfinder: 100 Top Locations for Great Travel Photography By Keith Wilson p.18-9
- ↑ Frommer's India By Pippa de Bruyn, Keith Bain, Niloufer Venkatraman, Shonar Joshi p. 440
- ↑ 9.0 9.1 9.2 Keys of Power: A Study of Indian Ritual and Belief By J. Abbott pp.203-4
- ↑ "Pilgrims flock Palitana for Kartik Poornima yatra". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2009-11-02 இம் மூலத்தில் இருந்து 2012-10-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121025064717/http://articles.timesofindia.indiatimes.com/2009-11-02/rajkot/28091395_1_devotees-palitana-jain.
- ↑ http://www.internetwebportals.com/2017/06/kartik-purnima-date-and-time.html