காரைக்கால் காரைக்காலம்மையார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காரைக்கால் காரைக்காலம்மையார் கோயில்
பெயர்
பெயர்:காரைக்கால் காரைக்காலம்மையார் கோயில்
அமைவிடம்
ஊர்:காரைக்கால்
மாவட்டம்:காரைக்கால்
மாநிலம்:புதுச்சேரி
நாடு:இந்தியா

காரைக்காலம்மையார் கோயில் என்பது புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் நகரில் அமைந்துள்ள கோயிலாகும்.[1][2] இக்கோயில் நாயன்மார்களுள் ஒருவரான காரைக்கால் அம்மையாரை மூலவராக கொண்டதாகும். இந்தக் கோயில் காரைக்கால் சோமநாதர் சிவாலயத்தினுள் காணப்படுகிறது.

காரைக்கால் அம்மையார் கோயிலின் முன்மண்டபத்தில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. காரைக்கால் அம்மையாரின் சன்னதியின் சுதை சிற்பங்களில் அவரின் வாழ்க்கை வரலாறு வடிக்கப்பட்டுள்ளது. கோயிலின் பிரகாரத்தில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

தலவரலாறு[தொகு]

காரைவனம் என்று அழைக்கப்பட்ட பகுதியாக தற்போதைய காரைக்கால் அமைந்திருந்தது. அங்கு தனதத்தன் - தர்மவதி தம்பதியினர் வாழ்ந்தனர். அவர்களுக்கு புனிதவதி எனும் மகள் இருந்தாள். அவள் சிவபெருமானின் மீது அளவுகடந்த பக்தி கொண்டிருந்தாள். தனதத்தர் வனிகர் குலத்தலைவன் ஆதலால் புனிதவதிக்கு திருமண வயது வந்ததும், பரமதத்தன் எனும் பெயருடைய வணிகருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

புனிதவதியின் பக்தியை சோதிக்க இறைவன் திருவிளையாடல் நடத்தினார். ஒரு நாள் சிவபக்தர் மூலமாக சுவைமிகுந்த இரு மாங்கனிகள் பரமதத்தனுக்கு கிடைத்தது. அதை வீட்டிற்கு பணியாட்கள் மூலம் கொடுத்து அனுப்பினான். புனிதவதி சைவ சமயத்தவள் என்பதால் அடியாருக்கு உணவிடும் வழக்கத்தை கொண்டிருந்தாள். அன்றும் ஒரு அடியார் வீட்டிற்கு உணவருந்த வர, அவருக்கு மாங்கனிகளில் ஒன்றைப் படைத்தார். பரமதத்தனுக்கு இந்த சைவ மரபில் நாட்டம் இல்லையென்பதால், அவனிடம் அடியாருக்கு உணவிடுவதை பற்றி புனிதவதி தெரிவிப்பதில்லை.

பரமதத்தன் உணவருந்த வரும் போது, அவனுக்கு மீதமிருந்த மாங்கனியைப் படைத்தார். அதனுடைய சுவையில் மயங்கிய பரமதத்தன் மற்றொரு கனியையும் தனக்கே வைக்கும்படி கூறினான். கணவனின் ஆசையை நிறைவேற்ற எண்ணிய புனிதவதி, சமையல் அறைக்குச் சென்று இறைவனை வேண்டி மாங்கனியொன்றைப் பெற்றாள். அதை கணவன் பரமதத்தனுக்குப் படைத்தார். முதலில் உண்ட கனியை விட தற்போது உண்ட கனி மேலும் சுவைமிக்கதை அறிந்து அதன் காரணத்தினை வினவினான். புனிதவதியும் இக்கனி இறைவன் தந்தது என்றாள். அவள் கூறியதை கேட்டு வியப்படைந்து தற்போதும் அது போல கனியை இறைவனிடமிருந்து பெற்று காட்டு என்றான். புனிதவதியும் இறைவனை வேண்டி கனியைப் பெற்றாள். அதைக் கண்டு புனிதவதி வணக்கத்திற்கு உரியவள் என்று பரமதத்தன் முடிவு செய்தான்.

அவளைப் பிரிந்து வேறிடம் சென்று வேறு பெண்ணை திருமணம் செய்து இல்லறம் நடத்தி குழந்தைப் பெற்றான். அப்பெண்ணிற்கு புனிதவதி என்ற தன் முதல் மனைவியின் பெயரையே இட்டான். புனிதவதியை குடும்பத்தினருடன் சென்று காலில் விழுந்து வணங்கினான்.

புனிதவதி இனி இல்லற வாழ்வு வேண்டாம் என தன்னுடைய உடலை பேயுருவமாக மாற்றி இறைவன் மீது பாடல்கள் பாடினார். கைலாயம் வருக என இறைவன் அழைத்தமையால் அவ்விடம் சென்றார். இறைவன் வசிக்கும் இடத்தில் காலால் நடந்து செல்ல கூடாதென தலையால் நடந்து சென்றார். அதைக் கண்ட சிவபெருமான் "அம்மையே" என அழைத்தார்.

மாங்கனித் திருவிழா[தொகு]

இக்கோயிலில் நடைபெறும் மாங்கனித் திருவிழா பெரும் சிறப்பு பெற்றதாகும்.

படத்தொகுப்பு[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "Karaikal Ammayar Temple : Karaikal Ammayar Karaikal Ammayar Temple Details - Karaikal Ammayar- Karaikal - Tamilnadu Temple - காரைக்காலம்மையார்".
  2. http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=72&pno=543