காமயகவுண்டன்பட்டி பாறை ஓவியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காமயகவுண்டன்பட்டி பாறை ஓவியங்கள் என்பன, தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்குக்கு அண்மையில் அமைந்துள்ள காமயகவுண்டன்பட்டி சங்கிலிக்கரடு குன்றுப் பகுதியில் காணப்படும் பாறை ஓவியங்களைக் குறிக்கும்.

இப்பகுதிக் குகைகளில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த தொன்மையான பல தொல்பொருட்களும் கிடைத்துள்ளன. இப்பகுதிக் குகைகள் பழங்காலத்தில் மனித உறைவிடங்களாக இருந்ததாகத் தெரிகின்றது. இங்குள்ள படப்புப்பாறை என்னும் பாறை ஒன்றுள்ளது. இங்கு அக்காலத்தில் வழிபாடுகளும், சடங்குகளும் இடம்பெற்று வந்ததாகச் சொல்லப்படுகிறது. இப்பாறையில் பல ஓவியங்கள் காணப்படுகின்றன.[1]

இங்குள்ள ஓவியங்களில் கொம்புகளுடன் கூடிய மாட்டின் தலையைக் காட்டும் ஓவியம், படகின் மீது மனிதன் ஒருவன் நிற்பது போன்ற ஓவியம் என்பன குறிப்பிடத்தக்கவை. மாட்டுத்தலை வெள்ளை வண்ணத்தால் நிரப்பி வரையப்பட்டுள்ளது. அதேவேளை, படகில் நிற்கும் மனித உருவம் கோட்டுருவப் படமாக வரையப்பட்டுள்ளது. இப்பகுதியில் கிடைத்த தொல்பொருட்களில் பல நிறந்தீட்டப்பட்ட மட்பாண்டங்களும் கிடைத்துள்ளன. இதனால், இப்பகுதியில் பழங்காலத்திலேயே நிறந்தீட்டும் முறை வளர்ச்சி அடைந்திருந்ததாகத் தெரிகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. பவுன்துரை, இராசு., 2001, பக். 84
  2. பவுன்துரை, இராசு., 2001, பக். 84

உசாத்துணைகள்[தொகு]

  • பவுன்துரை, இராசு., தமிழகப் பாறை ஓவியங்கள், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2001.
  • Dayalan, D., Rock Art in Tamilnadu and its Archaeological Perspective.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]