கானாடுகாத்தான் அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கானாடுகாத்தான் அரண்மனை

கானாடுகாத்தான் அரண்மனை (ஆங்கிலம்:Kanadukathan Palace) என்றும் செட்டிநாட்டு அரண்மனை என்றும் அழைக்கப்படும் இந்த அரண்மனை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்தில் கானாடுகாத்தான் என்னும் ஊரில் உள்ளது.

அமைவிடம்[தொகு]

சிவகங்கை நகரத்திலிருந்து 60 கிமீ தொலைவிலும், காரைக்குடியிலிருந்து 15 கிமீ தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள செட்டிநாடு தொடருந்து நிலையம் 2 கிமீ தொலைவில் உள்ளது. இப்பேரூராட்சி இராமேஸ்வரம் - திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண். 210-இல் உள்ளது.

உருவாக்கம்[தொகு]

இந்த அரண்மனையானது ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்களால் 1912 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.

வேலைப்பாடுகள் நிறைந்த இந்த அரண்மனையின் கட்டுமானப் பணி எழு ஆண்டுகள் நடைபெற்று நிறைவுற்றதுள்ளது. இந்த அரண்மனை செட்டிநாட்டின் பாரம்பரிய கட்டிடக்கலையை வெளிப்படுத்துகின்ற வகையில் அமைந்துள்ளது. [1]

சிறப்புகள்[தொகு]

இந்த அரண்மனையானது கலை, கட்டிடக் கலை, பாரம்பரியம் ஆகியவற்றின் அதிசயிக்கத்தக்க கலவையாக அமைந்துள்ளது. செட்டிநாட்டு மக்களின் சிறந்த பண்பாட்டின் பெருமையை வெளி உலகிற்கு வெளிப்படுத்துகின்ற மிக உயரிய உதாரணமாக இது அமைந்துள்ளது. செட்டியார்களின் விருப்பத்திற்குரிய பாரம்பரிய பாணியே இந்த அரண்மனையில் விரவிக்கிடக்கின்றது. அலங்கார விளக்குகள், தேக்கு மர சாமான்கள், பளிங்குக் கல், கண்ணாடிகள், கம்பளங்கள் ஸ்படிகங்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இருந்த போதிலும், இது வெவ்வேறு வகையான கலை மற்றும் பாணிகளைக் கொண்டு அமைந்துள்ள நிலையில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. [2] காரைக்குடி, பள்ளத்தூர், ஆத்தங்குடி, கோதமங்களம் பகுதிகளில் காணப்படுகின்ற செட்டிநாட்டு வீடுகள் மிகுந்த வேலைப்பாடு கொண்டவையாக அமைந்துள்ளன. அவற்றில் பல வீடுகள் இறக்குமதி செய்யப்பட்ட உயர் வகை மரங்கள், கண்ணாடி வேலைப்பாடுகளுக்கு புகழ் பெற்றவையாக அமைந்துள்ளன. காரைக்குடியிலிருந்து 10 கி.மீ தொலைவில் கானாடுகாத்தான் என்னும் இடத்தில் அமைந்துள்ள செட்டிநாடு அரண்மனை என்று அழைக்கப்படுகின்ற இந்தஅரண்மனையில் இத்தகைய வேலைப்பாடுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்த செட்டிநாடு அரண்மனையைக் கட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட பல பொருட்கள் கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்தும், ஐரோப்பாவிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும். அரண்மனையில் விலை உயர்ந்த தேக்கு, பளிங்கு அல்லது கிரானைட்டால் செய்யப்பட்ட பெரிய தூண்கள் உள்ளன. இந்த அரண்மனை அகண்ட தாழ்வாரத்தைக் கொண்டு அமைந்துள்ளது. பொதுவாகவே இது போன்ற அமைப்பு இப் பகுதியில் காணப்படுகின்ற அனைத்து கட்டடங்களிலும் காணப்படுகின்ற சிறப்புக்கூறு ஆகும். [1] இந்தக் கட்டிடக் கலை குறித்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர்கள் ஆய்வு செய்துள்ளனர். வீட்டின் முன்புறம் அனைவரையும் வரவேற்கும் வகையில் நுழைவு வாசலின் இருபுறமும் விசாலானமான திண்ணை, கம்பீரமான மரத் தூண்கள் பண்பாட்டு அடையாளமாகவே காணப்படுகிறது. பர்மா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட தேக்கு மரப் பலகையில் செய்யப்பட்ட கதவுகளும் ஜன்னல்களும் கலையம்சத்தை உணர்த்துகின்றன. [3]

சடங்கு நிகழ்வுகள்[தொகு]

இல்லத்தில் நடைபெறுகின்ற கல்யாணச் சடங்குகள், மதம் சார்ந்த சடங்குகள் அங்கு காணப்படுகின்ற பெரிய அகன்ற முற்றத்தில் நடைபெறுகின்றன. முற்றத்தின் ஒரு மூலையில் டாக்டர் அண்ணாமலை செட்டியாரின் மனைவி பல மணித்துளிகள் பூசை செய்த பூசை அறை அமைந்துள்ளது. இந்த அரண்மனையில் அரச குடும்பத்தினா் பயன்படுத்தி வந்த விலை உயர்ந்த பல பழமையான பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. [1] செட்டியார்கள் தங்கள் வீட்டு விசேஷங்களையும் வீட்டிலேயே நடத்துவதை வழக்கமாகக் கொண்டவர்கள். அதனால் வீடே பெரிய மண்டபம்போல் இருக்கும். [3]

வசதிகள்[தொகு]

இந்த அரண்மனையில் 1990 சதுர அடியில் 9 கார்களை நிறுத்தும் அளவிற்கான வசதிகள், மின்தூக்கி (லிப்ட்) வசதி உள்ளது. [1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 சிவகங்கை மாவட்டம், காணத்தக்க இடங்கள்
  2. செட்டிநாடு அரண்மனை, காரைக்குடி
  3. 3.0 3.1 உலகப் புகழ்பெற்ற கானாடுகாத்தான் செட்டிநாடு அரண்மனை

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]