உள்ளடக்கத்துக்குச் செல்

காட்மாண்டுப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்மாண்டுப் போர்
காட்மாண்டுவை கோர்க்காலிகள் கைப்பற்றல் பகுதி

1811 இல் காட்மாண்டுவில் அடுக்குத் தூபிக்கள்.
நாள் 1768
இடம் காட்மாண்டு
கோர்க்காலிகள் வெற்றி
பிரிவினர்
நேவாரிகள் கோர்க்காலிகள்
தளபதிகள், தலைவர்கள்
செயந்தா இராணா
பலம்
தெரியவில்லை 20,000
காட்மாண்டுப் போர் is located in நேபாளம்
கோர்க்கா
கோர்க்கா
காட்மாண்டு
காட்மாண்டு
சிந்துலி
சிந்துலி
தற்கால நேபாளில் அமைவிடம்
செயப்பிரகாசு மல்லா, காட்மாண்டுவின் கடைசி மன்னர்
காட்மாண்டு சதுக்கம், முக்கியப் போர் நடைபெற்ற இடம்

காட்மாண்டுப் போர் (Battle of Kathmandu) நேவாரிகளிடமிருந்து காட்மாண்டு நகரத்தை கோர்க்காலிகள் கைப்பற்றிய போது நிகழ்ந்த ஒரு போர் ஆகும். 1768 ஆம் ஆண்டு காட்மாண்டுவில் இப்போர் நடைபெற்றது[1] . போரின் முடிவில் நேவார் குல காட்மாண்டு மன்னர் செயப்பிரகாசு மல்லா, பக்கத்திலிருந்த கோர்க்கா நாட்டு மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா என்பவரால் தோற்கடிக்கப்பட்டார்.

பிரிதிவி நாராயணன் ஷா தலைமையில் பெற்ற வெற்றியில் காத்மாண்டு சமவெளியில் நலிவடைந்த நிலையில் இருந்த நேவார் அரசகுலத்தின் ஆட்சி முடிவுக்கு வந்து ஷா வம்சத்து ஆட்சி நிறுவப்பட்டது[2]. கலாச்சாரம் மற்றும் வர்த்தக நோக்கத்தில் ஈடுபாடு கொண்டு அமைதியாக ஆட்சிசெய்து கொண்டிருந்த நேவார்கள், நாட்டை விரிவுபடுத்தும் எண்ணமும் சூறையாடும் நோக்கமும் மிகுந்த கோர்க்காலிகளிடம் தோல்வியுற்றனர்[3]

முற்றுகை

[தொகு]

காட்மாண்டு (மாற்று பெயர்கள்: யென் தேசா येँ देस, காந்திப்பூர்) நகரம் காட்மாண்டு பள்ளத்தாக்கில் இருந்த மூன்று தலைநகரங்களில் ஒரு நகரமாகும். லலித்பூர், பக்தபூர் என்பன மற்ற இரண்டு தலை நகரங்களாகும். திபெத்திய எல்லைக்கு வடக்கே 12 முதல் 13 நாட்கள் பயணத் தொலைவு வரைக்கும் காத்மாண்டு சமவெளி நீடித்திருந்தது. மேற்கில் காட்மாண்டு மற்றும் கோர்க்கா இடையே திரிசூலி ஆறு எல்லையாக அமைந்திருந்தது[4]

காட்மாண்டு நகரத்தின் வளமான பண்பாடு, வர்த்தகம், தொழில் மற்றும் விவசாயம் ஆகியனவற்றின் மீது கொண்ட ஆசையே காட்மாண்டு பள்ளத்தாக்கைக் கோர்க்காலிகள் விரும்பியதற்குக் காரணமாகும்[5]. 1736 ஆம் ஆண்டில் கோர்க்காலி மன்னர் நாரா பூபால ஷா, காட்மாண்டு பள்ளத்தாக்கின் வடமேற்கில் ஒரு கோட்டையாகவும் எல்லை நகரமாகவும் திகழ்ந்த நுவாகோட் மீது ஒரு தாக்குதலைத் தொடுத்தார். ஆனால் அத்தாக்குதல் முற்றிலுமாக முறியடிக்கப்பட்டது[6]

அவரது மகன் பிரிதிவி நாராயணன் ஷா 1742 இல் மன்னராக முடிசூடிக் கொண்ட பிறகு மீண்டும் இத்தாக்குதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. பலமான போரால் மட்டுமே காட்மாண்டுவை வெற்றி கொள்ள முடியும் என்பதை பிரிதிவி நாராயணன் ஷா உறுதியாக நம்பினார். முக்கியமான வர்த்தகப் பாதைகளைக் கைப்பற்றினால் மட்டுமே காட்மாண்டுவைப் பிடிக்க இயலும் என்றும் கருதினார்[7][8]. அவருடைய படைகள் காட்மாண்டுவைச் சுற்றியுள்ள மலைப் பாதைகளை ஆக்கிரமிப்பு செய்தது. திபெத் மற்றும் இந்தியாவை இணைக்கும் வர்த்தகப் பாதைகள் முடக்கப்பட்டன.

1744 ஆம் ஆண்டில் பிரிதிவி நுவாகோட் நகரைப் பிடித்து நேபாளத்திற்குள் காலடி வைத்தார். இவ்வெற்றியால் இமயமலைத்தொடரில் அமைந்திருந்த வர்த்தக சாலைகளில் நடைபெற்ற நேபாளத்தின் வியாபார நடவடிக்கைகளைத் தடுத்தார்[9]. படிப்படியாக காட்மாண்டு பள்ளத்தாக்கின் மேற்கு, தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைச் சுற்றிலுமிருந்த மாக்வான்பூர், துலிக்கேல் பகுதிகளை 1762 மற்றும் 1763 ஆம் ஆண்டுகளில் கோர்க்காலிகள் பிடித்தனர்[10].

நாட்டில் பஞ்சம் ஏற்படுத்தும் ஒரு முயற்சியாக இவர் பள்ளத்தாக்கில் முற்றுகை அமைந்தது. தானியங்கள் எதுவும் பள்ளத்தாக்கிற்குள் செல்ல முடியாதபடி தடுத்தார். தப்பியோடியவர்களைப் பிடித்து சாலையோர மரங்களில் தூக்கிலிட்டார்.[11]. இதனால் காட்மாண்டுவில் 18000 குடும்பங்களும், இலலித்பூரில் 24000 குடும்பங்களும், பக்தபூரில் 12000 குடும்பங்களும் திமியில் 6000 குடும்பங்களும் பஞ்சத்தில் சிக்கி பட்டினியால் தவித்தனர்.

பிரித்தானியர்கள் வருகை

[தொகு]

தொடர்ச்சியாக நடைபெற்ற இத்தகைய முற்றுகைகளால், கோர்க்காலிகளை சமாளிக்க அரசர் மல்லா பிரித்தானியாவின் கிழக்கிந்திய நிறுவனத்தின் உதவியை நாடினார். கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆங்கிலேயப் படைகள் உதவிக்கு வருகிறது என்று கிடைத்த செய்திகளால் நேவார் மக்கள் புத்துணர்ச்சி பெற்றனர்[12][13]

ஆகத்து மாதம் 1767 ஆம் ஆண்டில் தளபதி சியார்ச்சு கின்லோச்சு, முற்றுகைகளால் நொந்து போயிருந்த குடிமக்களைக் காப்பாற்ற காட்மாண்டு நோக்கி ஒரு பிரித்தானியப் படையுடன் வந்தார்[14]. காட்மாண்டுவிற்குள் 75 கி.மீ தொலைவு வரை வந்த அவர் சிந்துலி, அரிகர்பூர் கோட்டைகளைக் கைப்பற்றினார், ஆனால் சர்தார் பன்சு குருங்கின் நீடித்த இரண்டு எதிர்தாக்குதல்களால் பிரித்தானியப் படை பின்வாங்கியது[15][16].

ஊடுருவல்

[தொகு]

காத்மாண்டுவை தொடர்ந்து முற்றுகையிட்டு வந்த கோர்க்காலிகள் 1767 இல் நடந்த கீர்த்திப்பூர் போரில் கீர்த்திபூர் நகரத்தைக் கைப்பற்றினர். குருதி தோய்ந்த சண்டை மற்றும் காட்டுமிராண்டித்தனம் மிகுந்த அப்போரில் காட்மாண்டுவிற்கு மேற்கில் அமைந்துள்ள இம்மலை உச்சி நகரத்தின் வீழ்ச்சி, காட்மாண்டு பள்ளத்தாக்கின் பாதுகாப்புக்கு ஒரு பின்னடைவாக அமைந்தது.

பின்னர் பிரிதிவி நாராயணன் ஷா தன் கவனத்தைக் காட்மாண்டுவின் பக்கம் திருப்பினார். நகரத்திற்குள் ஊடுருவிச் சென்று பிரச்சாரங்கள் நடத்துவதன் மூலம் நேவார்களிடையே பிரிவினைகள் உருவாக்குவதற்காக அவரது முகவர்களை அனுப்பினார். பல மாதங்களுக்கு பிறகு, ராசாவுக்கும் காட்மாண்டு நகரப் பிரபுக்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தி அவர்கள் வெற்றி பெற்றனர்.

1768 செப்டம்பர் மாதத்தில் கோர்க்காலிகள் காட்மாண்டு நகருக்குள் நுழைந்தனர். நகரைச் சுற்றியிருந்த பீம்சென்தான், நாராதேவி மற்றும் துண்டிக்கேல் ஆகிய இடங்களிலிருந்து மும்முனைத் தாக்குதலை அவர்கள் நிகழ்த்தினர். பீம்சென்சிதான் நகரத்துப் பெண்கள் அவர்களின் இல்லத்து சன்னலில் நின்று கோர்க்காலிகள் மீது மிளகாய்ப் பொடி கலந்த தண்ணிரைத் தெளித்து போரிட்டனர். ஆண்கள் தெருக்களில் இறங்கி கோர்க்காலிகளை எதிர்த்துப் போரிட்டனர். நகரப் பிரமுகர்களால் வஞ்சிக்கப்பட்ட மல்லர் வம்சம்|மல்ல வம்ச]] மன்னர் செயப்பிராகாசு மல்லா நிலைமையை உணர்ந்து நம்பிக்கைக்குரிய சிறு படையுடன் லலித்பூருக்கு தப்பியோடினார்[16]. காட்மாண்டு வீழ்ந்தது.

தொடர்ச்சியாக நிகழ்ந்த போரினால் சில மாதங்களில் பிரிதிவி இலலித்பூரையும் வெற்றி கொண்டார். தோல்வியடைந்த மல்ல வம்ச மன்னர்கள் மூவரும் பக்தபூரில் இறுதி முயற்சியாக சாவை எதிர்த்துப் போரிட்டனர்[17]. ஆனால் பிரிதிவி நாராயணன் ஷா பக்தபூரையும் 1769 இல் கைப்பற்றினார். நேபாளத்தில் ஷா வம்சத்தை நிறுவி ஆட்சிபுரிந்தார். 2008 ஆம் ஆண்டு நேபாளத்தில் மன்னராட்சி முறை ஒழிக்கும் வரை இந்த ஆட்சி நீடித்தது[18]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hamilton, Francis Buchanan (1819). An Account of the Kingdom Of Nepal and of the Territories Annexed to This Dominion by the House of Gorkha. Edinburgh: Longman. பார்க்கப்பட்ட நாள் 11 November 2012. Page 7.
  2. Waller, Derek J. (2004). The Pundits: British Exploration Of Tibet And Central Asia. University Press of Kentucky. p. 171. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780813191003.
  3. Brown, Percy (1912). Picturesque Nepal. London: Adam and Charles Black. பார்க்கப்பட்ட நாள் November 7, 2012.
  4. Giuseppe, Father (1799). Account of the Kingdom of Nepal. London: Vernor and Hood. p. 308. பார்க்கப்பட்ட நாள் November 7, 2012.
  5. Raj, Yogesh (2012). "Introduction". Expedition to Nepal Valley: The Journal of Captain Kinloch (August 26-October 17, 1767). Kathmandu: Jagadamba Prakashan. p. 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789937851800.
  6. Northey, William Brook and Morris, Charles John (1928). The Gurkhas: Nepal-Their Manners, Customs and Country. Asian Educational Services. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120615779. Pages 30-31.
  7. Stiller, Ludwig F. (1968). Prithwinarayan Shah in the light of Dibya Upadesh. Catholic Press. p. 39.
  8. Singh, Nagendra Kr (1997). Nepal: Refugee to Ruler: A Militant Race of Nepal. APH Publishing. p. 125. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170248477. பார்க்கப்பட்ட நாள் November 7, 2012.
  9. Singh, Nagendra Kr (1997). Nepal: Refugee to Ruler: A Militant Race of Nepal. APH Publishing. p. 112. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170248477. பார்க்கப்பட்ட நாள் November 7, 2012.
  10. Raj, Yogesh (2012). "Introduction". Expedition to Nepal Valley: The Journal of Captain Kinloch (August 26-October 17, 1767). Kathmandu: Jagadamba Prakashan. p. 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789937851800.
  11. Giuseppe, Father (1799). Account of the Kingdom of Nepal. London: Vernor and Hood. p. 317. பார்க்கப்பட்ட நாள் November 7, 2012.
  12. Raj, Yogesh (2012). "Appendix B". Expedition to Nepal Valley: The Journal of Captain Kinloch (August 26-October 17, 1767). Kathmandu: Jagadamba Prakashan. p. 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789937851800.
  13. Marshall, Julie G. (2005). "Gurkha Conquest of Nepal and the Kinloch and Logan Missions". Britain and Tibet 1765-1947: A Select Annotated Bibliography of British Relations with Tibet and the Himalayan States Including Nepal, Sikkim and Bhutan. Routledge. p. 39. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780415336475.
  14. Chatterji, Nandalal (1939). "The First English Expedition to Nepal". Verelst's Rule in India. Indian Press. p. 21. பார்க்கப்பட்ட நாள் 14 November 2013.
  15. Raj, Yogesh (2012). "Introduction". Expedition to Nepal Valley: The Journal of Captain Kinloch (August 26-October 17, 1767). Kathmandu: Jagadamba Prakashan. pp. 13–14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789937851800.
  16. 16.0 16.1 Giuseppe, Father (1799). Account of the Kingdom of Nepal. London: Vernor and Hood. p. 320. பார்க்கப்பட்ட நாள் November 12, 2012.
  17. Giuseppe, Father (1799). Account of the Kingdom of Nepal. London: Vernor and Hood. p. 322. பார்க்கப்பட்ட நாள் November 12, 2012.
  18. "Nepal's Gorkha kingdom falls". The Times of India. 2 June 2008 இம் மூலத்தில் இருந்து 11 ஏப்ரல் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130411033226/http://articles.timesofindia.indiatimes.com/2008-06-02/rest-of-world/27770497_1_narayanhity-dipendra-prithvi-narayan-shah. பார்த்த நாள்: 11 February 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்மாண்டுப்_போர்&oldid=3239336" இலிருந்து மீள்விக்கப்பட்டது