காசி நயினார்
காசி நயினார் என்பவன் யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசரின் ஆதிக்கம் தொடங்கிய 1560 களில் அந் நாட்டை ஆண்ட அரசன் ஆவான். சங்கிலி அரசனைத் தொடர்ந்து பட்டத்துக்கு வந்த புவிராஜ பண்டாரம் என்பவனை அகற்றிவிட்டு யாழ்ப்பாண அரசை இவன் கைப்பற்றிக் கொண்டான். இவன் யாழ்ப்பாணத்து அரச பதவிக்கு வாரிசு உரிமையற்றவன் என்பதனால், இவனை அகற்றுவதற்காக இவன் எதிராளிகள் சிலர், அக்காலத்தில் மன்னார்த் தீவைக் கைப்பற்றி ஆண்டுகொண்டிருந்த போத்துக்கீசரின் தளபதியான தொம் ஜெரமியோ டீ அசவீடோ என்பவனிடம் முறையிட்டனர். யாழ்ப்பாண அரசியலில் தலையிடுவதற்கு இதை ஒரு வாய்ப்பாகக் கருதிய தளபதி யாழ்ப்பாணத்துக்கு வந்து காசி நயினாரை அகற்றிவிட்டு இன்னொருவனை அரசனாக்கித் திரும்பினான். காசி நயினார் சிறையில் அடைக்கப்பட்டான். போத்துக்கீசத் தளபதி மன்னாருக்குத் திரும்பியதும், காசி நயினாரின் ஆதரவாளர்கள் புதிய அரசனைக் கொன்று, காசி நயினாரைச் சிறைமீட்டதுடன் அவனை மீண்டும் பதவியில் அமர்த்தினர்.
இந் நிகழ்வைக் கேள்வியுற்ற போத்துக்கீசத் தளபதி சினம் கொண்டான். காசி நயினாரைச் சூழ்ச்சியால் கொல்ல எண்ணி, அவன் அரண்மனைப் பணியாள் ஒருவனுக்குக் கையூட்டுக் கொடுத்து அரசன் உண்ணும் உணவில் நஞ்சு கலந்து அவனைக் கொன்றான்.
உசாத்துணைகள்
[தொகு]- ஞானப்பிரகாசர், சுவாமி., யாழ்ப்பாண வைபவ விமர்சனம்: தமிழரசர் உகம், ஏசியன் எஜுகேஷனல் சர்வீசஸ், புது டில்லி, 2003 (முதற் பதிப்பு 1928, அச்சுவேலி)
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளியிணைப்பு
[தொகு]- யாழ்ப்பாண வைபவ விமர்சனம் பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம் - நூலகம் திட்டம்