காசிம் துறைமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முகம்மது பின் காசிம் துறைமுகம் (Port Muhammad Bin Qasim ) பாக்கித்தான் நாட்டிலுள்ள சிந்து மாகாணத்தின் தலைநகரமான கராச்சி நகரில் அமைந்துள்ள ஒரு துறைமுகமாகும். இதை காசிம் துறைமுகம் என்று அழைக்கிறார்கள். அரபிக்கடலின் கடற்கரையில் அமைந்துள்ள இத்துறைமுகம் ஓர் ஆழ்கடல் துறைமுகம் என வகைப்படுத்தப்படுகிறது. கடல்சார் விவகாரங்களுக்கான பாக்கித்தான் அரசாங்க செயலாளரின் நிர்வாக கட்டுப்பாட்டில் காசிம் துறைமுகம் இயங்குகிறது. காசிம் துறைமுகம் பாக்கித்தானில் இரண்டாவது பரபரப்பான துறைமுகமாகும். அந்நாட்டின் சரக்கு போக்குவரத்தில் 35 சதவீதம் அதாவது ஆண்டுக்கு 17 மில்லியன் டன் சரக்கு இத்துறைமுகத்தில் கையாளப்படுகிறது. அந்நாட்டின் பரபரப்பான துறைமுகமான காசிம் துறைமுகம் மற்றும் கராச்சி துறைமுகம் இரண்டும் சேர்ந்து பாக்கித்தானின் அனைத்து வெளிநாட்டு வர்த்தகத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான சரக்குகளை கையாளுகின்றன.

காசிம் துறைமுகம் மொத்தம் 12,000 ஏக்கர் (49 சதுர கிமீ) பரப்பளவைக் கொண்டுள்ளது. இப்பகுதியில் பல தொழில்துறை மண்டலங்கள் செயல்படுகின்றன. பாக்கித்தான் எஃகு ஆலை மற்றும் கே.இ.எசு.சி பின் காசிம் மின் உற்பத்தி நிலையம் தவிர பாக்கித்தானின் வாகனத் தொழிற்சாலைகளில் 80% தொழிற்சாலைகள் காசிம் துறைமுகப் பகுதியில் அமைந்துள்ளன. அருகிலுள்ள இரண்டு முக்கிய தொழில்துறை பகுதிகளான ஏற்றுமதி செயலாக்க மண்டலம் (லாந்தி) மற்றும் கோரங்கி தொழில்துறை பகுதி ஆகியவற்றுக்கு கடல் எல்லையாக அமைந்து இந்த துறைமுகம் நேரடி நீர்முனை அணுகலை வழங்குகிறது. நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் சுமார் 60% இவ்விரு பகுதிகளிலிருந்தே உருவாகின்றன. காசிம் துறைமுகம் ஒரு அரை தன்னாட்சி அரசாங்க அமைப்பான காசிம் துறைமுக ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகிறது [1].

வரலாறு[தொகு]

1970 ஆம் ஆண்டுகளில் பாக்கித்தான் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவின் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கனரக தொழில்களை நிறுவுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக, நாட்டின் முதல் இரும்பு எஃகு ஆலை (பாக்கித்தான் சிடீல் மில்) தெற்கு நகரமான கராச்சிக்கு அருகில் நிறுவப்பட்டது. இத்தொழிற்சாலையில் எஃகு உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை மொத்தமாக இறக்குமதி செய்யும் நோக்கத்திற்காக ஒரு சிறப்பு துறைமுகம் ஒன்றையும் நிறுவ அப்போது முடிவு செய்யப்பட்டது.[2]. எதிர்கால பொருளாதார கோரிக்கைகள் மற்றும் முக்கியத் தேவைகளுக்காகவும், நாட்டின் ஒரே துறைமுகமான கராச்சி துறைமுகத்தின் நெரிசலைக் குறைப்பதற்காகவும் இச்சிறப்பு துறைமுகம் திட்டமிடப்பட்டது. கி.பி 712 ஆம் ஆண்டில் டேபூல் மற்றும் சிந்து கடற்கரை பகுதிகளை கைப்பற்றிய இசுலாமியர் முகம்மது பின் காசிம் நினைவாக இந்த துறைமுகத்திற்கு முகம்மது பின் காசிம் துறைமுகம் என்று பெயரிடப்பட்டது,[3][4]

இருப்பிடம்[தொகு]

சிந்து மாகாண கராச்சி பிரிவின் மாலிர் மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் பின் காசிம் நகரத்தை ஒட்டி காசிம் துறைமுகம் அமைந்துள்ளது. இது கராச்சி நகர மையத்திலிருந்து கிழக்கே 35 கிலோமீட்டர் தொலைவில் சிந்து நதியின் பழைய கால்வாயில் அமைந்துள்ளது.

காசிம் துறைமுகத்தின் புவியியல் அமைப்பு நிலையைப் பற்றி கூறுவதென்றால் இது முக்கிய கப்பல் பாதைகளுக்கு அருகிலேயே அமைந்துள்ளது என்று கூறலாம். 45 கிலோமீட்டர் நீளமுள்ள உட்செல்லும் கால்வாய் மூலம் இத்துறைமுகத்தை அணுக முடியும். 75,000 t DWT சரக்கு கொள்ளவு எடை கொண்ட கப்பல்கள் வரை இக்கால்வாய் மூலம் பாதுகாப்பாக காசிம் துறைமுகத்தை அடையலாம்.

காசிம் துறைமுகத்தின் அமைவிடம் நாட்டின் போக்குவரத்து உள்கட்டமைப்புடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை 15 கி.மீ தூரத்திலேயே உள்ளது.

சாலை வழியாகவே துறைமுக உள்ளகங்களுக்கு நேரடியாக வருகின்ற வசதியை துறைமுகம் அளிக்கிறது. துறைமுக முனையத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள 14 கி.மீ இரயில் பாதை 6 இரயில் தடங்கள் வழியாக தேசிய ரயில் வலைப்பின்னலுடன் இணைகிறது. ஜின்னா சர்வதேச விமான நிலையமும் 22 கி.மீ தூரத்தில் மிக அருகில் உள்ளது. காசிமின் துறைமுக குடியிருப்பு பகுதி கராச்சியின் பின் காசிம் நகருக்கு அருகில் உள்ளது.

துறைமுக மற்றும் தொழில்துறை மண்டலங்களுக்கான நில ஒதுக்கீடு[தொகு]

துறைமுகத்தின் மொத்த பரப்பளவு 3,520 ஏக்கர் (14.2 சதுர கிலோமீட்டர்) ஆகும். அருகிலுள்ள 8,700 ஏக்கர் பரப்பளவு (35 சதுரகிலோமீட்டர்) தொழில்துறை பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காசிம் துறைமுகம் மூன்று முக்கிய மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது :[5]. அவை:

1.வடமேற்கு தொழிற் துறை மண்டலம்
2.தென்மேற்கு தொழிற் துறை மண்டலம்
3.கிழக்கு தொழிற் துறை மண்டலம்

வசதிகள்[தொகு]

1.பன்னோக்கு முனையம்
2.கொள்கலன் முனையம்
3.நீர்ம வேதியியல் முனையம்
4.எண்ணெய் முனையம்

இவை தவிர துறைமுகத்தில் இரவு நேர கப்பல் பயண வசதிகளும் உள்ளன. இரவில் அதிகபட்சம் ஒட்டுமொத்த கப்பல் நீளம் 202 மீட்டர் அளவுள்ள கப்பல்கள் இங்கு இயக்கப்படுகின்றன.

விரிவாக்க திட்டங்கள்[தொகு]

காசிம் துறைமுகத்தை வரவிருக்கும் ஆண்டுகளில் சுமார் 1.22 பில்லியன் அமெரிக்க டாலர் அன்னிய நேரடி முதலீட்டைக் கொண்டு நீர்ம சரக்கு, வாயு சரக்கு, எண்ணெய் கொள்கலன் சரக்குகள் போன்ற மேலும் பல்வேறு வசதிகள் கொண்ட துறைமுகமாக விரிவு படுத்த திட்டமிட்டுள்ளது.[6].

சுற்றுச்சூழல் பிரச்சனைகள்[தொகு]

அலையாத்தி காடுகள்[தொகு]

சிந்து டெல்டா அமைப்பின் வடமேற்கு விளிம்பில் காசிம் துறைமுகம் அமைந்துள்ளது. நீண்ட மற்றும் குறுகிய சிற்றோடைகள், மண் தரைகள் மற்றும் வறண்ட காலநிலையில் காணப்படும் மிகப்பெரிய சதுப்புநில வன சூழல் அமைப்புகளில் ஒன்றான[7] சிந்து நதி டெல்டா-அரபிக் கடல் அலையாத்திக் காட்டு நிலங்கள் முதலியவற்றை கொண்ட அமைப்பாக சிந்து டெல்டா அமைப்பு வகைப்படுத்தப்படுகிறது, 1972 ஆம் ஆண்டில் பாக்கித்தானில் இருந்து எட்டு வகையான சதுப்புநில மரங்கள் பதிவு செய்யப்பட்டன,[8]. இருப்பினும் அவற்றில் பொருத்தமான வாழ்விடங்களில் காணப்படும் நான்கு இனங்கள் மட்டுமே தொடர்ந்து செழித்து இருக்கின்றன. பல வகையான ஊர்வன, பறவைகள் மற்றும் நிலப்பரப்பு பாலூட்டிகள் இத்திட்டப்பகுதியில் வசிக்கின்றன. இப்பகுதியில் அதிகரித்த கப்பல் மற்றும் தொழில்துறை நடவடிக்கைகள் காரணமாக இவை தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன.

சதுப்பு நிலக்காடுகள் சூழ்ந்துள்ள காசிம் துறைமுகத்தின் வான்வழி படம்.

சிந்து மற்றும் பலூசிசுத்தானின் கடலோரப் பகுதிகளில் உள்ள சதுப்புநில காடுகளின் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் ஒரு சதுப்புநில பாதுகாப்பு முயற்சியை பாக்கித்தான் நாட்டின் இயற்கைக்கான உலகளாவிய நிதியம் முன் எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, சிந்து நதிப்படுகைகளில் (காசிம் துறைமுகப் பகுதி உட்பட) கோரங்கி - பிட்டி கிரீக் அமைப்பில் சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமூகம், உள்ளூர் பள்ளி குழந்தைகள் மற்றும் காசிம் துறைமுக ஆணையம் மற்றும் அரசு வனத்துறை போன்ற பிற பங்குதாரர்களின் ஈடுபாட்டின் மூலம் கோரங்கி - பிட்டி கிரீக் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சீரழிந்த சதுப்புநில காடுகளை பாதுகாப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.[7][9]

கராச்சி கடற்கரையில் டாசுமன் எண்ணெய் கசிவு 2003[தொகு]

2003 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் காசிம் துறைமுகத்தின் கால்வாய் வழிக்கு மேற்கே உள்ள கடற்கரையில் கிரேக்க நாட்டில் பதிவு செய்யப்பட்ட எண்ணெய் கப்பல் டாஸ்மன் ஸ்பிரிட் என்பதிலிருந்து ஒரு மிகப்பெரிய எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இந்த சுற்றுச்சூழல் அமைப்பில் இருந்த ஏராளமான மீன்கள் மற்றும் ஆமைகள் எண்ணெய் பாதிப்பால் இறந்தன. ஒரு முக்கியமான சதுப்புநில காடும் பாழாகியது. மக்களும் குமட்டல் நோயால் பாதிக்கப்பட்டனர். அந்த நேரத்தில், இந்த சம்பவம் காசிம் துறைமுகப் பகுதியில் கடலோர வாழ்க்கைக்கு தீங்கு விளைவிக்கும் என்று அஞ்சப்பட்டது. இருப்பினும் காசிம் துறைமுகத்திற்கான நீர்வழி நுழைவாயிலான பிட்டி கிரீக்கில் பெரிய பாதிப்பு எதுவும் காணப்படவில்லை.[10]

மாசு இல்லாத முனையம்[தொகு]

காசிம் துறைமுகத்தில் 175 மில்லியன் டாலர் மதிப்புள்ள மாசு இல்லாத நிலக்கரி, சிமென்ட் மற்றும் நிலக்கரி கழிவு முனையம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான நடைமுறை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட இருப்பதாக சமீபத்தில் காசிம் துறைமுக ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 8 மில்லியன் டன் கழிவுகள் துறைமுகத்தில் கையாளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கையால் சுற்றுச்சூழலை சரிசெய்யமுடியாத சேதங்கள் காப்பாற்றப்படும். தூள் நிலக்கரியை திறந்த கப்பல்களில் மொத்தமாக கையாளப்பட்டிருந்தால் ஏற்படும் கடுமையான அச்சுறுத்தலான.[11] துறைமுகத் தொழிலாளர்கள் மற்றும் அருகிலுள்ள மக்களின் உடல்நலத்தை கடுமையான சுவாச நோய்களிலிருந்து காப்பாற்றும்.

மேற்கோள்கள்[தொகு]

 1. "15.4 metres long ship docked at Karachi port: spokesperson" (11 June 2019).
 2. Forty Years of Pakistan Peoples Party, The official site of Pakistan Peoples Party.
 3. Port Qasim - its potential as free trade & industrial zone, by Jamil A. Siddiqui in June 1991 issue of Economic Review.
 4. Port Qāsim(Pakistan, Section Manufacturing), Encyclopædia Britannica Online 2009.
 5. Industrial Zones at Port Qasim பரணிடப்பட்டது 15 ஆகத்து 2009 at the வந்தவழி இயந்திரம்
 6. "Port Qasim - Expansion Projects". மூல முகவரியிலிருந்து 14 December 2002 அன்று பரணிடப்பட்டது.
 7. 7.0 7.1 Conservation of Mangrove Forests in the Coastal Areas of Sindh and Balochistan பரணிடப்பட்டது 4 மார்ச் 2009 at the வந்தவழி இயந்திரம் by WWF Pakistan.
 8. Flora of Pakistan (1972)
 9. Environmental Data Resource Centre, WWF Pakistan, Head Office, Lahore.
 10. Tasman Spirit Oil Spill - Assessment Report பரணிடப்பட்டது 27 திசம்பர் 2010 at the வந்தவழி இயந்திரம் Pakistan - Oil spill in the Port of Karachi, UN Office for the Coordination of Humanitarian Affairs
 11. Port Qasim Authority to build $175 million ‘pollution-free’ facility, Daily Business Recorder, 23 October 2009.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காசிம்_துறைமுகம்&oldid=2879385" இருந்து மீள்விக்கப்பட்டது