காங்ரேஜ் மாடு மற்றும் குஸ்ராத் மாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கான்கரேஜ் பசு
கான்கரேஜ் காளை
பிரேசிலில் ஒரு கான்கரேஜ் (குஸ்ராத்)

காங்க்ரேஜ் மாடு (Kankrej cattle ) என்பது இந்தியாவைச் சேர்ந்த நாட்டு மாட்டு இனமாகும். இந்த மாடுகள் குசராத் மாநிலம் பனாஸ்காண்டா மாவட்டம், வடக்கு மும்பையின் மேற்கு கடற்கரையில உள்ள பாரத் பகுதியை பூர்வீகமாக‍க் கொண்டவை. மொஹஞ்சதாரோ சித்திரமுத்திரையில் காட்டப்பட்டிருக்கும் காளையானது இந்த மாட்டு இனக் காளைதான் என்று வல்லுநர்கள் கூறுவதாக கூறப்படுகிறது.[1] இந்த மாடுகள் பன்னாய், நாகர், தளபதா, வாட்தாத், வடியார், வாட்தியார், வாடியல் என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. [2] இம்மாடுகள் வெள்ளை கலந்த சாம்பல் நிறம் அல்லது அடர்ந்த கருப்பு நிறத்துடனும் காணப்படுகின்றன. இவை வேகமான, அதிக திறனுடைய வேலைகளுக்கு பெயர் பெற்றவை. உழவிற்கும் வண்டி இழுப்பதற்கும் பயன்படுகின்றன.[3] குசராத் மாடுகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கான்கரேஜ் மாட்டு இனத்திலிருந்து உருவாக்கப்பட்ட மாட்டு இனம் ஆகும். இதற்கு வைக்கப்பட்ட பெயர் குசராத் என்ற பெயரின் போர்த்துகீசிய மொழி உச்சரிப்பான குஸ்ராத் என இடப்பட்டது. இவை உயரமாகவும் இணையான உயர்ந்த கொம்புகளுடனும் மாட்டிறைச்சிக்கு உகந்த இனங்களாக வளர்க்கப்படுகின்றன. இந்த காளைகளின் நிறம் பொதுவாக உடல்பகுதி சாம்பல் நிறத்திலும், தலை மற்றும் பின் உடல்பகுதி கருத்தும் உள்ளதாக இருக்கும். அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட மாட்டினமான பிரம்மன் மாடு குஸராத் மற்றும் கான்கரேஜ் மாடுகளை கிர் மற்றும் நில்லோரி போன்ற மாடுகளுடன் இனக்கலப்பு செய்து உருவாக்கப்பட்டது ஆகும். இவை வெப்ப மண்டல மாடுகளின் இயல்பான தோற்றத்தில் தோளில் திமிலுடன் இருக்கும். இந்த விலங்கு வெப்பத்தை தாங்க‍க்கூடியதாகவும் பூச்சி எதிர்ப்பு ஆற்றல் கொண்டவையாகவும் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. சு. தியடோர் பாஸ்கரன் (22 திசம்பர் 2018). "மறைந்து வரும் பாரம்பரியம்". கட்டுரை (இந்து தமிழ்). https://tamil.thehindu.com/general/environment/article25807237.ece. பார்த்த நாள்: 22 திசம்பர் 2018. 
  2. Oklahoma State University breed profile
  3. "காங்ரெஜ்". தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம். http://agritech.tnau.ac.in/ta/animal_husbandry/animhus_cattle%20_breed_indigenous_ta.html. பார்த்த நாள்: 9 சனவரி 2017.