காஃபி குடும்பம் (தாவரவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
'ரூபர்' (ruber), என்றால் சிவப்பு Rubiaceae - Ixora coccinea

காஃபி குடும்பம் (தாவரவியல்) என்பது (இலத்தீன்:Rubiaceae) பூக்கும் தாவரங்களிலுள்ள ஒரு பெரிய குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் 611 பேரினங்களும், அவற்றினுள் ஏறத்தாழ 13,100 இனங்களும் உள்ளன. [1] பூக்கும் தாவரங்களில் உள்ள சிற்றினங்களின் எண்ணிக்கை அடிப்படையில், இது நான்காவது பெரிய குடும்பமாகும். பேரின எண்ணிக்கையினை வைத்துப் பார்க்கும் போது, ஐந்தாவது இடத்தினைப் பெறுகிறது. இலத்தீனிய சொல்லான 'ரூபர்' ( ruber), என்பதற்கு சிவப்பு என்று பொருள். அச்சொல்லும், ஒரு பூண்டு வகை செடியின்(madder) பெயரும்[2] இணைந்து, இப்பெயர் தோன்றியது என்பர்.[3] 1789 ஆம் ஆண்டில், முதன் முதலாக, ஆன்டனி (Antoine Laurent de Jussieu) என்பவர், இக்குடும்பத்தின் விவரங்களை எடுத்துரைத்தார். அன்டார்டிகாக் கண்டத்தைத் தவிர, உலகின் பிற கண்டங்களில், இத்தாவரங்கள் காணப்படுகிறது. இக்குடும்பத்தில், உயிரியற் பல்வகைமை நிறைந்து காணப்படுகிறது. [4] இக்குடும்பத் தாவரங்களுள் 76 பேரினங்களும், 274-க்கும் மேற்பட்ட சிற்றினங்களும் இந்தியாவில் உள்ளன.

தோற்றம்[தொகு]

அல்லி போன்ற புல்லியிதழ்
Mussaenda macrophylla, நேபாளம்
 1. வளரியல்பு
  பெரும்பாலும் மரங்கள் (எ.கா. Cinchona officinalis; Morinda tinctoria) அல்லது புதர் செடிகள் (எ.கா. ஹயூசாண்டா) அல்லது சிறுசெடிகள் (எ.கா. ரூபியா (Rubia) (பேரினம்)
 2. வேர்
  கிளைத்த ஆணி வேர்த் தொகுப்பு.
 3. தண்டு
  நிலத்தின் மேல் காணப்படும் நிமிர்ந்த, உருளையான, கட்டைத்தன்மையுடன், கிளைகளையுடைய, தண்டினையுடையது. ஆனால் 'ரூபியா' தாவரத்தின் தண்டு மென்மையானது.
 4. இலை
  தனிஇலை. குறுக்குமறுக்கு எதிரிலையமைவு (எ.கா. Ixsora cocnicia) அல்லது வட்ட அமைவு (எ.கா. கேலியம்). முழுமையானது மற்றும் இலையடிச் செதிலுடையது. எதிர் எதிர் இலையின், இரு இலையடிச் செதில்களும், கணுப்பகுதியில், இரு இலைக்காம்புகளுக்கிடையே இணைந்த நிலையில் காணப்படுகின்றன. அவை காம்பிடை இலையடிச் செதில்கள் எனப்படும். (எ.கா. Ixsora cocnicia). ஆனால் கார்டினியாவில்(Gardenia) பேரினத்தில், ஒவ்வொரு இலையின் இலையடிச் செதில்களும், இலைக்கோணப் பகுதியிலேயே இணைந்து காணப்படுகின்றன. எனவே, இவை கோண இலையடிச் செதில்கள் என அழைக்கப்படுகின்றன.

புற வட்டங்கள்[தொகு]

சைமோசு மஞ்சரி
சைமோசு மஞ்சரி
 1. புல்லி வட்டம்
  புல்லிகள் 4 அல்லது 5. இணைந்தவை. அரிதாக தனித்து தொடு இதழ் அமைவில் காணப்படும். மியூசாண்டா (Mussaenda macrophylla) தாவர மலரில், ஒருபுல்லி இதழ் மட்டும், அல்லி போல, எடுப்பான வண்ணத்துடன் பெரியதாகக் காணப்படுகிறது. எனவே, இப்புல்லி இதழ்கள், அல்லி போன்ற புல்லியிதழ் எனப்படுகிறது.
 2. அல்லி வட்டம்
  அல்லிகள் 4 அல்லது 5. தொடு இதழ் அல்லது திருகு இதழ் அல்லது தழுவு இதழமைவில் இணைந்துள்ளன. இதழ்கள் இணைந்து குழல் போன்ற அடிப்பாகத்தையும் தட்டு போன்ற மேல் பாகத்தையும் கொண்டுள்ளன. அல்லி இதழ்கள் குழல் போன்ற பகுதியுடன் செங்குத்தாக இணைந்து காணப்படுகின்றன. இத்தகைய இதழ்களின் அமைப்பு "ஹைப்போகிராட்டரி வடிவம்" அல்லது "சால்வர்" வடிவம் எனப்படும்.
 3. மஞ்சரி
  நுனி அல்லது கோணத்திலமைந்த சைமோஸ் (எ.கா. கார்டினியா) அல்லது கோரிம்போஸ் சைமோஸ் (எ.கா. இக்சோரா காக்சினியா (Ixora coccinea)) அல்லது சைமோஸ் மஞ்சரிகள் அடர்த்தியாக ஒருங்கமைந்து கொத்துப் போன்று காணப்படும் (எ.கா. )கடம்ப மரம் = ஆந்தோசெபாலஸ் இன்டிகஸ் (Anthocephalus indicus ) .நுனி அல்லது கோணத்திலமைந்த சைமோஸ் (எ.கா. கார்டினியா) அல்லது கோரிம்போஸ் சைமோஸ் (எ.கா. இக்சோரா காக்சினியா (Ixora coccinea)) அல்லது சைமோஸ் மஞ்சரிகள் அடர்த்தியாக ஒருங்கமைந்து கொத்துப் போன்று காணப்படும் (எ.கா. )கடம்ப மரம் = ஆந்தோசெபாலஸ் இன்டிகஸ் (Anthocephalus indicus ) .
 4. மலர்
  பூவடிச் செதிலுடையது. பூக்காம்புச் செதிலுடையது. பூக்காம்புடையது. இருஉறைக் கொண்டவை. முழுமையானவை. நான்கு அல்லது ஐந்தங்கமுடையவை. ஆரச்சமச்சீருடையவை. சூலக கீழ் மலர் வகையாகும்.

இனப்பெருக்க வட்டங்கள்[தொகு]

 1. மகரந்தத்தாள் வட்டம்
  மகரந்தத்தாள்கள் 4 அல்லது 5. அல்லிகளுக்கு இடையிடையே அமைந்திருக்கின்றன. அல்லிக் குழாயின் தொண்டைப் பகுதியில் அல்லியானது, ஒட்டி காணப்படுகின்றன. இரு அறையுடைய மகரந்தப் பைகள், மகரந்த கம்பி அடியிணைந்தவை. மகரந்தப்பை உள்நோக்கி நீள்வாக்கில் வெடிக்கும் இயல்புடையவை ஆகும்.
 2. சூலக வட்டம்
  கீழ்மட்ட சூற்பைக் காணப்படுகிறது, இரு சூலக இலைகளையுடையது. சூலக இலைகள் இணைந்தவைகளாக உள்ளன. இரு சூலக அறைகளையுடையவை. ஒவ்வொரு சூலக அறையிலும் ஒன்று அல்லது எண்ணற்ற சூல்கள் அச்சு சூல் ஒட்டில் அமைந்துள்ளன. ஒற்றை சூல்தண்டு நுனியில் இரண்டாக பிளவுபட்டுள்ளது. அல்லது முழுமையான சூலக முடியைக் கொண்டுள்ளது. கார்டினியாவில், ஐந்து சூலக இலைகள் காணப்படுகின்றன.
 3. கனி
  பெர்ரி (எ.கா இக்சோரா காக்சினியா) அல்லது வெடிகனி (எ.கா. சின்கோனா அஃபிசினாசிசு) அல்லது கூட்டுக்கனி (எ.கா. மொரிண்டா டிங்டோரியா).
 4. விதை: கருவூண் உடையது.

ஊடகங்கள்[தொகு]

பொருளாதாரப் பயன்கள்[தொகு]

 • புத்துணர்ச்சிக்கானத் தாவரங்கள்
காஃபியா அராபிக்கா (காஃபி செடி) தாவரவிதைகள் வறுக்கப்பட்டு, தூள் செய்யப்பட்டு, காஃபி தயாரிக்கப் பயன்படுகின்றது. ‘கஃ‘பின்’ என்ற ஆல்கலாய்டு, காஃபியில் உள்ளது. இது புத்துணர்ச்சி அளிக்கிறது.
 • மருந்துவத் தாவரங்கள்:
‘குயினைன்’ என்ற மருந்து சின்கோனா அஃபிசினாலிஸ் என்ற தாவரத்தின் மரப்பட்டையிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இது உலகளவில் மலேரியாக் காய்ச்சலை குணப்படுத்தப் பயன்படுகிறது. ரான்டியா டிங்டோரியா என்ற தாவர வேர்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சாறு, பூச்சிக்கொல்லியாகவும், பூச்சிகளை விரட்டும் மருந்தாகவும் பயன்படுகிறது.
 • சாயத் தாவரங்கள்
‘அலிசரின்’ மற்றும் ‘பர்புரின்’ போன்ற சாயங்கள் ரூபியா டிங்டோரியா (மேடர்) தாவர வேர்களிலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன. ஓல்டன்லேண்டியா அம்பெல்லேட்டா (சாய வேர்) தாவர வேர்கள் மற்றும் பட்டைகளிலிருந்து சிவப்பு சாயம் தயாரிக்கப்படுகிறது. மொரிண்டா அங்குஸ்டிஃபோலியா தாவரப் பட்டைகளிலிருந்து, மஞ்சள் சாயம் பிரித்தெடுக்கப்படுகிறது.
 • கட்டைத் தாவரங்கள்
அடைனா கார்டிஃபோலியா (மஞ்சக்கடம்பு) மற்றும் மொரிண்டா டிங்டோரியா (நுனா மரம்) தாவரங்கள் வணிக முக்கியத்துவ கட்டை தரும் தாவரங்களாகும்.
 • அலங்காரத் தாவரங்கள்
கார்டினியா ஜாஸ்மினாய்டஸ் (பன்னீர் பூ), இக்சோரா காக்சினியா (இட்லிம்பூ) மற்றும் மியூசாண்டா பிராண்டோசா ( வெள்ளை மடந்தை) போன்றத் தாவரங்கள் அழகுக்காகத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

 1. Stevens, P. F. (2001 onwards). Angiosperm Phylogeny Website. Version 9, June 2008. http://www.mobot.org/MOBOT/research/APweb/
 2. Plant Systematics by Michael G. Simpson
 3. Wiktionary. "Ruber". Searched November, 2011. http://en.wiktionary.org/wiki/ruber
 4. Davis, Aaron P.; Rafaël Govaerts, Diane M. Bridson, Markus Ruhsam, Justin Moat, Neil A. Brummitt (2009). "A global assessment of distribution, diversity, endemism, and taxonomic effort in the Rubiaceae". Annals of the Missouri Botanical Garden 96 (1): 68–78. doi:10.3417/2006205. 

புற இணைய இணைப்புகள்[தொகு]

Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: