கவிராஜன் கதை (நூல்)
கவிராஜன் கதை-நூலட்டை | |
நூலாசிரியர் | வைரமுத்து |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
பொருண்மை | கவிதை |
வெளியீட்டாளர் | சூர்யா பதிப்பகம் |
கவிராஜன் கதை என்னும் நூலை கவிஞர் வைரமுத்து எழுதினார். இந்நூல் பாரதியின் வாழ்க்கை வரலாற்றுக் கதையை புதுக்கவிதையில் கூறும் நூலாகும்.
வரலாறு
[தொகு]இயக்குநரான பாலச்சந்தர், பாரதியின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க எண்ணி, வைரமுத்துவுடன் கலந்துரையாடியபோது, பாரதியின் வரலாறு குறித்த தரவுகளைத் திரட்டுமாறு கேட்டுள்ளார். பிறகு எதன் காரணமாகவோ திரைப்பட முயற்சி கைவிடப்பட்டது. இதன்பிறகு திரட்டிய தரவுகளை வீணாக்க விரும்பாமல் கவிராஜன் கதை என்னும் பெயரில் எழுதினார். இது சாவி வார இதழில் தொடராக வெளிவந்தது. நூலாக சூர்யா பதிப்பகத்தின் சார்பில் எட்டாவது பதிப்பாக திசம்பர் 1997இல் வெளிவந்தது.
நூலைப்பற்றி
[தொகு]புதுக்கவிதைக்கு வித்திட்ட பாரதிக்குப் புதுக் கவிதையாலேயே அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற எண்ணம்தான் இந்தக் காவியத்துக்கு ஆரம்பம். ஒரு கவிஞருடைய நூற்றாண்டு விழாவை ஒட்டி எழுதப்பட்டது இந்த நெடுங்கவிதை எனக் குறிப்பிட்டார் சா. விஸ்வநாதன் (சாவி) [1]
பாரதியார் பிறந்த போது நாடு ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக்கிடந்தது. அந்த சூழலை நினைவூட்டி காப்பியக் கதையைத் துவக்குகிறார். எட்டயபுரத்தில் பிறந்த பாரதி படிப்பில் குறிப்பாக கணக்கு பாடத்தில் ஆர்வமில்லாமல் இருந்தார். அடிக்கடிப் பள்ளிக்குச் செல்லாமல் கோயிலில் தஞ்சம் புகுந்தார். அந்த தனிமையே அவரைக் கவிஞராக ஆக்குவதற்கு அச்சாரமாக விளங்கியது. பின்னர் அரசவையில் கவிதைபாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார். அப்போது அவருக்கு வயது பதினொன்று, பாரதி என்று பட்டம் வழங்கிச் சிறப்பித்தனர்.
பாரதிப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது அவருக்குத் திருமணம் நடக்கிறது. பாரதியைத் திருமணம் செய்த செல்லம்மாளுக்கு அப்பொழுது வயது ஏழு. திருமணம் முடிந்த அடுத்த ஆண்டு அவரது தந்தை இறந்து போகிறார் அதனால் துயரமடைந்த பாரதியைக் காசியில் உள்ள அவருடைய அத்தை அழைக்கிறார். காசி சென்ற பாரதி சம்பிரதாயச் சடங்குகளை உடைத்தெறிந்து புரட்சியாளனாய் மாறுகிறான். கல்வியை முடித்தப் பாரதி காசியில் இருந்து புறப்பட்டு எட்டயபுரம் திரும்புகிறார்.
பின்னர் எட்டயபுரம் அரண்மனையில் வேலை கிடைத்து அங்கு பணிபுரிகிறார். ஆனால் பாரதிக்கு அந்த வேலை பிடிக்காததால் அதை உதறிவிட்டு மதுரைக்கு வருகிறார் அங்கு சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். பின்னர் அந்த வேலையை விட்டு வெளியேறி, சுதேசமித்திரன் பத்திரிக்கையில் வேலைக்குச் சேர்ந்து தனது எழுத்து மூலம் விடுதலை வேட்கையை மக்கள் மனதில் உண்டு பண்ணுகிறார். பின்னர் சுதேசமித்ரனில் இருந்து கொண்டே சக்கரவர்த்தினி என்ற தனி இதழ் தொடங்கித் தனது எழுத்தைச் சுதந்திரமாய் பிரசுரித்தார். அந்தச் சமயம் காங்கிரஸ் மகாசபையின் விடுதலை இயக்கம் இரண்டாகப் பிரிந்தது ஒன்று மிதவாதிகள், இன்னொன்று தீவிரவாதிகள் இவற்றில் தீவிரவாதிகள் அணியில் பாரதி சேர்ந்து அனல் கக்கும் கவிதை வழங்கி விடுதலை உணர்வை ஊட்டினார். சுதேசமித்ரனோ மிதவாதத்தை ஆதரித்தது. பாரதியின் எழுத்தைப் புறக்கணித்தது.
பாரதியும் வ.உ.சி. யும் இணைந்து விடுதலை உணர்வை மக்கள் மத்தியில் விதைத்தனர். கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் கட்சி சுதேசி பொருளையே நாம் ஆதரிப்போம். அந்நியப் பொருளைத் தீயிலெரிப்போம் தாய்மொழிக் கல்வியை ஆதரிப்போம் என்று பல தீர்மானங்களைக் கொண்டு வந்தன. இவை பாரதி அரசியலில் அடியெடுத்து வைக்க அடிகோலின. வ.உ.சி.க்கு ஆயுள் தண்டனை வழங்கியதோடு மட்டுமில்லாமல் 1908 இல் அச்சு சட்டத்தை வெள்ளையரின் அரசாங்கம் கொண்டு வந்தது. இதனால் எழுத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டது. சுதேசமித்ரன் பத்திரிக்கை வெகுவாகப் பாதிப்படைந்தது.
பாரதியை கைது செய்ய காவலர்கள் தேடினர். இதனால் பாரதி புதுச்சேரியில் தஞ்சம் புகுந்தார். பாரதியின் எழுத்துக்குப் புத்துயிராக புதிய இந்தியா இதழ் புதுச்சேரியில் இருந்து வெளிவந்தது. புதிய சட்டங்களாலும் சந்தாக்களின் எண்ணிக்கைக் குறைந்ததாலும் ‘இந்தியா’ இதழ் ஆரம்பித்த ஒன்றரை வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பாரதி வறுமையில் வாடினார். புதுவையில் இருந்த அரவிந்தரின் போதனைகளால் பாரதியின் எழுத்து இன்னும் வீரியம் பெற்றது.
புதுவை தேச பக்தர்க்கெல்லாம் திருத்தலமானது. பாரதி புதுவையில் இருப்பதை ஒற்றன் மூலம் கண்டு கொண்ட காவலர்கள் அவரை ஒடுக்க பலவாறு முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் பாரதியை ஒன்றும் செய்யமுடியவில்லை. பாரதியின் இந்திய விடுதலை உணர்ச்சி இன்னும் அதிகமானது. மீண்டும் சுதேசமித்ரனில் பாரதி தன் எழுத்து வன்மையால் புரட்சி செய்ததார். சாதிகளைக் கடந்து அத்வைத நிலையில் பாரதி விளங்கினார். இதனை, பொறுக்காத பிராமணர்கள், அவரைச் சாடினர். பின்னர் புதுவையை விட்டு திருவனந்தபுரம் செல்லுதல் பின்னர் சென்னைக்கு வருதல் வறுமையில் வாடுதல், யானையின் காலில் மிதிபட்டு இறந்து போதல் ஆகிய செய்திகள் கவிராஜன் கதையில் இடம்பெற்றுள்ளன.
நூற்பதிப்பு வரலாறு
[தொகு]- நான்காம் பதிப்பு: ஜூலை 1992
- ஐந்தாம் பதிப்பு: டிசம்பர் 1992
- எட்டாம் பதிப்பு: டிசம்பர் 1997
- பன்னிரண்டாம் பதிப்பு: செப். 2007
குறிப்புகள்
[தொகு]- ↑ கவிராஜன் கதை-வைரமுத்து 1997 பின் அட்டையில்.