கவிதா நிகழ்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கவிதையின் வேறுபட்ட உருவங்களையும் வடிவங்களையும் அரங்க நிகழ்வாக்குகின்ற ஒரு நிகழ்த்து கலை கவிதா நிகழ்வு ஆகும்.

கட்டமைப்பு[தொகு]

கவிதா நிகழ்வு இசையும் நாடகமும் உள்ளிட்ட ஆற்றகைக் கலையினதும் கவிதை எனும் இலக்கியத்தினதும் கூட்டு இணையமாகும். இந்தக் கலை இலக்கிய இணையம் மிக்க நெகிழ்ச்சித் தன்மை கொண்டது. இங்கு மரபுக்கவிதை, புதுக்கவிதை என்ற பேதமில்லை. நாட்டுப்பாடல், வசனக்கவிதை, ஹைக்கூ, மொழிபெயர்ப்புக்கவிதை என எதையுமே நிகழ்த்தலாம். வசனத்தைக்கூட இடையிட்டுக் கொள்ளலாம். ஆயினும் இந்த நிகழ்வில் குரலின் ஏற்ற இறக்கம், முகபாவம், நேரக்காப்பு என்பன முக்கியமானதாகும். சாரீரத்தின் ஆரோகண, அவரோகணத்திற்கு ஏற்ப உடலின் மெய்ப்பாடு வெளிக்காட்டப்படுதல் வேண்டும். கவிதை ஒரு பொதுத்தலைப்பில் மாத்திரமன்றி ஒரே குவிமையக் கருத்தைக் கொண்டதாக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்டவையாகக் கூட இருக்கலாம். மெலிதாக பின்னணி இசையில் கருத்து வெளிப்பாட்டுடன் கவிதை நிகழ்த்தப்படும். அவரவர் தத்தமது கவிதையை வாசிப்பது மட்டுமன்றி மொத்தக் கருத்தும் ஊன்றித் தொணிக்கும் வகையில் சேர்ந்தும் தொடர்ந்தும் நாடகப்பாணியில் ஒப்புவிப்பர்.கவிதை வாசிப்பின்போது உடனிருக்கும் வாசகர்கள், அக் கவிதையில் இடம்பெறும் பல்வேறு படிமங்களை உள்வாங்கிக்கொண்டு அகம் மகிழ்வர்.

கவிதா நிகழ்வின் தோற்றுவாய்[தொகு]

ஈழத்து மண்ணில் ஆதர்சம் பெற்ற ஒரு நிகழ்த்திலக்கியம் ஆகும். ஈழத்தின் போராட்டச்சூழலும், அது சார்ந்த கருத்தியலும், கருத்தியலைப் பரப்புவதற்கான புதிய ஊடகத்தின் தேவையும் ஆகிய பின்னணிச் சூழல்கள் கவிதா நிகழ்வின் தோற்றுவாய்க்குக் காரணமாயிருந்தன.

முதல் கவிதா நிகழ்வு[தொகு]

முதல் கவிதா நிகழ்வு 1981 வைகாசியில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பரீட்சாத்தமாக நிகழ்த்தப்பட்டது. "எமது மண்ணும் இந்ந நாட்களும்" எனும் தலைப்பில் இது அமைந்தது. எம். ஏ. நுஃமான், சேரன், க.ஆதவன் ஆகிய மூன்று கவிஞர்கள் இதை நிகழ்திதனர். திரு.சிதம்பரநாதன் இதனை நெறிப்படுத்தியிருந்தார்.

தமிழகத்தில் முதல் கவிதா நிகழ்வு[தொகு]

தமிழகத்தில் முதல் கவிதா நிகழ்வு இளவாலை விஜயேந்திரன், சித்திரா குழுவினரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல கவிதா நிகழ்வுகள் அரங்கேறின. தமிழகத்தாரின் முதல் கவிதா நிகழ்வு 1986 யூலையில் தான் நிகழ்த்தப்பட்டது. புதுவையில் வே.மு.பொதியவெற்பன் (சூர்யமுகி), இரவிக்குமார், ஜமாலன் ஆகியோர் "போராடும் மானிடம்" எனும் தலைப்பில் இதை நிகழ்த்தினர்.

கிழக்கிலங்கையில் கவிதா நிகழ்வு[தொகு]

1991 "கூடிவிளையாடு பாப்பா" எனும் தலைப்பிலான கவிதா நிகழ்வு திருகோணமலையில் நிகழ்த்தப்பட்டது. திரு. பாலசுகுமார் இதனை நெறிப்படுத்தியிருந்தார்.1992 இல் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அதன் பத்தாவது ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டத்தத்தின்போது பாரதியாரின் கவிதைகள் நிகழ்த்தப்பட்டன.1994 இல் சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி "பெண்விடுதலை" என்ற தலைப்பில் மற்றொரு கவிதா நிகழ்வு மட்டக்களப்பில் நிகழ்த்தப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிதா_நிகழ்வு&oldid=3701322" இலிருந்து மீள்விக்கப்பட்டது