உள்ளடக்கத்துக்குச் செல்

கள்ளபார்ட் நடராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கள்ளபார்ட் நடராஜன்
பிறப்புடி. ஆர். நடராஜன்
1926
தஞ்சாவூர், தமிழ்நாடு
இறப்புமார்ச் 27, 1996 (அகவை 69-70)
பணிநடிகர், நடனக்காரர்
செயற்பாட்டுக்
காலம்
1952-1996
பெற்றோர்கள்ளபார்ட் ராமலிங்கம்
கானக்குயில் பரிபூரணம்

கள்ளபார்ட் நடராஜன் (1926 – 27 மார்ச் 1996) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இளமையில் மேடை நாடகங்களில் எதிர்மறை வேடங்களில் நடித்ததால், கள்ளப்பார்ட் இவரின் பெயருக்கு முன் அடைமொழியானது.[1][2][3] பின்னர் வெள்ளித்திரையில் எதிர்மறைநாயகனாகவும், குணசித்திர நடிகராகவும், சிரிப்பு நடிகராகவும், நடன ஆடுபவராகவும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்த்திரைப்படங்களில் நடித்தவர். [4] இவர் 1952-இல் பராசக்தி திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானவர். இவர் 160 இக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[5]

தனியார் தொலைக்காட்சிகள் தமிழ்நாட்டிற்கு வருமுன்னர், இவர் சென்னைத் தொலைகாட்சியில் இருபதிற்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்தவர். சென்னைத் தொலைக்காட்சியில் வில்லாதி வில்லர்கள் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நடந்த ஒரு நேர்காணலின் போது, 27 மார்ச் 1996 அன்று தமது எழுபதாவது அகவையில் மறைந்தார்.

இளமையும் நாடக வாழ்வும்

[தொகு]

தஞ்சாவூரைச் சேர்ந்த புகழ்பெற்ற மேடை நாடக தம்பதி கலைஞர்களான கள்ளபார்ட் இராமலிங்கம், கானக்குயில் பரிபூரணம் இணையருக்கு இரண்டாவது மகனாக 1936 இல் தஞ்சாவூர் கீழவாசலில் பிறந்ததார் நடராஜன். தாய் தந்தையர் நாடகக் கலைஞர்களானபடியால் பள்ளி விடுமுறை நாட்களில் தன் 5 வயது முதல் 13 வயது வரை தாய் தந்தையருடன் பல்வேறு ஊர்களுக்கு பயணங்களை மேற்கொண்டார். படிப்பில் ஆர்வம் காட்டாத நடராஜன் கேள்வி ஞானத்தால் நாடகப் பாடல்களை படத் தொடங்கினார். இதனைக் கண்ட இவரது பெற்றோர் நடராஜனை அவரது 14 வயதில் நவாப் ராஜமாணிக்கத்தின் பாலர் நாடக சபாவான மதுரை தேவி பாலவினோத சபாவில் சேர்த்து விட்டனர். அங்கு 16 வயதில் தொடங்கி 20 வயது வரை ஸ்த்திரிபார்ட் (பெண்) வேடங்களில் நடித்து புகழ்பெற்றார். நடராஜனின் தம்பியான லோகநாதனும் நடிப்பில் இருந்த ஆர்வத்தினால் அதே நாடகக்குழுவில் வந்து இணைந்தார். நடராஜன் தொடர்ந்து பெண் வேடத்தில் நடிப்பதை விரும்பாத அவரின் பெற்றோர் நடராஜனையும், லோகநாதனையும் நாடகக் குழுவில் இருந்து அழைத்துவந்து இருவரையும் பொன்மலை இரயில்வே பணிமணையில் பணிக்கு சேர்த்துவிட்டனர். ஐந்து ஆண்டுகள் அங்கு பணிபுரிந்த நிலையில் திருச்சியில் முகாமிட்டிருந்த நவாப் ராஜமாணிக்கம் இவரை அழைத்துவரச் செய்தார்.

அப்போது நவாப் ராஜமாணிக்கத்தின் நாடகக் குழு 50 இக்கும் மேற்பட்ட நடிகர்கள், 30 இக்கும் மேற்பட்ட அரங்க அமைப்பு ஊழியர்களையும் கொண்ட பிரமாண்ட ஸ்பெசல் நடகக் குழுவாக வளர்ந்து இருந்தது. அவர்களின் புகழ்பெற்ற நடகமான சம்பூர்ண ராமாயணம் நாடகத்தில் நடராஜனுக்கு பரதன் வேடத்தைக் கொடுத்தார். பொன்மலை பணிமனையில் இவர் வாங்கிய சம்பளத்தைவிட இருமடங்கு சம்பளத்தையும் தந்தார்.[5] நடராஜனின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய நாடகமாக ஏசுநாதர் அமைந்தது. அந்த நாடகத்தில் காய்பா என்ற யூத மதகுருவாக முதன் முதலில் எதிர்மறை வேடத்தில் நடித்து பாராட்டைப் பெற்றார்.

அதன் பிறகு நாடகங்களில் பல எதிர்மறை வேடங்களில் நடித்து தன் தந்தையைப் போலவே கள்ளபார்ட் நடராஜன் என்ற பெயரைப் பெற்றார்.[5] நடராஜனின் திறமையால் ஈர்க்கப்பட்ட சக்தி நாடகசபா, தேவி நாடக சபா போன்றவை இவருக்கு ராஜபார்ட் வேடங்களைக் கொடுத்தன.

நடிப்பு வாழ்கை

[தொகு]

ஒரு கட்டத்தில் நடராஜன் திரைப்படத் துறைக்குள் நுழைந்தார். 1951 சுதர்சன் படத்தில் சிறு துணைவேடத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இவரது இரண்டாவது படமான பராசக்தியில் பர்மா அகதிகள் முகாம் அதிகாரியாக நடித்தார்.[5] நடனத் திறமை மிக்கவரான நடராஜன் பல படங்களில் நடனமாடிவந்தார். இவரது நடனத் திறமையை அறிந்த டி. ஆர். சுந்தரம் தன் தயாரித்த வண்ணக்கிளி படத்தில் நடராஜனை முழு பாடலிலும் ஆடவைக்க இயக்குநர் டி. ஆர். ரகுநாத்த்திடம் கூறினார். அப்படத்தில் இடம்பெற்ற சித்தாட கட்டிகிட்டு, சிங்காரம் பண்ணிக்கிட்டு பாடலில் எம். சரோஜாவிடன் இணைந்து குத்தாட்டம் ஆடினார்.[5]

சிவாஜி கணேசனுடன் சபாஷ் மீனா, தில்லானா மோகனாம்பாள் என பல படங்களில் நடித்துள்ளார். தெய்வப்பிறவி படத்தில் சிவாஜி கணேசனின் தம்பி மனோகரன் என்ற பாத்திரத்தில் நடித்தார். ம. கோ. இராமச்சந்திரனுடன் இணைந்து சக்கரவர்த்தித் திருமகள், சங்கே முழங்கு, மதுரை வீரன், ஒளி விளக்கு, ரிக்சாக்காரன் போன்ற படங்களில் நடித்தார். அடுத்த தலைமுறை நடிகர்களான இரசினிகாந்துடன், தனிக்காட்டு ராஜா கமலகாசனுடன் தேவர் மகன் விசயகாந்துடன் பெரிய மருது போன்ற படங்களில் நடுத்துள்ளார்.

இவர் செங்கமலத் தீவு, நாகமலை அழகி உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.[5]

நடித்த புகழ்பெற்ற திரைப்படங்கள்

[தொகு]

விருதுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "What does Arvind Swami-Regina's film title Kallapart mean? - Times of India". The Times of India.
  2. "செல்லுலாயிட் பெண்கள்". dinakaran.com. Archived from the original on 18 March 2020. Retrieved 25 September 2020.
  3. "சூர்யாவும் கார்த்தியும் சிவகுமாருக்கு கடவுள் கொடுத்த பரிசு ! - நடிகர் சிவசந்திரன் நெகிழ்ச்சிப் பேட்டி". Hindu Tamil Thisai.
  4. Kallapart Natarajan
  5. 1 2 3 4 5 6 ஆர்.சி.ஜெயந்தன் (2026-03-20). "நடிப்பும் நடனமும் உயிர்மூச்சு! | கள்ளப்பார்ட் நடராஜன் 100". Hindu Tamil Thisai. Retrieved 2026-03-27.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கள்ளபார்ட்_நடராஜன்&oldid=4503565" இலிருந்து மீள்விக்கப்பட்டது