கல் கருட சேவை


கல் கருட சேவை, தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணததிலிருந்து குடவாசல் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாச்சியார்கோயில் எனும் ஊரில் திருநறையூர் நம்பி கோயில் எனப்படும் சீனிவாசப் பெருமாள் கோயில் அல்லது நாச்சியார்கோவில் கோயிலில், பெருமாளின் மூலஸ்தானத்துக்குக் கீழ் உள்ள மகா மண்டபத்தில் உள்ள தனிச்சன்னதியில் தெற்கு நோக்கிய சாளக்கிராமக் கல்லால் ஆன கல் கருட பகவான் நவ நாகங்களுடன் அருள்பாலிக்கிறார்.
கல் கருட விழா நாட்கள்
[தொகு]பங்குனி பிரம்மோற்சவததின் நான்காம் நாள் மற்றும் மார்கழி மாத பகல் பத்து திருவிழாவின் நான்காம் நாள் என ஆண்டுக்கு இருமுறை மட்டுமே திருமாலை சுமந்து கொண்டு கோயிலுக்கு வெளியே வீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறர். இக்கோயிலில் நடைபெறும் கல் கருட சேவை உலகப் புகழ் பெற்றது.[1]
அதிசய கல் கருட சேவை
[தொகு]வைணக் கோயில்களில் நடைபெறும் கருட சேவைகளில் நாச்சியார்கோயிலில் நடைபெறும் கல் கருடச் சேவை மிகவும் புகழ் பெற்றது. இந்த நிகழ்வின் பொழுது 4 டன் எடையுள்ள சாளக்கிராமக் கல்லினால் செய்யப்பட்ட கருடாழ்வார் திருமாலை சுமந்து கொண்டு ஆண்டிற்கு இரண்டு முறை வீதி உலா வருவார்.
இதன் சிறப்பு என்னவெனில் இத்தனை எடையுள்ள சிலையை முதலில் 4 பேரும் பின்னர் 8,16,32,64 கடைசியாக 128 பேர் தூக்குவர் . முதலில் வெறும் 4 பேரால் தூக்க முடிந்த அதே சிலையை கோவிலை விட்டு வெளியே வரும்பொழுது 128 பேர் இல்லாவிடில் தூக்கமுடியாது. இதுவே இக்கோவிலின் அதிசய சிறப்பாக கருதப்படுகிறது. நிகழ்ச்சி முடிவில் சிலையை மீண்டும் கோவிலுக்குள் எடுத்து செல்லும் பொழுது சிலை தூக்குவோரின் எண்ணிக்கை 128, 64, 32, 16,8 என குறைந்து இறுதியில் 4 பேர் மட்டும் சிலையை கோவிலுக்குள் எடுத்துச்செல்வர்.[2][3] கல் கருட சேவையின் போது கருடனுக்கு வியர்த்துக் கொட்ட, வஸ்திரங்கள் அனைத்தும் வியர்வையால் நனைத்து விடும்.
பரிகாரத் தலம்
[தொகு]நாச்சியார் கோயில் கல் கருடனுக்கு 7 அல்லது 11 வியாழக்கிழமைகள் 3 நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட கடுமையான சர்ப்ப தோசங்கள் நீங்கும்.[4]குழந்தை இல்லாதவர்கள் ஆடி மாத சுக்கில பஞ்சமி திதியில் கல் கருடனை வணங்குபவர்களுக்கு நல்ல குழந்தை பிறக்கும். கருட பகவானின் திருநட்சத்திரம் சுவாதி என்பதால், சுவாதி நட்சத்திரத்தன்று கல் கருடனுக்கு அர்ச்சனை செய்வது உகந்தது என்பது ஐதீகம்.
இதனையும் காண்க
[தொகு]- கருட சேவை
- நாச்சியார்கோயில்
- திருநறையூர் நம்பி கோயில் எனும் நாச்சியார்கோவில் சிறீநிவாசப் பெருமாள் கோயில்
- நாச்சியார் கோயில் விளக்கு