கல்வெட்டில் மெய்யெழுத்துக்குப் புள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழில் மெய்யெழுத்து புள்ளி பெறும் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.[1] இந்தச் செய்தியை உணர்த்தும் ஆவணமாகத் திகழ்வது கேரள மாநிலம் கழசரக்கோடு காட்டாற்றங்கரைப் பாறையில் பொறிக்கப்பட்டுள்ள ஒரு கல்வெட்டு. இதில் சொல்லின் இறுதியில் வரும் மெய்யெழுத்துக்கு மட்டும் புள்ளி உள்ளது. ஏனையவற்றில் காணப்படவில்லை.

கல்வெட்டு[தொகு]

பண்டைய தமிழெழுத்தாகிய பிராமி எழுத்துக்கள் 14 கொண்ட ஒருவரின் பெயர் இதில் உள்ளது. க ழ க கோ ப ட ட ன் ம க ன் செ ரு ம – என்பவை அந்த 14 எழுத்துக்கள். இதனைக் ‘’’கழக்கோ பட்டன் மகன் செரும(ன்)’’’ எனப் படிக்கவேண்டும்.

கல்வெட்டு உள்ள ஊர் கழசரக்கோடு. இதன் அரசன் கழக்கோ. கழக்கோவின் பெயர் பட்டன். பட்டனின் மகன் செருமன். செருமன் ஆட்சிக்காலத்தில் இந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்டன. இவன் அதன் ஓரத்தில் ஓடும் கால்வாயை அக்காலத்தில் வெட்டியவனாக இருக்கலாம் என இக் கல்வெட்டைக் கண்டறிந்து படித்த வாரியார் குறிப்பிடுகிறார்.

சொல் விளக்கம்[தொகு]

கழை என்பது மூங்கில். மூங்கில் நிறைந்த மலை கழைக்கோடு. கழைக்கோட்டு மலையில் சாரி சாரியாக மூங்கில்கள். கழை+சாரை+கோடு – கழசரக்கோடு. கசரக்கோடு – கஸரக்கோட் – [2] இக்காலப் பெயர்.

பட்டன் என்னும் பெயர் பட்டவன் ஒருவனைக் குறிக்கும். பட்டவன் என்பவன் விலங்காடு போராடிப் பட்டவன். நாட்டுப்புறங்களில் பட்டவன் வழிபாடு உண்டு. பட்டவனைப் பட்டான் எனக் குறிப்பிடும் நடுகற்கள் தமிழ்நாட்டில் பல உண்டு.

பட்டன் என்னும் பெயரைச் சேரநாட்டு மக்கள் பரவலாக வைத்துக்கொள்கின்றனர். மலையன், கோடன் என்பன மலையரசன் என்பதைக் காட்டுவன. அதுபோலப் பாட்டம் என்னும் நிலப்பகுதி அரசன் பட்டன். பாட்டம் என்பது தோட்டப் பகுதி.[3]

செரு என்பது போர். போரில் வல்லவன் செருமான் அல்லது செருமன்.

கண்டுபிடித்தவர்[தொகு]

கல்வெட்டியல் எம். ஆர். இராகவ வாரியார் என்பவர் இதனைக் கண்டறிந்து படித்து ஆராய்ந்துள்ளார். கேரள மாநிலத் தொல்லியல் துறைக் களப்பணியாளர் கே. கிருஷ்ணராஜ், திருவனந்தபுரம் அரசுப் பல்கலைக் கழகப் பேராசிரியர் இ. குன்னிகிருஷ்ணன் ஆகியோர் இதற்கு உறுதுணை புரிந்துள்ளனர். கழசரக்கோடு பெருமகன் இ. ரத்னாகர நாயர் கல்வெட்டைக் கண்டறிய உதவியிருக்கிறார்.

கல்வெட்டின் காலம்[தொகு]

தமிழ்-பிராமி எழுத்துக்கள் பற்றித் தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியிட்ட நூலை உருவாக்கிய நால்வருள் ஒருவராகிய வி. வேதாசலம் இக்கல்வெட்டின் சிறப்பினைக் குறிப்பிட்டுப் பாராட்டுகிறார். கல்வெட்டை ஆராய்ந்த வாரியார் இந்தக் கல்வெட்டு கி.மு. மூன்றாம் நூற்றாண்டு அளவினவாகிய தமிழ்நாட்டு அம்மன்கோயில்பட்டி, அரசலூர் கல்வெட்டுகளோடு இணைத்து ஒப்புநோக்கத் தக்கவை என்று குறிப்பிடுகிறார். அத்துடன் வைநாட்டு எடக்கல் என்னும் ஊரிலுள்ள பிராமி எழுத்துக்களோடு இங்குள்ள எழுத்துக்களை ஒப்புமைப்படுத்த இயலாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிற கல்வெட்டுகளில் மெய்யெழுத்துகுப் புள்ளி[தொகு]

  • கொற்றந்தை ளஎன்
    முன்று - என்னும் தொடரில் ளஎன் (=இளையன்) என்னும் சொல்லில் புள்ளி.[4]

மேற்கோள்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் (தொல்காப்பியம் நூன்மரபு 15
  2. http://www.thehindu.com/news/national/kerala/newly-discovered-brahmi-inscription-deciphered/article5777862.ece
  3. பாங்கு அரும் பாட்டங்கால் கன்றொடு செல்வேம் (கலித்தொகை 116)
  4. கல்வெட்டு 20:7