கல்லுக்குடியிருப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்லுக்குடியிருப்பு ( Kallu Kudiyiruppu) என்பது தமிழ்நாட்டின், புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமமாகும்.[1] இந்தக் கிராமத்தில் மொத்தம் சுமார் 350 வீடுகள் உள்ளன.

முதன்மைத் தொழில்[தொகு]

1990க்கு முன்பு இந்த ஊர்பகுதியில், சாராயம் காய்ச்சுவதுதான் முதன்மைத் தொழிலாக இருந்தது. 1990களில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த ஷீலாராணி சுங்கத், இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி சாராய வழக்குகளில் கைதாவதை அறிந்து, இந்த கிராமத்து மக்களை அழைத்து சட்டவிரோதத் தொழிலைச் செய்வதை விட நேர்மையான தொழிலைச் செய்து கவுரவமாக வாழுங்கள் அதற்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறேன் என அறிவுருத்தி உறுதியளித்து, மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார்.

ஊர்மக்கள் தங்களுக்கு மரக்கன்றுகள் உற்பத்தி செய்யத் தெரியும் என்றும், நாற்றுப் பண்ணை தொழில் செய்து பிழைத்துக் கொள்வதாகவும், அதுக்கான கடனுதவியும், ஆழ்துளை கிணறு அமைக்கவும் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், முதல்கட்டமாக 20 பேருக்கு வங்கிக் கடனுக்கு ஏற்பாடும், உடன் ஆழ்துளைக் கிணறும் அமைக்கப்பட்டது. இதன்பிறகு மக்கள், இந்த ஊரை ஒட்டி உள்ள காட்டுப் பகுதியில் சிதறிக் கிடக்கும் சவுக்கு, நீலகிரி, செம்மரம் போன்ற மரங்களின் விதைகளை சேகரித்து வந்து, நெகிழிப் பைகளில் மண் நிரப்பி விதைத்து வளர்த்து. அந்தக் கன்றுகளை வனத்துறைக்கு வழங்கினர். சிலர் கத்தரி, மிளகாய் நாற்றுகளை உற்பத்தி செய்து விற்றனர். வனத்துறைக்கு வழங்கிய கன்றுகள் போக கூடுதலாக உள்ளக் கன்றுகளை கொண்டு போய் அரிமளம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, திருமயம் போன்ற வெளியூர்கள்ல விற்றுவந்தனர். அப்படி விற்கப் போன இடங்களில் பலர், தேக்கு, தென்னை, புளி, புங்கன், பூச்செடி கேட்க, அவர்கள் கேட்டதையும் உற்பத்தி செய்து கொடுத்து தொழிலை விரிவுபடுத்தினர் இப்போது பல வெளியூர்களுக்கு மரக்கன்றுகளை வளர்த்து அனுப்பி வருகின்றனர். இத்தொழிலே இவ்வூர் மக்களின் முதன்மைத் தொழிலாகவும் வாழ்வாதாரமாகவும் மாறிவிட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "About 70 persons, most of them women, are involved in raising ornamental plants". the hindu. பார்க்கப்பட்ட நாள் 25 சூலை 2017.
  2. அ.சாதிக் பாட்சா (25 சூலை 2017). "வீட்டுக்கு வீடு நர்சரிகள்.. வியக்க வைக்கும் கல்லுக்குடியிருப்பு மக்கள்!". செய்திக் கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 25 சூலை 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லுக்குடியிருப்பு&oldid=3576884" இலிருந்து மீள்விக்கப்பட்டது