கல்லாடனார் (தொல்காப்பிய உரையாசிரியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்லாடனார் (Kalladanaar) தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய இடைக்கால தமிழ் மொழி உரையாசிரியர்களில் ஒருவர். சங்ககாலப் புலவர் கல்லாடனார் வேறு, தொல்காப்பிய உரையாசிரியர் கல்லாடனார் வேறு. தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய கல்லாடர் பொ.ஊ. 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் காலத்தில் வாழ்ந்தவர். கல்லாடனாரைக் கல்லாடர் எனவும் குறிப்பிடுகின்றனர்.

இளம்பூரணர் உரை தொல்காப்பியம் முழுமைக்கும் உள்ளது. நச்சினார்க்கினியர் உரை தொல்காப்பியம் எழுத்ததிகாரம் பகுதிக்கு மட்டும் உள்ளது. இவர் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணிக்கும் உரை எழுதியுள்ளார். பேராசிரியர் உரை தொல்காப்பியம் பொருளதிகாரம் மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என்னும் இறுதி நூன்கு இயல்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது.

தொல்காப்பியம் சொல்லதிகாரத்துக்கு மட்டும் ஐந்துபேர் எழுதிய உரைகள் கிடைத்துள்ளன. இந்த ஐவருள் ஒருவர் கல்லாடனார். ஏனையோர் தெய்வச்சிலையார், இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகியோர்

தொல்காப்பியத்துக்குக் கல்லாடனார் எழுதிய உரை அச்சாகி வெளிவந்துள்ளது.[1] கல்லாடனார் உரை தொல்காப்பியம் சொல்லதிகாரத்தில உள்ள ஒன்பது இயல்களில் முதல் ஏழு இயல்களுக்கு முழுமையாகவும் எட்டாம் இயல் இடையியலில் முதல் பத்து நூற்பாக்களுக்கும் கிடைத்துள்ளன. இவரது உரைநூல் பதிப்புடன் இணைக்கப்பட்டுள்ள பழைய உரை சொல்லதிகாரம் முதல் மூன்று இயல்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு[தொகு]

  1. “தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடனார் விருத்தியுரையும் பழைய உரையும்” , கு. சுந்தரமூர்த்தி எழுதிய விளக்கத்துடன், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – வெளியீடு – 1184, ஆண்டு 1964