கலிங்கத்துப் பரணி (ஒட்டக்கூத்தர் நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணி பலராலும் போற்றிப் பயிலபட்டுவருகிறது. கலிங்கத்துப் பரணி என்னும் பெயரில் ஒட்டக்கூத்தர் பாடிய பரணிநூல் ஒன்றும் உண்டு.

செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி, முதலாம் குலோத்துங்கனின் படைத்தலைவன் கருணாகரத் தொண்டைமான் வடகலிங்க மன்னன் அனந்தவன்மனை வென்ற திறத்தைப் பாடுகிறது.

ஒட்டக்கூத்தர் பாடிய கலிங்கத்துப்பரணி, முதலாம் குலோத்துங்கனின் மகன் விக்கிரம சோழன் தென்கலிங்க மன்னன் கலிங்க வீமனை வென்ற திறத்தைப் பாடுகிறது. இந்த நூல் நமக்குக் கிடைக்கவில்லை. என்றாலும் இந்த நூலைப்பற்றிய குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன.

தொடர்பு[தொகு]

முதலாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில் அவன் மகன் விக்கிரமன் தன் தந்தையின் சார்பில் வேங்கி நாட்டில் இருந்துகொண்டு ஆட்சி புரிந்துவந்தான். அக்காலத்தில் தென்கலிங்க வீமனை வென்றதை ஒட்டக்கூத்தர் பாடிய நூலே முதலாவது கலிங்கத்துப் பரணி.

கருணாகரத் தொண்டைமான் வடகலிங்கத்தை வென்றதைச் செயங்கொண்டார் பாடிய நூல் இரண்டாவது கலிங்கத்துப் பரணி. செயங்கொண்டார் இயற்றிய பரணி சொல்நயம், பொருள்நயம் மிக்கு விளங்கியமையால் முதல் பரணி வழக்கொழிந்து போயிற்று.

ஒட்டக்கூத்தர் பாடிய பரணி பற்றிய குறிப்புகள்[தொகு]

 • விக்கிரமன் ஐம்படைத்தாலி அணிந்திருந்த இளமைப் பருவத்திலேயே படைக்குத் தலைமை தாங்கிப் போரிட்டபோது தெலிங்க வீமன் மலைமீது ஏறி ஒடி ஒளிந்துகொண்டான்.[1]
 • தக்கயாகப் பரணி கொண்ட இரண்டாம் இராசராசன், பரணி (ஒட்டக்கூத்தரின் கலிங்கத்துப் பரணி) கொண்ட விக்கிரமனின் பேரன்.[2]
 • (ஒட்டக்கூத்தரின்) பரணி கொண்ட சோழன் (விக்கிரமன்) மைந்தன் (இரண்டாம்) குலோத்துங்கன்.[3]
 • பிள்ளைத்தமிழ் நூலின் பாட்டுடைத் தலைவன் இரண்டாம் குலோத்துங்கனின் தந்தை (விக்கிரமன்) (ஒட்டக்கூத்தரின்) பரணி கொண்டவன்.[4]

ஒட்டக்கூத்தர் பரணியின் பாடல்கள்[தொகு]

சிலப்பதிகாரம் நூலுக்கு உரை எழுதும் அடியார்க்கு நல்லார், இந்திரவிழாவில் பலியிடுதலைக் குறிப்பிடும்போது மூன்று பாடல்களை மேற்கோளாகத் தருகிறார். அவை இங்குத் தரப்படுகின்றன. இந்த மூன்றில் 2-ஆம் பாடல் செயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியில் உள்ளது. மற்றைய இரண்டும் எந்த நூலிலும் காணப்படவில்லை. எனவே இவை ஒட்டக்கூத்தர் பாடிய பரணியின் பாடல் என அறிஞர்கள் கருதுகின்றனர்.

1

மோடி முன்தலையை வைப்பரே மூடி

குலைந்த குஞ்சியை முடிப்பரே

ஆடி நின்று புதுத் திலதம்

அம் முகத்தில் அமைப்பரே [5]
2

அடிக் கழுத்தி னுடன் சிரத்தை அரிவராலோ

அரிந்த சிரம் அணங்கின் கை கொடுப்பராலோ

கொடுத்த சிரம் கொற்றவையைத் துதிக்குமாலோ

குரையுடலம் கும்பிட்டு நிற்குமாலோ [6]
3

மண்ணின் ஆள் அற அறுத்த தங்கள் தலை

வைத்த பீடிகை வலங்கொள

விண்ணின் ஆகிய தன் யாகசாலை தொறும்

மீளவும் சிலர் மிறைப்பரே [7]

கருவிநூல்[தொகு]

 • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம், 2005

கருவிநூல்[தொகு]

 1. தெலிங்க வீமன் விலங்கல் மிசை ஏறவும்
  கலிங்க பூமியைக் கன எரி பருகவும்
  ஐம்படைப் பருவத்து வெம்படை தாங்கி - விக்கிரமன் மெய்க்கீர்த்தி
 2. செருத்தம் தரித்துக் கலிங்கர் ஓட, தென்தமிழ்த் தெய்வப் பரணி கொண்டு வருத்தம் தவிர்த்து உலகு ஆண்ட பிரான், மைந்தர்க்கு மைந்தனை வாழ்த்தினவே - ஒட்டக் கூத்தரின் தக்கயாகப் பரணி, தாழிசை 276
 3. விரும்பு அரணில் வெங் களத்தில் வேட்டுக் கலிங்கப் பெரும்பரணி கொண்ட பெருமான் - தரும் புதல்வன் கொற்ற குலோத்துங்க சோழன் - ஒட்டக்கூத்தரின் குலோத்துங்க சோழன் உலா, கண்ணி 28-29
 4. பெரும்பரணி கொள்ளும் சேவகன் அபங்கன் அகளங்கன் மதலாய் - குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ், சிற்றில் பருவம் 83
 5. ஒட்டக்கூத்தர் இயற்றிய கலிங்கத்துப்பரணிப் பாடல்
 6. செயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப் பரணி, பாடல் எண் 67.
 7. ஒட்டக்கூத்தர் இயற்றிய கலிங்கத்துப்பரணிப் பாடல்