கலாலக்ஷ்மி தேவராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கலாலக்ஷ்மி தேவராஜா
10 x 12.jpg
பிறப்புமாணிக்கவாசகர் கலாலக்ஷ்மி
சூலை 10, 1957(1957-07-10)
பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
இறப்பு28 மார்ச்சு 2019(2019-03-28) (அகவை 61)
யாழ்ப்பாணம்
இருப்பிடம்அரசடி வீதி, பண்டத்தரிப்பு
மற்ற பெயர்கள்செம்மனச்செல்வி
கல்விகலைமாணிப் பட்டம்
அறியப்படுவதுஎழுத்தாளர், நடிகை
பெற்றோர்மாணிக்கவாசகர், தங்கம்மா
வாழ்க்கைத்
துணை
சோ. தேவராஜா
பிள்ளைகள்ஜனமகன், அபிலாஷா

கலாலக்ஷ்மி தேவராஜா (யூலை 10, 1957 - மார்ச் 28, 2019) ஈழத்தின் சிறுகதை எழுத்தாளர், நாடக நடிகை. நாடக நெறியாளர், சமூக செயற்பாட்டாளர். 1979 இலிருந்து நடாகங்களில் நடித்துவரும் கலாலக்ஷ்மி தேவராஜா அவைக்காற்றுகை கழகம், நாடக அரங்கக் கல்லூரி, தேசிய கலை இலக்கியப் பேரவை, மறுமலர்ச்சி மன்றம், நாராய் நாராய் நாடகப் பயணக் குழு என்பவற்றுடன் இணைந்து செயற்பட்டவர். ஒருபாலை வீடு, சங்காரம், உறவுகள், புதியதொரு வீடு, தாலியம், எந்தையும் தாயும், முயலார் முயல்கிறார் போன்ற நாடகங்களில் நடித்தவர். வீ.எம்.குகராஜாவின் கதை இதுதான் (முழுநீள வீடியோ திரைப்படம்) அருணா செல்லத்துரையின் வீடு (தொலைக்காட்சி தொடர்நாடகம்) ஆகிய சின்னத்திரைகளில் நடித்தவர். தாயகம் இதழில் அயிராமி, சிவகாமி போன்ற புனைபெயர்களில் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன. மறுமலர்ச்சி மன்ற வெளியீடாக இவரது தேர்ந்த சிறுகதைகள் 'மகர காவியம்', 'ரோஜாப் பூ', 'பூமராங்' என்ற தலைப்புகளில் மூன்று நூல்கள் 2017 ஒக்ரோபரில் வெளியிடப்பட்டன.[1]

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

யாழ்ப்பாண மாவட்டத்தில் பண்டத்தரிப்பில் காலையடி எனும் கிராமத்தில் 10.07.1957 இல் மாணிக்கவாசகர், தங்கம்மா தம்பதியினருக்கு ஐந்தாவது மகளாக பிறந்தார். பண்டத்தரிப்பு மகளிர் உயர் கல்லூரியிலும் பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரியிலும் கல்வி கற்று உயர்தரக் கல்வியை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியிலும் நிறைவுசெய்து பட்டப்படிப்பை இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாணம் வளாகத்தில் மேற்கொண்டு இளங்கலைமாணிப் பட்டத்தைப் பெற்றார். சட்டத்தரணியும் நடிகரும் எழுத்தாளருமான சோமசுந்தரம் தேவராஜாவை காதலித்து பதிவுத் திருமணம் புரிந்து தாலி என்ற மங்கலநாண் அணிந்துகொள்ளாமல் கடைசிவரை புதுமைப் பெண்ணாகவாழ்ந்தவர்.

கலை வெளிப்பாடுகள்[தொகு]

1979 இல் அவைக்காற்றுக் கலைக் கழகத்தின் சார்பில் இயக்குநர் க.பாலேந்திராவின் ஒரு பாலை வீடு நாடகத்தில் ஒரு பைத்தியக் காரியாக நடித்தார். பெண்கள் நாடகம் நடிக்க முன்வராத அக்காலத்தில் இவரது நடிப்பாற்றல் வியப்பானது. தொடர்ந்து முற்றிலும் ஆண்களே நடித்த இலங்கை நாடக அரங்க‍க் கல்லூரி தயாரித்த மௌனகுருவின் சங்காரம் நாடகத்தில் சமுதாயம் பாத்திரத்தில் நடித்தார்.

குழந்தை ம. சண்முகலிங்கத்தின் 'உறவுகள்' நாடகத்தில் குழந்தை ம. சண்முகலிங்கம், எஸ்.ரி.அரசு, சோ.தேவராஜா, கௌரி வரதராஜப்பெருமாள், சிசு நாகேந்திரன் போன்ற கலைஞர்களுடன் இணைந்து நடித்தார். பண்டத்தரிப்பு பெண்கள் கல்லூரி தயாரிப்பான குரும்பசிட்டி நடராஜாவின் 'மேலும் கீழும்' தாளலய நாடகத்தின் ஒரு மேடையேற்றத்தில் தனது துணைவருடன் இணைந்து நடித்தார். கொழும்பில் அரங்காடிகள் தயாரிப்பில் குழந்தை ம. சண்முகலிங்கத்தின் 'முயலார் முயல்கிறார்' நாடகத்தில் தனது பிள்ளைகளுடன் இணைந்து மயில் பாத்திரத்தில் நடித்தார். தேசிய கலை இலக்கியப் பேரவையின் 'புதுவரலாறும் நாமே படைப்போம்' என்ற இசைப்பா அரங்கின் பாடகர் குழுவின் நான்கு மேடைகளில் பங்கெடுத்துள்ளார். கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் கலாமணியின் 'பாடலே அரங்காகி' இசைப்பா அரங்கில் பாரம்பரிய கூத்து நாடகப் பாடல்கள் நிகழ்வில் தேவர் உடன் பாடியுள்ளார். தேசிய கலை இலக்கியப் பேரவையின் அரங்கப் பண்பாட்டுப் பேரவையில் இணைந்து பிரான்சிஸ் ஜெனம், அரசையா ஆகியோருடன் பல நாடக மேடையேற்றங்களில் கொழும்பிலும் மட்டக்களப்பிலும் நடித்துள்ளார். எந்தையும் தாயும் நாடகத்தின் இயக்குநராகவும் காலையடி மறுமலர்ச்சி மன்றத்திலும் சாந்தை சிற்றம்பல வித்தியாலயத்திலும் 'மாதொரு பாகம்' 'தாயுமாய் நாயுமானாய்' நாடகங்களை கணவருடன் இணைந்து இயக்கினார். கம்பஹாவைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணியும் நாடக‍க் கலைஞரான விஜித் சிங்கின் 'கொள் கரி', 'தூத் தூ' மேடை நாடகங்களிலும் 'மண்டையன்' தொலைக் காட்சி நாடகத்திலும் நடித்தார். நாடகங்களில் மாத்திரமன்றி, வீ. எம். குகராஜாவின் கதைவசனம், நெறியாள்கையிலும் கே. எம். வாசகரின் மேற்பார்வையிலும் 'கதை இதுதான்' எனும் வீடியோ திரைப்படத்திலும் கதாநாயகியாக தமது இயல்பான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர். சிலந்திவலை என்ற வீடியோ திரைப்படத்திலும் சிறு பாத்திரமேற்று நடித்தவர். பின் கொழும்பில் ரூபவாகினியில் அருணா செல்லத்துரையின் 'வீடு' என்ற தொலைக்காட்சித் தொடரில் பிரதான பாத்திரத்தில் நடித்தார்.

சமூக அரசியல் களத்தில்[தொகு]

தனது துணைவருடன் இணைந்து புதியஜனநாக மாக்சிய லெனினிச கட்சியில் இணைந்துகொண்டார். 80களில் மனித உரிமை இயக்கத்தில் செயற்பட்ட துணைவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது அதற்கு நள்ளிரவில் முகம் கொடுத்தவர். கொழும்பில் வாழ்ந்தபோது தமிழ் சிங்கள முஸ்லிம் மனிதநேயமிக்கவர்களுடன் இணைந்து போர் எதிர்ப்பு போராட்டங்களிலும் வலி வடக்கு மக்களின் மண் மீட்புப் போராட்டங்களிலும் கலந்து கொண்டவர். புதிய இடதுசாரிமுன்னணியுடன் இணைந்து மாகாணசபையில் பெண் வேட்பாளராக போட்டியிட்டவர். ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பாராளுமன்ற வேட்பாளராகவும் போட்டியிட்டவர்.

வெளிவந்த நூல்கள்[தொகு]

  • மகர காவியம் சிறுகதைத் தொகுப்பு 2017
  • ரோஜாப்பூ சிறுகதைத் தொகுப்பு 2017
  • பூமராங் சிறுகதைத் தொகுப்பு 2017

மறைவு[தொகு]

இறுதிக் காலத்தில் யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, அரசடி வீதியில் வசித்து வந்த கலாலட்சுமி 2019 மார்ச் 28 இல் மறைந்தார். அவரது இறுதி வணக்க நிகழ்வு சமய மரணச்சடங்கு எதுவுமின்றி அஞ்சலி நிகழ்வும் மலரஞ்சலியும் இடம்பெற்று 30.03.2019 அன்று சம்பில்துறையி்ல் தகனம் செய்யப்பட்டது.[2]

உசாதுணை[தொகு]

  • 'அரங்கம்' நாடக அரங்கக் கல்லூரியின் சஞ்சிகை 1981
  • அருணா செல்லத்துரையின் 'வீடு' தொலைக் காட்சி நாடகங்களும் வானொலி நாடகங்களும் 1993
  • தாய் வீடு கனடா மாத இதழ் ஏப்பிரல் 2019 ந.இரவீந்திரன் கட்டுரை

https://thaiveedu.com/

வெளி இணைப்புகள்[தொகு]

memorial service for kalalaxumi thevarajah

  1. https://events.torontotamil.com/event/memorial-service-for-kalalaxumi-thevarajah
  2. http://kalaiyadinet.com/?p=107423
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலாலக்ஷ்மி_தேவராஜா&oldid=2924180" இருந்து மீள்விக்கப்பட்டது