கற்பகவல்லி நாயகி மாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருமயிலைக் கற்பகவல்லி நாயகி மாலை

டாக்டர் உ.வே.சா நூல் நிலையத்தில் ஓலைச் சுவடியில் இருந்து இதுவரை அச்சுக்கு வராத நூல்களை அச்சுக்குக் கொண்டு வரும் திருப்பணியின் மூலம் 2002 ஆம் ஆண்டு ’அர்த்த நாரீசர் குறவஞ்சி’ என்னும் திருச்செங்கோட்டுக் குறவஞ்சி நூல் வெளிவந்தது. 2003 ஆம் ஆண்டு தேசீய ஆவணக் காப்பகத்தின் (National Archives of India) 80% பொருளுதவியுடன் கற்பகவல்லி நாயகி மாலை என்னும் இந்நூல் வெளிவந்துள்ளது.


கற்பகவல்லி நாயகி மாலை
நூலாசிரியர்தெரியவில்லை(பழம்புலவர்) : பதிப்பாசிரியர்கள் : புலவர் பேராசிரியர் ம.வே.பசுபதி எம்.ஏ, புலவர் ஞா.மேகலா எம்.ஏ. , எஸ். சாயிராமன்.
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வெளியீட்டாளர்மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம் 2, அருண்டேல் கடற்கரைச் சாலை, பெசன்த் நகர், சென்னை 600090
வெளியிடப்பட்ட திகதி
முதற்பதிப்பு 2003
பக்கங்கள்72


இந்நூலைப் பற்றி[தொகு]

கற்பகவல்லி மாலை என்னும் இந்நூல் அருமையான தோத்திர இலக்கியமாகும். திருமயிலையில் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஒரு மயிலைக் கற்பகத்தைப் பக்தி உருக்கத்துடன் துதிக்கும் செஞ்சொல் பனுவல் நூல் இது. விருத்தப் பாக்களால் ஆன இந்நூற் பாடல்கள், பாராயணத்திற்கும் , பண்ணுடன் பாடுவதற்கும் பொருத்தப் பாக்களே ஆகும்.

அருள்மிகு கற்பகாம்பாள் திருக்கோயிலில் தொண்டாற்றிய ஒரு பெருமகனாரே, இந்நூலை இயற்றியவர் என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.

திருக்கோயில் பணிகள், பூசைகள் செழிக்கவும், நோய் நீங்கவும் வதந்திகள் ஒழியவும் வளம் பெருகவும் அம்பிகையிடம் வேண்டிக் கொள்ளும் பல பாடல்கள் இந்நூலுள் உள்ளன. எனவே இந்நூலைப் பாராயணம் செய்தால் அவ்வகைகளில் நிறைவுகள் ஏற்படும் எனக் கொள்ளலாம்.

இந்நூலுக்கு பொழிப்புரை போன்ற ஓர் உரை கிடைத்துள்ளது. மூலத்தில் உள்ளதைக் காட்டிலும் சற்றுக் கூடுதலான செய்திகள் கொண்டதாக அவ்வுரை உள்ளது. உரைநடைத் தன்மை வேறுபட்டதாகவும் உள்ளது.

கற்பகவல்லி நாயகி மாலை என்னும் இந்நூல் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களால் 102 பாடல்கள் கொண்டது. தற்பரன் அடியார் வாழ்த்து மாலை என இரண்டு செய்யுட்களும் பின் இணைப்பாக உள்ளன. கூத்தாடும் கணபதி காப்புடன் மொத்தப் பாடல்கள் 104 ஆகும். சொற்சுவையும் பொருட்சுவையும் பக்திப்பரவசமும் பொதிந்த அருந்தமிழ் இலக்கியம் இது. 99 பாடல்களில் கற்பக வல்லி நாயகியே என மகுடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மற்ற திருமயிலை நூல்கள்[தொகு]

திருமயிலை தொடர்பான இலக்கியங்கள் முப்பதுக்கும் மேற்பட்டவைகள் ஆகும். அவை பல ஆய்வறிஞர்களால் விவரித்து எழுதப்பட்டுள்ளன. உலா, கலம்பகம், அந்தாதி, இரட்டை மணி மாலை , குறுங்கழி நெடில் , மல்லிகைப் பா முதலிய பல்வேறு வகை இலக்கியங்கள் திருமயிலைக்கு உள்ளன.

டாக்டர் உ.வே.சா அவர்கள் தாண்டவராயக் கவிராயர் இயற்றிய திருமயிலை யமக அந்தாதி என்ற நூலை 1936இல் வெளியிட்டுள்ளார். அதன் முன்னுரையில் இவ்வந்தாதியே அன்றி இத்தலம் சம்பந்தமாக வேறு சில தமிழ்ப் பிரபந்தங்களுள் இப்பொழுது தெரிந்தவை என எட்டு நூல்களைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்றாகிய கபாலீஸ்வரர் பஞ்சரத்னம் என்ற நூலை டாக்டர் உ.வே.சா. அவர்களே 1932இல் முன்னமேயே வெளியிட்டார். யமக அந்தாதி முன்னுரையுள் குறிப்பிட்டுள்ள பட்டியலில் கற்பகவல்லி மாலை என்ற நூலும் ஒன்றாகும்.

கபாலீஸ்வரர் பஞ்சரத்னம் என்ற நூலை வெளியிட்டபோது டாக்டர் உ.வே.சா. அவர்களுக்கு ஐந்து பாடல்களே கிடைத்தன. அதனால் அதற்குக் கபாலீஸ்வரர் பஞ்சரத்னம் எனப் பெயரிட நேர்ந்தது. அவ்வைந்து பாடல்களுடன் மேலும் மூன்று பாடல்கள் உள்ளன. இது தமிழ் ஆர்வலர்களுக்கும் இறை அன்பர்களுக்கும் மகிழ்வூட்டும் செய்தியாகும். மொத்தம் எட்டுப் பாடல்களில் ஒன்றை நீக்கித், தாம் மூன்று பாடல்கள் எழுதிச் சேர்த்துக் கபாலீஸ்வரர் பதிகம் என வாகீச கலாநிதி திரு கி.வா.ஜ அமுத நிலைய வெளியீடாகத் தந்தார்.

டாக்டர் உ.வே.சா நூல் நிலையம்[தொகு]

டாக்டர் உ.வே.சா நூல் நிலையத்தில் பல்வேறு திருக்கோயில்களின் தல புராணங்கள் மட்டுமன்றி இத்தகு பக்தி இலக்கியங்களும் ஓலைச் சுவடிகளில் உள்ளன. செல்வ வளம் மிகுந்த திருக்கோயில்கள் தமிழகத்தில் பல உள்ளன. எனினும் அவற்றைப் பற்றிய தல புராணங்களில், இலக்கியங்களில் கூட இன்னமும் அச்சுக்கு வராதவை உள்ளன. இச்செய்தி அவ்வத் திருக்கோவில் பொறுப்பாளர்களுக்குக் கடிதம் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவை இன்னும் அச்சேரவில்லை.

கற்பகவல்லி நாயகி மாலை நூலாசிரியர்[தொகு]

திருமயிலை சண்முகம் பிள்ளை அவர்கள் கற்பகவல்லி மாலை என்ற பெயரில் ஒரு நூல் செய்ததாகக் குறிப்புக் கிடைக்கிறது. அந்நூல் இந்நூல் ஆகாது. இந்நூல் வேறொருவர் இயற்றிய நன்னூல் ஆகும். கீழ்வரும் பத்தியில் உள்ள செய்திகள் இக்கருத்தை மெய்ப்பிக்கும். கற்பகவல்லி மாலையின் நூலாசிரியர் பெயர் தெரியவில்லை. இந்நூலகத்தில் உள்ள ஓலைச் சுவடியில் நூலாசிரியர் பெயர் அறிவதற்கான குறிப்பு ஏதும் இல்லை. வேறு ஓலைச்சுவடிகளின் - பிரதிகளின் பகுதிகளைப் பார்க்க வாய்ப்பு ஏற்பட்டால் நூலாசிரியர் பெயர் அறியக்கூடும்.

இந்நூலாசிரியரின் பெயர் இன்னது என்று தெரியாவிட்டாலும் மயிலைக் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் நிர்வாகப் பொறுப்பில் கட்டளை விசாரணையாக இருந்தவர் (பா. 32) என்பதும், பொருளாதாரக் குற்றம் ஒன்றின் காரணமாகப் பிறரால் சுட்டிக் காட்டப் பெற்று மனம் நொந்தவர்(பா.31) என்பதும் அம்பிகையின் அருள் இவர் குற்றமற்றவர் என உலகுக்குக் காட்டிற்று என்பதும், அம்பிகையின்பால் கொண்ட பக்தித் திறத்தினால் கடுமையான நோய் விலகிக் களிப்புற்றவர் என்பதும் (பாடல்கள் 22,40,42,44,47,51,52) இவர்தம் செய்யுட்களால் அறியப்படுகிறது.

திருமயிலைக் கற்பகாம்பாளிடம் எல்லையற்ற பக்தித் திறம் கொண்டவர் ஆகையினால், அவள் அருளாலே அவள் தாள் வணங்கும் கவி ஆற்றலும் வாய்க்கப்பெற்றவர் இந்நூலாசிரியர். வேறு எப்புலவரையும் தம் நூலில் குறிப்பிடாத இக்கவிஞர் அபிராமி பட்டரை மட்டும் குறிப்பிட்டுள்ளார். (பா. 59) சாக்த மார்க்கத்தில் தாம் வியந்த புலவராக அவரை இவர் கருதி இருக்கக்கூடும் . மூவர் பெருமக்களைப் பெயர் குறிப்பிடாமல் மாணிக்கவாசகரை மட்டும் பெயர் குறிப்பிட்டு இருப்பது பக்தி உருக்கத்துக்குத் திருவாசகத்தை இவர் விரும்பியதைச் சுட்டுவதாகக் கொள்ளலாம்.

காஞ்சீபுரத்தில் அம்பிகை தழுவப் பெருமான் குழைந்த காட்சி புராணங்களில் இவரைக் கவர்ந்தாதல் வேண்டும் (பா. 38) . மொத்தத்தில் வாழ்க்கையில் பல்வேறு துன்ப எல்லைகளையும் தொட்டு அம்பிகையின் பேரருள் என்கின்ற இன்ப எல்லையையும் தொட்டவர் இவர் என்றால் அது மிகையாகாது.

உரையின் தனித்தன்மை[தொகு]

இந்நூலுக்கு அருமையான பொழிப்புரை ஒன்று கிடைத்திருக்கிறது. அது பதவுரையைத் திரட்டிய பொழிப்புரையாக இல்லாமல் , விளக்க உரை கலந்த பொழிப்புரையாக இருக்கிறது. அப்பொழிப்புரை நூலாசிரியர் செய்தது அன்று ; பக்தி உருக்கம் மிக்க வேறொரு புலவர் பெருமான் செய்ததாகக் கருத வேண்டி உள்ளது. இதனை ’ரச உரை’ என்று கூறலாம்.

கருவி நூல்[தொகு]

கற்பகவல்லி நாயகி மாலை, மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், முதற்பதிப்பு 2003