கற்குவேல் அய்யனார் கோயில்

ஆள்கூறுகள்: 8°30′56″N 78°00′37″E / 8.51556°N 78.01028°E / 8.51556; 78.01028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கற்குவேல் அய்யனார் கோயில்
கற்குவேல் அய்யனார் கோயில் is located in தமிழ் நாடு
கற்குவேல் அய்யனார் கோயில்
கற்குவேல் அய்யனார் கோயில்
தமிழ்நாட்டில் கோவிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்:8°30′56″N 78°00′37″E / 8.51556°N 78.01028°E / 8.51556; 78.01028
பெயர்
வேறு பெயர்(கள்):கருக்குவாலை அய்யன்
பெயர்:கற்கோலய்யன்[1]
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தூத்துக்குடி
அமைவு:தேரிக்குடியிருப்பு
கோயில் தகவல்கள்
மூலவர்:கற்குவேல் அய்யனார்
சிறப்பு திருவிழாக்கள்:கள்ளர் வெட்டு திருவிழா
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தமிழர் கலை
இணையதளம்:http://karkuvelayyanartemple.tnhrce.in/

கற்குவேல் அய்யனார் கோயில் தமிழ் நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமத்துக் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் திருச்செந்தூரில் இருந்து 14 கி.மீ. தொலைவிலுள்ள காயாமொழி என்ற ஊரிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் குதிரைமொழி-தேரிக்குடியிருப்பு கிராமத்தில் அமைந்துள்ளது. [2]

வரலாறு[தொகு]

தேரிக்குடியிருப்பு என்று அழைக்கப்படும் இந்தப் பகுதி பாண்டியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அதிவீர ரான சூர பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவனிடம் அமைச்சராக இருந்தவர் அய்யனார். இவர் சிவன் மற்றும் விஷ்ணுவின் மானிட வடிவாகப் பார்க்கப்படுகிறார். [2] இப்போது தேரிக்காடாக விளங்கும் பகுதி முன்னர் ஒரு குறுநில மன்னனின் ஆட்சிக்குட்பட்ட மானவீரவளநாடு என்னும் நாடாக இருந்தது. அங்கே இருந்த குடிநீர்க்கிணற்றின் அருகில் ஆண்டுக்கொரு முறை ஒரே ஒரு பூ பூக்கின்ற ஒரு மாமரம் இருந்தது. பிஞ்சாகிக் காயாகிக் கனியும்போது சேவகர்கள் மன்னனிடம் சேர்ப்பர். அதற்குக் காவல் போடப்பட்டிருந்தது. ஓர் இடைச்சாதிப் பெண் அதிகாலையில் குடி தண்ணீர் எடுக்கச் சென்றபோது, மாமரத்திலிருந்து கிணற்றுக்குள் விழுந்திருந்த மாங்கனி, குடத்திற்குள் விழுந்தது. அப்பெண் அப்பழத்தைத் திருடியதாகக் கருதினர். திருடவில்லை என்று அவள் கூறியும், அவளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவள் நீதி தவறிய மன்னனுடைய நாடு, மண்மாரி பெய்து மண்மேடாகும்படி சாபமிட்டாள். தனக்கு ஆதரவாகப் பேசிய அய்யனார் இருக்குமிடம் மட்டும் அழியாதிருக்கும்படியும், அவரது பரிவாரங்கள் மென்மேலும் புகழ் சேரவும் வாழ்த்திவிட்டு மடிந்தாள். முறை தவறிய மன்னனுடைய நாட்டில் அமைச்சராக இருப்பதைவிடச் சாவதே மேல் என்று நினைத்து, பதவியை உதறினார். அவர் சென்ற திசையில் இருந்த கற்குவாளை மரம் இரண்டாகப் பிளந்து அய்யனாரைத் தனக்குள் வாங்கி மூடிக்கொண்டது. சில நூற்றாண்டுகள் கடந்தபின், மீண்டும் கிராமம் தழைத்தது. மக்கள் குடியேற ஆரம்பித்தபோது சிலர் அம்மரத்தை வெட்ட முயன்றனர். மரத்தினுள் இருந்து ஓர் அசரிரீ, அய்யனார் அந்த மரத்தில் வாழ்வதாகக் கூறவே, கிராமத்தினர் அந்த மரத்தை வழிபட தொடங்கினர்.[3]

மூலவர்[தொகு]

இத்தலத்தில் குடிகொண்டிருக்கும் மூலவரான அய்யனார் கற்குவா என்ற மரத்தில் இருந்து தோன்றியதாகக் கூறுவர். கற்குவா அய்யன், கற்கு வேலப்பன், கருக்குவாலை அய்யன், கற்குவேல் அய்யனார் என்ற பல பெயர்களில் அவர் அழைக்கப்படுகிறார்.[4] மூலவர் பூர்ணம், பொற்கமலம் என்ற இரு தேவியருடன் அமர்ந்த நிலையில் உள்ளார். பிற தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.[2]

திருவிழாக்கள்[தொகு]

இக்கோயிலில் பலவகையான திருவிழாக்கள் நடைபெற்றுவருகின்றன. அவற்றுள் பின்வருவன முக்கியமானவையாகும்.

கள்ளர் வெட்டுத் திருவிழா[தொகு]

கள்ளர் வெட்டுத் திருவிழா தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தின் கடைசி ஐந்து நாட்களும் மார்கழி மாதத்தின் முதலாம் நாளும் ஆக ஆறு நாட்கள் தொடர்ச்சியாகக் கொண்டாடப்படுவது. ஆறாம் நாளன்று நடைபெறுகின்ற கள்ளர் வெட்டுத் திருநாள்தான் மிகப் பிரசித்திப் பெற்றது. கள்ளர் வெட்டு அன்று காலையில் பால்குடம் எடுத்தல், அதன்பின் தாமிரபரணி நதியின் தீர்த்தம் யானை மீது வெள்ளிக் குடத்தில் கொண்டு வருதல், அதனைத் தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம், மதியம் 12 மணிக்குச் சிறப்பு ஆராதனை நடைபெறுகிறது.[5] அன்று மாலை 4 மணிக்குக் 'கள்ளர் வெட்டு' நடைபெறும்போது இளநீர் இங்குக் கள்ளராக உருவகப்படுத்தப்படுகிறது. கோவிலின் பின்புறமுள்ள செம்மண் தேரியில் இந்த இளநீர் கள்ளராக வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட இளநீரில் இருந்து மண்ணில் விழும் நீர் புனிதமாகக் கருதப்படுகிறது.நீர் பட்ட மண்ணை பக்தர்கள் எடுத்துச் சென்று தங்கள் விளைநிலங்களில் தூவுகிறார்கள். கல்லாப் பெட்டியில் வைத்துக் கொள்கிறார்கள். மகசூல் கூடும், வியாபாரம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். [6]

பங்குனி உத்திரம்[தொகு]

பங்குனி உத்திர திருவிழாவும் இங்கு அதி விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. மாவிளக்கு பூசை, திருவிளக்கு பூசைகளைத் தொடர்ந்து தாமிரபரணி ஆற்றிலிருந்து தீர்த்தம் கொண்டுவரப்படும். தொடர்ந்து சிறப்பு வழிபாடு, ஆராதனை நடத்தப்படுகிறது- [7]

குடமுழுக்கு[தொகு]

இக்கோயிலின் குடமுழுக்கு 1 செப்டம்பர் 2022இல் நடைபெற்றது. [8] இதற்கு முன்பாக 31 அக்டோபர் 2008இல் குடமுழுக்கு ஆனதாகக் கல்வெட்டு உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. கற்குவேல் அய்யனார் கோவில் மண்ணால் செழிக்கிறது வியாபாரம், நக்கீரன், 1 பிப்ரவரி 2011[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 2.2 "Arulmigu Karkuvel Ayyanar Temple". 2015-12-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-11-23 அன்று பார்க்கப்பட்டது.
  3. தேரிக்காட்டுக் கதைகள் - அபலைகளும் சாபங்களும், ஆ.தனஞ்செயன், 16 ஜூலை 2015
  4. அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயில், தினமலர் கோயில்கள்
  5. தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு திருவிழா, தினத்தந்தி, 8 டிசம்பர் 2015
  6. தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயில் கள்ளர் வெட்டு திருவிழா, தினமணி, 17 டிசம்பர் 2009
  7. தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா, தினமலர், 21 மார்ச் 2013
  8. கற்குவேல் அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா, தினத்தந்தி 29 ஆகஸ்டு 2022