கர்நாடக மாநில மகளிர் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்நாடக மாநில மகளிர் பல்கலைக்கழகம்
வகைபொது
உருவாக்கம்ஆகத்து 2003[1]
வேந்தர்தவர்சந்த் கெஹ்லாட்[2]
துணை வேந்தர்பேராசிரியர். பி. கே. துளசிமாலா [3]
அமைவிடம்
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)
இணையதளம்www.kswu.ac.in

கர்நாடக மாநில அக்கமகாதேவி மகளிர் பல்கலைக்கழகம் (Karnataka State Akkamahadevi Women's University) (KSAWU, விஜயபுரா) கர்நாடக மாநில மகளிர் பல்கலைக்கழகம் என்றும் அழைக்கப்படுகிறது. இது 2003 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் நிறுவப்பட்டது. இது கர்நாடக மாநிலத்தில் பெண்களுக்கான தனிப்பட்ட பல்கலைக்கழகமாகும். இது விஜயபூர் நகரத்தில் உள்ளது (முன்பு பீஜப்பூர் என்று அழைக்கப்பட்டது). பேராசிரியர் பி.கே.துளசிமாலா அதன் தற்போதைய துணைவேந்தர் ஆவார். [4]

இந்தப் பல்கலைக்கழகம் பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தின் 2 (f) மற்றும் 12 (B) கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வட கர்நாடகத்தின் பன்னிரண்டு மாவட்டங்களில் பரவி உள்ள எழுபது மகளிர் கல்லூரிகள் இந்த பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

இது கலை, வணிக நிர்வாகம், கணினி பயன்பாடுகள், வணிகவியல், கல்வி, ஆடைத் தொழில்நுட்பம், மனை அறிவியல், உடற்கல்வி, அறிவியல் மற்றும் சமூகப் பணி ஆகியவற்றில் இளங்கலை பட்டத்திற்கு வழிவகுக்கும் இளநிலைப் பாடத்திட்டங்களை வழங்குகிறது. இது கலை, வணிகவியல் மற்றும் மேலாண்மை, சமூக அறிவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் கல்வி ஆகியவற்றில் 20 முதுகலைப் படிப்புகள், முதுகலைப் பட்டயப் படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது. [5]

துறைகள் மற்றும் ஆசிரியர்கள்[தொகு]

பல்கலைக்கழக வளாகத்தில் மொத்தம் 8 துறைகள் உள்ளன. அதாவது, மானிடவியல், சமூக அறிவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மேலாண்மை ஆய்வுகள், கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகள், உடற்கல்வி, விளையாட்டு இயக்குனர் மற்றும் யோகா ஆய்வு மையம் ஆகியவை அத்துறைகளாகும்.

மானிடவியல் துறை[தொகு]

மானிடவியல் துறை மேலும் பல்வேறு பாடங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கன்னடத் துறை, ஆங்கிலத் துறை, இந்தித் துறை, உருது துறை மற்றும் நிகழ்த்து கலைகளுக்கான மையம் ஆகியவை உள்ளன. இந்த துணைத் துறைகளில் பெரும்பாலானவை முதுகலைப் பட்டம், ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டங்களை வழங்குகின்றன. இவைகளில் சில பாடங்களின் அணிவகுப்பில் முதுகலைப் பட்டயச்சான்றை வழங்க அதை விட இன்னும் மேலே செல்கிறார்கள். [6]

சமூக அறிவியல் துறை[தொகு]

சமூக அறிவியல் துறை பொருளாதாரம், வரலாறு, பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு, நூலகம் மற்றும் தகவல் அறிவியல், சமூகப் பணி, சமூகவியல், அரசியல் அறிவியல் மற்றும் இவை அனைத்திலும் ஆராய்ச்சியியல் விழைஞர்களுக்கான ஒரு குறிப்பிட்ட துறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பெரும்பாலான துறைகள் முதுகலைப் பட்டம், ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் மற்றும் பட்டயச் சான்றிதழ்களைப் பாடங்களில் வழங்குகின்றன. மேலும், சில சான்றிதழ் படிப்புகளையும் வழங்குகின்றன. [7]

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை[தொகு]

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை உயிரியத் தகவலியல், உயிரித்தொழில்நுட்பவியல், தாவரவியல், வேதியியல், கணினி அறிவியல், மின்னணுவியல், உணவு பதப்படுத்துதல் மற்றும் ஊட்டச்சத்து, மருந்தியல் வேதியியல், இயற்பியல், விலங்கியல், ஊட்டச்சத்தியல், புள்ளியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் படிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. மற்ற துறைகளைப் போலவே, இந்தப் படிப்புகளும் முதுகலைப் பட்டம், ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் மற்றும் பட்டயச் சான்றிதழ்களைப் பாடங்களில் வழங்குகின்றன. மேலும், சில சான்றிதழ் படிப்புகளையும் வழங்குகின்றன. [8]

கல்வி மற்றும் ஆராய்ச்சியில் படிக்கும் துறை[தொகு]

இந்தத் துறையில் இளங்கலை கல்வியியல், முதுகலை கல்வியியல், ஆய்வியல் நிறைஞர், முனைவர் படிப்புகள் உள்ளன. இளங்கலை கல்வியியலுக்கு 100 இடங்களும் முதுகலை கல்வியியலுக்கு 40 இடங்களும் உள்ளன. [9]

உடற்கல்வி மற்றும் விளையாட்டு அறிவியல் படிப்பு துறை[தொகு]

இந்தத் துறையில் உடற்கல்வியியலில் இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டப்படிப்புகளும் மற்றும் யோகா படிப்புகளில் சான்றிதழ் படிப்புகளும் உள்ளன. [10]

வசதிகள்[தொகு]

வளாகத்தில் நிறைய வசதிகள் வழங்கப்படுகின்றன. ஒரு நூலகம் உள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் சிண்டிகேட் வங்கி உள்ளது, அழைப்பின் பேரில் விடுதிக்கான மருத்துவ உதவி வாகனம், சுகாதார மையம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு உள்ளது. கல்லூரி வளாகத்தில் விடுதி வசதியையும் வழங்குகிறது. [11] பல்கலைக்கழகம் சமூகரீதியாக மற்றும் பொருளாதாரரீதியில் உதவி தேவைப்படும் பின்னணியில் இருந்து வரும் மாணவர்களுக்கு பல்வேறு உதவித்தொகைகளையும் வழங்குகிறது. [12]

மேற்கோள்கள்[தொகு]