கர்நாடக சித்ரகலா பரிஷத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கர்நாடக சித்ரகலா பரிஷத் (Karnataka Chitrakala Parishath) (கன்னடம்: ಕರ್ನಾಟಕ ಚಿತ್ರಕಲಾ ಪರಿಷತ್) என்பது பெங்களூரில் அமைந்துள்ள ஒரு காணும் காட்சிக் கலை வளாகம் ஆகும். இந்த வளாகத்தில் 18 காட்சிக் கூடங்கள் உள்ளன. இவற்றில் 13 காட்சிக் கூடங்களில் ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் நாட்டுப்புற கலைகளின் நிரந்தர தொகுப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மீதியுள்ள பிற காட்சிக்கூடங்கள் புகழ்பெற்ற கலைஞர்களின் படைப்புகளின் கண்காட்சியில் காட்சிப்படுத்துவதற்காக வாடகைக்கு விடப்படுகின்றன. இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள கலைப்பொருள்களில் நாட்டுப்புற கலைத் தொகுப்பாக உள்ளவற்றில் மைசூர் ஓவியங்கள் மற்றும் தோல் பொம்மைகள் உள்ளன பரிஷத் ஒரு நுண்கலைக் கல்லூரியை நடத்தி வருகிறது. அது ஒரு காணும் கலை வகைப்பாட்டில் அமைந்த கலைக்கல்லூரி ஆகும். ஒவ்வொரு ஜனவரி மாதத்திலும் கர்நாடக சித்ரகலா பரிஷத் சித்ரா சாந்தே என்ற பண்பாட்டு நிகழ்வை பொதுமக்களுக்கு நிகழ்த்துகின்றது. அனைவருக்கும் கலை சென்று சேரவேண்டும் என்ற நன்னோக்கில் அது நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வின் குறிக்கோள் "அனைவருக்கும் கலை" என்பதாக அமையும்.

வரலாறு[தொகு]

கர்நாடக அரசு குத்தகைக்கு எடுத்த இரண்டரை ஏக்கர் நிலத்தில் சித்ர கலா பரிஷத் தொடங்கியது. ஆரம்ப காலத்தில் தொழிலதிபர் எச்.கே கெஜ்ரிவால் நன்கொடைகள் வழங்கினார். ஸ்வேடோஸ்லாவ் ரோரிச்[1] என்பவர் தான் வரைந்த பல ஓவியங்களையும், அவருடைய அவரது தந்தை வரைந்த ஓவியங்களையும் கர்நாடக சித்ரகலா பரிஷத்துக்கு நன்கொடையாகத் தந்தார். 1964 ஆம் ஆண்டில், நஞ்சுண்டா ராவின் சித்ரகாலா வித்யாலயா என்ற நிறுவனமானது பரிஷத்தோடு இணைத்து வைக்கப்பட்டது. 1966 ஆம் ஆண்டில், இந்த பரிஷத் ஒரு கலை மையமாக மாநில மற்றும் தேசிய லலித் கலா அகாதமியால் அங்கீகாரம் பெற்றது. புகழ்பெற்ற மைசூர் ஓவியங்கள் போன்ற கர்நாடக மாநிலத்தின் கலைப் பொக்கிஷங்களை ஆய்வு செய்வதற்கு இந்த பரிஷத் முன்னோடியாக இருந்து வருகிறது.. காலப்போக்கில், பரிஷத்தோடு காட்சியகங்கள் மற்றும் கிராஃபிக் ஸ்டுடியோ ஆகியவை இணைந்தன. பின்னர் அது ஒரு முழுமையான கலை வளாகமாக மாற்றம் பெற்றது. 1995 ஆம் ஆண்டில், கெஜ்ரிவால் தனது குடும்பத்தின் கலைத் தொகுப்பை பரிஷத்துக்கு நன்கொடையாக வழங்கினார், இது பரிஷத்தில் உள்ள விசாலமான காட்சிக்கூடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டது. 1998-99 ஆம் ஆண்டில், பரிஷத் வளாகத்தில் ஒரு சிற்ப காட்சிக்கூடம் சேர்க்கப்பட்டது. கலைஞர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான திறந்தவெளி அரங்கம் ஒன்றும் இங்கு அமைக்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டில், சர்வதேச மற்றும் நாட்டுப்புற கலைகளுக்கான இரண்டு பெரிய காட்சியகங்கள் இங்கு திறந்து வைக்கப்பட்டன.

காட்சிக்கூடங்கள்[தொகு]

இங்குள்ள ரோரிச் கலைக்கூடம் 1இல் 36 ஓவியங்களும், 2இல் 36 ஓவியங்களும், கெஜ்ரிவால் கலைக்கூடம் 1இல் 114 ஓவியங்களும் 7 சிற்பங்களும், கெஜ்ரிவால் கலைக்கூடம் 2இல் 42 ஓவியங்களும் 20 சிற்பங்களும், கெஜ்ரிவால் கலைக்கூடம் 3இல் 48 ஓவியங்களும் 13 சிற்பங்களும், கெஜ்ரிவால் கலைக்கூடம் 6இல் 52 வரைபடங்களும் 57 சிற்பங்களும், குக்கே கலைக்கூடத்தில் 25 ஓவியங்களும் 3 சிற்பங்களும், மைசூர் பாரம்பரியக் கலைக்கூடம் 7(அ)இல் 36 ஓவியங்களும், மைசூர் பாரம்பரியக் கலைக்கூடம் 7(பி)இல் 109 ஓவியங்களும், மாடியில் உள்ள காட்சிக்கூடத்தில் 24 கலைப்பொருள்களும் 4 சிற்பங்களும், கெஜ்ரிவால் அனைத்துலக காட்சிக்கூடத்தில் 57 ஓவியங்களும் 4 சிற்பங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவை தவிர மேலும் பல பிரிவுகளைக் கொண்டு காட்சிக்கூடங்கள் அமைந்துள்ளன.[2]

வெளியீடுகள்[தொகு]

கலை மற்றும் பண்பாடு தொடர்பான பல நூல்களை கர்நாடக சித்ரகலா பரிஷத் வெளியிட்டுள்ளது. மைசூர் ஓவியங்கள் பற்றிய நூலும், கன்னட மொழியில் அமைந்த அதன் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்பும் பரிஷத்தின் முக்கியமான வெளியீடுகளாகக் கருதப்படுகின்றன. பரிஷத் வெளியிட்ட பிற குறிப்பிடத்தக்க வெளியீடுகளில் விநாயகரைப் பற்றிய விளக்கப்படங்கள் கொண்ட முழு நூல், ஸ்வேடோஸ்லாவ் ரோரிச் எழுதிய கலையில் மனிதநேயம் என்ற நூல், மைசூர் அரண்மனைக் கலைஞரும், பரிஷத்தின் முன்னாள் தலைவருமான ஒய்.சுப்பிரமண்ய ராஜு அவர்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு ஆகிய நூல்கள் அடங்கும்.

குறிப்புகள்[தொகு]

  1. "Svetoslav Roerich", Wikipedia (in ஆங்கிலம்), 2019-09-20, 2020-01-02 அன்று பார்க்கப்பட்டது
  2. Karnataka Chitrakala Parishath, Art, Creativity, Dedication

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]