கர்சன்பாய் படேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கர்சன்பாய் கோதிதாசு படேல் (Karsanbhai Khodidas Patel) (பிறப்பு 1945, இரப்பூர், மெக்சனா, குசராத் ) இவர் ஓர் இந்திய தொழிலதிபர் ஆவார். இவர், சீமைக்காரை, சவர்க்காரம், சோப்புகள் மற்றும் ஒப்பனைப் பொருட்கள் போன்ற முக்கியப் பொருட்களுடன் ரூ.42,500 கோடி மதிப்புள்ள கொண்ட நிர்மா குழுவை நிறுவியவராவார். 2017 ஆம் ஆண்டில் போர்ப்ஸ் பத்திரிக்கை இவரது நிகர மதிப்பை 4.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பட்டியலிட்டது, அவருக்கு கல்வியில் ஆர்வம் இருந்தது. மேலும் முன்னணி பொறியியல் கல்லூரி / பல்கலைக்கழகத்தின் முன்னணி மருந்தியல் கல்லூரி (நிர்மா மருந்தியல் தொழில்நுட்ப நிறுவனம்) போன்றவற்றை நிறுவினார்.

வாழ்க்கை[தொகு]

வடக்கு குசராத்தில் இருந்து ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் தனது வேதியியலில் இளங்கலை அறிவியல் பாடத்தை 21 வயதில் முடித்து, பின்னர் ஓர் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றினார். முதலில் லால்பாய் குழுவின் அகமதாபாத்தில் உள்ள நியூ காட்டன் ஆலையில், பின்னர் மாநில அரசின் புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆகியவற்றில் பணியாற்றினார்.

தொழில்[தொகு]

1969 ஆம் ஆண்டில், தனது வீட்டின் பின்பக்கம் இவர் சவர்க்காரப் பொடியை தானே தயாரித்து விற்கத் தொடங்கினார். இது இவரது அலுவலக நேரத்திற்குப் பிந்தைய வணிகமாகும். தன்னந்தனியே வீட்டுக்கு வீடு மிதிவண்டியில் சென்று ஒரு கிலோ பொடி மூன்று ரூபாய்க்கு விற்றார். இது ஓர் உடனடி வெற்றியானது. இவர் தனது சவர்க்காரத்திற்கு தனது மகளின் பெயரான நிருபமா என்பதை நிர்மா எனப் பெயரிட்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் தனது வேலையை விட்டு விலகும் அளவுக்கு நம்பிக்கையுடன் இருந்தார். பின்னர் இவர் கூறினார், "என் குடும்பத்தில் இதுபோன்ற எந்த முன்னுதாரணமும் இல்லாததால், இந்த முயற்சி தோல்வியின் பயத்துடன் போராடியது. ஆனால் வடக்கு குசராத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிறுவன ஆர்வத்திற்கு பெயர் பெற்றவர்கள். " இவர் அகமதாபாத் புறநகரில் உள்ள சிறிய பட்டறையில் கடையினை அமைத்தார். நிர்மா என்ற பொருள் குசராத் மற்றும் மகாராட்டிராவில் விரைவாக தன்னை நிலைநிறுத்தியது.

வெற்றி[தொகு]

சவர்க்காரத்தின் உயர் தரம் மற்றும் குறைந்த விலை பெரும் மதிப்புக்காக தயாரிக்கப்பட்டது. ஓர் இல்லத்தரசியின் விருப்பமாக எடுக்கப்பட்ட விளம்பர பாடல்களால் தூண்டப்பட்ட, நிர்மா சவர்க்காரச் சந்தையில் புரட்சியை ஏற்படுத்தி, சவர்க்காரத் தூளுக்கு பொருளாதாரத்தில் முற்றிலும் புதிய பிரிவை உருவாக்கியது. அந்த காலத்தில், சவர்க்கார உற்பத்தியில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் இருந்தது. இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் சர்ப் ஒரு கிலோவுக்கு 13 ரூபாய் என்ற விலையில் விற்கப்பட்டு வந்தது.. ஒரு தசாப்தத்திற்குள், நிர்மா இந்தியாவில் அதிக விற்பனையான பொருளாக மாறியது. உற்பத்தி உழைப்பு மிகுந்ததாக இருந்ததால், இவரும் ஒரு முன்னணி முதலாளியாக ஆனார் (2004இல் 14,000 பேருக்கு வேலை.) சில பாஸ்பேட்டுகள் இல்லாமல் தயாரிக்கப்பட்ட, நிர்மாவும் சற்றே சூழல் நட்புடன் இருந்தது.

பொருளாதாரம் சார்ந்த சவர்க்காரங்களில் அதன் தலைமையை நிறுவிய பின்னர், நிர்மா பிரீமியம் பிரிவில் நுழைந்தது. குளியலறை சவர்க்காரத்தை அறிமுகப்படுத்தியது. ஷாம்பு மற்றும் பற்பசையில் முயற்சி மேற்கொள்ளப்படதில் வெற்றிகரமாக இல்லை. ஆனால் உண்ணக்கூடிய சுத் உப்பு சிறப்பாக செயல்படுகிறது. லைஃப் பாய் மற்றும் லக்ஸ் சவர்க்கரங்களுக்குப் பின்னால், முன்னணி சோப்புகளில் ஒன்று நிர்மா பியூட்டி சோப் இருக்கிறது. ஒட்டுமொத்த நிர்மாவிற்கு சோப்பு கேக்குகளில் 20% சந்தைப் பங்கும், சவர்க்காரங்களில் 35% சந்தைப் பங்கும் உள்ளது. அண்டை நாடுகளிலும் நிர்மாவின் வெற்றிகரமான செயல்பாடுகள் உள்ளன.

கல்வி நிறுவனங்கள்[தொகு]

1995 ஆம் ஆண்டில், இவர் அகமதாபாத்தில் நிர்மா தொழில்நுட்ப நிறுவனத்தைத் தொடங்கினார். இது குசராத்தில் ஒரு முன்னணி பொறியியல் கல்லூரியாக வளர்ந்தது. ஒரு மேலாண்மை நிறுவனத்தைத் தொடர்ந்து, முழு கட்டமைப்பையும் நிர்மா கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் மேற்பார்வையில் 2003 இல் நிர்மா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டது. தொழில் முனைவோருக்கு பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்ட நிர்மலாப்ஸ் கல்வித் திட்டம் 2004 இல் தொடங்கப்பட்டது.

குடும்பம்[தொகு]

இவரது இரண்டு மகன்கள், மகள் மற்றும் மருமகன் இப்போது நிர்மா அமைப்பில் முன்னணி பதவிகளில் உள்ளனர்: [1] ராகேஷ் கே படேல் கொள்முதல் மற்றும் தளவாடங்களை கவனித்து வருகிறார். கிரண் கே படேல், தலைமை சந்தைப்படுத்தல் மற்றும் நிதி, கல்பேசு படேல் மனித வளம் மற்றும் சுகாதாரத் துறையில் (நர்லைஃப் ஹெல்த்கேர்) இருக்கிறார்.

விருதுகள் மற்றும் அங்கீகாரம்[தொகு]

  • 2009 ஆம் ஆண்டில், போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட இந்தியாவின் பணக்காரர்களின் பட்டியலில் கர்சன்பாய் # 92 இடத்தைப் பிடித்தார். . [2]
  • 2001 ஆம் ஆண்டில், புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தால் இவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. இவரது விதிவிலக்கான தொழில்முனைவோர் மற்றும் தொண்டுப்பணிகளை அங்கீகரித்தது.
  • 1990 ஆம் ஆண்டில், புது தில்லியில் உள்ள சிறிய அளவிலான தொழில்கள் சங்கத்தின் கூட்டமைப்பு இவருக்கு 'உத்யோக் ரத்னா' விருதை வழங்கியது. குசராத் வணிக நிறுவனங்களின் கூட்டமைப்பு இவரை 'எண்பதுகளின் சிறந்த தொழிலதிபர்' என்று பாராட்டியது. எண்ணெய்கள், சோப்புகள் மற்றும் சவர்க்காரங்களுக்கான மேம்பாட்டு அமைப்பின் தலைவராக இரண்டு முறை பணியாற்றியுள்ளார்.
  • இவருக்கு 2010 ஆம் ஆண்டிற்கான பத்மசிறீ விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டில் வழங்கினார்.
  • இவர் சூன் 7, 2013 அன்று 40 கோடி செலவில் ஆறு இருக்கைகள் கொண்ட வானூர்தி ஒன்றை வாங்கினார் என்றும் அறிவிக்கப்பட்டது. அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி மற்றும் சைடசு குழுமத்தின் விளம்பரதாரர் பங்கஜ் படேல் ஆகியோருக்குப் பிறகு, இவர் அகமதாபாத்தை தளமாகக் கொண்ட மூன்றாவது தொழிலதிபர் ஆவார்.
  • 2017 ஆம் ஆண்டில், இந்தியாவின் பணக்காரர்களின் பட்டியலில் ( 640 மில்லியன் அமெரிக்க டாலர்), போர்ப்ஸ் பத்திரிகை கர்சன்பாய் # 38 வது இடத்தைப் பிடித்தார்.
  • 2019 ஆம் ஆண்டில் போர்ப்ஸ் பத்திரிகையின் இந்தியாவின் பணக்காரர்களின் பட்டியலில் கர்சன்பாய் # 30 வது இடத்தைப் பிடித்தார். ( 3.9 பில்லியன் அமெரிக்க டாலர்)

குறிப்புகள்[தொகு]

  1. "Nirma group home page: Genesis". 2004. பார்க்கப்பட்ட நாள் 2006-11-24.
  2. "Indian Billionaires". Forbes Magazine.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்சன்பாய்_படேல்&oldid=3323616" இலிருந்து மீள்விக்கப்பட்டது