கரோலிங்கியக் கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"லோர்ஸ்ச் கொஸ்பெல்ஸ்" 778–820. சார்லமனின் அரசவைப் பள்ளி.

கரோலிங்கியக் கலை (Carolingian art) என்பது, பிரான்கியப் பேரரசில், சார்லமனினதும் அவனது வாரிசுகளினதும் ஆட்சிக் காலப் பகுதியில், ஏறத்தாழ 780 - 900 வரையான 120 ஆண்டுகள் இருந்த ஒரு கலைப் பாணி. இது கரோலிங்கன் மறுமலர்ச்சி என அறியப்பட்டது. இக்கலை உற்பத்திகள் அரச சபையினதும், முக்கியமான துறவி மடங்களினதும் தேவைக்காக உருவாக்கப்பட்டன. இவ்வட்டத்துக்கு வெளியே கரோலிங்கியக் கலைப் பாணியைச் சேர்ந்த கலைப் பொருட்களில் தரம், கைவினைத்திறன், வடிவமைப்பில் சிக்கல்தன்மை என்பன மிகவும் குறைவாகக் காணப்பட்டன. இக்கலை இன்றைய பிரான்சு, செருமனி, ஆசுத்திரியா, வடக்கு இத்தாலி, கீழ் நாடுகள் ஆகியவற்றில் அடங்கியுள்ள பல மையங்களில் பயிலப்பட்டு வந்தது. இக்கலை, கண்டத்து மதச் சபைகளூடாகப் பிரித்தானியத் தீவுகளின் தீவுக்குரிய கலைப் பாணியிலிருந்தும், கரோலிங்க மையங்களில் வாழ்ந்த பைசண்டியக் கலைஞர்களிடம் இருந்தும் குறிப்பிடத்தக்க செல்வாக்குக்கு உட்பட்டிருந்தது.

வடக்கு ஐரோப்பாவில் முதல் தடவையாகச் செந்நெறி நடுநிலக்கடல் கலை வடிவங்களையும், பாணிகளையும் மீள்விப்பதற்கான முழுமையான முயற்சி எடுக்கப்பட்டது. இதன் விளைவாக செந்நெறிப் பாணியினதும் வடக்குக் கூறுகளினதும் கலப்பான சிறப்புவாய்ந்ததும் கண்ணியமானதுமான பாணி உருவானது. குறிப்பாக மனித உருவங்களில் வடக்கு நம்பிக்கை அறிமுகமானதுடன், மேற்கில் ரோமனெசுக் கலைக்கும் பின்னர் கோதிக் கலைக்குமான அடிப்படைகளும் உருவாகின. கரோலிங்கியக் காலம், சில வேளைகளில் "முன்-ரோமனெசுக்" என அழைக்கப்படும் மத்தியகாலக் கலைக் காலத்தின் ஒரு பகுதியாகும். கரோலிங்கியக் காலத்தைத் தொடர்ந்து வந்த குழப்பமான இடைவெளிக்குப் பின்னர், புதிய ஒட்டோனிய வம்சம் ஏறத்தாழ 950 இலிருந்து, ஒட்டோனியக் கலையில் கரோலிங்கியப் பாணியை மேலும் வளர்த்ததன் மூலம் பேரரசுக் கலையை மீள்வித்தது.

மேலோட்டம்[தொகு]

பைசண்டியப் பேரரசு அளவு பெரிய பேரரசு ஒன்றை உருவாக்கிய பின்னும், பழைய மேற்கு உரோமப் பேரரசுக்கு அளவில் போட்டியாக விளங்கக்கூடியதாக இருந்தும், மேற்காட்டிய பேரரசுகளுக்கு இருந்தது போன்ற கலைப் பாணி ஒன்று தமக்கு இல்லை என்ற உணர்வு கரோலிங்கிய அரச அவைக்கு இருந்திருக்க வேண்டும்.

குறியீட்டளவில் உரோமைப் பிரதிநிதித்துவப்படுத்திய சார்லமன் உரோமப் பண்பாட்டையும், கல்வியையும் மேற்கில் மீள்விக்க விரும்பினான். அத்துடன், அலங்காரமான செருமானிய புலப்பெயர்வுக் கலையைப் போலன்றி,[1] கதைகளைக் கூறுவதற்கும், உருவங்களைத் திறமையாக வெளிப்படுத்துவதற்கும் வல்லமை கொண்ட கலைப் பாணி ஒன்றும் தேவைப்பட்டது. தொடக்கக் கிறித்தவப் பண்பாடு, பைசண்டியப் பண்பாடு ஆகியவற்றின் கலைச் சாதனைகளோடு தன்னுடையதைக் குறியீட்டளவில் இணைத்துக்கொள்ளவும், அவற்றுக்கு இணையாகப் போடியிடவும் சார்லமன் கடந்த காலத்தின் பெரும் அரசர்களின் வாரிசாகத் தன்னை நிறுவிக்கொள்ள விரும்பினான்.

ஆனால், இது உரோமப் பண்பாட்டை மீள்வித்தல் என்ற உணர்வு அடிப்படையிலான விருப்பத்துக்கும் மேற்பட்டதாகவே இருந்தது. சார்லமனின் ஆட்சிக் காலத்தில் பைசண்டிய உருவ வழிபாட்டு எதிர்ப்புச் சர்ச்சை பைசண்டியப் பேரரசை இரண்டாகப் பிரித்திருந்தது. சார்லமன், மேற்கத்தியத் திருச்சபையின் உருவ வழிபாட்டு எதிர்ப்புக்கு எதிரான நிலைப்பாட்டை ஆதரித்தான். சார்லமனின் கட்டளையின்படி லிப்ரி கரோலினிஅரசசபை வட்டாரத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினான். நடுநிலக்கடல் உருவ வழிபாட்டுப் பண்பாட்டு நினைவுகளில் இருந்து எவ்வித தடையும் இல்லாமல், சார்லமன் தனது முதல் பாரிய கிறித்தவ சமயச் சிற்பத்தை அறிமுகப்படுத்தினான். இது மேற்கத்தியக் கலைக்கு ஒரு சிறப்பு வாய்ந்த முன்மாதிரியாக இருந்தது.

நியாயமான அளவு கரோலிங்கிய விளக்கப் படங்களோடு கூடிய கையெழுத்துப் பிரதிகளும், பெரும்பாலும் யானைத் தந்தத்திலான சிறிய அளவு சிற்பங்களும், இன்றும் கிடைக்கின்றன. ஆனால், உலோக வேலைகள், சுவரோவியங்கள், அது போன்ற பிற ஆக்கங்கள் மிகக் குறைவாகவே உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kitzinger, 40–42

உசாத்துணைகள்[தொகு]

  • Kitzinger, Ernst, Early Medieval Art at the British Museum, (1940) 2nd edn, 1955, British Museum
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரோலிங்கியக்_கலை&oldid=2525821" இலிருந்து மீள்விக்கப்பட்டது