கருவூர் (சங்ககாலம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கருவூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கருவூர் என்னும் ஊரின் பெயர் இக்காலத்திலும் நாட்டுப்புற மக்களால் கருவூர் எனவே வழங்கப்படுகிறது. ஆங்கிலேயர் இதனைக் கரூர் என வழங்கியதன் அடிப்படையில் இக்காலத்தில் மருவி வழங்கப்படுகிறது.. இது தமிழ்நாட்டுக் கரூர் மாவட்டத்தின் தலைநகர்.

இந்த ஊருக்கு அருகில் பாயும் ஆறு அமராவதி. இது சங்ககாலத்தில் ஆன்பொருநை என வழங்கப்பட்டது. ஆனிரைகள் (மாடுகள்) பொருந்தி மேயும் ஆறாக விளங்கிய இடம் ஆன்பொருநை. இதன் வழியில் தோன்றியதே கருவூரில் உள்ள ஆனிலையப்பர் கோயில்.

இவ்வூர், வஞ்சி, வஞ்சிமுற்றம் என்னும் பெயர்களாலும் சங்ககாலத்தில் குறிப்பிடப்பட்டது. இதன் வழியில் தோன்றியதே கருவூரிலுள்ள வஞ்சியம்மன் கோயில்.

செங்குட்டுவன் காலத்தில் இதுதான் சேரர்களின் தலைநகராகவிருந்தது. பின்பு சோழர்களின் தொல்லைத் தாங்காமல் பிற்காலச் சேரர்கள் மேற்குதொடர்ச்சி மலைக்கு அப்பால் (கொல்லம்) தனது தலைநகரை மாற்றினர். கல்வெட்டு அறிஞர் முனைவர் இரா. நாகசாமி இது குறித்து நூலொன்று எழுதியுள்ளார்.

சோழனின் கருவூர் முற்றுகை கைவிடப்பட்டது[தொகு]

கருவூர் அருகில் தண்ஆன்பொருநை (அமராவதி இக்கால வழக்கு) ஆறு பாய்ந்தது. அந்த ஆற்று மணலில் அக்காலத்தில் மகளிர் தெற்றி விளையாடுவர். (அண்மைக் காலத்தில் விளையாடப்பட்ட பாண்டி விளையாடுதான் சங்ககாலத் தெற்றி விளையாட்டு). சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூரை முற்றியிருந்தான். கருவூர் அரசன் சேரன். அவனது காவல்மரம் போந்தை எனப்பட்ட பனை. சோழன் அதனைக் கோடாரியால் வெட்டிச் சாய்த்துக்கொண்டிருந்தான். இதனை வெட்டும் ஓசை அவ்வூர் அரசனுக்கு நன்றாகக் கேட்டது. கேட்டும் அதனைப் பொருட்படுத்தாமல் சோழனுக்குப் பயந்து சேரன் கருவூர் கோட்டைக்குள் பதுங்கிக்கொண்டிருந்தான். இப்படி அஞ்சுபவனோடு போரிடுவது நாணத்தக்க செயல் என்று புலவர் ஆலத்தூர் கிழார் சோழனுக்கு அறிவுரை கூறினார். சோழனும் முற்றுகையைக் கைவிட்டுத் திரும்பினான். [1]

சேரன் கருணை[தொகு]

சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி கருவூரிடம் சென்றான். அவன் தன் மார்பில் புலி உருவம் பொறித்த கவசம் அணிந்திருந்தான். அது அம்புகளால் துளைக்கப்பட்டிருந்தது. அது சேரர் படையை எதிர்கொண்டதன் அறிகுறி. வெற்றிப் பெருமிதத்தில் சோழன் கருவூருக்குள் நுழைந்தபோது அவனது யானைக்கு மதம் பிடித்துவிட்டது. அப்போது புலவர் ஏணிச்சேரி முடமோசியார் கருவூர் வேண்மாடத்தில் சேர அரசனோடு உலவிக்கொண்டிருந்தார். சேர அரசனிடம் நிலைமையை விளக்கினார். சோழன் துன்பமில்லாமல் தன் நாட்டுக்குத் திரும்பவேண்டும் என வாழ்த்தினார். சேரன் வந்திருப்பவன் பகைவன் என்றும் பாராமல் சோழனைக் காப்பாற்றினான். இது சேரனின் கருணை உள்ளமா? புலவர் வாக்கைப் போற்றிய பெருந்தன்மையா? இரண்டுமே. [2]

சோழன் கருவூரை வென்றது[தொகு]

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூரை வென்றதைப் புலவர் கோவூர் கிழார் பாராட்டிப் பாடியுள்ளார். முதலில் தன்னைத் காக்கவந்த பிட்டை(பிட்டன்) என்பவனோடு போரிட்டுக் கொங்கரை விரட்டினான். அடுத்துத் தன் படையுடன் முன்னேறி வஞ்சிமுற்றம் என்னுமிடத்தில் வெற்றி கண்டான். வெற்றிகண்ட போர்களத்தில் அரசனை வாழ்த்தி புலவர் போர்க்களத்திலேயை யானைகளைச் சோழனிடம் பரிசாகப் பெற்றார். [3]

கோதை ஆட்சி[தொகு]

கோதை என்பவன் கருவூரை ஆண்ட சேர மன்னர்களில் ஒருவன். இந்தக் கருவூரின் அருகில் தண்ஆன்பொருநை ஆறு பாய்ந்தது. (தலைவன் ஒருவன் தன் போர்ப்பணி முடிந்தபின் இல்லம் திரும்பும்போது தன் தேர்ப்பாகனிடம் சொல்கிறான். வலவ! தேரை விரைந்து செலுத்து. நான் என் மனைவியோடு பொருநை ஆற்று மணலைக் காட்டிலும் பலமுறை முயங்கவேண்டும் என்கிறான்) [4]

செல்வக்கடுங்கோ வாழியாதன் ஆட்சி[தொகு]

சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன் ஒரு சேர மன்னன். (புகழூரில் உள்ள பொ.ஊ.மு. முதல் நூற்றாண்டு தமிழ்ப்பிராமி எழுத்துக் கல்வெட்டு ‘கோ ஆதன் செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோ மகன் இளங்கடுங்கோ’ எனக் குறிப்பிடும் பகுதியில் ‘ஆதன் செல்லிரும்பொறை’ என்னும் தொடர் இவனைக் குறிக்கும்) இவனை வாழ்த்தும் புலவர் குண்டுகட் பாலி ஆதனார் இந்தச் சேரனை இவனது நாட்டில் பாயும் பொருநை ஆற்று மணலைக் காட்டிலும், அந்த ஆற்றுப்படுகையில் விளையும் நெல்லைக் காட்டிலும் பலவாகிய வாழ்நாள் பெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். [5]

பாலைபாடிய பெருங்கடுங்கோ ஆட்சி[தொகு]

சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ நல்கும் கொடையைப் போற்றும் பெண்புலவர் பேய்மகள் இளவெயினி இவன் தண்ணான்பொருநைப் பணல் பாயும் விறல்வஞ்சி வேந்தன் எனக் குறிப்பிடுகிறார். புறநானூறு 11

(புகழூர் பொ.ஊ.மு. முதல் நூற்றாண்டு தமிழ்ப்பிராமி கல்வெட்டு குறிப்பிடும் பெருங்கடுங்கோ இந்தப் பாலைபாடிய பெருங்கடுங்கோ ஆவான்)

  • வஞ்சிமுற்றம் என்னுமிடத்தில் இருந்துகொண்டு சேரன் செங்குட்டுவன் அரசாண்டதாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது, சிலப்பதிகாரம் 25 காட்சிக்காதை அடி 9, 35

கருவூர்ப் புலவர்கள்[தொகு]

சங்ககாலம்

ஆகிய பத்து சங்ககாலப் புலவர்கள் இவ்வூரில் வாழ்ந்தவர்கள்.

பிற்காலம்

பிற்காலத் தமிழ் எல்லை[தொகு]

பொ.ஊ. 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூல் திசைச்சொல்லுக்கு விளக்கம் கூறும்போது செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த 12 நிலப்பகுதியிலும், தமிழ் பேசப்படாத 18 நிலப்பகுதியிலும் வழங்கப்படும் சொல் தமிழில் கையாளப்படுமாயின் அது திசைச்சொல் எனக் குறிப்பிடுகிறது.[6] இந்த நூலுக்கு 16ஆம் நூற்றாண்டில் உரை எழுதிய மயிலைநாதர் செந்தமிழ் பேசப்பட்ட நிலத்துக்கு எல்லை குறிப்பிடுகையில் ‘கருவூரின் கிழக்கும், மருவூரின் (காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த மருவூர்ப்பாக்கம்) மேற்கும், வையை ஆற்றின் வடக்கும், மருத ஆற்றின் (காஞ்சிபுரத்தில் ஓடிய ஆறு) எனக் குறிப்பிடுகிறார்.

மேலும் பார்க்கலாம்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. ஆலத்தூர் கிழார் புறநானூறு 36
  2. உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடல் புறம் – 13
  3. கோவூர் கிழார் பாடல் புறம் 373
  4. நக்கீரர் அகநானூறு 93
  5. புறநானூறு 387
  6. நன்னூல் 272
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருவூர்_(சங்ககாலம்)&oldid=3533289" இலிருந்து மீள்விக்கப்பட்டது