கருப்பை வாய் புற்றிற்கு கதிர் மருத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருப்பை வாய் புற்றிற்கு கதிர் மருத்துவம் (Radiotherapy for carcinoma of uterine cervix) என்பது கருப்பை புற்றுநோயினை கதிர் மருத்துவத்தின் மூலம் குணப்படுத்தும் மருத்துவமுறையாகும். வளர்ந்து வரும் நாடுகளில் இந்நோய் பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது. இந்தியாவிலும் 1980கள், 90களுக்கு முன்னர் இந்நோயே முதலிடம் பெற்று இருந்தது. ஆனால் இன்று முலைப் புற்றே முதலிடத்தில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்நோயினை எளிதில் பாப் சோதனை மூலம் கண்டு கொள்ள முடிவதும் அறுவை மருத்துவத்துடன் கதிர்மருத்துவமும் மேற்கொள்ளும் போது நல்ல விளைவுகள் கிடைக்கின்றன என்பதுவுமே ஆகும். 1908 -ல் முதலாவதாக ரேடியம் கருப்பை வாய்புற்றிற்கு பயன்படுத்தப்பட்டது. இன்று பல முறைகளுள்ளன.

நோய்க்கான காரணங்கள்[தொகு]

கருப்பை வாய் புற்றுத் தோன்ற முக்கிய காரணங்களாக,

 • கல்வி அறிவின்மை
 • பிறப்புறுப்பு தூய்மை இன்மை
 • இளம் வயதுத் திருமணம்
 • பலருடன் உடலுறவு
 • அதிகப் பிள்ளைப் பேறு
 • மனித பாப்பிலோமா வைரசு ( HPV).

என்று பல காரணங்கள் காட்டப்படுகின்றன.

மருத்துவம்[தொகு]

நோயினை T.N.M. முறையில் பாகுபடுத்துகின்றனர். இங்கு, T என்பது புற்றுநோயினையும் (Tumour), N என்பது ஊநீர் சுரப்பியில் நோய் உள்ளதையும் (Node), M என்பது நோய் தொலைவிடங்களுக்குப் பரவிய நிலையினையும் காட்டுகின்றன (Metastasis).

மேலும் நோயினை நிலை 1, நிலை 2, நிலை 3, நிலை 4, என்று நான்கு வகையாகப் பிரித்து உள்ளனர். மேலும் உயிரணுக்களின் வளர்ச்சி நிலையினைப் பொருத்து தரம்1, தரம் 2, தரம் 3 என்றும் பிரித்து கொள்ளப்படுகிறது. இவையாவும் கதிர் மருத்துவத்தினைத் திட்டமிட வசதியாக அமைகின்றன.

இன்று கருப்பை வாய்ப் புற்றிற்கு மருத்துவம் மேற்கொள்ள பல தொலைக்கட்டுப்பாட்டுக் கருவிகள் உள்ளன என்றாலும் அவைகளுக்கு அடிப்படை ஆரம்ப நாட்களில் பயன்பட்ட இசுடாக்கோம், பாரிசு, மான்செசுட்டர் முறைகளே ஆகும் அதனை சிறிது பார்ப்போம்.

சிறிது பிறப்பு உறுப்புத் தொகுதியினைப் பற்றித் தெரிந்து கொள்வது நலமாகும். அடிவயிற்றுப் பகுதியில் நடுக் கோட்டிற்கு இரு பக்கத்திலும் பக்கத்திற்கு ஒன்றாக இரு சூல் பைகள் உள்ளன. இங்கு தான் சூல் முட்டைகள் முதிர்ந்து வெளிப்படுகின்றன. கருக்குழாய் எனப்படும் பலோபியன் குழாயின் நுனியில் காணப்படும் விரல் போன்ற உறுப்புகள் முட்டையின் இழுத்துக் கொள்கிறது. பின் முட்டை மெதுவாக கருக் குழாயில் நகரும். கலவியின் போது வெளிப்படும் விந்து, முட்டையினை கருக்குழாயில் எதிர்கொள்ளும் போது, கருக்கட்டல் நிகழ்கிறது. கருக்கட்டிய நிலையில் அது மெதுவாக நகர்ந்து கருப்பையினை அடைந்து அங்கு வலுவான கருப்பை சுவருடன் ஒட்டிக் கொண்டு வளரத் தலைப்படுகிறது. கருப்பையின் கீழ்ப்பகுதியில் கருப்பை வாய் உள்ளது. இதற்கும் கீழ்பகுதியில் யோனி என்கிற பெண்ணுறுப்பு அமைந்துள்ளது. இங்கு சிறுநீர்க்குழாய் திறப்பும் பெண் லிங்கமும் உள்ளன. பெண்குறியின் வெளிப்பகுதியாகிய "பேரிதழ்" (Labia majora) மற்றும் "சீறிதழ்" (lLabia minora) ஆகியவை உள்ளன. இவையே பெண்பிறப்பு உறுப்புத் தொகுதி எனப்படுகின்றன. இத்தொகுதியில் எங்கும் புற்றுநோய் வரலாம். கருப்பை பொதுவாக உடலின் நீளச்சிற்கு முன்பக்கமாகச் சரிந்து காணப்படும் .அரிதாகவே பின்பக்கம் சரிந்து காணப்படும்.

'நோய் அறிகுறிகள்.'

@ பொதுவாக மாதவிலக்கு நின்றவர்களிடம் முரண்பாடன, விட்டுவிட்டு தீட்டு படுதல்.

@ பெண்குறியிலிருந்து கெட்ட நாற்றத்துடன் நீர்வெளிப்படுவது.

@ வெள்ளைப் படுவது.

@ தீட்டு நிற்காதவர்களிடம் இரு மாதவிடாய்களுக்கு இடையே அதிக குருதிப் போக்கு.

@ முதுகின் கீழ்பகுதியில் வலி தொடர்ந்து இருப்பது . இவை முக்கிய அறிகுறிகளாகும்.

சோதனைகளும் பதிவு செய்தலும்.

மருத்துவமனைக்கு வரும் பெண்ணிற்கு,

 1. பாப் பரிசோதனை முதலில் செய்து முடிவுகள் பதிவு செய்யப்பட வேண்டும்.
 1. முழு குருதி ஆய்வு.
 1. சிறுநீர் ஆய்வு.
 1. குருதி சக்கரை அளவு.
 1. மார்பு எக்சு கதிர் படம்.
 1. சி.சி.சி ஆய்வு.
 1. திசு பரிசோதனை. தேவையினைப் பொறுத்து மீயொலி, சி.டி., எம் ஆர் ஐ படங்களும் உதவும்.

கதிர் மருத்துவம், அண்மைக்கதிர் மருத்துவ முறையிலோ தொலைக்கதிர் மருத்துவ முறையிலோ மேற்கொள்ளப்படுகிறது. கதிரியக்ககமுடைய இரேடியம்-226 நீண்ட நாட்களுக்கு அண்மைக்கதிர் மருத்துவத்திற்காக பயன்படுத்தப்பட்டது. இம்முறை "உள் கியூரி மருத்துவம்" (Endocurie therapy) எனவும் அறியப்படுகிறது. இரப்பர் குழாய்களில் (tube) ரேடியம் குழாய்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அதுபோல் கடினமான இரப்பர் முட்டையுருக்களில் ரேடியம் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ரேடியம் குழாய்களில் காணப்படும் சிறு துளைகளின் துணையுடன் இரப்பர் குழாய்களிலும் உருண்டைகளிலும் அவைகள் கீழே விழுந்து விடாமலிருக்க கவனமாக கட்டப்பட்டுள்ளன. இவை முன்பே தயார் நிலையில் இருக்கின்றன. மூன்று நீளங்களிலும் அளவுகளிலும் இரப்பர் குழாய்களும் உருண்டைகளும் உள்ளன. குழாய்களில் முறையே (15,10,10), (15,10), 20 மில்லிகிராம் ரேடியம் குழாய்களும் அதுபோல் உருண்டைகளில் முறையே 25, 20, 17.5 மில்லி கிராம் அளவு ரேடியமும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. 2.1 செ.மீ. நீளமுடைய ரேடியம் குழாயில் 1.5 செ.மீ நீளத்திற்கு ரேடியம் உப்பு இருக்கின்றது. கருப்பையின் நீளத்தினையும் பெண்குறியின் அளவினையும் பொருத்து குழாய்களும் ஓவாய்ட்களும் தேர்வு செய்யப்படும்.

பெண்குறியின் உச்சப்பகுதியிலிருந்து 2 செ.மீ. உயரத்திலும் கருப்பையின் அச்சிலிருந்து 2 செ.மீ. பக்கவாட்டிலும் ஒரு புள்ளி A யும் அதே வரியில் மேலும் 3 செ.மீ. தொலைவில் மற்றொரு புள்ளி B யும் கதிர் ஏற்பளவினைக் கணக்கிட தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இப்புள்ளியில் அச்சிற்கு இரு பக்கத்திலும் உள்ளன. இப்புள்ளிகள் உடலமைப்பினை அடிப்படையாகக் கொண்டே தேர்ந்தெடுக்கப்பட்டுளன. புள்ளி A ன் அருகில் மேல்சிறுநீர் குழாய் செல்கின்றன. புள்ளி B இன் அருகில் இடுப்பு ஊநீர் சுரப்பிகள் உள்ளன. தேவைக்கு அதிகமாக இவ்விடங்களில் கதிர் ஏற்பளவு இருத்தல் கூடாது.. புள்ளி A ல் 80 கிரே அளவினைவிட அதிக ஏற்பளவு கூடாது.

கருப்பை வாய்புற்று நோய்க்கு கதிர்மருத்துவம் மேற்கொள்ளும் போது மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும் . கருப்பையின் பின்னால் மலக்குடலும் முன்னால் சிறுநீர் பையும் அமைந்துள்ளன. பெண்குறியினையும் இவ்வுறுப்புக்களையும் பிரிக்கும் திசுப்படலம், மிகவும் மெல்லியது. 0.5 செ.மீ.அளவே. கவனக்குறைவுகளினால் இவைகளில் பொத்தல் ஏற்பட வாய்ப்புண்டு. (RVF, VVF) இவைகளின் தாங்கும் அளவினை விட ஏற்பளவுக் கூடக்கூடாது.

அண்மைக்கதிர் மருத்துவத்தில் பாரீசு முறை, இசுடாக்கோம் முறை, மான்செச்டர் முறை என பலமுறைகள் உள்ளன.

பாரீசு முறை[தொகு]

பாரிசு முறை பாரிசு நகரிலுள்ள ரேடியம் கழகத்தில் இறிகாட் (REguad) எனும் மருத்துவரால் மேற்கொள்ளப்பட்ட முறை. இம்முறையில் குறைந்த அளவு ரேடியம் தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு அல்லது 8000 மில்லிகிராம் மணிநேரத்திற்கு பெண்ணுறுப்பிலும் கருப்பையிலும் வைத்து மருத்துவம் மேற்கொள்ளப்பட்டது. எடுத்துக் கொள்ளப்பட்ட ரேடியத்தில் ஒரு பகுதி கருப்பையிலும் மறு பகுதி பெண்ணுறுப்பிலும் வைத்து மேற்கொள்ளப்பட்ட இம்முறையே பின்நாளில் மான்செச்டர் முறைக்கு முன்னோடி முறையாகும்.

இசுடாக்கோம் முறை[தொகு]

இம்முறையில் ஃபோர்செலும் அவரது துணைவர்களும் மேற்கொண்ட முறையில் வெள்ளியாலான சிறுபெட்டியில் பல அளவுகளில் இரேடியம் எடுத்துக் கொண்டு வளைந்த குழாயில் கருப்பை ரேடியமும் எடுத்துக் கொண்டு மருத்துவம் செய்யப்பட்டது. எனினும் பரவலாக மான்செசுட்டர் (Manchester method ) முறையே பின்பற்றப்பட்டது.

மான்செசுடர் முறை[தொகு]

இம்முறையில் இரப்பர் குழாய்களும் கடின ஒவாய்டுகளும் (முட்டையுருக்கள்) பயன்பட்டன. 65 மில்லி கிராம் ரேடியம் எடுத்துக் கொண்டு முதலில் மூன்று நாட்களும் பின் ஒரு வாரம் இடைவேளைக்குப் பிகு இரண்டு நாட்களும் ஆக ஐந்து நாட்கள் அண்மைக் கதிர் மருத்துவம் செய்யப்பட்டது. இம்முறையில் புள்ளி எ க்கு 60 கிரேயும் புள்ளி பி க்கு சுமார் 20 கிரே அளவும் கதிர் ஏற்பளவு இருக்கக்கூடும்.

இதற்கான அட்டவணையுடன் கணக்கீடுகள் செய்யப்பட்டன.அமேரிக்க மருத்துவ இயற்பியலாளர் கும்பி தயாரித்த அட்டவணை பயன்படுத்தப்பட்டது.எவ்வளவு ரேடியம் பயன்படுத்த வேண்டும் என்பது இரு வகையில் நிச்சயகப்படுகிறது.

 1) எந்த இணைக் குழாய்களும் ஓவாய்டுகளும் பயன்படுத்தினாலும் புள்ளி எ யில் ஏற்பளவு அதிகம் மாறுபடாத வகையில் உள்ளது.
 2) பெண்ணுறுப்பின் மென்மையான திசுக்களின் தாங்கும் அளவினைவிட அதிகமான ஏற்பளவு இருத்தல் கூடாது..

இவை இரண்டு விதிகளும் அடியில் கண்ட ரேடியம் பங்கீட்டில் கிடைக்கப்பெற்றன. பெரிய ஓவாய்ட் --------------------------5 அலகுகள். ஒரு அலகு= 5 மில்லிகிராம் ரேடியம் .

நடுத்தரம்----------------------------------4 அலகுகள்.

சிறியது-----------------------------------3 அலகுகள்.

நீளமான குழாய்--------------------------- 3,2,2 அலகுகள்.

நடுத்தரம்----------------------------------3,2 அலகுகள்

சிறியது ------------------------------------4 அலகுகள்.

மொத்தம் 140 மணி நேரம் பயன் படுத்தப்பட்டது. புள்ளி எ யில் கதிர் ஏற்பளவு சுமார் 75 கிரே..

அறுவையரங்கில் நோயாளி மேசையின்மேல் படுக்க வைக்கப்பட்டு மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது. பின் மருத்துவர் ,யோனிவழியாக கருப்பையின் வாயினை பலகன அளவுள்ள கம்பியின் துணையுடன் ,எளிதில் ரேடியமுள்ள குழாயினை செலுத்த வசதியாக விரிவு படுத்திக்கொள்கிறார். துணைக்கருவிகளுடன் முதலில் குழாயினை சரியாக கருப்பையில் வைக்கிறார்.அதன்பின் ஒரே மாதிரியான இரு ஓவாய்டுகளை ,நழுவாமல் இருக்க ரப்பர் அமைப்புடன் பெண்ணுறுப்பில் வைத்து, போதுமான அளவு பஞ்சு அல்லது வலைபோன்ற துணியினைப் பயன்படுத்தி அவைகளை நிலையாக இருக்குமாறு வைத்து, வெளியில் இரு பேரிதழ்களையும் தைத்து விடுகிறார். இது ரேடியம் வெளியே விழுந்து விடாமல் இருக்கவே. இதற்குப்பின் நோயாளி எக்சு கதிர் எந்திரமுள்ள அறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார். அங்கு முன்பின் ( AP ) மற்றும் பக்க வாட்டில்(lateral ) படம் எடுக்கப்படுகின்றன.இரு தொடைகளுக்குமிடையே ஒரு கம்பி வளையம் படம் எடுக்கும் போது வைக்கப்படுகிறது. இதன் துணையிடன் உருபெருக்கம் கணிக்கப்படமுடியம். இது ஏற்பளவினை கணக்கிட உதவும். பின் நோயாளி தனி அறையில் வைத்து கவனிக்கப்படுகிறார்.

புள்ளி பி யில் கதிர் ஏற்பளவு ,எ யிலுள்ள அளவைப்போல் 30% ஆக உள்ளது.எனவே புள்ளி பி யில் ஏற்பளவினைக் கூட்ட தொலைக் கதிர் மருத்துவம் கொடுக்கப்படுகிறது.இந்த நிலையில் பள்ளி எ கனமான( 7 செ.மீ) ஈயக் கட்டியால் காக்கப்படுகிறது.

சிறுநீர் பை மற்றும் மலக் குடல் பெறும் ஏற்பளவுகள்;இந்த புள்ளிகளில் ஏற்பளவுகள் நுட்பமான கருவிகளால் அளந்து தெரிந்து கொள்ளப்படுகின்றன.மலக்குடல் அளவு 40 கிரே ஆகவும் சிறுநீர் பை அளவு 55 கிரே ஆகவும் உள்ளன.

நிலைகள் 1 மற்றும் 2 ல்,அண்மைக் கதிர் மருத்துவமும் ,தொடர்ந்து -சில நாள்கள்இடைவெளிக்குப்பின்- தொலைக்கதிர் மருத்துவமும் கொடுக்கப்படுகின்றது.பொதுவாக நிலை 3 மற்றும் 4 ல் தொலைக் கதிர் மருத்துவமே இரண்டு புலங்களுடனோ அல்லது நான்கு புலங்களுடனோ மொத்தம் 60 கிரே கதிர் ஏற்பளவு கொடுக்கப்படுகிறது.ஒவ்வொரு நாளும் 2 கிரே வீதம் வாரம் 5 நாள்கள் 6 வாரத்தில் இது நிகழும். கதிர் வீச்சு புற்றுநோய் மருத்துவர் ,மருத்துவ இயற்பியலாளர் மற்றும் கதிர் வீச்சு தொழில் நுட்பனர் அனைவரும் இணைந்து செய்யும் ஒரு கூட்டு பணி இது.

'எதிர் விளைவுகள்.'

சில விளைவுகள் உடனடியாகத் தோன்றும்; மற்றும் சில விளைவுகள் காலம் தாழ்த்தித் தோன்றும்.

உடனடி விளைவுகள், மருத்துவம் தொடங்கி 5 அல்லது 6 நாள்களில்,கதிர்வீச்சினால் நோய் எதிர்ப்புத் திறன் குறைவினால் தொற்றுநோய் ஏற்படலாம். பெண்குறியினைச் சுத்தமாகக் கழுவுதல் மூலமும் மருந்துகள் மூலமும் இதனைக் கட்டுப்படுத்தலாம்.

2 அல்லது 3 வாரங்கள் சென்ற பின் மலக்குடலில் கதிர்வீச்சின் விளைவுகள் தென்படக்கூடும்.சிறுநீர் பையிலும் அழற்சி ஏற்படும். அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடலாம். காலரா போன்று நீர்த்த மலம் அடிக்கடி இருக்கும்.இவ்விளைவுகள் பொதுவாக அதிக ஏற்பளவில் நிகழும். இரு பகுதிகளாக இக்கதிர் மருத்துவம் மேற்கொள்ளும் போது, இடைவெளி 3 அல்லது 4 மாதங்களாக உள்ளபோது ,இந்த இடைவெளியில் நோய் வளரவும் கூடும். ஆனாலும் முதல் பகுதி மருத்துவம் எவ்வாறு செயல்படுகிறது என்பதனை தெரிந்து கொள்ள முடியும். மாறாக குறைந்த இடைவெளியில் இரண்டாவது பகுதி மேற்கொள்ளப்படும் போது தாமத விளைவுகளைத் தான் தெரிந்து கொள்ள முடியும்.

தாமத விளைவு.3 அல்லது 4 மாதங்கள் சென்ற பின்னரே விளைவுகள் தெரியவரும். மலக்குடல், மலப்பை, சிறுநீர்பையில் அழற்சிஏற்படலாம். இது பின்நாளில் விரும்பப்படாத விளைவான மலக்குடல் பெண்ணுறுப்பபு இவைகளுக்கிடையே பொத்தல் விழுதல் ,அதே போன்று பெண்ணுறுப்புக்கும் நிறுநீர் பைக்குமிடையே பொத்தல் ஏற்படுவது என்பன ஏற்படலாம்.இவ்வாறு நிகழும் நிலையில் அறுவை மூலம் சரிசெய்ய முயல்லாம். 4 வாரங்கள் உடலுறவு கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்பட வேண்டும். அதன் பின் உடலுறவு கொள்வது பெண்குறி சுவர் ஒட்டிக்கொள்வதை தவிர்க்க உதவும்.

கருப்பை வாய் புற்றும் கருவுற்ற நிலையும்.

நல்ல வேளையாக இது அதிகம் இல்லை. 0.1 % நோயாளிகளே இந்த நிலையில் வருகின்றனர். இதுபோன்ற நிலையில் மருத்துவத்தின் பயன் குறைவாகவேயுள்ளது.இதற்கு முக்கிய காரணம் இயக்குநீரும் அதிகரித்த இரத்த ஓட்டமுமேயாகும். இதனால் புற்று விரைந்து வளர்வதுடன் பிற இடங்களுக்குப் பரவவும் செய்கிறது.கருவுற்ற நிலையே மருத்துவத்திற்கு தடையாகவுள்ளது.அண்மைகாலக் கருத்துப் படி கருவைப் பற்றிக் கவலைபடாமல் முழு கதிர் ஏற்பளவினையும் கொடுத்து தாயைக் காப்பாற்றுவதையே குறியாகக் கொண்டுள்ளது.

கருவுற்ற முதல் ஆறு மாதங்கள் கரு வளரும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.நான்கு வாரங்களுக்கு வரம் 1000 சென்டி கிரே வீதம் மெகா வோல்ட் கதிர் மருத்துவம் நல்ல பலனைக் கொடுக்கிறது.கரு கலைந்து விடும். இதற்கு 4 அல்லது 5 வாரங்கள் ஆகலாம். இதற்குப்பின் அண்மைக் கதிர் மருத்துவம் மேற்கொள்ளலாம்.. ரேடியம்,கோபால்ட்,சீசியம் போன்ற கதிர் தனிமங்கள் பயன்படுத்தப் பட்டன.கருச்சிதைவு ஏற்பட இல்லை எனில் ,கரு அறுவை மூலம் அகற்றப்பட வேண்டும்.

கடைசி 2 அல்லது 3 மாதங்கள் உள்ள நிலையில் நோயாளி கருப்பை புற்றுடன் வந்தால் , கரு நல்லநிலையில் இருக்கும் போது சிசேரியன் அறுவை மூலம் குழந்தை காப்பாக எடுக்கப்படுகிறது.இதனைத் தொடர்ந்து உள்கதிர் மருத்துவம் அல்லது தொலைக் கதிர்மருத்துவம் அல்லது இரண்டுமோ மேற்கொள்ளலாம்.எந்த நிலையிலும் கருச்சிதைவைந் தூண்டக்கூடாது. அவ்வாறு செய்வது பிற இடங்களுக்கு புற்று பரவ வாய்பாய்விடும். இது இறப்பிற்கும் வழிவகுக்கும்.

.'கருப்பைப் புற்றிற்கு தடுப்பு மருத்துவம்'

அண்மை காலத்தில் கருப்பை வாய் புற்றிற்கு கார்டாசில் (Cardasil ) என்னும் தடுப்பு மருந்து உள்ளது.பெண்குழந்தை பூப்பு எய்திய உடன் 3 முறை இந்த தடுப்பு மருந்து சில மாதங்களுக்குள் போடப் படுகிறது.இம்மருந்து HPV 16 மற்றும் 18 வகை வைரசினை அழிக்கிறது.நமது நாட்டில் 70% இந்த வைரசால் தான் தோன்றுகின்றன.நமது நாட்டில் வருடந்தோறும் 1,30000 புது கருப்பை புற்றுடன் மருத்துவத்திற்கு வருகின்றனர்.இதில் 74,000 பேர் நோயினால் மரணமடைகின்றனர் என்று மருத்துவத்திற்கான இந்திய ஆராய்ச்சிக் கழகம்( ICMR) தெரிவிக்கிறது.செர்வாரிக்சு ( Cervarix ) என்பதும் கார்டாசில் போன்ற ஒரு தடுப்பு மருந்தாகும்.

பின் ஏற்றும் கருவிகள் (After loading machine ) .

கதிர்மருத்துவம் தொடங்கிந போது ,கதிரியக்க மூலங்கள் முன்னதாகவே குழாய்களிலும் ஓவாய்டுகளிலும் தயார் நிலையில் வைத்திருந்து, அறுவை மருத்துவ அரங்கில் அவைகளை நோயாளியின் பிறப்பு உறுப்பில் சரியாக வைத்து அதன்பின் எக்சு கதிர் படம் எடுக்கப் பட்டது. இப்படத்தின் உதவியிடன் புள்ளிகள் A யிலும் பள்ளி B யிலும் ளற்பளவுகள் கணிக்கப்பட்டன. இமுமுறையில் பணியாளர், மருத்துவர் மற்றும் தொழில் நுட்பனர் என அனைவரும் கதிர் வீச்சுப் புலத்தில் நேரடியாகச் செயல்பட வேண்டியதாக உள்ளது. ஓரளவாவது கதிர் வீச்சினை ஏற்கும் நிலை தவிர்க்க முடியாதது.இதற்காகவே பின்செலுத்தும் கருவி பயன்பாட்டிற்கு வந்தது. உறுதியான துருப்பிடிக்காத ஆனாலும் அதிக காமா கதிர்களை ஏற்றுக் கொள்ளாத கனமுடைய நுனியில் வளைந்தும் மூடியுமிருக்ககும் உருக்குக் குழாய்கள் மயக்க நிலையிலுள்ள நோயாளியின் கருப்பை மற்றும் பெண்ணுறுப்பில் வைக்கப்படுகின்றன.அசையாமல் நிலைபெற்று இருக்கிறது. இந்தநிலையில் கதிர்படம் எடுக்கப்படுகிறது. நோயாளியிடம் செலுத்தப்பட்ட கருவி சரியாக இருப்பதாக மருத்துவர் கருதினால் ,முன்பே எளிதில் வளைந்து கொடுக்கும் பாலித்தீன் குழாய்களில் தயார் நிலையிலுள்ள கதிரியக்கமுடைய ரேடியம் அல்லது கோபால்ட் அல்லது சீசியம் மிகவும் எளிதாக ச் செலுத்தி ,மீண்டும் அவைகள் நகர்ந்து விடாமல் செய்யப்பட்டது. இதற்கு ஆகும் நேரம் மிகவும் குறைவு.மேலும் இதனை மருத்துவரே கைகளால் மேற்கொள்ள வேண்டும் இம்முறை (Manual after loading method ) எனப்படும்.இங்கும் மிகக்குறைந்த அளவு ஏற்பளவினைத் தவிர்க்க முடியாது.இந்த நிலையினைத் தவிர்க்க, தொலைக் கட்டுப்பாட்டு பின்செலுத்தும் கருவி (Automatic remote after loading machine ) இன்று சந்தைப் படுத்தப் படுகின்றன

இம்முறையின் மிகவும் முக்கிய நன்மை என்னவென்றால் ,கதிர் மூலம் ஏதுமில்லாத நிலையில் அச்சமின்றி, கவனமாக மெதுவாக கருவியினை நோயாளியிடம் பொருத்தலாம்.குழாய்கள் சரியாக இல்லை என்று மருத்துவர் கருதினால் அதனை முதலிலேயே சரிசெய்துவிட முடியும். கதிர்படம் எடுக்கும் இடத்திலும் யாருக்கும் கதிர் வீச்சில்லை. அவசரம் அவசரமாக படம் எடுக்க வேண்டியதில்லை.

கதிர் தனிமங்கள் நோயாளியின் எந்த உடலுறுப்புடனும் நேரடியாகத் தொடர்பு கொண்டு, அதனால் உடல் நீரினால் பாதிக்கப்படுவதில்லை.உலோகக் குழாயில் மட்டுமே அவைகளுள்ளன. ஒவ்வொரு முறையும் நச்சு நீக்கம் செய்ய வேண்டுவதில்லை.

இங்கு கதிர் தனிமங்கள் தொலைந்துவிடும் என்ற அச்சம் இல்லை. அவை காப்பாக உள்ளன. இப்படிப்பட்ட கருவிகளின் கூடுதல் நன்மை முழு பாதுகாப்பு ஆகும். மருத்துவத்தின் போதுநோயாளியினை அவசரமாக கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் ,கட்டுப்பாட்டுக் கேந்திரத்திலிருந்து கருவியினை இயக்கி கதிர் மூலங்களை மட்டும் அகற்றி விட்டு ,நோயாளியினை கவனிக்கலாம். இப்பணி முடிந்ததும் மறுபடியும் கதிர் தனிமங்களை அதன் இடத்தில் வைக்கலாம்.

இன்று பொதுவாக தொலைக்கட்டுப்பாட்டுக் கருவிகள் எல்லாம் அதிக,உயர் கதிரியக்கமுடைய மூலகங்களுடன் சந்தைப் படுத்தப்படுகின்றன(High dose rate ). இப்படிப்பட்ட கருவிகளுடன் சில நிமிடங்களில் போதிய ஏற்பளவினைக் கொடுக்கமுடியும்.முன்புபோல் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நோயாளி தனித்திருக்க வேண்டியதில்லை. இது நோயாளினைப் பொருத்தமட்டில் மிகுந்த மன நிறைவைக் கொடுக்கிறது.புறநோயாளியாகவே மருத்துவம் பெறலாகும் இதனால் செலவு குறையும். இக்கருவிகளில் கோபால்ட் 60 மற்றும் இருடியம் 192 பயனாகிறது.கியூரிட்ரான், மைக்ரோ செலக்ட்ரான்,பூக்ளர் போன்ற கருவிகள் உள்ளன. சில கருவிகளில் ஒரே சமயத்தில் இரு நோயாளிகளுக்கு மருத்துவம் மேற்கொள்ளமுடியும்.

இப்படிப்பட்ட கருவிகள் கருப்பை வாய் புற்றிற்கு மட்டுமல்லாமல் பிற இடங்களிலும் பயன்படுகிறது

BARC notes