உள்ளடக்கத்துக்குச் செல்

கரிமத்தை சேகரித்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வளிமண்டலத்தில் வாயுநிலையில் வெளியிடப்படும் கரியமில வாயுவைப் பிரித்துச் சேமித்து வளிமண்டலத்தில் கரியமிலவாயுவால் தோன்றும் காலநிலை மாற்றம் போன்ற சிக்கல்களை எதிர்கொள்ளக் கார்பன் அகற்றம் (Carbon Sequestration) என்ற இந்த நுட்பம் பயன்படுகிறது.

உலகம் வெப்பமாவதைத் தடுக்க அனல் மின் நிலையங்கள், தொழிற்சாலைகள், சில இடங்களில் நேரடியாக வளிமண்டலத்திலிருந்தும் கரியமிலவாயுவைப் பிரித்து அடியாழத்தில் சேமிக்கப்படுகிறது. இதனால், வளிமண்டலத்தில் ஏற்படும் பசுமை இல்ல விளைவுகளைத் தவிர்க்கலாம்.

நீண்டகாலத்துக்குக் கரியமிலவாயுவைச் சேமித்து வைப்பதன்மூலம் உலகம் வெப்பமயமாவதைத் தாமதிக்கலாம்.

கார்பன் உறிஞ்சிகள்

[தொகு]

கார்பனை உறிஞ்சிக்கொள்ளும் இடங்களில் கரியமிலவாயுவைச் செலுத்துவதன் மூலம் கார்பனைப் பிரித்துச் சேமிக்கலாம். இவ்வாறு உறிஞ்சிக்கொள்ளும் பொருட்கள் "கார்பன் உறிஞ்சிகள்" (Carbon sinks) எனப்படும். இவை இருவகைப்படும்:-

  1. இயற்கை உறிஞ்சிகள் - பெருங்கடல்கள், காடுகள், மண்
  2. செயற்கை உறிஞ்சிகள் - கைவிடப்பட்ட எண்ணெய் கிணறுகள், அகழ இயலாச் சுரங்கங்கள்

கார்பன் அகற்றல் நுட்பம் புதியதல்ல. எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிலில் உற்பத்தித் திறனைக் கூட்டுவதற்குக் கார்பன் அகற்றும்முறை நடைமுறையில் இருந்துவந்தது. சுற்றுச்சூழல் காரணங்களுக்காகக் கார்பன் அகற்றும்முறை இப்பொழுது அறிமுகமாகியுள்ளது.

படிநிலை

[தொகு]

கார்பன் அகற்றுதலில் மூன்று படிநிலைகள் பின்பற்றப்படுகின்றன.

1. பிறவாயுக்களிலிருந்து கரியமிலவாயுவைப் பிரித்தல்.

2. பிரிக்கப்பட்ட வாயுவைச் சேமிப்பிடத்துக்குக் கொண்டு செல்லுதல்.

3. கரியமிலவாயுவை வளிமண்டலத்தில் கலக்காத வண்ணம் பூமிக்கடியிலோ அல்லது கடலடியிலோ புதைத்தல்.

காரிமத்தை சேகரிக்கும் முறைகள்

[தொகு]

கார்பன் அகற்றல் நுட்பங்களாகப் பல்வேறு புதிய முறைகள் ஆய்வுசெய்யப்பட்டு வருகின்றன. அவற்றில் முக்கியமானவை வருமாறு.

ஆழ்கடல் சேகரிப்பு

[தொகு]

ஆழ்கடல்களில் நேரடியாகச் செலுத்துவதன்மூலமோ அல்லது உரமூட்டல் (fertilization) வழியாகவோ கார்பனை அகற்றலாம். இம்முறை ஆழ்கடல் அகற்றம் (Ocean Seqestration) எனப்படுகிறது.

நில சேகரிப்பு

[தொகு]

மண்ணிலும் தாவரங்களிலும் மிகப்பெரும் அளவுக்குக் கரியமிலவாயு பிடிக்கப்பட்டுள்ளது. ஒளிச்சேர்க்கையை அதிகப்படுத்துவதன்மூலம் கார்பனை அதிகமாக உறிஞ்சலாம். தாவர உடலங்கள் போன்ற அங்ககக் கரிமப் பொருட்களை மெதுவாகச் சிதைவடையச் செய்வதன்மூலமும் கார்பனை நிலைப்படுத்தலாம். நிலப்பயன்பாட்டு முறையை மாற்றியமைப்பதன் வழியாகவும் கார்பனை இயற்கையாக உறிஞ்சலாம். இம்முறை நில அகற்றம் (Terrestrial Sequestration) எனப்படுகிறது.

நிலவியல் சேகரிப்பு

[தொகு]

பாறைகளில் உள்ள இயற்கையான துளைகள் மற்றும் இடைவெளிகளில் கரியமிலவாயுவைச் செலுத்தி வெளியேறமுடியாமல் தடுத்து நிலைப்படுத்தலாம். இம்முறை நிலவியல் அகற்றம் (Geological Sequestration) எனப்படுகிறது.வருங்காலங்களில் இந்தமுறைமூலம் மிக அதிக அளவு கரியமிலவாயுவைப் பிரித்துச் சேமிக்கமுடியும் என்று ஆய்வறிஞர்கள் கூறுகின்றனர்.

நிலவியல் பிடித்தல் நுட்பங்கள்

[தொகு]

நிலவியல் பிடித்தல் நுட்பங்கள் (Gelogical trapping mechanisms).

நீரியக்கப் பிடித்தல்
[தொகு]

மேல்மட்டத்தில் வாயு ஊடுறுவாத பாறைகளுக்குக் கீழ் கரியமிலவாயுவைச் சேமிக்கலாம். இம்முறை நீரியக்கபிடித்தல் (Hydrodynamic trapping) எனப்படுகிறது. இப்பொழுது இயற்கை எரிவாயு இம்முறையில் சேமிக்கப்படுகிறது.

கரைத்துப் பிடித்தல்
[தொகு]

நீர், எண்ணெய் போன்ற பொருட்களில் கரியமிலவாயு கரையும். அதன்மூலம் இதைப்பிடிக்கலாம். இம்முறை கரைத்துப்பிடித்தல் (Solubility trapping) எனப்படுகிறது.

கனிமமாக்கிப் பிடித்தல்
[தொகு]

கரியமிலவாயு புவியில் உள்ள கனிமங்கள் மற்றும் திரவங்களிலுடன் வினைபட்டு நிலையான கார்பன் சேர்மங்கள் உருவாகின்றன. பொதுவாகக் கால்சியம், இரும்பு, மெக்னீசியம் கார்பனேட்டுகளாக இவை சேமிக்கப்படும். இம்முறை கனிமமாக்கிப் பிடித்தல் (Mineral Carbonation) எனப்படுகிறது.

நீரியக்கப் பிடித்தல், கரைத்துப்பிடித்தல் முறைகளில் கார்பன் அகற்றம் நடைபெறுகின்றது. இவையிரண்டையும் ஒன்றாகப் பயன்படுத்தினால் சிறந்த பலன் கிடைக்கிறது.

தொடர்புடைய கட்டுரைகள்

[தொகு]

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிமத்தை_சேகரித்தல்&oldid=3374359" இலிருந்து மீள்விக்கப்பட்டது