கரிமச் சேர்மங்களைத் தூய்மைப்படுத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோஃகுலெட்டுப் பிரித்தெடுப்பானின் (Soxhlet extractor) கருத்துப்படம்.
1: கலக்குத் துண்டு 2: குடுவை (இந்தக் குடுவை அதிகமாக அளவு நிரப்ப்படக்கூடாது. இதில் உள்ள கரைப்பான் சோஃகுலெட்டு அறையின் கொள்ளளவைப் போல் 3-4 மடங்கு இருக்கவேண்டும் 3: வடிகட்டி ஒழுகுவழி 4: நடுக்குழல் (Thimble) 5: திண்மம் 6: இறைபி மேல்வாய் (Siphon top) 7: இறைபி வடிவாய் (Siphon exit) 8: விரிவடைவி 9: குளிர்வி (Condenser) 10: குளிர்விநீர் நுழைவாய் 11: குளிர்விநீர் வடிவாய்
சோஃகுலெட்டுப் பிரித்தெடுப்பான் துணைக்கருவியின் இயக்கத்தைக் காட்டும் அசைபடம்

கரிமச் சேர்மங்களைத் தூய்மைப்படுத்துதல் மற்றும் பிரித்தெடுத்தல் ஆகியன முக்கியமான வேதிப் பொறியியல் பணிகள் ஆகும்.

கரிமச் சேர்மங்களில் பெரும்பாலானவை இயற்கையென்ற ஒரே மூலத்தில் இருந்தே கிடைக்கின்றன. அவற்றில் பலவும் ஏறத்தாழ ஒரே மாதிரியான இயற்பியல் பண்புகளும் வேதியியல் பண்புகளும் கொண்டுள்ளன. கரிமச் சேர்மங்களை வெப்பப்படுத்தும் போது அதிக எண்ணிக்கையிலான கரிமச் சேர்மங்கள் எளிய சேர்மங்களாக மாற்றமடைகின்றன. சில கரிமச் சேர்மங்கள் வேதியியல் காரணிகளால் எளிதில் பாதிக்கப்படுகின்றன. சில கரிமச் சேர்மங்கள் உலகளாவிய கரைப்பானாகிய நீரில் கூடக் கரையாமல் எதிர்த்து நிற்கின்றன. எனவே தூய்மையான கரிமச் சேர்மங்களை அவை கிடைக்கும் மூலத்திலிருந்து பிரித்தெடுத்துத் தூய்மையாக்க வேண்டுமெனில், மிகவும் விரிவான செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டும். தூய்மைப்படுத்த வேண்டிய கரிமச்சேர்மத்தின் பண்புகளையும் அச்சேர்மத்தில் கலந்துள்ள அசுத்தங்களையும் அடிப்படையாகக் கொண்டே தூய்மைப் படுத்தும் செயல்முறைகளைத் தேர்ந்தெடுக்க இயலும்.

இயற்கையாகக் கிடைக்கும் கரிமச் சேர்மங்களாயிருந்தாலும் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட கரிமச் சேர்மங்களாயிருந்தாலும் அவற்றைப் பண்புகளின் அடிப்படையில் தனிமைப்படுத்துதலும் வேதியியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தி ஆராய்வதும் மிக அவசியமாகின்றது. இச்செயல்களுக்காகப் பயன்படும் கரிமச் சேர்மங்கள் தூய்மையான நிலையில் பெறப்பட்டவையாக இருந்தால் தான் அவற்றை அளவை அல்லது தரப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தி மேற்கண்ட ஆய்வுகளை நிகழ்த்தவியலும். சந்தைகளில் விற்கப்படும் அனைத்துக் கரிமச் சேர்மங்கள், மருந்துகளும், பலவிதமான பயன்பாட்டுப் பொருட்கள் யாவையும் கண்டிப்பாக மீத்தூய்மை கொண்டவையாக இருக்க வேண்டும். எனவே கரிமச் சேர்மங்களைத் தூய்மைப்படுத்துவது சிக்கலான செயல்பாடாக இருந்தாலும் இது தவிர்க்க முடியாததும் இன்றியமையாததும் ஆகும்.

கரிமச் சேர்மங்களைப் பிரித்தெடுத்தல்[தொகு]

சில கரிமச் சேர்மங்கள் தாவரங்களிலும் பூக்களிலும் காணப்படுகின்றன. சேர்மங்கள் காணப்படும் சேர்ம மூலங்களை உரிய கரைப்பான்கள் சேர்த்துச் சாக்ஃசுலெட் ஆய்வகக் கருவியமைப்பில் வைத்துச் சூடாக்குவதன் மூலம் பிரித்தெடுக்க முடியும். இவ்வாறே ஆல்கலாய்டுகள், பூக்கள் மற்றும் இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் சில அத்தியாவசியமான எண்ணெய்கள் மற்றும் சில வேர்களில் உள்ள கரையும் பொருள்கள் முதலியவற்றையும் எளிதாகப் பிரித்தெடுக்க முடியும். மூலங்களில் உள்ள கரையக்கூடிய பொருள்களை திரவக்கரைப்பானில் கரைத்து எளிதான அல்லது படிப்படியான படிகமாக்கலின் வழியாகவும் பிரித்தெடுக்கலாம்.

சாக்ஃசுலெட்டு ஆய்வகக் கருவி[தொகு]

சாக்ஃசுலெட்டு (Soxhlet) என்னும் எளிய ஆய்வகக் கருவி[1] 1879 ஆம் ஆண்டு பிரான்சு ஃபான் சாக்ஃசுலெட்டு ( Franz von Soxhlet)[2] என்பவரால் உருவாக்கப்பட்டது. திடப்பொருள்களில் உள்ள கொழுப்பு வகைப் பொருட்களைக் கரைத்துப் பிரிப்பதெற்கென்றே ஆரம்ப காலத்தில் வடிவமைக்கப் பட்டதெனினும் இக்கருவியின் எல்லை கொழுப்பு வகைப் பொருட்களைக் கரைத்துப் பிரிப்பதோடு முற்றுப்பெறவில்லை. பொதுவாக, கரைதிறனைக் கொண்டு சேர்மத்தில் உள்ள அசுத்தங்கள் கரைப்பானில் கரையாமல் உள்ளபோது சாக்ஸ்லெட் ஆய்வகக் கருவியினைப் பயன்படுத்தி வடிகட்டல் மூலமாகச் சேர்மத்தைப் பிரித்தெடுக்க இயலும். பிரித்தெடுக்கப்பட வேண்டிய ஒரு சேர்மம் கரைப்பானில் முழுமையாக கரையும் திறனைக் கொண்டிருக்குமேயானால் அச்சேர்மத்தைக் கரையாத மாசுக்களில் இருந்து பிரித்தெடுக்கச் சாதாரான வடிகட்டல் முறையைப் பயன்படுத்தலாம்.

இடது புறத்தில் பக்கக் குழாய் கொண்டு வலது புறத்தில் மெல்லிய வடிகுழாயும் உச்சியில் வடிகலனும் இணைந்த ஒர் அகன்ற குழாய்தான் சாக்ஸ்லெட் ஆய்வகக் கருவி. இக்கருவியின் பிரதான அகன்ற அறையில் ஓர் விரற்புட்டி பொருத்தப்பட்டிருக்கும். மேற்கண்ட அகன்ற குழாய் வடிகட்டும் கரைப்பான் வைக்கப்பட்டுள்ள ஒரு குடுவையுடன் பொருத்தப்பட்டால் சாக்ஸ்லெட் ஆய்வகக் கருவி கரிமச்சேர்மங்களைக் கரைத்துப் பிரிக்கும் கருவியாகச் செயல்படத் தயாராகிவிடுகிறது.

பிரித்தெடுக்கப்படவேண்டிய கரிமச்சேர்மம் கலந்துள்ள திண்ம மூலப்பொருள், சாக்ஸ்லெட் ஆய்வகக் கருவியின் பிரதான அறையில் வைக்கப்பட்டுள்ள கனமான வடிதாளால் உருவாக்கப்பட்ட விரற்புட்டியில் இடப்படுகிறது.

கரிமச் சேர்மத்தைப் பிரித்தெடுக்கும்போது குடுவையிலுள்ள கரைப்பான் ஆவியாகுமாறு நன்றாகச் சூடுபடுத்தப்பட வேண்டும். இதனால் உருவான கரைப்பானின் ஆவி மேல்நோக்கிப் பக்கக்குழாயின் வழியாகப் பயணித்து உச்சியிலுள்ள வடிகலனுக்கு வந்து சேர்கிறது. இங்கு வந்துசேரும் கரைப்பானின் ஆவி, குளிர்ந்த நீரினால் குளிர்விக்கப்பட்டுச் சிறிதுசிறிதாகக் கருவியின் பிரதான அறைக்குள் உள்ள திண்மப்பொருள் இருக்குமிடத்திற்கு அனுப்பப்படுகிறது. இவ்வாறான தொடர் நிகழ்வால் கருவியின் பிரதான அறைக்குள் சூடான கரைப்பான் மெல்லப் படிப்படியாக நிரம்புகிறது. சாக்ஸ்லெட் ஆய்வகக் கருவியின் பிரதான அறை நிரம்பியதும் விரற்புட்டியில் உள்ள கரிமச்சேர்மம் சூடான கரைப்பானில் கரைந்து வடித்தல் பாதைவழியாகக் கீழேயுள்ள குடுவைக்குள் மீண்டும் வந்து சேகரமாகிறது. கரைப்பானின் வேகமான பாய்ச்சலில் திண்ம மூலப்பொருளேதும் கீழே சென்றுவிடாமலிருக்க விரற்புட்டி உதவுகிறது. இச்சுழற்சி முறை பல மணிநேரங்கள் அல்லது பல நாட்களுக்கும் கூட அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு பிரிக்கப்பட்ட கரிமச்சேர்மம் பின்னர் திண்மப்பொருளாகப் படிகமாக்கப்படுகிறது.

படிகமாக்கல்[தொகு]

கரிமச்சேர்மங்களை தூய்மையாக்கும் முறைகளில் படிகமாக்கல் என்பது மிகமுக்கியமான முறையாகும். தற்பொழுது அறியப்பட்டுள்ள பரந்த எண்ணிக்கையிலான கரிமச்சேர்மங்களில் பெரும்பாலானவை படிகமாக்கல் முறையில் தூய்மைப் படுத்தப்படுகின்றன படிகமாக்கல் என்பது சேர்மத்தின் கரைசலில் இருந்து சேர்மத்தை படிகங்களாக வீழ்படிவாக்கி சேர்மத்துடன் கலந்துள்ள மாசுக்களை நீக்கும் முறையாகும். இம்முறையில் முதலில் சூடான தேர்ந்தெடுக்கப்பட்ட கரைப்பானில் சேர்மம் கரைக்கப்படுகிறது. பின்னர் சேர்மத்தின் அடர்கரைசல் குளிர்விக்க அனுமதிக்கப்பட்டு சேர்மம் படிப்படியாக படிகமாக்கப்படுகிறது. இவ்வாறு உண்டான படிகங்களை வடிகட்டல் முறையில் பிரித்தெடுத்து குளிர்ந்த கரைப்பானால் மீண்டுமொருமுறை கழுவி எஞ்சிய படிந்திருக்கும் மாசுக்களையும் நீக்கியபின் நன்றாக உலர்த்தப்பட்டு தூய்மையான படிகங்கள் தயாரிக்கப்படுகின்றன.

கரிம சேர்மங்களை எவ்வாறு படிகமாக்கலாம் என்பதற்கான ஒரு விரிவான படிப்படியான வழிகாட்டு முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு நல்ல காற்றோட்டமான வசதியுள்ள கட்டுப்படுத்தப்பட்ட வேதியியல் ஆய்வகத்தில் இம்முறையை சிறப்பாகச் செயல்படுத்த முடியும். சர்க்கரை உற்பத்தியில் படிகமாக்கல் முறை மூலம் சர்க்கரையை தூய்மையாக்கும் நடைமுறை வ்ர்த்தகரீதியாகப் ப்ல்வேறு பயன்பாட்டு சாத்தியங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக படிகமாக்கலில் கீழ்கண்ட நான்கு படிகள் மேற்கொள்ளப்படுகிறது. 1.திடப்பொருளை சரியான கரைப்பானில் கரைத்து கரைசல் தயாரித்தல். 2.சூடான கரைசலை வடிகட்டுதல் 3.வடிநீரை குளிரவைத்துப் படிகமாக்குதல் 4.படிகங்களை பிரித்தெடுத்து கூளிரவைத்தல்.

பொருத்தமான கரைப்பானை தேர்வு செய்தல்[தொகு]

ஒரு சிறந்த கரைப்பான் பின்வரும் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.

1.கரைப்பானை வெப்பப்படுத்தும்போது அது சேர்ம திடப்பொருளைக் கரைக்கக் கூடியதாகவும் குளிர்ந்த நிலையில் கரைக்காமலும் இருக்கவேண்டும். 2.கரைப்பான் சேர்மத்தில் கலந்துள்ள அசுத்தங்களை முழுமையாக கரைக்கக் கூடியதாக இருக்கக்கூடாது. (சேர்மம் கரைந்திருக்கும் போது அசுத்தங்களை வடிகட்டல் முறையில் பிரித்தெடுக்கலாம்) அல்லது முழுமையாக கரைக்கக் கூடியதாக இருக்கவேண்டும். (அசுத்தங்கள் கரைப்பானில் கரைந்து கரைசலில் தங்கியிருந்தால் சேர்மத்தை படிகமாக்கும்போது அசுத்தங்களைப் பிரித்துவிடலாம்.) 3.கரைப்பான் சேர்மத்துடன் சேர்ந்து வினைபுரியாததாக இருக்க வேண்டும். 4.கரைப்பான் எரியக்கூடியதாக இருக்கக்கூடாது. 5.கரைப்பான் நச்சுத்தன்மை அற்றதாக இருக்கவேண்டும். 6.கரைப்பான் மலிவாகக் கிடைக்கக் கூடியதாக இருக்கவேண்டும். 7.கரைப்பான் விரைந்து ஆவியாகும் தன்மை கொண்டிருக்க வேண்டும். ( படிகத்திலிருந்து பிரிப்பது எளிதாக இருக்கும்)

மேற்கண்ட காரணங்களால் சிறந்த கரைப்பானைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது மிகவும் கடினமான செயலாக உள்ளது. பெரும்பாலும் பரிசோதனைகளின் அடிப்படையில் பொருத்தமான கரைப்பான்கள் தேர்வுசெயயப்படுகின்றன அல்லது சிக்கலேதுமின்றி மின்சுமையற்ற கரைப்பான்கள் (பென்சீன்,டொலுயீன்) தேர்வுசெய்யப்பட்டு படிகமாக்கலில் பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே நாம் மின்சுமை அதிகமுள்ள கரைப்பான்கள் தொடங்கி மின்சுமை குறைவாக உள்ள கரைப்பான்கள் வரையிலான பட்டியலைத் தெரிந்து தெளிய வேண்டியது அவசியமாகிறது.

கரைப்பான்கள்[தொகு]

நீர் எரியும் தன்மையற்ற, நச்சுத்தன்மையில்லாத மலிவாகக் கிடைக்கக்கூடிய ஒரு கரைப்பான். அதிக எண்ணிக்கையிலான மின்சுமை பண்புள்ள கரிமசேர்மங்களை இக்கரைப்பான் கரைக்கவல்லது. இதன் கொதிநிலை 100 டிகிரி செல்சியஸ் என்பதால் எளிதில் ஆவியாகும் தன்மையற்றதாகவும் படிகத்திலிருந்து எளிதில் பிரிக்க இய்லாததாகவும் உள்ளது.

இக்கரைப்பான் ஆக்சிஜனேற்ற வினைகளுக்கு உபயோகமுள்ளதாகவும் ஆல்கஹால்கள் மற்றும் அமைன்களுடன் வினைபுரியக்கூடியதாகவும் இருக்கிறது. இக்கரைப்பானின் கொதிநிலை 118 டிகிரி செல்சியஸ் என்பதால் எளிதில் ஆவியாகும் தன்மையற்று படிகத்திலிருந்து எளிதில் பிரிக்க இயலாததாகவும் உள்ளது.

இக்கரைப்பான் பிரதானமாக வினைகளுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. அரிதாகவே படிகமாக்கலுக்கு பயனாகிறது.

மெத்தனால் அல்லது மீத்தைல் ஆல்ககால் (CH3OH) :-

இக்கரைப்பான் மற்ற ஆல்கஹால்களைக் காட்டிலும் உயர் மின்சுமை கொண்ட சேர்மங்களை கரைக்க வல்லது.

அசிட்டோன் (CH3COCH3):-

அசிட்டோன் ஒரு சிறந்த கரைப்பான் ஆகும். ஆனால் இதன் கொதிநிலை 56 பாகை செல்சியசு என்பது மிகவும் குறைவானதாகும். இக்குறைவான கொதிநிலையும் அறைவெப்ப நிலையும் சேர்மத்தின் கரைதிறனை பாதிக்கின்றன.

  • மீத்தைல் ஈத்தைல் கீட்டோன் அல்லது 2 பியூட்டனோன் (CH3COCH2CH3)

இக்கரைப்பானின் கொதிநிலை 80 டிகிரி செல்சியஸ் என்பதால் இது ஒரு சிறந்த கரைப்பானாகும்.

இக்கரைப்பானின் கொதிநிலை 78 பாகை செல்சியசு என்பதால் இது ஒரு சிறந்த கரைப்பானாகும்.

ஒரு கரைப்பானாக இது உபயோகப்பட்டலும் இதன் கொதிநிலை 35 டிகிரி செல்சியஸ். குறைவான கொதிநிலை கொண்டிருப்பதால் இக்கரைப்பான் ஒரு சிறந்த படிகமாக்கும் கரைப்பானாக செயல்படாது.

இது ஒரு பயனுள்ள கரைப்பான் என்றாலும் இதன் கொதிநிலை 40 பாகை செல்சியசு ஆக இருப்பதால் இக்கரைப்பான் ஒரு நல்ல படிகமாக்கும் கரைப்பானாக இருக்காது.

இது மலிவாக கிடைக்கும் கரைப்பான். இதன் கொதிநிலை 52 டிகிரி செல்சியஸ் என்பதால் டைஈத்தைல் ஈத்தருக்கு மாற்றாக இக்கரைப்பானை உபயோகிக்கலாம்.

  • டை-ஆக்சேன் (C4H8O2)

படிகத்திலிருந்து இக்கரைப்பானை பிரித்தெடுப்பது எளிது. இதனுடைய கொதிநிலை 101 டிகிரி செல்சியஸ். பெர்ராக்சைடுகளும் இலேசான் புற்றுநோயும் இக்கரைப்பானால் தோன்ற வாய்ப்பு உண்டு.

பென்சீனுக்கு மாற்றாக உபயொக்மாகும் இக்கரைப்பான் படிகமாக்கலுக்கு மிகச்சிறந்த கரைப்பான் ஆகும். ஆனால் இக்கரைப்பானின் கொதிநிலையும் 111 டிகிரி செல்சியஸ் என்பதால் படிகத்திலிருந்து பிரித்தெடுப்பது கடினமாக இருக்கும்.

பரவலாக மின்சுமை துருவங்களற்ற சேர்மங்களைப் படிகமாக்க் இக்கரைப்பானை பயன்படுத்துவார்கள். அடிக்கடி இக்கரைப்பான் மற்ற கரைப்பான்களுக்கு இணைப்புக் கரைப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது.

பரவலாக மின்சுமை துருவங்களற்ற சேர்மங்களைப் படிகமாக்க் இக்கரைப்பானை பயன்படுத்துவார்கள். வினைபுரிவதில் மந்தமாக இருப்பதால் மற்ற கரைப்பான்களுக்கு இணைப்புக் கரைப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது. இக்கரைப்பானின் கொதிநிலை 69 டிகிரி செல்சியஸ்.

மலிவாகக் கிடைக்கும் இக்கரைப்பான் ஹெக்சேனின் பண்புகளை ஒத்திருக்கும். இக்கரைப்பானின் கொதிநிலை 81 டிகிரி செல்சியஸ். கரைப்பானைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள்:

  • அசுத்தமான சேர்மத்தின் ஒரு சில படிகங்களை சோதனை குழாயிலிட்டு ஒரு சொட்டு கரைப்பானை குழாயின் பக்கச்சுவர் வழியாகக் கீழே செல்லுமாறு சேர்க்கவேண்டும்.
  • படிகங்கள் அறை வெப்பநிலையில் உடனடியாக கரைந்துவிட்டது என்றால் குழாயில் சேர்த்த கரைப்பானை தேர்ந்தெடுக்கக் கூடாது. ஏனெனில் குறைவான வெப்பநிலையில் அதிக அள்விளான சேர்மம் கரையாமல் நின்றுவிடலாம். ஆகையால் மற்றொரு கரைப்பானை முயற்சி செய்யலாம்.
  • படிகங்கள் அறை வெப்பநிலையில் கரையவில்லையென்றால் , சூடான மணல் மீது வைத்து சோதனைக் குழாயை சூடேற்றி படிகங்களை கண்காணிக்க வேண்டும். அப்பொழுதும் படிகங்கள் கரையவில்லையென்றால் மீண்டும் ஒரு துளி கரைப்பானைச் சேர்க்கவேண்டும். கரைப்பானின் கொதிநிலையில் சேர்மப்படிகம் கரைந்து மீண்டும் அறைவெப்பநிலைக்கு திரும்பும்போது குழாயில் உள்ள கரைசல் மீண்டும் படிகமாக மாறினால் நமக்கு ஒரு சரியான கரைப்பான் கிடைத்துவிட்டது என்று பொருள். இல்லை என்றால் மற்றொரு கரைப்பானை முயற்சி செய்யவேண்டும்.
  • மேற்கண்ட முயன்று கற்றல் மூறையில் எந்த ஒரு கரைப்பானையும் திருப்தியாக தேர்வுசெய்ய முடியவில்லை என்றால், இணைக் கரைப்பான் ஒன்றைப் பயன்படுத்தி முயற்சிக்கலாம்.( எந்த கரைப்பானில் சேர்மம் உடனடியாகக் கரைகிறதோ அந்தக்கரைப்பான் ). சோதனைக் குழாய்க்குள் மேகமூட்டமாய்த் தோன்றும்வரை குறைவான கரைக்கும் திறன் கொண்ட கரைப்பானைத் துளித்துளியாக சூடான சேர்மக் கரைசலில் விடவேண்டும். இரண்டு கரைப்பான்களும் கண்டிப்பாக இரண்டறக் கலக்கும் இயல்புடையனவாக இருக்க வேண்டும். .

சில பயனுள்ள கரைப்பான் இரட்டைகள்:- அசிட்டிக் அமிலம் - தண்ணீர், எத்தனால் - தண்ணீர், அசிட்டோன் - தண்ணீர்,, டைஆக்சேன் - தண்ணீர், அசிட்டோன்-எத்தனால், எத்தனால் - டை ஈத்தைல் ஈத்தர் மெத்தனால் – 2பியூட்டனோன், ஈத்தைல் அசிடேட் – சைக்ளோ ஹெக்சேன், அசிட்டோன் - லைக்குரோயின், எத்தில் அசிடேட் - லைக்குரோயின், டைஈத்தைல் ஈத்தர் - லைக்குரோயின், டைகுளோரோ மீத்தேன் - லைக்குரோயின், டொலுயீன் – லைக்குரோயின் (ஹெக்சேனின் பண்பு கொண்ட நிறைவுற்ற ஹைட்ரோ கார்பனின் கலவை )

கரைசலைத் தயாரித்தல்[தொகு]

முதலில் தூய்மையில்லாத சேர்மத்தை ஒர் ஆய்வுக்குழாயில் இட்டு சேர்மம் எளிதில் கரைவதற்கு ஏதுவாக கலக்கும் தண்டினால் சேர்மத்தை தூளாக்கிக் கொள்ளவேண்டும். மேற்கண்ட கரைப்பான்களில் இருந்து ஒரு சரியான கரைப்பானைத் தேர்ந்தெடுத்து குழாய்க்குள் கரைப்பானை சொட்டுச் சொட்டாக சேர்க்கவேண்டும். கரைப்பானில் கரையாத திடமாசுக்கள் இருந்தால் கூடுதல் கரைப்பானை குழாய்க்குள் சேர்த்து உருவான நீர்த்தக் கரைசலை சாதாரண அறை வெப்பநிலையில் வடிகட்டி திடமாசுக்கள் நீக்கப்படுகின்றன. பிறகு கரைப்பான் ஆவியாக்கல் முறையில் பிரிக்கப்படுகிறது. கரைசலை சூடாக்கும் போது கரைப்பான் கொதிக்காமலேயே அதன் கொதிநிலையைத் தாண்டி வெப்பமடைவதை தவிர்க்க கரைசல் உள்ள குழாய்க்குள் மரத்தாலான ஒரு தண்டை வைக்கவேண்டும். இம்மரத்தண்டிலுள்ள காற்று வெளியேறி கரைசலை கொதிக்கச் செய்து அதிவெப்பப்படுத்தலை த்விர்க்கச்செய்கிறது. மரத்தண்டிற்கு மாற்றாக நுண்துளைகளுடைய பீங்கான் கொதிகலன்களையும் பயன்படுத்தலாம்.திடமாசுக்கள் நீக்கப்பட்டபிறகு கரைப்பான் ஆவியாக்கப்படுகிறது. குழாய்க்குள் கரைப்பானை சொட்டு சொட்டாக மீண்டும் சேர்த்து ஒரு கண்ணாடித்தண்டினால் படிகங்களை நன்றாக கலக்கவேண்டும். சேர்மம் முழுவதுமாக கரையும்வரை குழாயை நீராவி மூலமாகவோ வெப்பமான மணலில் வைத்தோ சூடாக்கவேண்டும்.

கரைசலின் நிறம் நீக்கல்[தொகு]

நிறமற்ற கரைசல் மற்றும் இளமஞ்சள் நிற கரைசல் தவிர்த்த பிறநிறங்களைக் கொண்ட கரைசல்கள் தயாரிக்கப்பட்டிருந்தால், கரைசலுடன் மிகையான கரைப்பானும் கரித்துகள்களும் சேர்த்து சிலநிமிடங்களுக்கு கொதிக்கவிட வேண்டும். வண்ணமாசுக்கள் கரித்துகள்களின் மேற்பரப்பிலுள்ள நுண்துளைகளால் ஈர்க்கப்பட்டு கரைசலின் நிறம் நீக்கப்படுகிறது. பின்னர் கரித்துகள்கள் வண்ணமாசுக்களுடன் பிரித்தெடுக்கப்பட்டு வடிகட்டப்படுகின்றன.

வடிகட்டல் முறையில் கரைசலில் உள்ள திடமாசுக்களை நீக்குதல்[தொகு]

ஈர்ப்பு வடிகட்டல், தெளிய வைத்தல் அல்லது பிப்பெட் என்னும் உறிஞ்சிக்குழாயைப் பயன்படுத்தி கரைசலில் உள்ள திடமாசுக்களை நீக்கலாம். பொதுவாக வெற்றிட வடிகட்டல் முறையை இங்கு பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் வடிகட்டலின் போதே கரைப்பான் குளிர்ச்சியடைந்து வடிகலனில் சேர்மம் படிகமாகத் தொடங்கிவிடுகிறது.

ஈர்ப்பு வடிகட்டல்[தொகு]

ஈர்ப்பு வடிகட்டல் முறையில் நுண் மரக்கரி, துகள்கள், மெல்லிய பஞ்சு போன்ற மாசுக்களை அகற்றலாம். மூன்று கூம்பு வடிவக் குடுவைகளைக் எடுத்துக்கொண்டு அவற்றை நீராவி அல்லது சூடான தட்டில் வைத்து சூடாக்க வேண்டும். முதல் குடுவையில் வடிகட்ட வேண்டிய கரைசலும் இரண்டாவது குடுவையில் சிறிதளவு கரைப்பான் மற்றும் ஒரு காம்பற்ற புனலும் மூன்றாவது குடுவையில் தாராளமாக படிகக் கரைசலும் எடுத்துக் கொள்ளவேண்டும். வரிப்பள்ளங்களாக மடிக்கப்பட்ட ஒரு வடிதாளை காம்பற்ற புனலுடைய இரண்டாவது கூம்புக்குடுவையில் வைக்கவேண்டும். படிகமாதல் நிகழ்ந்தால் காம்பில் படிகங்கள் நிரம்பி தடங்கல் உண்டாகும் என்ற காரணத்தால் காம்பற்ற புனல் இங்கு உபயோகிக்கப்படுகிறது. முதலாவது கூம்புக்குடுவையில் உள்ள வடிகட்டவேண்டிய கரைசலை வடிதாள் வைக்கப்பட்டுள்ள குடுவையில் ஊற்றவேண்டும். மூன்றாவது கூம்புக்குடுவையில் உள்ள கொதிக்கும் கரைப்பானை வடிதாளின் மீது உருவான படிகத்தின்மீது ஊற்றவேண்டும். மேலும் சூடான கரைப்பானை முதலாவது குடுவையில் ஊற்றி நன்றாக கழுவி அக்கரைசலையும் வடிதாளில் ஊற்றவேண்டும். அதிகமாக ஊற்றப்பட்ட கரைப்பானை கொதிக்க வைத்துப் பிரித்தெடுக்கலாம்.

தெளிய வைத்து இறுத்தல்[தொகு]

சற்று பெரிய அளவு கொண்ட திட அசுத்தங்களை பிரித்தெடுக்க இம்முறை பயன்படுத்தப்படுகிறது. சூடான கரைசலை வெறுமனே குப்பியைச் சாய்த்து ஊற்றுவதன் மூலம் கரையாத திட மாசுக்களை தனித்து விடச்செய்வது தெளிய வைத்து இறுத்தல் முறையாகும். .

பிப்பெட் உறிஞ்சிக்குழாய் மூலம் கரைப்பானைப் பிரித்தல்[தொகு]

திட மாசுக்கள் அதிகமாகவும் கரைப்பான் குறைவாகவும் உள்ள படிகமாக்கல் நிகழ்வில் இம்முறையை பயன்படுத்தலாம். சதுர முனைகொண்ட ஒரு பிப்பெட் உறிஞ்சுக் குழாயை ஆய்வுக்குழாயின் வட்டஅடிப்பகுதியுடன் இணைத்து திடமாசுக்களை அங்கேயே விட்டுவிட்டு திரவக்கரைப்பானை மட்டும் உறிஞ்சி கரைப்பானைத் தனியே பிரித்தெடுக்கலாம்.

தேவையான சேர்மத்தைப் படிகமாக்கல்[தொகு]

மேற்கண்டவழி படிமுறைகளில் வண்ண மாசுக்கள் மற்றும் கரையாத மாசுக்கள் நீக்கப்பட்டப்பிறகு இந்நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. படிகக் கரைசலில் ஒருவேளை அதிகமான கரைப்பான் இடம் பெற்றிருப்பின் கரைசலை மேலும் கொதிக்க வைத்தோ அல்லது மெல்லிய காற்றுக்கற்றையால் கரைசலை ஊதியோ கரைப்பானைப் பிரிக்கலாம். கொதிநிலையில் உள்ள கரைசல் கரைபொருளின் நிறைவுற்ற கரைசலாக இருக்கையில் சூடான கரைசலை மெல்ல மெல்ல அறைவெப்ப நிலைக்கு குளிர்விக்கும் போது படிகமாககல் வினை தொடங்குகிறது. ஆய்வுக்கலனில் உடனடியாக படிகமாதல் நிகழவில்லையென்றால் அந்தக்கரைசலில் ஒரு சிறிய மூலப்படிகத்தை சேர்ப்பதன்மூலமாக படிகமாதலை தூண்டலாம் அல்லது ஆய்வுக்கலனின் பக்கங்களை கண்ணாடித்துண்டு வைத்து மெல்ல சுரண்டலாம். படிகமாதல் துவங்கியவுடன் ஆய்வுக்கலனை அசைத்து இடையூறு செய்யாமல் இருந்தால் அளவில் பெரிய படிகங்கள் உருவாகும். காகிதம் அல்லது பஞ்சை ஆய்வுக்கலனைச் சுற்றிப் போர்வையாக்கி கரைசலை படிப்படியாக மெல்ல குளிர்விப்பதன் மூலம் அளவில் பெரிய பெரிய படிகங்களைத் தோற்றுவிக்கலாம். பொதுவாக அளவில் பெரிய படிகங்களையே மாசுக்களிடமிருந்து எளிதாக பிரிக்கவியலும். ஆய்வுக்கலன் அறை வெப்பநிலைக்கு குளிர்ச்சி அடைந்தவுடன் மேலும் ஐந்து நிமிடங்கள் கலனை பனிக்கட்டியில் வைத்து குளிர்விப்பதன் மூலம் படிகங்களை எண்ணிக்கை அல்லது அளவில் அதிகமாக்கலாம்.

படிகங்கள் சேகரித்தல் மற்றும் சுத்தப்படுத்தல்[தொகு]

பனிக்கட்டியின் வெப்பநிலைக்கு குளிர்விக்கப்பட்ட கரைப்பானில் இருந்து படிகங்களை வடிகட்டுதல் மூலமாக பிரித்து அவற்றைச் சேகரித்து தூய்மைப் படுத்தலாம். இதற்கு ஹிர்ஷ் புனல், பக்னர் புனல், அல்லது ஒரு பிப்பெட் உறிஞ்சிக்குழாய் முதலியவற்றைப் பயன்படுத்தலாம்.

ஹிர்ஷ் புனலும் வடிகட்டலும்[தொகு]

ஹிர்ஷ் புனlல் என்பது நீர்மத்தில் இருந்து படிகங்கள் அல்லது திடப்பொருளை வெற்றிடத்தில் பிரித்தெடுக்கப் பயன்படும் ஒரு துணைக்கருவி ஆகும். வரிப்பள்ளங்கள் இல்லாத வடிதாள் வைக்கப்பட்ட ஹிர்ஷ் புனலை இறுக்கமாக மூடப்பட்டுள்ள ஒரு வெற்றிடமாக்கப்பட்ட குடுவையில் பொருத்தவேண்டும். இக்குடுவை பனிக்கட்டியில் வைக்கப்பட்டு கரைப்பான் குளிர்ச்சியாக இருக்கும்படி வைத்துக் கொள்ளப்படுகிறது. படிகமாக்கும் கரைசலால் வடிதாள் நனைக்கப் படுகிறது. வடிதாள் வெற்றிடத்தை நோக்கி கீழ்ப்புறமாக ஈர்க்கப்படுமாறு வடிகுழாய் மூடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்ப்படுத்திக் கொண்டு கரைசலை வடிதாளில் ஊற்றி படிகங்களை புனலின்மீது உரசுமாறு செய்யவும். படிகங்களிலிருந்து திரவம் முழுமையாக பிரிந்தவுடன் விரைவில் வெற்றிடம் நீக்கப்படுதல் வேண்டும். இதற்காக சிலதுளிகள் குளிர்ந்த கரைப்பானை உபயோகித்து வடிகலனை கழுவலாம். தொடர்ச்சியான வெற்றிடமாக்கல் மற்றும் நீக்கலால் படிகங்களிலிருந்து திரவம் முழுமையாக நீக்கப்படுகிறது. தேவையான அளவுக்கு படிகங்களை மீண்டும் மீண்டும் கழுவி வெற்றிடத்தில் அப்படிகங்களை உலர்த்திக் கொள்ளலாம்.

பக்னர் புனலும் வடிகட்டலும்[தொகு]

இது ஒரு படிகம்

செருமன் வேதியியல் அறிஞர் திரு எட்வர்டு பக்னர் ( 1860 – 1917 ) என்பவரால் இப்புனல் வடிவமைக்கப்பட்டது. இப்புனலில் உள்ள துளையிடப்பட்ட ஒரு தட்டின் மேல் வட்டவடிவிலான வடிதாளை வைத்து உறிஞ்சுதல் முறையில் வடிகட்டுதல் நிகழ்கிறது. வரிப்பள்ளங்கள் இல்லாத வடிதாளை பக்னர் புனலின் அடிப்பாகத்தில் உள்ள தட்டின்மீது வைத்து கரைப்பானால் வடிதாளை நனைக்க வேண்டும். இப்புனலை ரப்பர் அல்லது செயற்கை ரப்பராலான இணைப்பானால் வடிகலனுடன் காற்றுப்புகாதவாறு இறுக்கமாகப் பொருத்தவேண்டும். கரைசலை வடிதாளில் ஊற்றி படிகங்களை புனலின்மீது உரசுமாறு செய்யவும். படிகங்களிலிருந்து திரவம் முழுமையாக பிரிந்தவுடன் விரைவில் வெற்றிடம் நீக்கப்படுதல் வேண்டும். குளிர்ந்த கரைப்பானை உபயோகித்து வடிகலனை கழுவலாம். பிரிகையடைந்த படிகங்கள் வடிதாளில் தேங்கி நிற்கும். தொடர்ச்சியான வெற்றிடமாக்கல் மற்றும் நீக்கலால் படிகங்களிலிருந்து திரவம் முழுமையாக நீக்கப்படுகிறது. தேவையான அளவுக்கு படிகங்களை மீண்டும் மீண்டும் கழுவி வெற்றிடத்தில் அப்படிகங்களை உலர்த்திக் கொள்ளலாம். கழுவப்பட்ட படிகங்களை வடிதாள்களூக்கு இடையில் வைத்து நன்றாக அழுத்திய பின்னர் கண்ணாடித்தட்டில் அவற்றை காயவைத்து இறுதியாக உலர்த்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Harwood, Laurence M.; Moody, Christopher J. (13 Jun 1989). Experimental organic chemistry: Principles and Practice (Illustrated edition ). Wiley-Blackwell. பக். 122–125. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-632-02017-2. 
  2. Soxhlet, F. (1879). "Die gewichtsanalytische Bestimmung des Milchfettes" (in German). Dingler's Polytechnisches Journal 232: pp. 461-465. http://dingler.culture.hu-berlin.de/article/pj232/ar232136. 

வெளிப்புற இணைப்புகள்[தொகு]