உள்ளடக்கத்துக்குச் செல்

கம்போடியாவில் பெண்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கம்போடியாவில் பெண்கள்
ஒரு கம்போடிய மீனவப்பெண்
பாலின சமனிலிக் குறியீடு
மதிப்பு0.473 (2012)
தரவரிசை96 வது
தாய் இறப்புவீதம் (100,000க்கு)250 (2010)
நாடாளுமன்றத்தில் பெண்கள்18.1% (2012)
உயர்நிலைக் கல்வி முடித்த பெண் 25 அகவையினர்11.6% (2010)
பெண் தொழிலாளர்கள்79.2% (2011)
உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீடு[1]
மதிப்பு0.6509 (2013)
தரவரிசை104 வது இடம் out of 136

கம்போடியாவில் பெண்கள் (Women in Cambodia) என்னும் இக் கட்டுரை கம்போடியாவில் பெண்களின் அரசியல், சமூக, பண்பாட்டுப், பொருளாதார நிலை, வரலாறு, மாற்றங்கள் பற்றி விபரிக்கின்றது.

சமீப காலங்களில் பாரம்பரியமாக ஆண்களுக்கான வேலைகள் என ஒதுக்கப்பட்டிருந்த அனைத்து வேலைகளிலும் அர்சியலிலும் கம்போடியப் பெண்கள் ஆண்களுக்கு நிகராக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

தொழில்[தொகு]

கம்போ டியப் பெண்

கம்போடியாவில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரை அடுத்து, அங்கு ஆண் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஒரு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், பொதுவாகவும், முதன்மையாகவும் கம்போடிய ஆண்கள் செய்துவந்த வேலைகளைச் செய்ய முன்வந்த பெண்கள் அப் பொறுப்புக்களை தாங்கள் ஏற்றுக்கொண்டனர்[2]. கம்போடிய சட்டத்தின் கீழ், பெண்கள் "சம வேலைக்கு சம ஊதியம்" பெறவேண்டும். ஆனால் நடைமுறையில் பெரும்பாலான பெண்கள் தங்கள் சகஆண் பெற்ற ஊதியத்தைவிட குறைந்த ஊதியமே பெற்றார்கள்.[2] 1990 களின் போது, கிராமப்புற பகுதிகளில் இருந்து பல படிக்காத இளம் பெண்கள் ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை செய்ய துணிந்து நகரத்தை நோக்கி வந்தனர்.[3] 2004 ஆம் ஆண்டில், கம்போடியாவின் பாலினம் மற்றும் அபிவிருத்தி அமைப்பு நிறுவனம் 6% கம்போடியா பெண் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டதாகக் கூறுகிறது.[4]

சமய வழிபாடு[தொகு]

ஒரு கம்போடிய பௌத்த பெண் துறவி.

பொதுவாகக் கம்போடிய பெண்கள் புத்த கோயில்களை வணங்கி வழிபடுவதில் குறிப்பாக புனித நாட்களின் போது , மதச் சடங்குகளில் தீவிரமாக கலந்து ஈடுபட்டனர். சில பெண்கள், குறிப்பாக விதவை மற்றும் முதியவர்கள் வணங்குபவர்களாக மட்டும் நிற்காமல் புத்த சந்நியாசிகளாகவும் தங்களை மாற்றிக் கொண்டனர்.

கல்வி[தொகு]

கம்போடியப் பெண்களில் 45% பெண்கள் படிப்பறிவில்லாதவர்கள் என 2004 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. 16% பெண்கள் 2004 ஆம் ஆண்டில் கீழ் உயர்நிலை வகுப்புகளில் [4] கல்வி கற்கும் பொருட்டு பள்ளிகளில் சேர்திருந்தனர். அவர்கள் தொடர்ந்து கல்வி கற்க வராமல் இடையில் படிப்பை நிறுத்துவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் முக்கியமானது என்னவெனில் வீட்டிலுள்ள குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்கும், வீட்டு வேலைகளைச் செய்வதற்கும், குடும்பத்தலைவிக்கு உறுதுணையாக இருப்பதற்கும் அவர்கள் தேவைப்பட்டனர். இவற்றைத் தவிர்த்து மிகுந்த ஏழ்மை, கிராமப்புற வீடுகளில் இருந்து பள்ளி தொலை தூரத்தில் இருந்தது, சிலசமயங்களில் பள்ளிகளில் இருந்து வீட்டுக்கு மற்றும் வீட்டில் இருந்து பள்ளிக்குச் செல்லும்[2] பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் முதலானவையும் காரணங்களாக இருந்தன.

இருப்பினும் கல்வி கற்க வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருந்தது. 2004 ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று வெளிவந்த பட்டதாரிகளில் 20 சதவீதத்தினர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.[4]

அரசியல் நிலை[தொகு]

பொதுவாக, 1980 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை, கம்போடிய அரசியலில் பெண் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது, அரசாங்கத்தின் உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான உயர் மட்ட நிலைகளுக்கு [2] அவர்கள் பரிந்துரைக்கப்படவில்லை. 1993 ஆம் ஆண்டில் இருந்து பெண்களின் பங்கேற்பு தலைமை ஏற்பது உட்பட ஒரு சுமாரான உயர்வுடனான நடைமுறையாக இருந்தது. பெண்களின் பிரச்சினைகள் மற்றும் உரிமைகள் மீது அரசு அல்லாத தொண்டு நிறுவனங்கள் மிகுந்த கவனம் செலுத்தின.[2]

2004 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 10 சதவீத சட்டமன்ற உறுப்பினர்கள் என்றும் 8 சதவீதம் பெண்கள் சமூகக் குழுவின் உறுப்பினர்களாகவும் 7 சதவீதம் பெண்கள் நீதிபதிகளாக்வும் இருந்தனர் என்று அறிவிக்கப்பட்டது.[4]

சட்டப் பாதுகாப்பு[தொகு]

உண்மையில் கம்போடியச் சட்டம் மற்றும் நாட்டின் வரலாற்றில், ஆண்கள் மற்றும் பெண்கள் எப்போதும் சட்டத்தின் முன் சம உரிமை கொண்டுள்ளனர்[2]. இந்தப் பிரகடனம் கம்போடியா அரசியலமைப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.[2] வாரிசு உரிமை சட்டங்கள் பெண்களுக்கு நன்மைகளை வழங்கின. சொத்துக்களில் அவர்களுக்கு உரிமை உண்டு. சொத்துகளை வாங்கவும் விற்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு. திருமணத்திற்கும் அவர்களால் சொத்துகளைக் கொண்டுவர முடியும். மற்றும் அவர்களால் எளிதாக விவாகரத்தும் பெற முடியும்.[2]

பாலியல் தொழில்[தொகு]

உள்ளூர்[2] மற்றும் வியட்நாமிய பெண்கள்[5] சட்டத்திற்கு முரணாக, அருகில் உள்ள தாய்லாந்தில் விபச்சாரத்தில் ஈடுபட்டனர் அல்லது கட்டாயப்படுத்தப்பட்டனர். பாலியல் தொழில் பரவலாகக் காணப்பட்டதால் கம்போடிய மக்கள் தொகையில் 2.8 சதவீதம் மக்கள் எய்ட்சு போன்ற தீவினை நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தனர்.[2]

பெண்கள் நலம்[தொகு]

கிராமப்புற சமூகங்களில், கம்போடிய பெண்கள் உள்நாட்டு வன்முறை நிகழ்வுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நடைமுறையில் சிறிய சட்ட உதவியும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.[3] மட்டுப்படுத்தப்பட்ட பெண்கள் கல்வி காரணமாக சில கம்போடிய பெண்கள் தங்கள் சட்ட உரிமைகள் தெரியாமலும், உலகாய மனித உரிமைகள் குறித்த புரிதல் இல்லாமலும் இருந்தனர். இதனால் பாகுபாடு, பாலின சமத்துவமின்மை, வன்முறை முதலான கொடுமைகளில் இருந்து அவர்களால் தங்களைப் பாதுகாக்க முடியவில்லை.[4]

2004 ஆம் ஆண்டில் சுமார் 23 சதவீதப் பெண்கள் இத்தகைய பாதிப்புகளுக்கு உட்பட்டனர் என்று கம்போடிய பாலினம் மற்றும் அபிவிருத்தி அமைப்பு தெரிவிக்கிறது.[4]

சமூக நிலை[தொகு]

வாடிக்கையாளருக்காக காத்திருக்கும் கம்போடிய இளம்பெண்.

பாரம்பரிய கம்போடிய கலாச்சாரத்திற்கு மாறாக, இளம் கம்போடியப் பெண்களிடம் கடந்த சில ஆண்டுகளாக மேற்கத்தியக் கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்துகிறது. குறிப்பாக தலைநகரம் புனோம் பென்னில் வெளிப்படையாக உணவு விடுதிகளில் பெண்கள் மதுபானம் அருந்துதல் அதிகரித்து வருகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே சமவுரிமை கொண்ட உணர்வு போக்குகள், ஆண் சகாக்களின் மூலமாக மனஅழுத்தம், தோழமை, பரிசோதனைகள், குடும்ப பிரச்சனைகள், அவர்களால் கைவிடப்படுதல் போன்ற மேற்கத்திய தாக்கங்களும் பெருகி வருகின்றன.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Global Gender Gap Report 2013" (PDF). World Economic Forum. pp. 12–13.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 The Status of Women in Society பரணிடப்பட்டது 2015-01-07 at the வந்தவழி இயந்திரம், seasite.niu.edu
  3. 3.0 3.1 Gender Roles and Statuses, everyculture.com
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 The Status of Women in Cambodia[தொடர்பிழந்த இணைப்பு], Gender and Development for Cambodia, online.com.kh
  5. Cambodia, Factbook on Global Sexual Exploitation, uri.edu
  6. Women in Cambodia are increasingly becoming social drinkers பரணிடப்பட்டது 2012-10-15 at the வந்தவழி இயந்திரம். Phnom Penh Post. April 6, 2011.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்போடியாவில்_பெண்கள்&oldid=3725129" இலிருந்து மீள்விக்கப்பட்டது