கம்போடியாவின் மனிதாபிமான நெருக்கடிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கம்போடியாவின் மனிதாபிமான நெருக்கடிகள் (The Cambodian humanitarian crisis) 1969 தொடங்கி 1993 வரையில் நிகழ்ந்த தொடர்ச்சியான சில நிகழ்வுகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. கம்போடிய மக்களுக்கு இந்நிகழ்வுகளால் மரணம், இடப்பெயர்ச்சி அல்லது வெளிநாடுகளில் இருந்து மீள்குடியேற்றம் முதலிய இடர்பாடுகள் ஏற்பட்டன.

இந்நெருக்கடி பல கட்டங்களாக நடந்தது. உலோன் நோல் அரசாங்கத்திற்கும் கமியூனிச கெமர் ரூச் கட்சியினருக்கும் 1970 முதல் 1975 வரையில் நிகழ்ந்த உள்நாட்டுப்போர் முதல் நெருக்கடியாகும். கெமர் ரூச் படையினர் மீது 1969 முதல் 1973 வரையிலான அமெரிக்காவின் தீவிர குண்டு வீச்சுத் தாக்குதலும் முதல் கட்ட நெருக்கடியிலேயே குறிக்கப்படுகிறது. வியட்நாம் போரை வெற்றி கொள்ளும் நோக்கத்தில் வடக்கு வியட்நாமியப் படைகள் கெமர் ரூச் படையினரின் பாதுகாப்பு இடங்கள் மற்றும் அடித்தளங்களை அழித்த நடவடிக்கைகளும் இந்நெருக்கடியின் ஒரு பகுதியாகும். 1975 முதல் 1979 வரையிலான கெமர் ரூச் கட்சியினரின் ஆட்சிக்காலம் இரண்டாவது கட்ட நெருக்கடிக் காலமாகும். 8 மில்லியன் கம்போடிய மக்களில் நான்கில் ஒரு பகுதியினரை கெமர் ரூச் ஆட்சியாளர்கள் படுகொலை செய்தனர்.

1979 ஆம் ஆண்டில், வியட்நாம் கம்போடியாவின் மீது படையெடுத்து அங்கு ஆட்சி செய்து கொண்டிருந்த கெமர் ரூச்சை தூக்கி எறிந்தது. வியட்நாமும் கம்போடியாவும் அரசாங்கத்தை உருவாக்கி அடுத்த 12 ஆண்டுகளுக்கு ஆட்சி புரிந்தன. கெமர் ரூச் கட்சியினரும் இதர குழுக்களும் வியட்நாமிய ஆக்ரமிப்பாளர்கள் மீதும் கம்போடிய அரசாங்கத்தின் மீதும் கொரில்லா முறையில் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். 1979 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கலவரங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து அச்சுறுத்திய பஞ்சம் ஆகியவற்றிலிருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான கம்போடியர்கள் தாய்லாந்து நாட்டின் எல்லையை நோக்கி ஓடினர்.

மனிதநேய அமைப்புகள் நெருக்கடியின் நிலைமையைப் புரிந்துகொண்டு "நிலப் பாலம்" அமைத்துக் கொடுத்தது அதுவரையில் இல்லாத மிகப்பெரிய மனிதாபிமான உதவியாகக் கருதப்படுகிறது.

கம்போடிய அரசாங்கத்தையும் வியட்நாமியர்களையும் எதிர்த்து நடைபெற்ற கொரில்லா போர் 1991 ஆம் ஆண்டுவரை நீடித்தது. ஆயிரக்கணக்கான கம்போடியர்கள் தொடர்ந்து தாய்லாந்தில் உள்ள அகதிகள் முகாமை நோக்கி அல்லது தாய்லாந்து எல்லையை நோக்கி இடம்பெயர்ந்து தஞ்சமடைந்தனர். 2,60,000 மக்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்தனர். இவர்களில் பாதிமக்கள் குறிப்பாக அமெரிக்காவில் குடியேறினர். கம்போடியாவின் மனிதாபிமான நெருக்கடி நடவடிக்கைகளின் இறுதிகட்டம் 1991 – 1993 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்தது. வியட்நாம் கம்போடியாவை விட்டு விலகியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தை அமைக்க ஐ.நா. வழிவகுத்தது. 3,60,000 கம்போடியர்கள் அகதிகள் முகாமை மூடிவிட்டு தாய்நாட்டை நோக்கி மீள்குடியேற்றத்திற்காக அனுப்பப்பட்டனர்.

உள்நாட்டுப்போரும் அமெரிக்க குண்டு வீச்சும்[தொகு]

கிழக்கு கம்போடியாவில் இருந்த வடக்கு வியட்நாமிய படைத்தளங்கள் மற்றும் பாதுகாப்பிடங்கள் மீது ஐக்கிய அமெரிக்க குடியரசு 1969 ஆம் ஆண்டு முதல் தீவிர குண்டு வீச்சு தாக்குதலைத் தொடங்கியது. பின்னர் இக்குண்டு வீச்சு கம்போடிய கெமர் ரூச் படையினரை தாக்கவும் விரிவுபடுத்தப்பட்டது. இதே கால கட்டத்தில் கம்போடிய அரசாங்கத்தை எதிர்த்து கெமர் ரூச் படையினர் கொரில்லா முறை போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். குண்டு வீச்சு தாக்குதலின் தாக்கம் மற்றும் இடையுறவுகள் கெமர் ரூச் படையினரின் வளர்ச்சிக்கு வழிவகுத்தன என்ற சர்ச்சைகளும் வரலாற்றாசியர்களிடம் தோன்றின. 1970 ஆம் ஆண்டு மார்ச்சு 18 இல் நொரடோம் சீயனூக்கை வெளியேற்றிவிட்டு உலோன் நோல் ஆட்சிக்கு வந்தார். வீரர்களை வெளியேற்றவும் வடக்கு வியட்நாமியர்கள் கம்போடியாவிற்குள் வரும் வழியைத் தடை செய்யவும் இவர் ஒரு இயக்கத்தை முன்னெடுத்தார். இவ்வியக்கம் தோல்வியில் முடிந்தது. இதற்கு எதிராக வடக்கு வியட்நாமிய படையினர் பாதுகாப்பிடங்களில் இருந்து வெளியேறி போரிட்டு பெரும்பாலான கம்போடியப் பகுதிகளைக் கைப்பற்றினர். இப்பகுதிகளை கெமர் ரூச் வசம் ஒப்படைத்தனர். கிட்டத்தட்ட அதேநேரத்தில், கம்போடியாவில் இருந்த வடக்கு வியட்நாமியரை வெளியேற்றுவதற்காக அமெரிக்காவும் தெற்கு வியட்நாமும் இணைந்து கம்போடிய இயக்கத்தைத் தொடங்கின.

அமெரிக்காவின் தீவிர குண்டு வீச்சு தாக்குதலின் விளைவுகள் பயங்கரமாக இருந்தன. அமெரிக்கா கம்போடியாவின் மீது டன்கணக்கில் குண்டுகளை வீசியது. இரண்டாம் உலகப்போரில் தான்வீசிய குண்டுகளின் எண்ணிக்கைக்குச் சமமான அளவில் கம்போடியாவின் மீது அமெரிக்கா குண்டுகளை வீசியது. இதனால் 1969 முதல் 1973 வரையிலான காலகட்டத்தில் கம்போடியாவில் 40,000 முதல் 1,50,000 வரையிலான படையினர் மற்றும் பொது மக்கள் கொல்லப்பட்டனர்[1][2][3].

கிராமப்புற மக்களின் மீது கெமர் ரூச் படையினரின் தாக்குதல் மிகவும் கடுமையாக இருந்தது"[4]. அவர்களது வழிமுறைகளில் "பயங்கரவாதம், வன்முறை, கொடூரம் முதலியன மிகுந்து இருந்தன. இந்த உள்நாட்டுப் போர் பல கம்போடியர்களை பாதுகாப்பிற்காக கிராமத்தை விட்டு நகரத்திற்கு இடம்பெயரச் செய்தது. 600000 ஆக இருந்த புனோம் பென் நகரத்தின் மக்கள்தொகை இரண்டு மில்லியனை எட்டியது. தரை வழியாகவும் கடல் வழியாகவும் நகருக்குள் அனுப்பப்படும் அனைத்தையும் கெமர் ரூச் படையினர் தடுத்து நிறுத்தியதால் குடியிருப்பவர்களில் பலர் பசிபட்டினியால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர் [5]. உள்நாடுப் போரின் காரணமாக 2,00,000 முதல் 3,00,000 கம்போடியர்கள் கொல்லப்பட்டனர்[6][7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Marek Sliwinski, Le Génocide Khmer Rouge: Une Analyse Démographique (L’Harmattan, 1995), pp41-8.
  2. Ben Kiernan; Owen, Taylor. "Bombs over Cambodia". The Walrus (October 2006): 62–69. http://www.yale.edu/cgp/Walrus_CambodiaBombing_OCT06.pdf.  "Previously, it was estimated that between 50,000 and 150,000 Cambodian civilians were killed by the bombing. "Given the five-fold increase in tonnage revealed by the database, the number of casualties is surely higher."
  3. See also Heuveline, Patrick (2001). "The Demographic Analysis of Mortality in Cambodia," in Forced Migration and Mortality, eds. Holly E. Reed and Charles B. Keely. Washington, D.C.: National Academy Press; and Banister, Judith, and Paige Johnson (1993). "After the Nightmare: The Population of Cambodia." In Genocide and Democracy in Cambodia: The Khmer Rouge, the United Nations and the International Community, ed. Ben Kiernan. New Haven, Conn.: Yale University Southeast Asia Studies, for an overview of Cambodian civil war estimates.
  4. Quinn, Kenneth Michael. "The Origins and Development of Radical Cambodian Communism." Diss. University of Maryland, 1982. Quinn was later U.S. Ambassador to Cambodia
  5. Thompson, Larry Clinton "Refugee Workers in the Indochina Exodus, 1975-1982 Jefferson, NC: MacFarland Publishing Company, 2010, pp. 34-38
  6. Heuveline, Patrick (2001). "The Demographic Analysis of Mortality in Cambodia." In Forced Migration and Mortality, eds. Holly E. Reed and Charles B. Keely. Washington, D.C.: National Academy Press.
  7. Marek Sliwinski, Le Génocide Khmer Rouge: Une Analyse Démographique (L’Harmattan, 1995).
  8. Banister, Judith, and Paige Johnson (1993). "After the Nightmare: The Population of Cambodia." In Genocide and Democracy in Cambodia: The Khmer Rouge, the United Nations and the International Community, ed. Ben Kiernan. New Haven, Conn.: Yale University Southeast Asia Studies.