கம்பிவடத் தொலைக்காட்சித் தலைமுனையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கம்பிவடத் தொலைக்காட்சி சேவையாளர் ஒருவரின் தலைமுனையத்தில் பல்வேறு செய்மதி அலைவாங்கிகள்.


கம்பிவடத் தொலைக்காட்சி தலைமுனையம் (cable television headend) என்பது கம்பிவடத் தொலைக்காட்சி மூலம் பரப்புவதற்கும் முறைப்படுத்துவதற்கும் முன்னதாக பல்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளை பெறுகின்ற ஓர் தலையாய வசதி ஆகும். பொதுவாக இவ்வசதிக்கு எவ்வித பணியாளரும் தேவையில்லை; பாதுகாப்பு வேலியும் அமைப்புகளும் மட்டுமே உள்ள பெரிய கட்டிடத்தில் அல்லது கொட்டகையில் இவ்வசதி அமைக்கப்பட்டிருக்கும். இங்கு பல்வேறு தொலைக்காட்சி ஒளிதங்களைப் பெறுவதற்கும் அவற்றை மறு ஒளிபரப்பு செய்வதற்குமான மின்னணு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். சிலநேரங்களில் இவை மின்திறன் துணைநிலையங்களிலோ இணையத் தொலைதொடர்பு நிலையங்களிலோ அமைக்கப்பட்டிருக்கலாம்.

செய்மதித் தொலைக்காட்சி ஒளித வழங்கு நிறுவனங்கள் தங்கள் அலைவரிசைகளை தாங்கள் வாடகைக்கு எடுத்துள்ள ஓர் செய்மதி மூலம் ஒளிபரப்புகின்றனர். பல்வேறு செய்மதித் தொலைக்காட்சி வழங்குனரும் வெவ்வேறு செய்மதிகளில் ஒளிபரப்புவதால் தலைமுனையத்தில் பல்வேறு செய்மதிகளிலிருந்தும் தொலைக்காட்சி குறிப்பலைகளைப் பெற பல திசைகளிலும் விண்ணை நோக்கிய செய்மதி அலைவாங்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் சில உள்ளூர் ஒளித உள்ளடக்கத்தை கம்பிவடம் அல்லது ஒளியிழை மூலம் பெறுகின்றனர். தாங்களே தயாரிக்கும் உள்ளூர் அலைவரிசைகளையும் பதிவுகருவிகளிலிருந்து திரைப்பட ஒளிதங்களையும் இவற்றுடன் சேர்க்கின்றனர். இத்தகைய தொகுப்பை (எண்ணிம வடிவமென்றால் தங்களது கட்டுடைய அணுக்க முறைமைக்கேற்ப) முறைப்படுத்தி அனுப்புகின்றனர். இதற்குத் தேவையான மின்னணு கருவிகள் கம்புவடத் தொலைக்காட்சி தலைமுனையத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை ஒருமுறை முறைப்படுத்தினால் பின்னர் பராமரிப்பு தேவை இல்லாததால் திறன்மிக்க பணியாளர்கள் இங்குத் தேவையில்லை. இருப்பினும் பாதுகாப்பு காவலர்கள் பணியமர்த்தப் படுவர் அல்லது தானியங்கி பாதுகாப்பு அமைப்புகள் பயன்படுத்தப்படும்.

முதன்மையான அங்கங்கள்[தொகு]

தலைமுனையமொன்றில் சீர்தரமான ஓர் அடுக்கு ஏற்றம்

தொலைக்காட்சி குறிப்பலைகள் பெறும் வசதி[தொகு]

    • செய்மதி அலைவாங்கிகள்: இவை செய்மதிகளிலிருந்து குறிப்பலைகளைப் பெறுவதற்கான அமைப்புகளைக் கொண்டிருக்கும். பொதுவாக மேல் நோக்கியத் தொலைதொடர்பு அற்றிருக்கும்.
    • ஒளியிழை கம்பிவடம்/ஓரச்சுக் கம்பிவடம்/தொலைபேசி கம்பிவடம்/நுண்ணலை தொலைதொடர்பு கோபுரங்கள்: இவை உள்ளூர் அலைவரிசைகளையும் நேரலைத் தொலைக்காட்சி ஒளிதங்களையும் பதிவு ஒளிதங்களையும் பெற பயன்படுகின்றன.

குறிப்பலைகளை முறைப்படுத்தும் கருவிகள்[தொகு]

இவை பல்வேறு ஒளித வழங்குனர்களின் குறிப்பலைகளை முறைப்படுத்தி ஒளி/ஒலி குறிப்பலைகளை மட்டும் மீட்டெடுக்கும்.

பண்பேற்றக் கருவிகள்[தொகு]

அஜைல் கம்பிவடத் தொலைக்காட்சி அலைவரிசை பண்பேற்றி

இவை பெறப்பட்ட தொலைக்காட்சி ஒளிதங்களை தங்கள் வரிசைக்கேற்ப தொகுத்து கம்பிவடத்தில் அனுப்புவதற்கேற்ற உயர் அதிர்வெண் மின்காந்த அலைகளில் பண்பேற்றி அனுப்புகின்றன. எண்ணிம கம்பிவடத் தொலைக்காட்சியில் வெவ்வேறு அதிர்வெண்களுக்கு மாற்றாக ஒரே அதிர்வெண்ணில் எட்டு அலைவரிசைகள் நாற்திசை அளவு மாற்றம் (QAM) முறைமையில் அனுப்பப்படுகின்றன. இவற்றைப் பிரித்து வழங்க தொலைக்காட்சி அணுக்கப் பெட்டி தேவைப்படுகின்றது.

வழங்கல் வலையமைப்பு[தொகு]

தொகுக்கப்பட்ட தொலைக்காட்சி குறிப்பலையை வெவேறு பகுதிகளில் உள்ள பயனர் இடங்களுக்கு எடுத்துச் செல்ல தொலைதொடர்பு கருவிகளும் கம்பிவடத் தொழினுட்ப கருவிகளும் அமைக்கப்படுகின்றன.

வெளி இணைப்புகள்[தொகு]

தலைமுனையங்களைக் குறித்த தகவல்கள் (ஆங்கில மொழியில்):