கமலா செல்வராஜ்
கமலா செல்வராஜ் | |
---|---|
தேசியம் | இந்தியர் |
கல்வி | எம்.டி., டி.ஜி.ஓ., பிஎச்.டி., |
பணி | மகளிர் மகப்பேறு மறுத்துவம் |
அறியப்படுவது | முதல் சோதனைக் குழாய் குழந்தையின் மருத்துவர் (இந்தியா) |
பெற்றோர் | ஜெமினி கணேசன் அலமேலு |
உறவினர்கள் | ரேகா-சகோதரி சாவித்திரி-மாற்றாந் தாய் |
விருதுகள் | சிறந்த பெண் மருத்துவர் (1993) மகிளா சிரோன்மணி விருது (1995) இராசிவ்காந்தி நினைவு தேசிய ஒருங்கிணைப்பு விருது (1995) |
கமலா செல்வராஜ் (Kamala Selvaraj) என்பவர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் ஆவார். இவர் பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஜெமினி கணேசனின் மகளாவார்.[1] இவர், ஆகஸ்ட் 1990இல் தென்னிந்தியாவின் பிறந்த முதல் சோதனைக் குழாய் குழந்தையின் மருத்துவர் ஆவார்.[2] 2002 ஆம் ஆண்டில் "முன்கூட்டிய கருப்பை தோல்வியும் அதன் மேலாண்மையும் குறித்த ஆய்விற்காக முனைவர் பட்டம் பெற்றார். இவர் "சிறந்த பெண் மருத்துவர் விருது-1993", "ராஜீவ் காந்தி நினைவு தேசிய ஒருங்கிணைப்பு விருது-1995" உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.[3] இவரது மருத்துவமனையின் மூலம் மக்கட்பேறின்மை இல்லா தம்பதியர் சுமார் 800 பேர் இனப்பெருக்க துணைச் சிகிச்சையின் விளைவாக தாய்மைப் பேரினைப் பெற்றுள்ளனர்.[4]
கல்வி[தொகு]
கமலா சென்னையில் திரு இருதய மேல்நிலைப் பள்ளியிலும், சர்ச் பார்க் பள்ளியிலும் பள்ளிப் படிப்பினை முடித்தார். 1961 ஆம் ஆண்டு சென்னை ஸ்டெல்லா மேரிசு கல்லூரியில் பல்கலைக்கழக முன் கல்வியினை முடித்து, 1962 முதல் 1967 வரை கர்நாடகாவின் கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வியினைக் கற்றார். 1968 முதல் 1970 வரை சென்னை பொது மருத்துவமனையில் மருத்துவ பயிற்சியினை முடித்த இவர், மதராசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேல் நிலை கல்வியினை முடித்தார். 1976 முதல் 1978 வரை, மதராசு மருத்துவக் கல்லூரியில் மகளிர் மருத்துவத்தில் பட்டப்படிப்பினையும், 1971முதல் 1972 வரை பயின்றார். பின்னர் ஆசிரியராக மதராசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து எழும்பூரில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனையில் பணியாற்றினார். 2001இல் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையினைப் பெற்றார்.
சிறப்புப் பயிற்சி[தொகு]
கமலா செல்வராஜ், 1985 & 1988ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கூட கருத்தரித்தல் மற்றும் கரு பரிமாற்றத்திலும். 1986ஆம் ஆண்டு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் மக்கட்பேறின்மை குறித்த 12வது உலக மாநாட்டில் நுண் அறுவைசிகிச்சை & பெலோபியன் குழாய் மறு இணைப்பு பயிற்சியினையும், ஆய்வுக்கூட கருத்தரிப்பு, கரு இடமாற்றம் குறித்த பயிற்சியினையும், மே 1991இல் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் இனப்பெருக்கம் துணைத் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியினையும், 1995இல் இந்தோனேசியாவின் பாலித் தீவுகளில் அனுக்குழைமத்தில் விந்தணுவினைச் செலுத்தக்கூடிய நுண்ம கையாளல் உள்ளிட்ட பல பயிற்சிகளைப் பெற்றுள்ளார்.
புத்தகம்[தொகு]
மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத்திற்கான 100 கேள்விகள் & பதில்கள் என்ற தலைப்பில் புத்தகத்தினை இரு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். மேலும் தாய்மையின் அதிசயம் என்ற புத்தகத்தினை ஆங்கிலம் மற்றும் தமிழிலும், கருப்பையினுள் விந்தணு செலுத்திக் கருத்தரித்தல் குறித்த கையேட்டினையும், தாயாக நானிருப்பேன் என்ற தலைப்பில் ஆங்கிலம் மற்றும் தமிழில் புத்தகம் ஒன்றினையும், மன அமைதிக்கு உதவும் ஆன்மீகம், (ஆங்கிலம் & தமிழ்) என்ற புத்தகத்தினையும் வெளியிட்டு உள்ளார்.
தொழில்முறை அமைப்பு உறுப்பினர்[தொகு]
கமலா செல்வராஜ் இனப்பெருக்க மருத்துவத்திற்கான அமெரிக்கச் சங்கத்தின் பன்னாட்டு உறுப்பினராகவும், இந்திய மருத்துவ சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினராகவும், இந்திய இனப்பெருக்கம் உதவிச் சங்கத்தின் உறுப்பினராகவும், இந்திய பெண்ணோயியல் உடற்குழாய் உள்நோக்கல் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராகவும், இந்திய மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பின் உறுப்பினராகவும், தென்னிந்திய மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ கழக ஆயுட்கால உறுப்பினராகவும் உள்ளார். மேலும் இனப்பெருக்கம் மற்றும் கருத்தரித்தல் ஆய்வுக்காக இந்தியச் சமூகத்தின் வாழ்நாள் உறுப்பினராகவும் இனப்பெருக்க உதவி இந்தியச் சங்கத்தின் 20வது தேசிய மாநாட்டின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
விருதுகள்[தொகு]
கமலா செல்வராஜ், இராசிவ் காந்தி ஒற்றுமை விருது (1991), இந்திய மருத்துவ சங்கம் மருத்துவர் தின விருது (1995), சுழற்கழக விருது (1995), மதராசு மாநில மகளிர் மன்றத்தின் சிறப்பான மருத்துவ சேவைக்கான விருது (1996), காஞ்சிபுரத்தின் மகாஸ்வாமி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி & விஜயேந்திர சரஸ்வதி முன்னிலையில், சமூகத்துக்கான சிறந்த சேவைக்காக நூற்றாண்டு அறக்கட்டளையால் சேவா ரத்னா விருதினையும் பெற்றுள்ளார். மேலும்
- ஜீவன் பாரதி விருது (2005)-பன்னாட்டு எல்ஈசி இந்திய மருத்துவ நிறுவனத்தால் மருத்துவத் துறையில் சாதனைக்காக.
- சாய்கோவ்ஸ்கி மியூசிக் குழுமத்தின் ரஷிய கலாச்சார மைய சிறந்த பெண்களுக்கான விருது (2006)
- பெண்கள் அதிகாரமளிப்பு விருது - மத்திய அரசு நலச் சங்கம், சாஸ்திரி பவன் (2011)
- சிறந்த தாய்மை விருது, அஜந்தா நுண்கலை மன்றம் (2011)
- சிகரம் தொட்டா பெண்கள், விஜய் டிவி (2012)
- வாழ்நாள் சாதனையாளர் விருது, டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம்.
- சிறந்த மருத்துவர் விருது, பெண்கள் & குழந்தைகள் அறக்கட்டளை (2015)
- பெமினா சூப்பர் அம்மா & மகள் விருது (2016).
உள்ளிட்டப் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Warrier, Shobha (March 2005). "Rare sight: Rekha and her five sisters!". Rediff.com. 5 September 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Thilaka Ravi (30 April 2009). "Dr. Kamala Selvaraj – A Pioneer in Infertility Treatment". medindia.net. 30 September 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Padmanabhan, Geeta (19 January 2006). "Hope in the test tube". The Hindu. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/hope-in-the-test-tube/article3185857.ece.
- ↑ Ramya Kannan (5 February 2006). "She is proud mother of over 800 babies now". தி இந்து. 27 April 2006 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 September 2016 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|=
ignored (உதவி)