கபாடபுரம் (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கபாடபுரம்
நூல் பெயர்:கபாடபுரம்
ஆசிரியர்(கள்):நா. பார்த்தசாரதி
வகை:தொன்பிலக்கியப் புதினம்
மொழி:தமிழ்
பக்கங்கள்:192
பதிப்பகர்:தமிழ் புத்தகாலயம்
ஆக்க அனுமதி:ஆசிரியருடையது

கபாடபுரம் என்பது நா. பார்த்தசாரதி என்பவரால் எழுதப்பட்ட இலக்கிய புதினம் ஆகும். இதில் வரும் முக்கிய கதாப்பாத்திரங்களும் இடங்களும் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் குமரிக்கண்டம், கபாடபுரம், இறையனார் அகப்பொருள், முச்சங்க வரலாறு போன்றவை தொடர்பான செய்திகளை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டது. மேலும் இந்நூல் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள் ஒன்று.

கதைச் சுருக்கம்[தொகு]

கபாடபுரம் என்ற பாண்டியர்களின் இடைச்சங்கத் தலைநகரத்தில் அமர்ந்து பாண்டி நாட்டை அனாகுலப் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் ஆழ்கிறான். இவரது தந்தையாரான வெண்டேர்ச் செழியன் (முதிய பாண்டியர்) என்பவரே இடைச்சங்கத்தையும் கபாடபுரத்தையும் நிறுவிய முதலாம் பாண்டிய மன்னர். இவரது அநாகுல பாண்டியன் வழி மகனான சாரகுண பாண்டியன் (இளைய பாண்டியன்) என்பவனே இப்புதினக் கதையின் நாயகனாவான்.

குருகுலக் கல்வியை அவிநயனார் மற்றும் சிகண்டியார் என்ற அகத்தியரின் சீடர்களிடம் கற்று முடித்த சாரகுணன் கபாடபுரத்தைக் காண நீண்ட நாள் கழித்து ஒரு திருவிழா நாளில் வருகிறான். வரும் வழியில் கண்ணுக்கினியாள் என்ற பாணர் குலப் பெண்ணின் மீது காதல் கொள்கிறான். இக்காதலை அறிந்து கொள்ளும் வெண்டேர்ச் செழியன் மன்னர்களுக்கு கலைகளின் மீதும் பெண்களின் மீதும் அதிக நாட்டம் இருக்கக்கூடாதென்று கூறி சில அரச வேலைகளைக் கொடுத்து அவனின் நோக்கத்தை அரசத்தந்திரங்களில் திருப்ப முயல்கிறார். இசை மீதும் கண்ணுக்கினியாள் மீதும் தீராத காதல் கொண்ட சாரகுணனின் போக்கு அரச தந்திரங்களில் அவ்வளவாக திரும்பாமல் இருக்கிறது. கடம்பர், அவுனர் போன்ற திருடரினத்தைச் சேர்ந்தவர்கள் கபாடபுர முத்து மற்றும் ரத்தினங்களை கொள்ளை அடிக்கும் முயற்சிகளைத் சாரகுணனும் தேர்ப்பாகன் மற்றும் வீரனான முடிநாகனும் சேர்ந்து முறியடித்தும் அதில் திருப்தி கொள்ளாத முதிய பாண்டியர் அவர்களிருவரையும் தென்பழந்தீவுகள் என்னும் பயங்கர நாகரிகத்தைக் கொண்ட மக்களினங்கள் வாழும் தீவுகளின் தொகுதிக்கு அரசத்தந்திரங்களை அனுபவம் மூலம் கற்பதற்கு அனுப்பி வைக்கிறார்.

அதைக் கண்ணுக்கினியாளிடம் கூற நினைத்தும் முடியாமல் சாரகுணன் தென்பழந்தீவுகளுக்கு சென்று சில நாட்களுக்குப் பின் திரும்புகிறான். மீண்டும் கண்ணுக்கினியாளைக் கண்டு அவளின் யாழ் இசையின் மீது ஈர்க்கப்பட்டு புதிய இசையிலக்கணம் படைக்க வேண்டுமென நினைக்கிறான். அதை தன் இசை ஆசான் சிகண்டியாரிடம் கூற அவர் கண்ணுக்கினியாளின் யாழிசையை நேரில் கேட்டு இசை நுனுக்கம் என்னும் நூலை இடைச்சங்கம் மீண்டும் நடக்கும் நாளன்று அரங்கேற்றி விட வேண்டும் என்று அதற்கு வெண்டேர்ச் செழியன் சம்மதத்தையும் பெறுகிறார் சிகண்டியார். கண்ணுக்கினியாளின் மீது சாரகுணன் காதல் அதிகமாவதைக் கண்ட வெண்டேர்ச் செழியன் பாணர்களை அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு மறைமுகமாக வேண்டுகிறார். இதற்கிடையில் இடைச்சங்கத்தில் இசைநுணுக்கம் நூல் அதற்குரிய கண்ணுக்கினியாளை மரியாதை செய்யாமலேயே அரங்கேறுகிறது. கண்ணுக்கினியாள் தன் யாழை உடைத்து சாரகுணன் பார்க்கும் இடத்தில் விட்டுச் செல்கிறாள். இடைச்சங்கம் கலைந்தபின் அவளைக் காணச்சென்று பாணர்கள் நகரை விட்டு வெளியேறிவிட்ட செய்தியறிந்த சாரகுணன் காதல் தோல்வியால் மிகுந்த மனவருத்தத்துடன் கபாடபுரத்திற்கு திரும்புகிறான். கபாடபுரத்தின் கோட்டைக் கதவுகளை போல் அவன் மனமும் அடைத்துக் கொள்கிறது.

மூலம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கபாடபுரம்_(புதினம்)&oldid=1573974" இருந்து மீள்விக்கப்பட்டது