கபடி செல்வமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செல்வமணி (Selvamani K) இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான கபடி வீரர் ஆவார். தனது திறமையால் தற்போது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

பிறப்பு[தொகு]

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஓமலூர் பகுதியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேக்கம்பட்டி என்ற சிறிய கிராமத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் தான் இந்த செல்வமணி. ஹைதராபாத் ரயில்வேயில் எழுத்தராகப் பணியாற்றி வரும் இவர் இளம் வயது முதலே கபடியில் சிறந்த திறன் உடையவராக வலம் வந்துள்ளார்.

சிறப்புத் திறன்[தொகு]

9ஆம் வகுப்பு படிக்கும் போது பள்ளிகள் அளவிலான கபடி போட்டிகளில் விளையாடி வந்துள்ளார். சிறந்த கபாடி பாடுநரான அவர், சேலத்தில் உள்ள சிஎஸ்ஐ பல்தொழில்நுட்பக் கல்லுாரியில் இயந்திரவியல் பொறியியல் படிப்பில் சேர்ந்ததும் கல்லூரி அணிகள் இடையிலான போட்டிகளில் கலந்து கொண்டு தனது திறனை மேலும் மெருகேற்றினார். இறுதி ஆண்டு படிக்கும்போது தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். ‘டூ ஆர் டை' ரெய்டு (ஆட்டத்தின் கடைசி நொடிகளில் ரெய்டு செல்வது) செல்வதில் சிறப்பு திறன் பெற்ற செல்வமணிக்கு கபடி தான் தனது வாழ்க்கை என்ற மூச்சுடன் அதில் அதிக முனைப்பு காட்டினார்.

இதன் விளைவாக 2014-ம் ஆண்டு தமிழக அணிக்காக தேர்வானார். சிறந்த திறனை வெளிப்படுத்தியதன் காரணமாக விளையாட்டு பிரிவில் தென்னக ரெயில்வேயில் அவருக்கு எழுத்தர் பணி தேடிவந்தது. பணியில் சேர்ந்தபடி தமிழக அணிக்காக கபடி போட்டிகளில் பங்கேற்று வந்த வருக்கு திடீரென புரோ கபடி லீக் தொடரின் வாயிலாக வாய்ப்புகள் எட்டிப் பார்ர்த்தது.

2014-ம் ஆண்டு இவரது மின்னல் வேக ரெய்டை பார்த்து புரோ கபடி லீக் தொடரின் டெல்லி அணி பயிற்சியாளர் பொன்னப்பா சற்று வியந்தார். இதையடுத்து அவரை அந்த சீசனில் டெல்லி அணி ரூ.2 இலட்சத்துக்கு ஏலம் எடுத்தது. 2 ஆட்டங்களில் மட்டுமே அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்த போதும் தனது முத்திரையை பதிக்க அவர் தவறவில்லை.

தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி கட்டத்தில் ரெய்டு சென்று 4 புள்ளிகள் சேர்த்து ஆட்டத்தின் முடிவையே புரட்டிப் போட்டார். இதனால் அடுத்த சீசனிலும் டெல்லி அணி அவரை தக்கவைத்தது. இதுவரை 3 சீசன்களில் விளையாடி உள்ள செல்வமணி 31 ஆட்டங்களில் பங்கேற்று 222 முறை ரெய்டு சென்றுள்ளார். இவற்றில் 72 ரெய்டுகள் வெற்றிகரமாக அமைந்துள்ளன. புரோ கபடி லீக் தொடரின் 5-வது சீசனுக்காக செல்வமணியை ரூ.73 இலட்சத்துக்கு செய்ப்பூர் பாந்தர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது[1]. 3-வது சீசனில் ரூ.11 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பண மழையில் நனைக்கப்பட்டுள்ளார் செல்வமணி.

அவர் இராணுவ வேலையை விட்டு வந்தவுடன் அவரது குடும்பத்தினர் வருத்தம் அடைந்தார்கள். எனினும் அவரது தாய் ஆதரவளித்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக அவரது தம்பி தினேஷ் குமார் தன் படிப்பை தியாகம் செய்தார்.[2] தன் அண்ணன் கபடி விளையாடுவதற்காக அவன் தனது படிப்பை 9-ஆவது வகுப்புடன் நிறுத்திக் கொண்டு ஓட்டுநர் வேலைக்கு சென்றார். அண்ணன் சுமையை அவன் தாங்கிக் கொண்டதால்தான் செல்வமணியால் கபடியில் இந்த அளவுக்கு சாதிக்க முடிந்தது[3].

புரோ கபடி லீக்கில் விளையாடத் தொடங்கியதும் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்துள்ளார் செல்வமணி. முதல் 3 சீசன்களிலும் கிடைத்த வருமானத்தைக் கொண்டு தனது வீட்டை சீரமைத்தார். தற்போதும் ஓட்டு வீட்டில்தான் குடியிருந்து வருகிறார்.

எதிர்பார்ப்பு[தொகு]

தமிழகத்தில் அரசு வேலையில் விளையாட்டு ஒதுக்கீடு தற்போது பெருமளவில் குறைந்து விட்டது. முன்பெல்லாம் கபடிக்கு 7 முதல் 8 துறைகளில் வேலை வாய்ப்பு இருந்தது. ஆனால் தற்போது சொற்ப துறைகளிலும் அதிலும் அரிதாகவே பணி வழங்கப்படுகிறது.

கபடியில் சிறந்து விளங்கும் செல்வமணி போன்று மேலும் பல தமிழக வீரர்கள் அகில இந்திய அளவில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் கடந்த உலகக் கோப்பையில் விளையாடிய சேரலாதன் தர்மராஜூம் அடங்குவார். தமிழக அரசு பணியில் இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காததால் தான் குடும்பத்தினரை விட்டு அடுத்த மாநிலத்தில் பணிபுரிகின்றனர்.

உண்மையில் தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் விளையாட்டு ஒதுகீட்டில் பணி வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 2017 புரோ கபடி லீக்கில் தமிழக வீரர்கள் 24 பேர் பல்வேறு அணிகளில் இடம் பிடித்துள்ளனர். செல்வமணியின் முன்மாதிரி வீரர் இந்திய கபடி அணியின் தலைவர் அனுப்குமார்தான்.

2017 புரோ கபடி லீக்கில் ஜெய்ப்பூர் அணிக்காக நட்சத்திர வீரரான மன்ஜித் சில்லார் தலைமையில் செல்வமணி விளையாட உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "புரோகபடிலீக்2017". பார்க்கப்பட்ட நாள் 9 சூலை 2017.
  2. "நான் கபடி விளையாடுவதற்காக என் தம்பி தியாகம் செய்தான் : சேலம் வீரர் செல்வமணி உருக்கம்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-05-30.
  3. "சேலம் வீரர் செல்வமணியின் குடும்பம்". பார்க்கப்பட்ட நாள் 9 சூலை 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபடி_செல்வமணி&oldid=3438977" இலிருந்து மீள்விக்கப்பட்டது