கன்னி நாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கன்னி
தோன்றிய நாடு இந்தியா
தனிக்கூறுகள்
நாய் (கேனிஸ் லூபிஸ் பெமிலியாரிஸ்)

கன்னி (இந்த ஒலிக்கோப்பு பற்றி ஒலிப்பு) (Kanni) என்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நாயினமாகும். இது ஒரு அரிய ஓரிடவழி உயிரினமாகும்.[1][1] இந்த நாய்கள் மதுரை நாயக்கர்கள் காலத்தில் ஆந்திர, கர்நாடகப் பகுதியிலிருந்து வந்த படைகளின் தலைவர்களால் அங்கிருந்து கொண்டு வரப்பட்டவை. இவற்றுக்குப் பொடித்தல நாய், ஊசிமுஞ்சிநாய், கூழைவால் நாய், குவளைவாய் நாய், மொசக்கடி நாய், குருமலை நாய், குருந்தன்மொழி நாய், தோல்நாய் என பல பெயர்கள் வழங்கப்பட்டுவந்தன. இந்த இனம் பெரும்பாலும் வேட்டையாடுதல் தேவைகளுக்காக வளர்க்கப்படுகின்றன.

விளக்கம்[தொகு]

தோற்றம்[தொகு]

பொதுவாக கன்னி நாய் பார்வைக்கு ஒரளவுக்கு கோட்டடு டாபர்மென் பின்ஸ்சர் நாயைப்போல இருக்கும், இது இயல்பான காதுகள் மற்றும் வால் கொண்டிருக்கும். இந்த நாய் பொதுவாக கருப்பு மற்றும் பழுப்பு நிறத்திலும் இருக்கும்,[2][2] சிலவற்றிற்கு பாதங்களிலும், மார்பிலும் குறைந்த அளவு வெண்மை நிறம் உள்ளதாக இருக்கும். மேலும் இதில் ஒரு கிரீம் நிற நாய் வகை ஒன்றும் உள்ளது, இது "பால்கன்னி" என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. கன்னி நாய் நல்ல கூரான நீண்ட முகம், சிறிய தலை, நன்கு கீழிறங்கிய மார்பு, மெலிந்த-நீளமான உடல், மிகக்குறைந்த ரோமம், நீண்ட மெல்லிய வால் ஆகியவற்றுடன் அழகான உடலமைப்போடு கன்னி நாய் அமைந்திருக்கும். பொதுவாக ஆண் நாய் நின்ற நிலையில் சராசரியாக முன்தோள்வரை 25 அங்குலம் (64 செண்டி மீட்டர்) உயரமும், பெண் நாய் 22 அங்குலம் (56 செண்டி மீட்டர்) முன்தோள் உயரமுடையவையாக உள்ளன.

குணம்[தொகு]

ஆண் கன்னி

கன்னி நாய் கூச்ச சுபாவமானது என்றாலும் தேவைப்பட்டால் அது வீட்டையும் தன் எஜமானனையும் காக்கும். இவை அமைதியானவை தொல்லை தரும்வகையில் குரைக்காதவை. கன்னி நாய்கள் மிகவும் விசுவாசமாக இருப்பவை. பயிற்சியளிக்க எளிதானவையாக இருக்கும், ஆனால் அவை எப்போதும் வேட்டையின் போது தனித்து இயங்க நினைப்பவை.  இவை  மிகவும் சுறுசுறுப்பானவையாகவும், வலுவான கால்களைக் கொண்டதாகவும் இருப்பதால்  மான்களை வேட்டையாட பயன்படுத்தப்படுகின்றன.

வரலாறு[தொகு]

கன்னி நாய் தமிழ்நாட்டின் திருநெல்வேலி, கோவில்பட்டி, கழுகுமலை, Kileral, கோடாங்கிப்பட்டி, சிவகாசிமதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காணக்கிடைக்கிறது. இந்த நாயின் பெயர் கன்னி (அதாவது கன்னி கழியாத பெண்) என்ற பெயர் வருவதற்குக் காரணம், இந்த நாய்கள் திருமணத்திற்கு முன்பு மணமகனுக்கு பரிசாக வழங்கப்பட்டது, அதாவது வரதட்சணை பொருட்களில் ஒன்றாக இந்த நாயும் தரப்பட்டது. இதனால் இந்த நாயிக்கு கன்னி என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தென் தமிழகத்தில் உள்ள கன்னி ஆடு என்ற ஆட்டு இனத்தைப் போன்ற நிறத்தில் இருந்த இந்த நாய்களுக்கும், அதே பெயர் வழங்கப்பட்டது என்கின்றார் இரா சிவசித்து.[3] கன்னி நாயை வளர்பவர்கள் பொதுவாக விற்பதிதில்லை, வீடுகளிலேயே வைத்துக்கொள்கின்றனர். ஆனால் அவற்றை நன்றாக பார்த்துக்கொள்ளதாக உறுதியளிப்பவர்களுக்கு அன்பளிப்பாக அளிப்பர். இந்த நாய்களை வளர்பவர்கள் இவற்றைத் தெருவில் சுற்ற அனுமதிப்பதில்லை, செல்லப்பிரானிகளாக மட்டுமே வளர்க்கின்றனர். இவற்றிற்கு காலை உணவாக பாலும், மதிய உணவாக சோளக் கஞ்சியும், மாலை உணவாக கேழ்வரகுக் கஞ்சியும் தரப்படுகிறது.  இறைச்சி வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே தரப்படுகிறது. இந்த இன நாய்கள் மிக அரிதானதான ஒன்றாக, அழிவின் விளிம்பில் உள்ளது. இந்த இனத்தில் மாதிரிகள் சில மட்டுமே உள்ளன. இந்த இனத்தை காக்க எந்த  முயற்சிகளும் இருப்பதாக இல்லை. இதனால் இவற்றைப் பற்றி குறைந்த  தகவல்களே உள்ளன.

மேட்டிமை அடையாளம்[தொகு]

தென் தமிழகத்தில் கன்னி நாய். ஒரு மேட்டிமையின் அடையாளமாக இருந்தது. வேட்டையில் யாருடைய நாய் அதிக வேகமாக ஓடி அதிக முயல்களைப் பிடிப்பது என்பது அந்த நாய் உரிமையாளர்களுக்கு பெருமைத் தரக்கூடியதாக இருந்தது. இதனால் கன்னி நாய்க்குட்டிகளில் தேவைக்கு மட்டும் வைத்துக்கொண்டு மற்ற குட்டிகளைக் கொன்றுவிடும் வழக்கம் பல காலம் நடைமுறையில் இருந்தது. இதனால் இந்த நாய் வளர்ப்பவர்களுக்குள் பகை மூள வாய்ப்பு இருக்கும். இந்தப் போட்டியால் வேட்டைக்குச் செல்லக்கூடிய நேரத்தில் நாயின் காலை ஒடிப்பது, மருந்து வைப்பது, கோழி ஈரலில் குண்டூசி ஏத்தி நாய்க்குப் போட்டுக் கொல்வது என நாய்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டன. இதைத் தவிர்க்க எண்ணியே பெரும்பாலும் தன் சமூகத்தினருடனே வேட்டைக்குச் சென்றனர்.[4]

தற்கால இலக்கியத்தில்[தொகு]

கி. ராஜநாராயணன் எழுதிய நூலான கரிசல்காட்டுக் கடுதாசி என்ற நூலில் வரும் ஒரு பாத்திரம் கன்னி நாய்களை இனக்கலப்பு ஏற்படாமல் காத்து வளர்த்து போல வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Baskaran, S. Theodore (9 January 2005), "Canine watch", The Hindu, http://www.thehindu.com/thehindu/mag/2005/01/09/stories/2005010900860800.htm, பார்த்த நாள்: 25 September 2014 
  2. Tamil, Zen Dogs, archived from the original on 22 November 2010, http://web.archive.org/web/20101122084345/http://www.zendogs.in/ 
  3. இரா. சிவசித்து (2017 செப்டம்பர் 23). "ஆட்டுக்கும் நாய்க்கும் ஒரே பெயர்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 23 செப்டம்பர் 2017.
  4. இரா.சிவசித்து (2018 அக்டோபர் 6). "சாதியும் நாயும்". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 7 அக்டோபர் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னி_நாய்&oldid=2585587" இருந்து மீள்விக்கப்பட்டது