கன்டேஜியன் (2011 திரைப்படம்)
கன்டேஜியன் | |
---|---|
இயக்கம் | ஸ்டீவன் சோடர்பெர்க் |
தயாரிப்பு |
|
கதை | ஸ்காட் இசட். பர்ன்ஸ் |
இசை | கிளிஃப் மார்ட்டினேஸ் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | பீட்டர் ஆண்ட்ரூஸ் |
படத்தொகுப்பு | ஸ்டீபன் மிரியோன் |
கலையகம் |
|
விநியோகம் | வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் |
வெளியீடு | செப்டம்பர் 3, 2011(68வது வெனிசு சர்வதேச திரைப்பட விழா) செப்டம்பர் 9, 2011 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 106 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | ஐஅ$60 மில்லியன் (₹429.1 கோடி) |
மொத்த வருவாய் | ஐஅ$136.5 மில்லியன் (₹976.2 கோடி)[1] |
கன்டேஜியன் (ஆங்கிலம்: Contagion) என்பது ஸ்டீவன் சோடர்பெர்க் இயக்கிய 2011 ஆம் ஆண்டு அமெரிக்க திரைப்படமாகும். இப்படத்தில் மரியன் கோடில்லார்ட், மேட் டாமன், லாரன்ஸ் ஃபிஷ்பர்ன், ஜூட் லாவ், கிவ்வினெத் பேல்ட்ரோ, கேட் வின்ஸ்லெட், பிரையன் கிரான்ஸ்டன், ஜெனிஃபர் எலே, மற்றும் சனா லாதன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் வைரஸ் மூலம் பரவும் ஒரு நோயைப் பற்றி உருவாக்கப்பட்ட படமாகும்.[2] அந்த நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் முயற்சிப்பதை இப்படம் கூறியிருந்தது. கொள்ளை நோயால் சமூக கட்டமைப்பானது எவ்வாறு சீரழிகிறது என்பதை பற்றியும் இப்படம் கூறியிருந்தது. அந்த நோயை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்துவதை பற்றியும் இப்படத்தில் கூறப்பட்டிருந்தது.
2009 ஆம் ஆண்டு திரைப்படமான த இன்ஃபார்மன்ட்! இல் இணைந்து பணியாற்றிய பிறகு சோடர்பெர்க் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஸ்காட் இசட். பர்ன்ஸ் ஆகியோர் ஒரு வைரஸின் திடீர் பரவலைப் பற்றி ஒரு திரைப்படத்தை உருவாக்கலாம் என்று விவாதித்தனர். 2002-2004 சார்ஸ் நோய் பரவல் மற்றும் 2009 ஃப்ளூ ஆகியவையே அவர்கள் இத்தகைய கதையுடைய ஒரு திரைப்படத்தைப் பற்றி விவாதிக்க தூண்டுகோலாக இருந்தன. இந்தத் திரைப்படத்திற்காக பர்ன்ஸ் உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும், டபுள்யூ. இயான் லிப்கின் மற்றும் லாரன்ஸ் "லேரி" பிரில்லியன்ட் போன்ற மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்தார். ஆரம்ப கட்ட படப்பிடிப்புகள் செப்டம்பர் 2010 ஆம் ஆண்டு ஆங்காங்கில் தொடங்கின. பிறகு பிப்ரவரி 2011 வரை சிகாகோ, அட்லான்டா, இலண்டன், ஜெனீவா, மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களில் தொடர்ந்தன.
கன்டேஜியன் செப்டம்பர் 3, 2011 ஆம் ஆண்டு இத்தாலியின் வெனிசு நகரத்தில் 68 வது வெனிசு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. செப்டம்பர் 9, 2011 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. வணிகரீதியாக பார்க்கும்போது, ஐஅ$60 மில்லியன் (₹429.1 கோடி) செலவில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் ஐஅ$136.5 மில்லியன் (₹976.2 கோடி) வசூல் செய்தது. கதையம்சம் மற்றும் நடிப்பிற்காக இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தைப் பெற்றது. இப்படத்தின் துல்லியத் தன்மை காரணமாக அறிவியலாளர்களிடத்திலும் இந்த திரைப்படம் நல்ல பெயரைப் பெற்றது. 2019–20 கொரோனாவைரசுத் தொற்று நோயின் போது இந்தத் திரைப்படம் ஒரு புதுப்பிக்கப்பட்ட பிரபல தன்மையை பெற்றது.[3]
கதைச்சுருக்கம்[தொகு]
ஆங்காங்கில் இருந்து ஒரு வணிகரீதியான பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் பெத் எம்ஹாப் சிகாகோவில் தனது முன்னாள் காதலனை சந்திக்கிறாள். இரண்டு நாட்களுக்குப் பிறகு மினியாப்பொலிஸ் புறநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் வலிப்பு நோய் காரணமாக தரையில் விழுகிறாள். அவளது கணவர் மிட்ச் எம்ஹாப் அவளை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார். ஆனால் அறியாத காரணம் காரணமாக அவள் இறக்கிறாள். மிட்ச் வீட்டிற்கு திரும்புகிறார். அங்கு தனது தத்து மகனும் இறந்ததை அறிகிறார். மிட்ச் தனிமைப்படுத்தப்படுகிறார். ஆனால் பிறகு அவருக்கு இந்த நோயை எதிர்க்க நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உள்ளது கண்டுபிடிக்கப்படுகிறது. தனது மகள் ஜோரியை காண வீட்டிற்கு செல்கிறார்.
அட்லாண்டா நகரத்தில் உள்நாட்டு பாதுகாப்பு துறையின் பிரதிநிதிகள் சி.டி.சி.யில் உள்ள டாக்டர் எல்லிஸ் சீவரை சந்திக்கின்றனர். விழாக்கால வார இறுதியில் மக்களை அச்சுறுத்த உருவாக்கப்பட்ட ஒரு உயிரி ஆயுதம்தான் இந்த நோய் என்று தங்களது ஐயத்தை தெரிவிக்கின்றனர். சீவர் நோய் பரவல் உளவுத்துறை சேவை அதிகாரியான டாக்டர் எரின் மியர்ஸை மினியாப்பொலிஸ் நகரத்திற்கு துப்பறிய அனுப்புகிறார். பெத் மூலம்தான் இந்த நோய் பரவியிருக்கிறது என மியர்ஸ் கண்டறிகிறாள். மியர்ஸ் உள்ளூர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறாள். ஆனால் பொது சுகாதார நடவடிக்கை எடுப்பதற்கு அவர்கள் தயங்குகின்றனர். பிறகு மியர்ஸும் இந்த நோயால் தாக்கப்பட்டு இறக்கிறாள். இந்த புதுவித வைரஸ் பரவ ஆரம்பித்தவுடன் பல நகரங்கள் ஒடுக்கத்தின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. மக்கள் சூறையாடல் மற்றும் வன்முறையில் ஈடுபட ஆரம்பிக்கின்றனர்.
சி.டி.சி.யில் ஆராய்ச்சி செய்யும் டாக்டர் அல்லி ஹெக்ஸ்டால் இந்த வைரஸானது பன்றிகள் மற்றும் வவ்வால்களில் உள்ள வைரஸ்களின் மரபணுக்களை கலவையாக கொண்டுள்ளது என்று அறிகிறாள். இந்த நோய்க்கான மருந்து தயாரிப்பதற்கான முயற்சிகள் அறிவியலாளர்களால் உயிரணு வளர்ப்பு கண்டுபிடிக்கப்படாத காரணத்தால் நின்று போகின்றன. அந்த உயிரணு வளர்ப்பில் தான் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த MEV-1 வைரஸை அவர்கள் வளர்ப்பதற்கு நினைத்திருந்தனர். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான டாக்டர் இயான் சுஸ்மன் அவரிடமிருந்த மாதிரிகளை அழிக்குமாறு சீவரிடமிருந்து வந்த கட்டளைகளை மீறுகிறார். அதே நேரத்தில் ஹெக்ஸ்டால் ஒரு தடுப்பு மருந்தை தயாரிப்பதற்கான தனது வேலைகளை தொடங்குகிறாள். மற்ற அறிவியலாளர்கள் இந்த வைரஸானது மக்கள் தொடும் இடங்களிலெல்லாம் தொற்றிக் கொண்டு பரவுகின்றன என கண்டறிகின்றனர். இந்த வைரஸானது அடிப்படை இனப்பெருக்க எண்ணாக நான்கை கொண்டுள்ளது என்று அறிகின்றனர். அவர்கள் உலக மக்கள்தொகையில் பன்னிரண்டில் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்படலாம் என்று யூகிக்கின்றனர். அதில் 25–30% பேர் இறக்கலாம் என்று கருதுகின்றனர்.
வதந்தி புனைபவரான ஆலன் குரும்விடே தனது வலைப்பக்கத்தில் இந்த வைரஸ் பற்றிய காணொளிகளை பதிவிடுகிறார். அதில் ஒரு காணொளியில் ஃபோர்சைதியா என்ற தாவரத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஓமியோபதி மருந்து மூலம் தனக்கு ஏற்பட்ட வைரஸ் தொற்றை தான் குணப்படுத்திக் கொண்டதாக கூறுகிறார். ஃபோர்சைதியா மருந்தை பெறுவதற்காக மருந்து கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஒரு தொலைக்காட்சி நேர்காணலின் போது சீவர் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ரகசியமாக செய்தி தெரிவித்து சிகாகோ நகரம் ஊரடங்குக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்னர் அவர்களை வெளியேற சொன்னதை குரும்விடே தெரிவிக்கிறார். சீவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என அவருக்கு தெரிவிக்கப்படுகிறது. ஃபோர்சைதியா மருந்தின் விற்பனையை அதிகரிப்பதற்காக தனக்கு நோய் தொற்று ஏற்பட்டது போல் நடித்த குரும்விடே வதந்தி பரப்பிய காரணத்திற்காக கைது செய்யப்படுகிறார்.
வீரியமற்ற வைரஸ்களை பயன்படுத்தியதன் மூலம் ஹெக்ஸ்டால் பயன்படுத்தப்படக் கூடிய ஒரு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கிறாள். நோயாளிகளிடம் இருந்து அவர்களது விருப்பத்தை பெற்று அவர்கள் மீது அந்த மருந்தை செலுத்தி பரிசோதிக்க காலமாகும் என்பதால் ஹெக்ஸ்டால் அந்த பரிசோதனை மருந்தை தனக்கு செலுத்திக்கொண்டு நோய் பாதிக்கப்பட்ட தனது தந்தையை சந்திக்கிறாள். அவளுக்கு MEV-1 வைரஸ் தொற்றவில்லை. இதன் மூலம் அந்த தடுப்பு மருந்து வெற்றி அடைந்ததாக அறிவிக்கப்படுகிறது. பிறந்தநாட்களை அடிப்படையாகக் கொண்டு லாட்டரி முறையில் சி.டி.சி. தடுப்பு மருந்துகளை மக்களுக்கு கொடுக்கிறது. அதே நேரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையானது ஐக்கிய அமெரிக்காவில் 25 லட்சமாகவும் உலக அளவில் 2.6 கோடியாகவும் அதிகரிக்கிறது.
இதற்கு முன்னதாக ஆங்காங்கில் உலக சுகாதார அமைப்பின் நோய் கட்டுப்பாட்டாளரான டாக்டர் லியோனோரா ஒரான்டஸ் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் மக்காவில் உள்ள சூதாட்ட விடுதியில் கேமராக்களில் உள்ள காணொளிகளை ஆராய்கின்றனர். பெத்திற்கு யாரிடமிருந்து இந்த நோய் தொற்றியது என்பதை அறிய முற்படுகின்றனர். அரசு அதிகாரியான சுன் பெங் ஒரான்டஸை கடத்துகிறார். தனது கிராமத்தில் உள்ளவர்களுக்கு MEV-1 தடுப்பு மருந்தை பெறுவதற்காக பேரம் பேசுகிறார். ஒரான்டஸ் அங்கு பல மாதங்களுக்கு இருக்கிறாள். உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் தடுப்பு மருந்தை கொடுத்து அவளை விடுவிக்கின்றனர். தன்னை மீட்க கிராமத்திற்கு கொடுக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் போலியானவை என்று அறிந்த ஒரான்டஸ் அவர்களை எச்சரிக்க ஓடுகிறாள்.
கடைசியாக கதையின் ஆரம்பத்தில் ஒரு நிலச் சமன் பொறி சீனாவிலுள்ள ஒரு மழைக்காட்டில் வாழை மரங்களை வீழ்த்துகிறது. இதன் காரணமாக அந்த மரத்தில் இருந்த வவ்வால்கள் வெவ்வேறு திசைகளில் பறக்க ஆரம்பிக்கின்றன. அதில் ஒரு வவ்வால் ஒரு பன்றி பண்ணைக்குள் செல்கிறது. அதன் வாயில் இருந்த ஒரு துண்டு வாழைப்பழம் கீழே விழுகிறது. அந்த வாழைப்பழத்தை ஒரு பன்றி உண்ணுகிறது. பின்னர் அந்தப் பன்றியானது வெட்டப்பட்டு, மக்காவிலுள்ள ஒரு சூதாட்ட விடுதியில் ஒரு சமையல்காரர் அதனை சமைக்கிறார். அந்த சமையல்காரர் பெத் உடன் கை குலுக்குகிறார். இவ்வாறாக அந்த வைரஸ் பரவுகிறது.
நடிகர்கள்[தொகு]

- மரியன் கோடில்லார்ட் - டாக்டர் லியோனோரா ஒரான்டஸ், உலக சுகாதார அமைப்பின் நோய் கட்டுப்பாட்டியலாளர்

- மேட் டாமன் - மிட்ச் எம்ஹாப்
- லாரன்ஸ் ஃபிஷ்பர்ன் - டாக்டர் எல்லிஸ் சீவர்
- ஜூட் லாவ் - ஆலன் குரும்விடே
- கிவ்வினெத் பேல்ட்ரோ - பெத் எம்ஹாப்

- கேட் வின்ஸ்லெட் - டாக்டர் எரின் மியர்ஸ், நோய் பரவல் உளவுத்துறையின் ஒரு அதிகாரி
- பிரையன் கிரான்ஸ்டன் - ரியர் அட்மிரல் லைல் ஹேகர்டி, ஐக்கிய அமெரிக்க பொது சுகாதார சேவை படைப்பிரிவு
- ஜெனிஃபர் எலே - டாக்டர் அல்லி ஹெக்ஸ்டால், சி.டி.சி.யின் ஒரு ஆராய்ச்சி அறிவியலாளர்
- எலியட் கவுல்ட் - டாக்டர் இயான் சுஸ்மன்
- எங் சின் ஹான் - சுன் ஹான்
- ஜான் ஹாவ்க்ஸ் - ரோஜர், சி.டி.சி. காவலாளி மற்றும் டாக்டர் சீவரின் அறிமுகம் பெற்ற நபர்
- அன்னா ஜாகோபி-ஹெரான் - ஜோரி எம்ஹாப், மிட்ச் எம்ஹாப்பின் மகள்
- ஜோஸி ஹோ - லி ஃபாயின் சகோதரி
- சனா லாதன் - ஆப்ரே சீவர், டாக்டர் சீவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்
- டெமெட்ரி மார்ட்டின் - டாக்டர் டேவிட் ஐசன்பர்க், டாக்டர் ஹெக்ஸ்டாலுடன் சி.டி.சி.யில் பணிபுரிபவர்
- அர்மின் ரோடே - டேமியன் லியோபோல்ட், உலக சுகாதார அமைப்பின் ஒரு அதிகாரி
- என்ரிக்கோ கொலன்டோனி - டென்னிஸ் பிரெஞ்ச், உள்நாட்டு பாதுகாப்புத்துறையின் ஒரு அதிகாரி
- லாரி கிளார்க் - டேவ், டாக்டர் மியர்ஸுடன் பணியாற்றும் ஒரு மின்னசோட்டா சுகாதார அதிகாரி
- மோனிக் கேப்ரியலா கர்னன் - லொரைன் வாஸ்குவஸ், சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு பதிப்பு பத்திரிகையாளர்
வரவேற்பு[தொகு]
புதுப்பிக்கப்பட்ட புகழ்[தொகு]
2020 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் கொரோனாவைரசுத் தொற்று நோயின் காரணமாக ஒரு புதுப்பிக்கப்பட்ட புகழை அடைந்தது. ஏனெனில் இந்தத் திரைப்படத்தில் குறிப்பிடப்பட்ட தொற்று நோய்க்கும், கொரோனாவைரசுத் தொற்று நோய்க்கும் சில ஒற்றுமைகள் இருந்தன.[4][5][6][7][8][2] 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் போது ஐ-டியூன்ஸ் இல் ஏழாவது மிக பிரபலமான திரைப்படமாக கன்டேஜியன் தரவரிசை பெற்றது. வார்னர் புரோஸ். இல் இரண்டாவது அட்டவணை தலைப்பாக இத்திரைப்படம் பட்டியலிடப்பட்டது. 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த திரைப்படம் 270 ஆவது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டிருந்தது. 2020 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் பதிப்புரிமை மீறல் இணையதளங்களில் இந்த திரைப்படத்தை தினசரி பார்ப்பவர்களின் சராசரி எண்ணிக்கையானது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 5,609% அதிகரித்திருந்தது.[9][10] சந்தா செலுத்தி காணொளிகளை காணும் எச்.பி.ஓ. நவ் எனும் சேவையும், தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு கன்டேஜியன் படம் தான் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் என செய்தி வெளியிட்டது.[11]
உசாத்துணை[தொகு]
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ 2.0 2.1 Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 4419: attempt to call field 'set_message' (a nil value).
- ↑ Ross, Martha (January 24, 2020). "Coronavirus outbreak has people seeking answers from 'Contagion' — but it's just a movie". https://www.mercurynews.com/coronavirus-outbreak-has-people-seeking-answers-from-contagion-but-its-just-a-movie.
- ↑ Ahsan, Sadaf (January 29, 2020). "In the wake of the coronavirus, movies like Contagion and Outbreak have become very popular". The Guardian (SaltWire Network). https://www.theguardian.pe.ca/lifestyles/entertainment/in-the-wake-of-the-coronavirus-movies-like-contagion-and-outbreak-have-become-very-popular-404335/.
- ↑ Castrodale, Jelisa (February 1, 2020). "Coronavirus Has Led to a Surge in Popularity for the 2011 Movie 'Contagion'". Vice. https://www.vice.com/en_us/article/qjdv7m/coronavirus-has-led-to-a-surge-in-popularity-for-the-2011-movie-contagion. பார்த்த நாள்: February 3, 2020.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 4442: attempt to call field 'make_sep_list' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).