உள்ளடக்கத்துக்குச் செல்

கத்ரி மஞ்சுநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கத்ரி மஞ்சுநாதர் கோயில்
அமைவிடம்
மாநிலம்:கருநாடகம்
மாவட்டம்:தெற்கு கன்னட மாவட்டம்
அமைவு:கத்ரி
கோயில் தகவல்கள்

12°53′8.8″N 74°51′20.1″E / 12.885778°N 74.855583°E / 12.885778; 74.855583

கத்ரி மஞ்சுநாதா கோயில் (Kadri Manjunath Temple) என்பது இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் மங்களூரில் அமைந்துள்ள ஓர் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயிலாகும். சிவள்ளி மத்வ பிராமணர்கள் கோயிலின் பொறுப்பாளர்களாகவும் பூசாரிகளாகவும் உள்ளனர்.[1]

வரலாறு

[தொகு]

கத்ரி மலைகளில் உள்ள மஞ்சுநாதேசுவரர் கோயில் 10 அல்லது 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது 14 ஆம் நூற்றாண்டில் ஒரு முழுமையான கல் கட்டமைப்பாக மாற்றப்பட்டது. 

அலுபா வம்சத்தைச் சேர்ந்த பழைய கோவில் ஒன்று கத்ரியின் அமைந்துள்ளது. குந்தவர்மன் என்ற மன்னரால் நிறுவப்பட்ட பல சிறந்த வெண்கல சிலைகள் இந்த கோவிலில் உள்ளன. சுமார் 5 அடி உயரமுள்ள பிரம்மன் என்று அடையாளம் காணப்பட்ட லோகேசுவரின் சிலையின் பீடத்தில் பொ.ச. 968 தேதியிட்ட அவரது கல்வெட்டுகளைக் காணலாம்.[2][3][4] கல்வெட்டில், குந்தவர்மன் மன்னன் துணிச்சலில் அருச்சுனனுடன் ஒப்பிடப்படுகிறான். கல்வெட்டில் மங்களூர் "மங்களபுரம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கோயிலின் சமையலறையில் இருக்கும் கிபி 1 ஆம் நூற்றாண்டின் துளு, கன்னடம் மற்றும் மலையாள எழுத்துகளில் உள்ள மற்றொரு கல்வெட்டு, ஆட்சியாளரும் உள்ளூர் நில உரிமையாளர்களும் கோயிலுக்கு நிலத்தை தானமாக அளித்ததாகக் கூறுகிறது.

புராணக் கதை

[தொகு]

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வசித்து வந்த பரசுராமர், சத்திரியர்களைக் கொன்று, காசியபருக்கு நிலங்களை தானமாக அளித்ததாக ஒரு புராணக் கதை கூறப்படுகிறது. அவர் சிவபெருமானிடம் வாழ இடம் கேட்டு பிரார்த்தனை செய்தார். கதிரியில் தவம் செய்தால், உலக நன்மைக்காக சிவபெருமான் மஞ்சுநாதராக மறுபிறவி எடுப்பார் என்று பரசுராமருக்கு உறுதியளித்தார். சிவனின் கட்டளைப்படி பரசுராமர் தனது கோடரியை கடலில் எறிந்து, தனது தவத்திற்காக ஒரு இடத்தை உருவாக்கினார். பரசுராமரின் பிரார்த்தனைக்கு இணங்க, சிவபெருமான் பார்வதி தேவியுடன் மஞ்சுநாதராக அவருக்குத் தோன்றி, உலக நன்மைக்காக கதிரியில் தங்கினார். மஞ்சுநாதரின் கட்டளைப்படி சப்தகோடி மந்திரங்கள் ஏழு தீர்த்தங்களாக மாறின.

பௌத்த வரலாறு

[தொகு]

இந்த இந்துக் கோவிலுக்கு பௌத்த வரலாறும் உள்ளன. இங்கு பௌத்த மதம் கிபி 10-ஆம் நூற்றாண்டு வரை பின்பற்றப்பட்டது. மற்ற இடங்களில் அது வீழ்ச்சியடைந்த போதிலும், மஞ்சுசிறீ மற்றும் அவலோகிதர் போன்றவர்களின் மீதான பக்தி இந்த பிராந்தியத்தில் தொடர்ந்தது. நாத சைவ வழிபாட்டு முறை ஓரளவு பௌத்த மதத்தையும் தாந்த்ரீக சிவன் பாரம்பரியத்தையும் நோக்கியதாக இருந்தது. இதன் விளைவாக, பல பௌத்தக் கோயில்கள் இந்துக்களால் கைப்பற்றப்பட்டன. எம். கோவிந்த பாய் என்பாரின் கூற்றுப்படி, இந்த கோயில் கத்ரி மஞ்சுநாதர் கோயில் என்று அழைக்கப்பட்டது. மஞ்சுநாதர் சிவனுடனும் கதிரி என்பது வச்சிரயான வழிபாட்டின் பௌத்த மடாலயமான கத்ரி புத்த விகாரத்திலிருந்து பெறப்பட்டது.[5]

சிவ பக்தரான அலுபா வம்சத்தின் மன்னர் குந்தவர்மன், அவலோகிதர் உருவத்தின் அடிப்பகுதியில் ஒரு கல்வெட்டை விட்டுச் சென்றார். இந்த உருவம் புத்தரின் உருவமல்ல, ஆனால் சிவனின் ஒருங்கிணைந்த வடிவமாக வணங்கப்பட்ட போதிசத்துவரின் உருவமாகும். மேலும், இது போதிசத்துவ மஞ்சுசிறீயின் வழிபாட்டின் மையமாக இருந்தது என்று எம். கோவிந்த பாய் முடிவு செய்துள்ளார். பின்னர் இந்த போதிசத்துவர்கள் சைவ தெய்வங்களாக அடையாளம் காணப்பட்டனர்.[5] சிவலிங்கமும் போதிசத்துவமும் இந்த இடத்தில் பல நூற்றாண்டுகளாக ஒன்றாக வணங்கப்பட்டு, அது முற்றிலும் சைவக் கோயிலாக மாற்றப்பட்டது என கதரிகா விகாரக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.[5]

தற்போது, ​​இந்த கோயிலின் பிரதான தெய்வமாக மஞ்சுநாதர் எனப்படும் ஒரு சிவலிங்கம் உள்ளது. மூன்று முகங்கள் மற்றும் ஆறு கைகளுடன் அமர்ந்த நிலையில் இது சுமார் 1.5 மீட்டர் உயரம் கொண்ட[6] லோகேசுவரர் சிலை இந்தியாவின் சிறந்த வெண்கல சிலையாகக் கருதப்படுகிறது.[7]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Veronique Bouillier (7 August 2017). Monastic Wanderers: Nāth Yogī Ascetics in Modern South Asia. Routledge. p. 64. ISBN 9781351399623. The complex, temples and monastery, are included in the same appellation of Kadri-Mañjunāth that attests their connection, even though the Mañjunāth temple is now in charge of the Vishnuite Madhva Brahmins.
  2. Worship of Lord Brahma, Part 85, 2005
  3. Collected Papers on Buddhist Studies, Padmanabh S. Jaini, Motilal Banarsidass Publ., 2001 p. 148
  4. Monastic Wanderers: Nāth Yogī Ascetics in Modern South Asia, Veronique Bouillier, Routledge, 2017, ch. 4. The Kadli Math History
  5. 1 2 3 Jaini, Padmanabh S., ed. (2001). Collected papers on Buddhist studies (1. ed.). Delhi: Motilal Banarsidass. pp. 147–150. ISBN 8120817761.
  6. Edwards, Nick; David Abram; et al. (2003). The rough guide to South India (3rd ed.). London: Rough Guides. p. 250. ISBN 1843531038.
  7. "History set in bronze". Deccan Herald. 2005-04-12 இம் மூலத்தில் இருந்து 2006-03-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060309162949/http://www.deccanherald.com/deccanherald/apr122005/spectrum833262005411.asp.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்ரி_மஞ்சுநாதர்_கோயில்&oldid=4474435" இலிருந்து மீள்விக்கப்பட்டது