கத்தோலிக்க திருச்சபையினரின் சிறார்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், பிரான்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரான்சு கத்தோலிக்க திருச்சபையினரின் சிறார்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், பிரான்சு நாட்டின் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த 2,900 முதல் 3,200 வரையிலான பாதிரியார்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களால், 1950ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் வரை, கடந்த 70 ஆண்டுகளாக 2 இலட்சம் முதல் 3 இலட்சம் சிறார்கள் வரை பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப் பட்டுள்ளனர் என ஜீன் மார்க் சவ்வே தலைமையிலான விசாரணை ஆணையம் 5 அக்டோபர் 2021 அன்று வெளியிட்ட 2500 பக்க விசாரணை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.[1][2][3][4][5]

சிறார் பாலியல் துன்புறத்தல்கள் குறித்து கத்தோலிக்க திருச்சபை மற்றும் திருத்தந்தை பிரான்சிசு மனம் வருந்தினர்.[6][7]சிறார்கள் மீதான இக்கொடுஞ் செயல்கள் தமக்கு பெரும் மனவலியை ஏற்படுத்துவதாக போப்பாண்டவர் பிரான்சிஸ் தனது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். கிறித்தவ தேவாலயங்கள் தங்களைச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளது. திருச்சபை அதன் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலம் இது என மக்கள் கருதுகின்றனர்.

விசாரணை[தொகு]

சிறார் பாலியல் துன்புறத்தல்கள் குறித்து விசாரணை செய்ய, பிரான்சு அரசின் முன்னாள் துணை ஆலோசகரான ஜீன் மார்க் சவ்வே தலைமையில் சுயேச்சையான விசாரணை மன்றம், 2018-ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டின் கத்தோலிக்க திருச்சபையால் நியமிக்கப்பட்டது. நீதிமன்றம், காவல்துறை மற்றும் திருச்சபை பதிவுகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களிடமும், சாட்சிகளிடமும் தகவல்களைப் பெற்று கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை செய்தது. 5 அக்டோபர் 2021 அன்று 2,500 பக்ககள் கொண்ட விசாரணை அறிக்கையை ஜீன் மார்க் சவ்வே வெளியிட்டார்.

விசாரணையின் முடிவின் சுருக்கம்[தொகு]

  1. பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டவர்களில் 80% சிறுவர்களின் வயது 10 முதல் 13 வரை ஆகும்.
  2. கத்தோலிக்க திருச்சபையினர் பாலியல் துன்புறுத்தல்களைத தடுக்கத் தவறியதுடன், அது தொடர்பாக புகார் அளிக்கவும் தவறியது.
  3. 2000-ஆம் ஆண்டு வரை சிறார் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து திருச்சபையினர் அலட்சியப் போக்குடனும், அதனை மறைக்கும் வேலைகளையும் கத்தோலிக்க திருச்சபையினர் செய்துள்ளனர்.
  4. பாலியல் துன்புறுத்தல்களில் பாதிக்கப்பட்டவர்களின் கூற்றுகள் நம்பப்பாததுடன், அவர்களின் குரல்கள் கேட்கப்படவல்லை. கேட்கப்பட்டாலும் நடந்தவற்றில் சிறார்களுக்கு பங்களிப்பு இருந்திருக்கும் எனத்திருச்சபையினர் முடிவு செய்துள்ளனர்.
  5. 2,900 முதல் 3,200 வரையிலான பாதிரியார்கள், ஆயர்கள், மற்றும் கர்தினால்கள் போன்ற கத்தோலிக்க மதகுருமார்களுக்கு எதிரான சிறார் பாலியல் அத்துமீறல்கள் ஆதாரங்களுடன் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
  6. கத்தோலிக்க திருச்சபை பாலியல் துன்புறுத்தல்கள் சூழலில் உள்ளது.
  7. கத்தோலிக்க திருச்சபை, சிறார் பாலியல் துன்புறுத்தல்களுக்கு பொறுப்பேற்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் வேண்டும்.

நிவாரணம்[தொகு]

பாலியல் துன்புறுத்துதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்கும் திட்டத்தை திருத்தந்தை பிரான்சிசு அறிவித்துள்ளார். மேலும் பாலியல் கொடுமைகளை குற்றமாக்கும் வகையில் கத்தோலிக்க சட்டங்களை பிரான்சிஸ் மாற்றியமைத்தார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]