கத்தூல் மொகமதுசாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கத்தூல் மொகமதுசாய்
கத்தூல் மொகமதுசாய் - 2012இல் எடுத்த படம்
பிறப்புca. 1966
காபுல், ஆப்கானித்தான்
சார்பு ஆப்கானித்தான்
சேவை/கிளைஆப்கன் தேசியப் படை
சேவைக்காலம்
  • 1983–1996
  • 2001–நடப்பு
தரம்பிரிகேடியர் ஜெனரல்
போர்கள்/யுத்தங்கள்ஆப்கானித்தானில் போர் (1978-தற்போது)

கத்தூல் மொகமதுசாய் (Khatool Mohammadzai, பஷ்தூ: خاتول محمدزی; பிறப்பு c. 1966) ஆப்கன் தேசியப் படையில் பிரிகேடியர் ஜெனரல் தரநிலையில் உள்ள படைத்துறை அதிகாரி. 1980களில் ஆப்கானித்தான் மக்களாட்சிக் குடியரசின் படைத்துறையில் முதல் பெண் வான்குடைப் பதாதியாகப் பயிற்சி பெற்று பணியிலமர்ந்தார். தமது வாழ்நாளில் இதுவரை 600க்கும் கூடுதலான குதித்தல்களை மேற்கொண்டுள்ளார். 1996இல் தாலிபான்கள் கைப்பற்றும் வரை படைத்துறை பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். 2001இல் ஐக்கிய அமெரிக்கா ஆப்கனை கைப்பற்றிய பின்னர் மீண்டும் படைத்துறையில் மீளமர்த்தப்பட்டார்.[1]

பணி வாழ்வு[தொகு]

மொகமதுசாய் 1966 வாக்கில் காபுலில் பிறந்தவர். தமது உயர்நிலைப் பள்ளி முடித்தநிலையில் 1983இல் படைத்துறையில் சேர்ந்து வான்குடைப் பதாதியாகப் பயிற்சி எடுக்க முன் வந்தார். இரண்டு நாட்களில் மலைப்பகுதியில் 150 கிலோமீட்டர்கள் (93 mi) நடந்து கடத்தல் உள்ளிட்ட மிகுந்த கடினமான பயிற்சிக்குப் பின்னர் 1984இல் தனது முதல் வான் குதித்தலை மேற்கொண்டார்.[1] படைத்துறையில் பதவி பெற்ற பிறகு காபுல் பல்கலைக்கழக்கத்தில் சட்டப்படிப்பு படிக்கத் தொடங்கினார். இளங்கலை பட்டம் பெற்றபின் ஓர் அதிகாரியாக நியமிக்கப்பட இது ஏதுவாயிற்று. பின்னர் சோவியத் ஒன்றியத்தில் படைத்துறை அகாதமியில் மேற்கல்வியும் பெற்றார்.[2] ஆப்கான் சோவியத் போரின் போது, முன்னிலை களப்பணி அவருக்கு வழங்கப்படவில்லை; படைத்துறை வான்குடை பதாதிகளுக்கும் அதிரடிப் படையினருக்கும் பயிற்சியளிப்பவராகப் பணியாற்றினார்.[1][3]

1990இல் திருமணம் முடித்து ஒரு மகனையும் பெற்றெடுத்தார்;ஆயினும் சக படைத்துறை அதிகாரியான அவரது கணவர் 1991இல் நடந்த சண்டையில் உயிரிழந்தார். 1992இல் அரசு கவிழ்ந்தபோது முஜாஹதீன் அரசு என அறியப்பட்ட ஆப்கன் இசுலாமிய அரசில் பணி புரிந்தார்; 1990களின் ஆரம்ப ஆண்டுகளில் நடந்த உள்நாட்டுப் போர்களின்போது படைத்துறையின் வான் பாதுகாப்புப் பிரிவில் பெண்களுக்கான பயிற்சிப் பொறுப்பாளராக சேவையாற்றினார். இருப்பினும், வான்குடை குதித்தல்களிலிருந்து விலக்கப்பட்டார். மேலும் பொதுமக்கள் கூடுமிடங்களில் அபாயா அணிவது போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.[1] 1996இல் தாலிபான் நாட்டைத் தங்கள் கட்டுக்குள் கொணர்ந்த பிறகு, அவர் படைத்துறையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். ஒரு கைம்பெண்ணாக வீட்டிற்குள் முடங்கியிருக்க வேண்டியதாயிற்று. தையல் போன்ற சிறுவேலைகளை செய்து வந்தார். இரகசியமாக சிறுமிகளுக்கு பள்ளி நடத்தி வந்தார்.[1]

Khatool Mohammadzai with Afghan National Police
பிரி. ஜென். கத்தூல் மொகமதுசாய் ஆப்கன் தேசிய காவற்படையினருடன்

2001இல் தாலிபானின் வீழ்ச்சிக்குப் பிறகு கத்தூல் ஆப்கானின் புதியதாக உருவாக்கப்பட்ட படைத்துறையில் சேர்ந்தார். புதிய அரசுத் தலைவர் ஹமித் கர்சாய் அவரை பிரிகேடியர் ஜெனரல் பொறுப்பிற்கு உயர்த்தினார்.[3] முதற்கண், கத்தூல் தனது உடல்நிலை தகுதியை மேம்படுத்திக் கொண்டு, மீண்டும் வான்குடை குதித்தலில் இறங்கினார். அமெரிக்க வான்குடை பதாதிகளுடன் பயிற்சி எடுத்துக் கொண்டார். ஆப்கன் தேசியப் படைக்கு புதிய வான்குடை பயிற்சி அமைப்பு ஏற்படுத்த வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றினார். 2004இல் ஆப்கானித்தான் மற்றும் பிற நாடுகளின் 35 ஆண் போட்டியாளர்களுடன் வான்குடை குதித்தலில் போட்டியிட்டு வென்றார்.[1]

வான்குடை பதாதியராக இருந்ததுடன் மொகமதுசாய் படைத்துறை அமைச்சரகத்தில் பெண்கள் விவகார துணை இயக்குநராகவும் பொறுப்பு வகித்தார்.[3] இருப்பினும், பன்னாட்டு மன்னிப்பு அவைபோன்ற சில நோக்காளர்களின் பார்வையில் அவர் 2006க்குப் பிறகு குதிக்க அனுமதிக்கப்படவில்லை; இது ஆப்கானித்தானில் அரசியல்தலைமையில் நிலவிய பாலின பாகுபாட்டை வெளிப்படுத்தியதாக அவர்கள் கருதினர். படைத்துறை தலைமையகத்திலும் அவருக்கு வழங்கப்பட்ட பொறுப்பு அவரது ஜெனரல் தரநிலைக்கு ஏற்புடையதாக இல்லை எனவும் கருதினர்.[1] 2012 வாக்கில் அவர் தேசியப் படையின் மகளிர் பிரிவு இயக்குநராக பதவி உயர்வு பெற்றார். தவிரவும் திட்டமிடப்பட்ட பேரிடர் முன்னேற்பாடு படைக்கான திட்டமிடல், பயிற்சிகளுக்கான துணை இயக்குநராகவும் பொறுப்பாற்றினார். ஆப்கானித்தானின் படைத்துறையில் மிக உயர்ந்த பொறுப்பு வகித்த பெண் அதிகாரியாக கத்தூல் மொகமதுசாய் விளங்கினார்.[1][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  2. Ramazzotti, Sergio (January 8, 2011). "The Afghan military's death-defying exception". The National (Abu Dhabi: Abu Dhabi Media). Archived from the original on ஜனவரி 4, 2017. https://web.archive.org/web/20170104163546/http://www.thenational.ae/news/world/south-asia/the-afghan-militarys-death-defying-exception#full. பார்த்த நாள்: November 29, 2014. 
  3. 3.0 3.1 3.2 "Afghan woman general jumps into men’s world". Dawn. December 31, 2002. http://www.dawn.com/news/75292/afghan-woman-general-jumps-into-men-s-world. பார்த்த நாள்: December 22, 2016. 
  4. "CECOM analyst meets first female Afghan general". U.S. Army. April 26, 2012. https://www.army.mil/article/78695/CECOM_analyst_meets_first_female_Afghan_general/. பார்த்த நாள்: December 22, 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்தூல்_மொகமதுசாய்&oldid=3275863" இருந்து மீள்விக்கப்பட்டது