கதிரியலில் வெப்பம்
கதிரியலில் வெப்பம் (Heat in radiology) என்ற கருத்துரு, எக்சு-கதிர்க் குழாயில் வேக வளர்ச்சி பெற்ற எலக்ட்ரான்கள் நேர்முனையிலுள்ள இலக்கைத் தாக்கும் போது, எலக்ட்ரான்களின் ஆற்றலில் 99% வெப்பமாகவும் மீதமுள்ள 1% எக்சு கதிர்களாகவும் வெளிப்படுவதையும், இலக்கில் தோன்றும் வெப்பம் உடனுக்குடன் அகற்றப்படாவிடில் இலக்கு அதிக வெப்பத்தால் உருகிவிடக் கூடும் என்பதையும், எனவே வெப்பம் அகற்றப்பட வேண்டுவது கட்டாயமாகும் என்பதையும் குறிப்பிடுகிறது.
முதலில் இலக்கில் தோன்றும் வெப்பத்தின் ஒருபகுதி நேர்முனைத் தண்டினால் குழாயினுக்கு வெளியே கடத்தப்படுகிறது. மறுபகுதி கதிர் வீச்சு (Radiation) மூலம் குழாய் சுவற்றினை அடைகிறது. அங்கு வெப்பக் கடத்தல்முறையில் கூண்டிலுள்ள எண்ணெயை அடைகிறது. வெப்பச் சலனம் காரணமாக எண்ணெய் முழுவதும் வெப்பம் சீராகப் பரவி பின்பு கடத்தல் மூலம் கூண்டிற்கு வெளியே பரவுகிறது. குளிர்ந்த காற்றை வேகமாக செலுத்துவது, நீரை பயன்படுத்துவது என்று பிற முறைகளுள்ளன. இவ்வாறு அதிக வெப்பத்தால் கருவி பழுதாகாமல் காக்கப்படுகிறது.