கதர் இராட்டினப்பாட்டு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கதர் இராட்டினப்பாட்டு
நூலாசிரியர்பாரதிதாசன்
மொழிதமிழ் மொழி
வகைகவிதை
வெளியீட்டாளர்பாரதிதாசன்
வெளியிடப்பட்ட நாள்
1930

கதர் இராட்டினப்பாட்டு என்பது பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை நூல்களுள் ஒன்று. இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில், இருபது பக்கமேயுள்ள கவிதை நூல் ஒன்றினை “கதர் இராட்டினப்பாட்டு” என்ற தலைப்பிட்டு வெளியிட்டிருக்கிறார் பாரதிதாசன். அக்கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகள் போற்றுவது கதரையும் கைராட்டினத்தையும். புதுவை நகரின் கலாநிதி அச்சகம் 1930 இல் வெளியிட்ட இந்த நூலின் அன்றைய விலை ஒன்றேகால் அணா.

கவிதை நூல் பிறந்த வரலாறு[தொகு]

இந்த நூலினை அறிமுகப்படுத்தும் மாலனின் முன்னுரையின் மூலம் கவிதை நூல் பிறந்த வரலாறு தெரிய வருகிறது.[1]

1920ம் வருடம் ஆகஸ்ட் 2ம் தேதி, வாழ்நாள் முழுவதும் கதர் அணியப் போவதாக உறுதி எடுத்துக் கொண்ட அண்ணல் காந்தி, 1921 முதல் அது தொடர்பான பிரச்சாரத்தைத் துவக்கினார். பாரதத்தில் ஒத்துழையாமை இயக்கம் பிறந்து வளர்ந்தது. மக்களுக்குச் சுதந்திர தாகமும் வளர்ந்தது. ஒத்துழையாமைப் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகும், அது வளர்த்துவிட்ட மக்கள் எழுச்சியை சுதந்திரப் போராட்டத்திற்கு வழியமைத்துக் கொடுக்க காந்தியால் கதர் இயக்கம் தொடங்கப் பட்டது. தமிழகத்தில் அந்த கதர் இயக்கத்தின் தாக்கத்தில் பாரதிதாசன் படைத்திட்ட நூல் இந்த கதர் இராட்டினப் பாட்டு கவிதை நூல். இது அன்றைய தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட பிரச்சாரங்களில் ஒன்று. கவிதைகள் வடித்ததுடன் தானும் முற்றிலும் கதர் ஆடை அணியும் வழக்கத்திற்கு மாறினார் கவிஞர்[1].

பாரதிதாசன் அவர்கள் இந்த கதர் இராட்டினப் பாட்டு நூலை வெளியிட்டது தனது சொந்தச் செலவில்தான். தனது மனைவியின் பத்துச் சவரன் தங்கச் சங்கிலியை விற்று அந்தப் பணத்தில் அவர் கதர் இராட்டினப் பாட்டு நூலை வெளியிட்டதாகவும், அந்த நூலை குடும்பத்தினரே தைத்து ஒட்டி விற்பனைக்கு அனுப்பி வைத்ததாகவும் பாரதிதாசரின் மூத்த மகள் சரஸ்வதி குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் ஃபிரெஞ்சு காவல் துறையினரால் இந்த நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் கைகளுக்கு கிடைக்கா வண்ணம் பதுக்கப் பட்ட பிரதிகள் சில பின்னாளில் நாடு சுதந்திரம் அடைந்த பின்பு வெளியாகின. அவற்றில் ஒரு பிரதி 1990களில் பாரதிதாசனின் மகன், கவிஞர் மன்னர் மன்னனால் மாலனுக்குப் பரிசளிக்கப் பட்டு அவர் மூலம், நூலும், நூலின் வரலாறும் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்நூல் சேகரிப்பிற்குக் கிடைக்கப் பட்டுள்ளது.[1]

உள்ளடக்கம்[தொகு]

  1. பாரததேவி
  2. ஜன்ம பூமியின் சிறப்பு
  3. காந்தியடிகளும் கதரும்/பறை முழக்கம்
  4. சுதந்தரதேவியும் கதரும்
  5. தேசத்தாரின் பிரதான வேலை
  6. இராட்டினச் சிறப்பு
  7. அன்னைக்கு ஆடை வளர்க
  8. பாரததேவி வாழ்த்து

ஆகிய எட்டு நாட்டுப் பற்றினை மையமாகக் கொண்ட கவிதைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

சிலபாடல்களுக்கு அவற்றைப் பாட வேண்டிய மெட்டுகளும் குறிப்பிடப் பட்டுள்ளது. தேசத்தாரின் பிரதான வேலை என்ற கவிதையை குறத்திப் பாட்டு மெட்டில் பாட பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.

பாரததேவி[தொகு]

விண்கொள் இமயமா வெற்பே திருமுடியாய்ப்
பண்கொள் குமரி பணிதாளாய் – மண்கொள்
வளமேதன் மேனியாய் வாய்ந்ததாய் வீரர்
உளமேதன் மேனிக் குவப்பு

என்று பாரத தேவியை வாழ்த்தும் முதல் வெண்பாவுடன் வாழ்த்துப் பாடலுடன் கவிதைகள் தொடர்கின்றன.

பறை முழக்கம்[தொகு]

காந்தியடிகளும் கதரும் அல்லது பறை முழக்கம் என்ற பாடலுக்கு சுருதிபெட்டியின் ஸ்வரமும் கொடுக்கப் பட்டுள்ளது. அந்தப் பாடல்களுடன் அதைப் பாட விரும்புவோருக்கு கவிதை நூல் வழங்கிய ஸ்வரமும் பாடல்களுக்கு கீழேயே கொடுக்கப் பட்டுள்ளது இந்நூலின் சிறப்பு.

அன்னியர் நூலைத் தொடோம் என்றசேதி
அறைந்திடடா புவி முற்றும் – எங்கள்
அறுபதுகோடித் தடக்கைகள் ராட்டினம்
சுற்றும்-சுற்றும்-சுற்றும்
இன்னும் செல்லாது பிறர்செய்யும் சூழ்ச்சிகள்
என்று சொல்லிப் புயம் தட்டு – அட
யானையின்மேல் வள்ளுவா சென்று நீபறை
கொட்டு-கொட்டு-கொட்டு

இதன்மெட்டு[தொகு]

ஹார்மோனிய ஸ்வரம்:

ஸரி க க / கா க க / கா க க / கா மா கா
அன்னியர் / நூலைத்தொ / டோமென்ற / சேதிய
ரீ கா ரீ / ரிக மா மா / மா மா ,, / கம பா
றைந்திட / டாஅபுவி / முற்றும்,, / எங்கள்
ஸ்ஸ் ஸ்¡ ஸா / ஸ்நி நீநீ / தா தா நீ* / பா மா கா
அறுபது / /கோஒடித / டக்கைகள் / ராட்டினம்
கா கா , / கா கா , / கா பம பா ,,
சுற்றும் / சுற்றும் / சுற்றும் ,,
ஸ்¡ ஸ்¡ நீ / ஸ்¡ ஸ் ஸ் ஸ்¡ ஸ் ஸ் / ஸ்¡ ஸ்¡ ரீ
இன்னும்சொல் / லாதுபி / றர்செய்யும் / சூழ்ச்சிகள்
ஸ்¡ ஸ்¡ நீ / தா தா தா / தா தா ,, / தப
என்றுசொல் / லிப்புயம் / தட்டு ,, / அட
பா ஸ்¡ ஸ்¡ / ஸ நி நீ நீ / தா தா நீ* / பா மா கா
யானையின் / மேல்வள்ளு / வாசென்று / நீபறை
கா கா / கா கா / காம மபா
கொட்டு / கொட்டு / கொட்டு

(* இக்குறி கருப்புக்கட்டை)

சுதந்தரதேவியும் கதரும்[தொகு]

சுதந்தரதேவியும் கதரும் பாடலின் தொடக்க வரிகள் ஒரு பெண்ணின் அழகை வர்ணிக்கிறது. அந்த அழகியை நீ யாரென கவிஞர் வினவ அவள் தன்னை ‘சுதந்திர மங்கை’ என அடையாளம் சொல்லுகிறாள். சுதந்திரம் அடைய இராட்டினம் சுழற்று என்று சுதந்திர மங்கை அறிவுரை கூறுவதாக பாரதிதாசன் அறிவுரை வழங்குகிறார். அப்பாடலின் சில வரிகளும் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

ஆளை மயக்கிடும் மாதொருத்தி – உடல்
அத்தனையும் பொன்னை ஒத்திருந்தாள் – அவள்
பாளை பிளந்த சிரிப்பினிலே – என்னைப்
பார்த்துரைத்தாள் எந்தநாளையிலே – உன்றன்
தோளைத் தழுவிடக் கூடும் என்றே – அடி!
சுந்தரி உன்பெயர் ஊர் எதேன்றேன் – அவள்
காளியனுப்பிய கன்னியென்றாள் – என்றன்
காதற் சுதந்தர மங்கையன்றோ அவள் (ஆளை)

.
.
.

கன்னியுரைத்தது கேட்டிடுவீர் – உள்ளக்
காதல் இருப்பது மெய் எனிலோ – அட
சின்ன இராட்டின நூலிழைப்பாய் – அதில்
தீட்டின்றி நெய்த உடை உடுப்பாய் – வரும்
அன்னியர் நூலைத் தலைகவிழ்ப்பாய் – அதற்
கப்புறம் என்னைக் கலந்திடுவாய் – என்று
கன்னியுரைத்து மறைந்துவிட்டாள் – அவள்
கட்டளைதன்னை மறப்பதுண்டோ – அந்த (ஆளை)

அன்னைக்கு ஆடை வளர்க[தொகு]

இந்தக் கவிதை உவமைக் கவிதையாக விளங்குகிறது. அடிமை இந்தியாவின் சூழ்நிலை இங்கே மகாபாரதத்துடன் ஒப்பிடப்படுகிறது. கெளரவர் சபையில் துகிலுரிந்து மானபங்கம் செய்யப்பட்ட பாஞ்சாலியாகக் கவிஞருக்குத் தென்படுகிறாள் அந்நியர் வசம் அல்லலுறும் பாரதத்தாய். கதறும் பாஞ்சாலியின் துயர் தீர்க்க வந்த கண்ணனுடன் காந்தியை ஒப்பிடுகிறார் பாரதிதாசன். பாரதத் தாயின் துயர் தீர்க்க கதர் இயக்கம் மூலம் ஆடையை வளரச் செய்து அந்நியர்களின் எண்ணம் நிறைவேறா வண்ணம் பாரதத் தாயின் துயரை காந்தி நீக்குவதாக அமைகிறது இக்கவிதை. அப்பாடலின் இடம் பெற்ற சில வரிகள்:

“தீயார் துகிற் பறித்துத்
தீர்க்கின்றார் எனமானம்
மாயாமலர்க்கண்ணா
வந்துதுயர் தீர்த்திடுவாய்”
என்று பாஞ்சாலி
இசைக்க அது கேட்டுச்
சென்று மலர்க் கண்ணன்
சித்திரஞ் சேர் ஆடை
வளர்ந்திடுக என்றான்
அறம் வளர்க்க வந்தோன்
“தீயர் துகில் பறித்துத்
தீர்கின்றார் என்மானம்
மாயாமலர்க்கண்ணா
வந்து துயர் தீர்த்திடுவாய்”
என்று ரைத்திட்டாள்
இதனைச் செவியுற்றுச்
சென்று கண்ணக் காந்தி
சித்திரஞ் சேர் ஆடை
வளர்ந்திடுக என்றான்
அறம் வளர்க்க வந்தோன்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 http://www.tamilheritage.org/old/text/ebook/b_dasan/intro.html

வெளி இணைப்புகள்[தொகு]