கண்புரை அறுவைச் சிகிச்சை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சாதாரணமாக கண்ணில் உள்ள விழிக் குவியாடி ஒளி ஊடுருவும் தன்மையுடையது. லென்ஸில் மாசு படிந்து ஒளி ஊடுருவும் தன்மை இழந்து பார்வை படிப்படியாக குறைகிறது. இதுவே கண்புரை எனப்படும். புரை ஒரு கட்டியோ, சதை வளர்ச்சியோ அல்ல. புரை ஒரு தொற்று நோயும் அல்ல. வயதாவதால் லென்ஸில் ஏற்படும் மாற்றமே. இதற்கு செய்யப்படும் அறுவை சிகிட்சை கண்புரை அறுவை சிகிச்சை எனப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை ஒன்றுதான் புரையை நீக்க ஒரே வழி. மருந்து, மாத்திரை மற்றும் கண்ணாடியினால் புரையைச் சரி செய்ய இயலாது. இந்த அறுவை சிகிச்சை முறையில் கண்ணில் 10 மில்லி மீட்டர் நீளமுள்ள துவாரம் வழியாக புரை அகற்றப்படும். பின் ஐ.ஓ.எல் லென்ஸ் பொருத்தப்படும். இதற்கு தையல் அவசியம் போட வேண்டும். இந்த அறுவை சிகிச்சை செய்து முடிக்க 15 நிமிடங்கள் ஆகும். ஐ.ஓ.எல் லென்ஸ் பொருத்தப்படாதவர்கள் புரை கண்ணாடி அணிய வேண்டும்.

புரை கண்ணாடி அணிவதால் ஏற்படும் அசௌகரியங்கள்[தொகு]

புரை கண்ணாடி கடினமானதாக இருக்கும். உருவங்கள் இயல்பை விட பெரியதாகத் தெரியும். பக்கப்பார்வை குறைவாக இருக்கும். இந்த அசௌகரியங்களை நிவர்த்தி செய்ய ஐ.ஓ.எல் லென்ஸ் பொருத்தப்படுகிறது.

கண்ணுக்குள் பொருத்தப்படும் ஐ.ஓ.எல்.லென்ஸ்[தொகு]

தீங்கற்ற பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட ஐ.ஓ.எல் எனப்படும் இந்த செயற்கை லென்ஸ் (en: Intraocular Lens (IOL)) , அறுவை சிகிச்சையின் மூலம் கண்ணுக்குள் பொருத்தப்படுகிறது. இது கருவிழி ஒட்டுக்கண்ணாடி போல் அல்லாது, கண்ணுக்குள் நிரந்தரமாகப் பொருத்தப்படுவதால், எவ்வித பாதிப்பும் ஏற்படாது. உடல் அசைவுகளினால் லென்ஸ் தன் அமைப்பை விட்டு விலகாது.

ஐ.ஓ.எல் நன்மைகள்[தொகு]

 • பெரும்பாலும் தூரப்பார்வைக்கு கண்ணாடி அணிய வேண்டிய அவசியமில்லை. ஒரு சில நோயாளிகளுக்குத் தெளிவான பார்வைக்கு கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் ஏற்படலாம்.
 • பிம்பங்கள் இயல்பாக ஏற்றம் இறக்கமின்றி தெளிவாகத் தெரியும்.
 • முழுப் பார்வையையும் விரைவில் பெறலாம்.

தையல் இல்லாத நவீன சிகிச்சை[தொகு]

இம்முறையில் கண்ணில் 5 மில்லி மீட்டர் அளவிற்கு சிறிய துவாரம் போடப்படுகிறது. அல்ட்ராசோனிக் அலைகள் (Ultrasonic waves) உதவியுடன் புரை லென்ஸ் சிறு துகள்களாக உடைக்கப்பட்டு, ஊசியின் உதவியுடன் வெளியே எடுக்கப்படுகிறது. பிறகு இதற்காகவே சிறப்பாக செய்யப்பட்ட ஐ.ஓ.எல் லென்ஸ் கண்ணில் பொருத்தப்படுகிறது.

சிறிய துவாரத்தின் வழியே அறுவை சிகிச்சை செய்யப்படுவதால் தையல் போட வேண்டிய அவசியம் இல்லை. காயம் விரைவில் குணமாகிவிடும்.

தையல் இல்லாத நவீன சிகிச்சையின் நன்மைகள்[தொகு]

 • இம்முறையில் புரை முற்றும் வரை காத்திராமல் ஆரம்பத்திலேயே அறுவை சிகிச்சை செய்யலாம்.
 • சிறிய துவாரத்தின் வழியே அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
 • தையல் போடத் தேவையில்லை. கண்ணில் எரிச்சல் ஏற்படாது. நீர் வடியாது, தையல் பிரிக்கும் அவசியமும் ஏற்படாது.
 • அதிக நாட்கள் ஓய்வு எடுக்கத் தேவையில்லை. விரைவில் பணிகளைச் செய்யமுடியும்.
 • அதிக நாட்கள் சொட்டு மருந்து உபயோகிக்கத் தேவையில்லை.
 • அறுவை சிகிச்சை முடிந்த மறுநாள் அல்லது ஒரு நாள் கழித்து வீடு திரும்பலாம்.
 • அடிக்கடி பரிசோதனைக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. ஒருமுறை மட்டும் மறு பரிசோதனைக்கு சென்றால் போதுமானது
 • ஒரு மாதத்திற்குப் பின் நிலையான பார்வையைப் பெறலாம்.
 • அறுவை சிகிச்சை முடிந்து ஒரு வாரம் கழித்து தொலைக்காட்சி பார்க்கலாம். புத்தகம் படிக்கலாம்.

குறிப்பு[தொகு]

 • கண்ணில் கோளாறு ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள கண் மருத்துவரை அணுக வேண்டும். ஒரு கண் மருத்துவரால் மட்டுமே பார்வையை சிறந்த முறையில் பாதுகாக்க முடியும்.
 • நோயாளி தையல் இல்லாத நவீன சிகிச்சைக்குத் தகுதியானவரா என்பதைக் கண் மருத்துவரே தீர்மானம் செய்ய முடியும்.

காட்சியகம்[தொகு]

ஆதாரம்[தொகு]